ஜெயமோகன்,
பாரதியார் மகாகவி இல்லை என்று நீங்கள் எழுதிவரும் அபத்தமான குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதல் விஷயம் பாரதி பற்றிபேச நீங்கள் யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நீ இதுவரை எவ்வளவு கவிதை எழுதியிருக்கிறாய்? ஐம்பது கவிதை எழுதியிருப்பாயா? அதிலே ஒரு பதுக்கவிதை தேறுமா? சினிமாவுக்கு வசனம் எழுதுபவன்தானே நீ? உனக்கு என்ன கொழுப்பு இருந்தால் பாரதி கவிஞனே இல்லை என்று சொல்வாய்? உனக்கு பிரபலமடையவேண்டுமென்றால் அண்ணாசாலையிலே துணியில்லாமல் அரைமணிநேரம் நில்லு. அதைவிட்டுவிட்டு பாரதியை வம்புக்கு இழுக்காதே. பாரதி ஒரு நெருப்பு. பாரதியின் கவிதைகளில் உள்ள எளிமையும் அழகும் உலகத்தில் உள்ள எந்தக் கவிஞனிடமும் இல்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். நீ என்ன படித்திருக்கிறாய்? ‘தூண்டில் புழுவினைப்போல் வெளியே சுடர் விளக்கினைப்போல்’ என்ற வரிக்கு என்ன அர்த்தம் சொல்லு பார்க்கலாம்.உனக்கு எங்கே புரியப்போகிறது? நானே சொல்கிறேன். அது பரந்தாமனை அறியாத ஆன்மா அடையக்கூடிய பதற்றமாகும். அணையப்போகும் சுடருக்குக் கைகளாக வந்து அணைப்பவன் பரந்தாமன். உனக்கு மூளை இருந்தால் நீ அண்ணா அவர்களின் சத்சங் உரைகளைக் கேட்டுப்பாரு. புத்தி தெளியும். இணைத்திருக்கிறேன்
R.நாராயணன்.
*
திருவாளர் ஜெ
நீங்கள் பாரதியைச் சுட்டி எழுதிவரும் கட்டுரைகளை வாசித்தேன். அவையெல்லாம் பாரதியை நக்கிக்கொடுக்கும் கட்டுரைகள். சும்மா அவர் உலகமகாகவி இல்லை தெரியுமா என்று நீங்கள் சொல்வீர்கள். உடனே இல்லையில்லை அவர் உலகமகாகவி தெரியுமா என்று பிற பார்ப்பனர்கள் சொல்வார்கள். இதெல்லாம் ஒரு நாடகம். இந்த நாடகம் 1941 முதல் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அப்படி என்னய்யா பெரிசா பாரதி எழுதிட்டார்? சொந்த சாதிப்புத்தியிலே இருந்து அவர் வெளியே வந்தாரா’ என்று அன்றைக்கும் இன்றைக்கும் கேள்வி இருக்கிறது. அதற்கு இன்றைக்குவரை யாரும் உருப்படியாக பதில் சொன்னதில்லை. சிட்டுக்குருவி போல விட்டு விடுதலை ஆகணும் என்று பாடினார் என்று கதை விட்டு பாரதி என்ற சாதிவெறியனைப் பெரிய கவிஞனாக நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் கட்டுரையைப் பார்த்ததும் பாய்ந்துவரும் கும்பல் பாடப்புத்தகத்துக்கு வெளியே பாரதியார் கவிதைகளை வாசித்திருப்பார்களா? பாரதி கவிதையைக் கொஞ்சநாள் பாடப்புத்தகத்தில் இல்லாமல் செய்தால் தெரியும் அவன் எங்கே இருக்கிறான் என்று பார்ப்பனர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.
மதிமாறன் அய்யா பாரதியார் யார் என்று தெளிவாக பாரதி-ய ஜனதா பார்ட்டி என்று புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தை வேண்டுமென்றால் வாங்கி வாசியுங்கள். அல்லது இங்கே போய் வாசியுங்கள். http://mathimaran.wordpress.com/2011/01/12/article-353/
அறிவழகன்
ஜெயமோகன்,
உங்கள் கட்டுரைகளில் எல்லாம் ஒரு உள்ளரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. சுஜாதா, பாலகுமாரன், நகுலன் அப்புறம் பாரதியார் என்று வரிசையாக பிராமண எழுத்தாளர்களை ஒவ்வொருத்தராக நீங்கள் சேறுபூசி அவமானம்செய்துகொண்டே வருகிறீர்கள். உங்களைப்போல சாதிவெறியர்கள் என்னதான் எதிர்த்தாலும் சுஜாதவையும் பாலகுமாரனையும் பாரதியையும் எவரும் அழிக்க முடியாது. தமிழ் உள்ள வரைக்கும் இந்த மூன்று நவீன இலக்கிய ஞானிகளும் இருப்பார்கள். நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்
ஆனந்த்
ஜெ,
அடுத்தது கம்பன்தானே? நல்லா தொழில் கலகலப்பாக ஓடவேண்டும் என்று வாழ்த்துகிறேன். http://dagalti.blogspot.com/2011/10/blog-post_08.html படித்துப் பாருங்கள் சில க்ளூ கிடைக்கும்
சரவண குமார்
அன்புள்ள சரவணகுமார்
அந்தப் பகடி நன்றாக இருக்கிறது. நீங்கள்தான் டகால்டி இல்லை எனத் தெரிகிறது. அது இலக்கிய அறிமுகம் உள்ள ஒருவர். கூர்ந்து வாசித்து சொல்லாட்சிகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி
எண்ணும்பொருள் ஒடுங்கையில்
நின்றிடும் பரம்
என்பது நாணுகுரு வாக்கு.
இங்குள்ள ஒவ்வொன்றையும் தொட்டு எண்ணி இது அல்ல இது அல்ல என்று விலக்கி சென்று கடைசியிலே இகம் எல்லாம் தீர்ந்தபின் எஞ்சுவது எதுவோ அதுவே பரம்பொருள் என்கிறார் குரு.
ஒரு இலக்கியவாதி இலக்கியப்பரம்பொருளை அடைய நினைப்பது தப்பா? தப்பா? தப்பா?
ஜெ