2011 ஆம் வருடத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் எழுதிய சில கவிதைகளின் மொழியாக்கம். நண்பர் கார்த்திக் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இக்கவிஞரையோ கவிதைகளையோ நான் கேள்விப்பட்டதே இல்லை. கார்த்திக் மொழியாக்கம்செய்த கவிதைகளை மட்டுமே வாசித்தேன். வேண்டுமென்றேதான் ஆங்கிலத்தில் வாசிக்கவில்லை. மொழியாக்கத்தின் மொழியாக்கத்தில் இக்கவிதைகள் கவிதைகளாக நிற்கின்றனவா என்று பார்க்க ஆசைப்பட்டேன்.
உண்மையில் இவ்வடிவிலேயே இக்கவிதைகள் அளிக்கும் பரவசம் ஒரு மாபெரும் கவிஞனை அடையாளம் காட்டுகிறது. பெட்டியில் எடுத்துச்செல்லபப்டும் வயலின்போல தன் நிழலால் பொதித்து தான் கொண்டுசெல்லப்படுவதாக வரும் அந்த உவமை மேலே செல்லவிடாமல் என்னை நிறுத்திவிட்டது.
ஆம், அடகுக்கடை வெள்ளியைப்போல சொல்லவந்த விஷயம் வைத்திருப்பவன் அறியாமல் உரிமையாளன் காணாமல் பூட்டப்பட்ட பெட்டிக்குள் ஒளிர்வதையே இக்கவிதைகளில் மீண்டும் மீண்டும் கண்டேன்.
மகத்தான கவிதைகளுக்கு விளக்கம் தேவையில்லை. வாசிக்கும்போது அந்த பிம்பங்கள் அளிக்கும் பரவசமே அவற்றைக் கவிதையாக நிலைநாட்டி விடுகிறது.
*
காலைப்பறவைகள்
காரை நான் உயிர்ப்பிக்கிறேன்.
முன்கண்ணாடிகளில் மகரந்தம் படிந்த காரை.
என் கருங்கண்ணாடிகளை அணிந்துகொள்கிறேன்.
பறவைகளின் பாட்டு இருள்கிறது.
இதற்கிடையே மேலும் ஒருவன் ரயில் நிலையத்தில்
பத்திரிக்கை வாங்குகிறான்.
துருப்பிடித்து சிவந்து
வெய்யிலில் தகித்து நிற்கும்
பெரிய கூட்ஸ் வாகனுக்கு அருகில்
இங்கெங்குமே வெற்றிடம் இல்லை
வசந்தத்தின் கதகதப்பினூடே குளிர்ந்த பாதை
அதில் ஓடி வரும் ஒருவன்
அவனை தலைமை அலுவலகத்தில் எப்படி
பழி சுமத்தினார்கள் என்று சொல்கிறான்.
பின்வாசல் வழியாக வரும் மெக்பை*
கருப்பும் வெள்ளையுமாய், நரகத்தின் பறவை.
அந்தக் கரும்பறவை முன்னும் பின்னும் விரைகிறது,
அனைத்தும் ஒரு கரித்துண்டு ஓவியமாகும்வரை
கொடியில் ஆடும் வெண்ணிற ஆடைகளை தவிர்த்து:
ஒரு பாலஸ்ரினா கூட்டிசை*
இங்கெங்குமே வெற்றிடம் இல்லை
அதிஅற்புதமான உணர்வு
என்கவிதை வளரும் பொழுது
நான் சுருங்கியபடி இருப்பது.
அது வளர்கிறது என் இடத்தை எடுத்துக்கொள்கிறது.
அது என்னைப் புறம் தள்ளுகிறது.
அது என்னை கூட்டிலிருந்து வெளியே எறிகிறது.
கவிதை தயாராகிவிட்டது.
மெக்பை* — காகம் போன்றொரு பறவை
பாலஸ்ரினா கூட்டிசை* – palestrina chorus
**
ஏப்ரலும் மெளனமும்(April and Silence )
வசந்தம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
வெல்வட் கருப்பு வாய்க்கால்
எனதோரம் ஊர்ந்து செல்கிறது
எதையும் பிரதிபலிக்காமல்
ஓளிரும் அனைத்தும்
மஞ்சள் மலர்களே
நான் எனது நிழலுள் பொதிந்து
எடுத்துச் செல்லப்படுகிறேன்
கருப்புப்பெட்டியில் கொண்டுசெல்லப்படும்
வயலினைப் போல
நான் சொல்ல விரும்பும் ஒரே விஷயம்
கைக்கெட்டாமல் ஒளிர்கிறது
அடகுக்கடை வெள்ளியைப் போல
**
சூரியன்கள் உள்ள நிலப்பரப்பு(Landscape with Suns)
சூரியன் வீடுகளுக்குப் பின்னிருந்து வெளிப்படுகிறான்.
நடுவீதியில் நின்று கொண்டு
நம் மீது மூச்செறிகிறான்
தன் சிவந்த காற்றாய்.
இன்ஸ்ப்ருக்* ,நான் விடைபெற வேண்டும்.
ஆயினும்
நாளை ஒரு ஒளிரும்
சூரியன் இருக்கும்
நாம் உழைத்து உயிர்வாழும்
பழுப்புநிற
பாதி இறந்த
கானகத்தில்
இன்ஸ்ப்ருக்* – மேற்கு ஆஸ்திரிய மலைவாசஸ்தலம்.
இடைகுளிர்காலம்(Midwinter)
என் உடைகளிலிருந்து
நீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது
இடைகுளிர்காலம்
பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு
கண்களை மூடிக்கொள்கிறேன்
அங்கொரு நிசப்த உலகுண்டு
இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்
ஒரு விரிசல் இருக்கிறது
டாம்பொரின்* கஞ்சிரா போன்றது