அன்பு ஜெயமோகன்,
தாங்கள் ஆதிச்சநல்லூர் சிதம்பரம் அய்யாவைப் பற்றி எழுதியதை வாசித்த போது கண்களில் நீர் சுரந்தது. அவர் ஆதிச்சநல்லூர் புதைகுழி மேட்டின் காவல் தெய்வம். குட்டி போட்ட தாய்ப்பூனை போல எப்போதும் அதை சுத்தி சுத்தியே வருவார். திராவிட இயக்கத்தால் அறிவெழுச்சி பெற்ற அவர் மற்ற மானமிகுகளைப் போல வறண்டு போனவர் அல்லர். வற்றாத மெல்லிய பொருநை. அவருக்கு பல தொல்தமிழ் இலக்கியங்கள் தலைகீழ் மனப்பாடம். இராமாயணப் பாடலுக்கு ஏற்ற கீமாயணப் பாடலையும் சொல்லி திகட்ட திகட்ட பகடி செய்வார். கல்வெட்டுகள்,சிற்பம், வரலாறு பற்றிய நுட்பமான புரிதல் உள்ளவர்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அகழாய்வு நடந்த போது அங்கேயே கெடையா கிடப்பார். மேலுள்ள படத்தில் உள்ள மூடியுள்ள தாழிகள் தோண்டப்பட்டு வெளித்தெரிந்த நேரத்தில் நான் அங்கு இருந்தேன். பேராசிரியர்கள் தொ.ப, சலபதி போன்றொரும் இருந்தனர.அப்போது அங்கே நின்று கொண்டிருந்த சிதம்பரம் அய்யா உணர்ச்சிப்பெருக்கில், ”கவிசெந்தாழி குவிபுறத்திருந்த” என்ற புறப்பாடலை பாடினார்.அப்போதுதான் அந்த கரிய உருவத்தை எல்லோரும பார்த்தோம். பின்னர் அவருடன் பேராசிரியர்கள் பேசிகசகொண்டிருந்த போது
கலம் செய் கோவே, இடுக ஒன்றோ சுடுக ஒன்றொ என பல பாடல்களை மேற்கோளிட்டு விளக்கி அசத்தினார்.
எனக்கு ஊர் திருவைகுண்டம் ஆதலால் பின்னரும் சில தடவை ஆதிச்ச நல்லூர் சென்ற போது அந்தப்பகுதிகளில்தான் நின்று கொண்டிருந்தார். அவருடன் பேசிய பொழுது அவருடைய இளம் வயதில் கடவுள் மறுப்பு உணர்ச்சியின் விளைவாக ஆதிச்சநல்லூரில் இருந்த கல்வெட்டுகளுடைய ஒரு அருகன் சிலையை தாமிரவருணியில் போட்டு விட்டதைச் சொல்லி வருந்தினார். அப்புறம் அது புத்தரல்ல, அருகன் தான் என்பதையும் விளக்கினார். லெமூரியா கண்ட நம்பிக்கை உள்ளவரெனினும் தனித்தமிழ் என்று சொல்லி கொலையாய் கொல்பவரல்லர். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதற்கு இலக்கணம் அவர்.
ஆக இன்று தற்செயலாக நீங்களும் அவரைச் சந்தித்ததை நினைக்கும் போது எனக்கு உண்மையிலேயே கண்ணீர் வந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அந்த மேட்டைத் திசைக்காவல் செய்து வருபவர் அவர். மாடு மேய்க்கிறேன் என்று பொய் சொல்கிறார் போல.
Ilakkuvan,
Ecole Francais De Extreme Orient,
Puducherry.
**
அன்புள்ள இலக்குவன்,
ஆதிச்சநல்லூரில் நீங்கள் இருந்ததை அறிந்தபோது உவகை ஏற்பட்டது. அந்த தருணத்தை கற்பனை செய்துகொள்கிறேன். உண்மையில் இந்த மன எழுச்சி ஒரு அடிபப்டையான பண்பாட்டுசக்தி. அந்த மனஎழுச்சியின் மீதுதான் தகவல்கள் மூலம் வரலாற்றைக் கட்டமுடியும். ஆகவேதான் ஆதிச்சநல்லூர் வரலாற்றுச்சின்னங்கள் அகழ்வைப்பகங்களில் சிதறிக்கிடப்பது ஒரு பெரிய இழப்பு என்று எண்ணுகிறேன். பெரியவரும் அதைத்தான் சொல்கிறார்
ஜெ
தங்களின் ஆதிச்சநல்லூர் கட்டுரை படித்தேன்.சமீபத்தில் “தமிழரின் தொன்மையும் நாகரீகமும்” என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.அதில் சொல்லாத சில விஷயங்களை உங்கள் கட்டுரையில் பார்த்தேன்.(குறிப்பாக ஆரிய நாகரீகம் குறித்து).ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக அந்த ஆவணப்படம் இருந்தது.
பாலாஜி
அன்புள்ள பாலாஜி,
தங்கள் கடிதத்தில் ஆதிச்சநல்லூர் குறித்து சொல்லியிருந்த விஷயங்களை வாசித்த போது ஆச்சரியம் ஏற்படவில்லை. பலவருடங்களுக்கு முன்பு உலகத்தமிழ் மாநாடு சார்பாக ஒரு ‘ஆவணப்படம்’ வெளியிடப்பட்டது. அதில் குமரிக்கண்டம் கடல்கொள்வதை சித்தரித்திருந்தார்கள். கடல் அலைகள் அடிக்கின்றன. ஒரு ஆசாமி மார்பில் சுவடிகளை அடுக்கியபடி ஓடுகிறார். மழை கொட்டுகிறது. உலகில் மிகவும் பழைய நாகரீகம் குமரிக்கண்டமே என்று ஒரு குரல்
அதை நான் பெங்களுரில் பார்க்கும்போது அரங்கில் என்னுடன் இந்திய அளவில் மிக முக்கியமான ஏழெட்டு அறிஞர்கள் இருந்தார்கள். அரங்கிலெழுந்த சிரிப்பை என்னவென்று சொல்வது. தமிழின் தொன்மை பெருமை எதையுமே எங்கும் பேசமுடியாதபடி ஆக்கிவிடுகிறது அந்தச்சிரிப்பு. அதை நம்மூர் அசடுகள் முக்கால் நூற்றாண்டாக உழைத்து விளைவித்துக் கொண்டே வருகிறார்கள்.
வரலாற்று ஆய்வு என்பதில் கண்டிப்பாக உள்ளுறையாக அதிகார விருப்பு உள்ளது. வரலாற்று முன்தீர்மானங்கள் உள்ளன. அந்த முன்தீர்மானங்களுக்குள் இன-மொழி மேன்மை உணர்வுகள்: உள்ளன. ஆனால் எங்கும் வரலாற்று ஆய்வு அதற்குரிய புறவயமான தர்க்கத்துடன்தான் முன்வைக்கப்படுகிறது. மேலேகுறிப்பிட்ட உணர்வுகள் கொண்டவர்கள் கூட அந்தத் தருக்கத்தை பயன்படுத்தியே தங்கள் தரப்பை நிறுவ முயல்கிறார்கள். அதற்காக கடுமையாகவும் நுட்பமாகவும் உழைக்கிறார்கள்.
ஆனால் தமிழின் தரப்பை எடுத்துச்சொல்ல வருபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அப்பட்டமான இன-மொழி-சாதிக் காழ்ப்புகள் மற்றும்போலியான பெருமித உணர்வு மட்டுமே போதும் என்ற நோக்கில் ‘ஆராய்ச்சிகளை’செய்து உலக அரங்கில் நிறுவப்பட்டாகவேண்டிய தமிழ்பண்பாட்டு தொன்மையை கேலிக்குரியதாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். இது இப்போதும் நீடிக்கிறது.
உங்கள் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் நெற்றிக்கண் போன்ற விஷயங்கள் எல்லாம் இப்படி ‘எடுத்து விடும்’ ஆய்வுகள். என்ன செய்வது, அவை வந்துகொண்டே இருக்கும். உலக நாகரீகத்தின் தொட்டில்களில் ஒன்று தமிழ்நிலம் என்ற வரலாற்று உண்மையை அவை கேலிக்கூத்தாக மாற்றும்.
மொழிகளின் உருவாக்கம் பற்றிய பழைமையான பார்வையை நாம் மாற்றிக்கொண்டாக வேண்டும். நவீன மொழியியலில் அதற்கு இடம் இல்லை. ஒரு தனிச்செம்மொழி குட்டிபோட்டு பிற மொழிகளை உருவாக்குவதில்லை. மொழிகளுக்கு முந்தைய வடிவம் உரைபு- கள் [dialects] ஆயிரம் சொற்களுக்குக் குறைவான மொழி உரைபு எனப்படுகிறது. உரைபுகள் ஒன்றுடன் ஒன்று முயங்கியும் உரையாடிக்கொண்டும் காலப்போக்கில் மொழிகளாக வளர்கின்றன
இந்திய நிலத்தில் பல்லாயிரம் உரைபுகள் இருந்திருக்கலாம். இப்போதும் சில ஆயிரம் உரைபுகள் உள்ளன. தமிழ்நிலத்திலேயே பலநூறு உரைபுகள் இருந்திருக்கலாம். மையநிலத்தில் அவை வளர்ந்து தமிழ் என்னும் செம்மொழியாக ஆனபின்னரும்கூட அவற்றின் விளிம்புகள் உரைபுகளாகவே நீடித்திருக்கலாம். மேற்குமலைகளில் உள்ள பல பழங்குடிகளின் மொழிகள் தமிழின் சிதறல்கள், துணுக்குகள் போல உள்ளன- வளராத தமிழ் உரைபுகள் அவை. அத்தகைய உரைபுகளிலிருந்து உருவானதே மலையாளம். தமிழ்ச்செம்மொழியில் இருந்து அது உருவாகவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரைக்கூட மலையாளம் ஒரு நாட்டார் மொழிதான்.
பழைய நூல்களில் இத்தகைய உரைபுகளை ‘பைசாசிக’ மொழிகள் என்று சொல்கிறார்கள். குணாத்யனின் கதாசரிதசாகரம் முதலில் பைசாசிக மொழியில் எழுதபப்ட்டு பின்னர் பிராகிருதத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பிராகிருதம் மையநிலத்தில் இருந்த பல்வேறு உரைபுகளில் இருந்து திரண்டு வந்த ஒரு மொழி. அது மொழிகூட இல்லை, மொழித்தொகுப்பு. பிராகிதத்திலேயே பல வகை வட்டார வேறுபாடுகள் உண்டு. அவற்றில் இருந்து பாலி போன்ற பல மொழிகள் கிளைத்தன. அவை பிராகிருத அபபிரஹ்ம்ஸம் என்று சொல்லபப்டுகின்றன. அவ்வாறு பல்வேறு மொழிகள் ஒன்றுடன் ஒன்று உரையாடியதன் விளைவே பிற்கால மொழிகள்
அந்த உரையாடலில் ஒரு வலுவான தரப்பு தமிழ். சம்ஸ்கிருதத்தில்கூட தமிழின் பங்களிப்பு பெரிது. பிராகிருதத்தில் இன்னும் பெரிது. கன்னடமும் தெலுங்கும் பிராகிருதம் தமிழ் இரண்டின் உரையாடலின் விளைவுகள். இலக்கண அமைப்பு சார்ந்து தமிழழுடனும் சொற்கள் சார்ந்து பிராகிருதத்துடனும் நெருக்கம் கொண்டவை அவை. டாக்டர் கெ.எம்.ஜார்ஜ் போன்றவர்களின் ஒப்பாய்வு வழியாக விரிவாகவே இவற்றை அறியமுடிகிறது
ஜெ
—
KJ Ashokkumar
1 ping
jeyamohan.in » Blog Archive » ஆதிச்சநல்லூர்:கடிதங்கள் மேலும்
April 18, 2009 at 12:16 am (UTC 5.5) Link to this comment
[…] ஆதிச்சநல்லூர்:கடிதங்கள் […]