சங்க இலக்கிய தத்துவம்:கடிதங்கள்

ஜெ,,

எங்கள் காலத்தில் மிகச் சிறந்த பள்ளியான ஈரோடு காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், எமக்குத் தமிழ் சொல்லித் தர பாரதி தாசன் வழி வந்த ஒரு பண்டிதரும், தமிழ் மேல் வெறுப்புக் கொண்ட ஆனால் தமிழாசிரியராக வேலை பார்க்க நேர்ந்த ஒரு தேசிய நீரோட்டாளாரும் அமைந்தது ஊழ்வினை என்றே சொல்ல வேண்டும். உச்சக் கட்ட சோகம்  சில காலம் பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியர் தமிழ் சொல்லித் தந்ததுதான். காய் நெல்லறுத்துக் கவளம் கொளினே என்று தலையத் தட்டித் தட்டிப் பள்ளிக் காலத்தில் உருப் போட நேர்ந்தது.

பின்னர் பொருளுக்கு அலைந்த பொருளற்ற வாழ்க்கையில் ஒரு நாள் தில்லி வசந்த் விஹாரில், ஒரு PVR சினிமா அமைந்துள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் வாழ்க்கையில் வசந்தம் வீசியது. அங்கே ஒரு புத்தகக் கடையுண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் 11 மணி சுமாருக்கு அங்கே செல்வோம். அதன் உரிமையாளர் கையில் ஒரு மதுக் கிண்ணத்துடன் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் உமர் கையாம் நினைவுக்கு வரும்.  கொடுத்து வைத்த வாழ்க்கை என்று நானும் விஜியும் பேசிக் கொள்வோம். வாய் வழியே புகை விட்டுக் கொண்டே.

அவரிடம் சென்று .கே ராமானுஜனின் புத்தகம் ஒன்று வேண்டும் என்று கேட்டேன். poems and novella வா இல்லை poems of love and war ? என்று கேட்டார். என் கண்களில் நீர் ததும்பி விட்டது. மனதுள் அவர் கால்களில் விழுந்துவிட்டேன். ராமானுஜனின் love and war படிக்கப் படிக்க என் கால்களின் கீழ் நிலம் சுழன்று மாறியது. ஐவகை நிலப் பரப்பும் வாழ்க்கை யும் இணைந்த விதம் எனக்கு 37 வயதில் தான் தெரிந்தது. அதுவரை புறநானுற்றுத்தாய் மட்டும்தான் தெரியும்.

சென்னை வரும் போது ஒரு நாள் எங்களுடன் சங்க இலக்கியம் பேசினால் சந்தோஷப் படுவேன்.

பாலா


 

 

அன்புள்ள பாலா

பலவருடங்களுக்கு முன்னால் ஆற்றூர் ரவிவர்மா மூச்சுமுட்டி தமிழ் படித்துக்கொண்டிருந்தார்.நான் அவருக்கு தமிழ் ஆசிரியராக மூச்சுமுட்டினேன்.  சலித்துப்போய் ‘அறுபது வயதுக்குமேல் எதற்கு இப்படி உயிரைப் பணயம் வைக்கவேண்டும்” என்று கேட்டேன்.

ஆற்றூர் சொன்னார், ”ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஓரு பெரும் வரம். உலகின் மிகச்சில மக்களுக்கே அந்த அதிருஷ்டம் உள்ளது. கிரேக்கர், சீனர்… இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே  அது சாத்தியம். எனக்கு தமிழ் தாய்மொழியாக இல்லாவிடாலும் தாய்க்குத்தாய்மொழி அல்லவா” . பின்னர் அவர் தேவார திருவாசகத்தை மொழியாக்கம்செய்தார். இப்போது கம்பராமாயணம்.

தாய்மொழியில் பேரிலக்கியங்களை வாசிக்கும்போது ஏற்படுவது மிக நுட்பமான ஓர் அனுபவம். ஒரு பெரும் கால உணர்வு என்று அதைச் சொல்லலாம். ‘ஒக்கல்’ என்று நாலாயிரத்திவியப்பிரபந்தத்தில் நம்மாழ்வார் கவிதையில் இன்றைய வட்டார வழக்கைப்பார்க்கும் போது ஏற்படும் மன எழுச்சி ஆயிரத்தி இருநூறு வருடங்களாக அழியாத ஒரு நீட்சியை நம் நாவிலும் மனத்திலும் உணர்வதன் விளைவு. சுகா கூப்பிட்டு கத்தினார். ”….என்ன ஒக்கலைன்னா தஞ்சாவூர் வட்டாரவழக்குன்னு எழுதிட்டீங்க. எவன் சொன்னான்? அக்மார்க் நெல்லை வட்டார வழக்குல்லா அது? சும்மாவா எங்கூர்க்காரன் அதை எழுதினான்…” ”யாரு உங்கூர்க்காரர்?” என்றேன். ”நம்ம ஆழ்வாநேரி சடகோபன்தான்… தாம்ரவருணி தண்ணி குடிச்சவன்லா?”

அந்த சொந்தமும் உறவும் நம் மொழியின் பேரிலக்கியங்களுடன் உருவாகும்போதே நாம் அவற்றை உண்மையாக ரசிக்க ஆரம்பிக்கிறோம். அதை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். பாடல்களை மொழிக்கல்விக்கான கருவியாகவோ ஆய்வுப்பொருளாகவோ ஆக்கும்போது அது தவறி விடுகிறது

ஆனால் எந்தப்பருவமும் தவறான பருவமல்ல. எப்போதும் தொடங்கலாம். உண்மையில் தொடங்குவது மட்டுமே முக்கியம். பிறகு மொழி நம்மை இட்டுச்செல்லும்…

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்

சங்க இலக்கியத்தைப்பற்றிய உங்கள் உரை சிறப்பாக இருந்தது. ஆழமான கட்டுரை. அதை நீங்கள் உரையாக ஆற்றியிருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சிறப்பாக தொடங்கி பரபரப்பை முன்வைத்து அப்படியே கொண்டுபோய் அற்புதமாக முடித்திருந்தீர்கள். தமிழில் நூல்வைப்பு முறையின் தர்க்கம்தான் இருக்கிறதே ஒழிய தத்துவ விவாதத்துக்கான தர்க்கம் இல்லை என்று சொன்னீர்கள். அதாவது சிந்தனையை தொகுத்துக்கொள்வதற்கான தேவை இருந்ததே ஒழிய சிந்தனைகள் முட்டிமோதும் மேடை இருக்கவில்லை என்று. அருமையான கருத்து.சிறப்பு.

வேதாந்தத்தின் அகம் புறம் என்னும் கருத்து தமிழில் உள்ளது என்று சொல்லியிருந்தீர்கள். அதனை இன்னும் தெளிவாக புரியும்படி சொல்லியிருந்திருக்கலாம் என எண்ணுகிறேன். அகம்புறம் என்ற பிரிவினைக்கு என்ன தத்துவ முக்கியத்துவம் இருக்கிறது

செல்வராஜ்
சென்னை

அன்புள்ள செல்வராஜ்

அகம் புறம் என்ற பிரிவினை சங்க மரபில் ஒரு வாழ்க்கைத்தரிசனமாகவே உள்ளது. வெறும் இலக்கியப் பகுப்புமுறை அல்ல. அகம் என்னும்போது காதல்-இல்லறம் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள். ஆகம் என்னும் பகுப்பின் கீழ் வருபவை தூய உணர்ச்சிகள். ஆனால் அவற்றை புறப்பொருட்களான இயற்கைச்சித்திரங்களின் மூலமே அக்கால கவிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சங்கபபடலில் அவ்ரும் எல்லா இயற்கைச்சித்தரிப்புகளும் மனித அக உணர்ச்சிகளின் படிமங்கள்தான். அதாவது மனித அகம் என்பது வெளியே உள்ள இயற்கையின் பிரதிபலிப்பே என்ற புரிதல் அது. அதேபோல புறம் எனச் சொல்லப்படுபவை உக்கிரமான உணர்ச்சிநிலைகள் கலந்தே சொல்லப்படுகின்றன.

மனிதமனமும் இயற்கையும் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும் ஆடிகள் என்ற  தரிசனத்தை சாங்கியம் முதல் காண்கிறோம். அது பௌத்தத்திலும் பிற்கால வேதாந்தத்திலும் பலவகையான உச்சநிலைகளை அடைந்தது. இது ஒரு வெறும் ஊகமல்ல என்பதை பிற்கால சைவசித்தாந்தத்தில் அகம்- புறம் என்பதை எப்படி எல்லாம் விரிவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.

ஜெ

 

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

 

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

 

 
  • மரபிலக்கியம் ஒரு கடிதம்
  • முந்தைய கட்டுரைபெருவெளி
    அடுத்த கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்