யுவன் வாசிப்பரங்கு

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக நவீன கவிதை பற்றிய அரங்குகள் எல்லாமே கவிதை எழுதுபவர்கள் மட்டுமே பங்குகொள்பவையாகவே நடப்பது வழக்கம். கவிதைவாசகர்களைக் கவிஞர்கள் சந்திப்பது அபூர்வம். இது அத்தகைய தருணங்களில் ஒன்றாக இருந்தது.

நவீன தமிழ்க்கவிதை கவிஞர்களாலான சிறியவட்டத்துக்குள் தனக்குமட்டுமே என ஒரு சொற்களனை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அங்கேகவிதைகளுக்குப் பின்புலமாக ஒரு அறிவுத்தளம் உள்ளது. உண்மையில் குழூக்குறிகளைப் புரிந்துகொள்ளும் ஒரு சின்னஞ்சிறியசமூகம் என்று அதைச் சொல்லலாம். நவீன இலக்கியத்துக்கு என அதைவிடப் பெரிய இன்னொரு குழூக்குறிவட்டம் உள்ளது.அதற்கும் வெளியேதான் தமிழ்ப் பண்பாட்டுச் சொல்லாடல்களின் வட்டம் உள்ளது.

இத்தகைய அரங்கில் நவீன இலக்கியத்துக்குள் ஏற்கனவே வந்துவிட்ட வாசகர்கள் கவிதையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சந்திக்கும் நிலை கவிஞர்களுக்கு ஏற்படுகிறது. இவர்களை நாம் பொதுவாசகர்கள் என்று சொல்லலாம். இவர்களுக்குக் கவிதை சார்ந்து ஒரு சிறிய திகைப்பு உள்ளது. ஆனால் அவர்களுக்கே உரியமுறையில் அவர்கள் கவிதைகளை உள்வாங்கிக் கொள்கிறார்கள். புதிய வினாக்களை எழுப்புகிறார்கள்.

காலை ஏழுமணிக்கு நானும் கெ.பி.வினோத்தும் கன்யாகுமரிக்குச் சென்றபோது முப்பதுபேர்வரை ஏற்கனவே வந்திருந்தார்கள். யுவன் சந்திரசேகரும் அவரது நண்பர் தண்டபாணியும் காலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்தார்கள். பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தோம். தேவதச்சன், சுகுமாரன், கலாப்ரியா, தேவதேவன் ஆகியோர் வந்துசேர்ந்தாகள். முபத்தேழு பங்கேற்பாளர்கள்.

பத்துமணிக்கு அமர்வு தொடங்கியது. யுவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது கவிதைகள் ஒளிநகல் எடுப்பக்கட்டுப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு கவிதையைப் பலமுறைவாசித்துவிட்டு அதன் மீதான பல்வேறு வாசிப்புகளை நிகழ்த்துவதே அரங்கின் வழிமுறை. அக்கவிதைமீதான வாசிப்பும் ரசனையும் போதிய அளவு விரிவடைந்துவிட்டது என்று தோன்றியபின்னர் அடுத்த கவிதை. தேவதச்சன் கலாப்ரியா தேவதேவன் சுகுமாரன் ஆகியோர் வெவ்வேறு கோணங்களில் கவிதைகளை வாசித்து வெளிப்படுத்தினர்.

பொதுவாகக் கவிதையில் இருந்து பிற கவிதைகளை நோக்கிச் செல்வதே கவிதைபற்றிய நல்ல வாசிப்பை உருவாக்குவதாக இருந்தது. கவிதை உருவாக்கும் நினைவெழுச்சிகள் அந்தப் பேசுபொருளுடன் தொடர்புள்ள சிந்தனைகள் எல்லாமே கவிதையை அணுகுவதற்கான நுட்பமான வழிகளை உருவாக்கின. உதாரணமாக ‘ தன் போக்கில் போகிறது நதி ’ என்ற யுவன் சந்திரசேகரின் கவிதை வரியுடன் ‘ என் நதியும் உங்கள் நதியும் மட்டும்தான் ஒன்று’ என்ற கலாப்ரியாவின் வரி வாசகனின் ஆழ்மனதில் இணைகிறது. ‘ஜ்வாலையின் நாட்டியம் அழைக்கிறது என்னை’ என்ற யுவன் வரியுடன் ‘உக்கிரம் தீயாயிற்று’ என்ற விக்ரமாதித்யனின் வரி இணைந்துகொள்ளும்போது துல்லியமான வாசிப்பு ஒன்று நிகழ்கிறது.

அதேபோல நிகழ்வுகள். சிலசமயம் அவை முக்கியமானவை. சிலசமயம் சர்வசாதாரணமானவையும்கூட. ’கிளி என்றால் சிலசமயம் கிளியையும் குறிக்கலாம்’ என்ற அவரது புகழ்பெற்ற கவிதையைக் காலச்சுவடுக்கு பத்து கவிதை சேர்த்துஅனுப்பும் நோக்குடன் ஒன்பது கவிதையைப் பிரதி எடுத்து வைத்துவிட்டு சிகரெட் பிடிக்கும்போது எழுதியதாகச் சொன்னார்.

முதல்நாள் காலை மதியம் என இரு அமர்வு. மாலையில் அருகே உள்ள கடற்கரைக்குச் சென்று சூரிய அஸ்தமனம் பார்த்தோம். இரவு நெடுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தோம். மறுநாளும் இரு அமர்வுகள். மதியத்துக்குப் பிந்தைய அமர்வில் யுவன் சந்திரசேகர் மொழியாக்கம் செய்த ஜென் கவிதைகள் பற்றிய விவாதம். ஜென் கவிதைகள் பிற கவிதைகளில் இருந்து அமைப்பிலோ படிமங்களிலோ மட்டுமல்ல அவற்றுக்குப்பின்னால் உள்ள மனநிலையிலேயே வேறுபடுகின்றன என்று யுவன் பேசினார்

மாலை ஐந்துகிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மருத்துவாழ் மலைக்குச் சென்றோம். மலை ஏறிச்சென்று அங்கே உள்ள அகத்தியர் கோயில் முன் அமர்ந்துகொண்டோம். ஒளியுடன் நிலவு எழுந்த இரவு. யுவன் சந்திரசேகர், கடலூர் சீனு, ராதா, சுநீல்கிருஷ்ணன் ஆகியோர் பாடினார்கள்.

மறுநாள் காலை அமர்வில் யுவன் சந்திரசேகர் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். யுவன் பொதுவாகக் கவிதைமேல் ஏதாவது ஓர் அடையாளத்தை அமைப்பதை மறுக்கக்கூடியவராக இருந்தார். கவிதையை வெறும் அனுபவமாக மட்டுமே அடைவதெப்படி என்பதே அவரது பேச்சின் மையமாக இருந்தது. மதிய உணவுடன் அரங்கு நிறைவடைந்தது.

ஜெ

கவியரங்கு படங்கள்

முந்தைய கட்டுரைதூக்கு இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாரதி விவாதம் -6 – இறை,உரைநடை