ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் உதயம் என்ற மாதாந்தர செய்தி இதழ் தொடங்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதை ஒட்டி ஏப்ரல் 20 அன்று விழாவுக்கு ஏற்பாடுசெய்திருக்கிறர்கள். அதில் கலந்துகொள்ள என்னை அழைத்திருக்கிறார்கள். நானும் என் மனைவியும் ஏப்ரல் பத்தாம் தேதிக்குமேல் கிளம்பி ஏப்ரல் இறுதி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் செய்வதாக இருக்கிறோம்
சாத்தியமான எல்லா தடைகளும் அலுவலக அனுமதி பெறுவதற்கும் விஸா வாங்குவதற்கும் வந்தன. அவற்றையெல்லாம் சமாளிக்க பல நண்பர்கள் பலவகைகளில் உதவினார்கள். அவர்களுக்கு நன்றி. பொதுவாகவே எனக்கும் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பயணம் மீது பெரும் காதல் உண்டு. எங்கள் முக்கியமான செலவே எப்போதும் பயணம்தான். இந்தப்பயணம் மனக்கிளர்ச்சியூட்டும் ஓர் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இன்னும் பயணச்சீட்டு எடுக்கவில்லை. கொலாலம்பூர் வழியாக ஆஸ்திரேலியா சென்று அவ்வழியாக திரும்புவதுதான் நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் எழுத்தாளர்- வாசகர் நண்பர்களை சந்திக்கமுடியும் என்று ஆர்வம் கொண்டிருக்கிறேன்