கேள்விகள்

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தில் காந்தியின் எதிரிகள் என்ற கட்டுரையில் ஒரு வரி ’இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்’

நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ரமணன்

அன்புள்ள ரமணன்,

அது இந்து மதத்தின் அடிப்படை மனநிலை சார்ந்த புரிதல் இல்லாத ஒரு கூற்று மட்டுமே. தமிழகத்தைப்பொறுத்தவரை அதிகமான பிராமணர்களால் கடவுளாகவும் குருநாதராகவும் கருதப்பட்டவர் சத்யசாய்பாபா– சங்கராச்சாரியார்கூட அல்ல.

தீண்டாமை நடைமுறையாக இருந்த காலகட்டத்திலேயே நாராயண குருவின் காலடியில் நம்பூதிரிகள் வந்து விழுந்திருக்கிறார்கள். மீனவப்பெண்ணான மாதா அமிர்தானந்தமயியை குருவாக காண்பவர்களில் உயர்சாதியினரே அதிகம்

சாதிமனநிலை எல்லா இந்துக்களுக்கும் ஆழத்தில் ஒரே அளவில் ஒரே வீச்சில் இருந்துகொண்டிருக்கிறது. தலித்துகளிடமும்தான். அதைத் தாண்டுவதற்கு ஆழமான சுயபரிசோதனையும் ஆன்மீக உறுதியும் தேவை. ஆனால் பொதுவாக அந்த சாதியுணர்வு லௌகீகம் சார்ந்ததாகவே உள்ளது. பரமார்த்திக விஷயங்களை அது கட்டுப்படுத்துவதில்லை என்பதே இந்துமதத்தின் பொது வழக்கமாக உள்ளது.

ஜெ

*

ஜெ,

நேரடியான கேள்வி, காந்திசெய்தவற்றிலேயே பெரிய பிழைகள் என்னென்ன? [மழுப்பாமல் பதில் சொல்லவும்]

முருகபூபதி

அன்புள்ள முருகபூபதி,

மழுப்பாமல் ஏற்கனவே பல பக்கங்களுக்கு விரிவாகச் சொல்லியிருக்கிறேன்

1. முதல்பெரும்பிழை கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்தது. அது இஸ்லாமிய மதகுருக்களைப் பிற மதங்களின் குருக்களுடன் இணைத்துப் புரிந்துகொண்டமையால் வந்தது. பிரிட்டிஷார் உருவாக்கிய இந்து முஸ்லீம் பிரிவினையைத் தவிர்க்க அவர் கண்ட வழி அது. அந்த ஒருங்கிணைப்புக்கு அவர் மட்டுமே முயற்சி செய்தார். மற்றவர்கள் அந்த முயற்சியும் எடுக்கவில்லை.

2. வைணவத்தின் தாந்த்ரீக மதத்தில் உள்ள சகசயனம் போன்ற சில வழிமுறைகளை முறையான வழிகாட்டல் இல்லாமல் செய்து பார்த்தது. அவை ரகசியமாக செய்யவேண்டியவை, யோகி- யோகினிகளுக்குரியவை. அவர் அதை வெளிப்படையாகச் செய்தார். தன்னை ஒரு தாயாக ஆக்கிக்கொள்ள நினைத்தார். ஆகவே அவை அவரை தார்மீக சிக்கல்களை நோக்கித் தள்ளின.

ஜெ

*

ஜெ,

மீண்டும் ஒரு கேள்வி

காந்தியின் பாலியல் சோதனைகளைப்பற்றி சொன்னீர்கள். அவருக்கு இந்தியாவின் தந்தை என்று சொல்ல என்ன தார்மீக அருகதை இருக்கிறது? என் மார்க்ஸிஸ்டு தோழர்கள் கேட்கிறார்கள்

முருகபூபதி

அன்புள்ள முருகபூபதி,

காந்தி அவர் புரிந்துகொண்ட முறையில் சில யோகமுறைகளை சோதனைசெய்துபார்த்தார். தன்னை ஒரு தாயாக ஆக்கிக்கொள்ளமுடியும் என்றும் மானுடநிலைகளில் அதுவே சிறந்தது என்றும் நினைத்தா. அந்த முயற்சிகளை ரகசியமாக வைக்கவில்லை. அப்பட்டமாகச் செய்தார், வெளிப்படையாக விவாதித்தார். அவருடன் இருந்த எந்தப் பெண்ணும் அதை கடைசிநாள் வரை ஒரு தவறாக உணரவில்லை. தன் தாயுடன் இருந்த உணர்வே இருந்தது என மனுபென் ஒருமுறை சொன்னார்

மார்க்ஸிஸ்டுகளுக்குச் சொல்லுங்கள், மார்க்ஸ் அப்படிப்பட்டவரல்ல என்று. அவர் பெண்களுடன் முறைகேடானபாலியல் உறவுகள் உடையவர். அதை எதிர்த்த ஜென்னியை அடித்து உதைத்து வதைத்தவர். தன் பெண்களை வெறிகொண்டு அடிக்கும் வழக்கம் கொண்டிருந்தவர். அவர்களால் மூர் [காட்டுமிராண்டி] என அழைக்கப்பட்டவர்.

தன் இல்லத்து அனாதைப் பணிப்பெண் ஹெலன் டெமுத்தை வருடக்கணக்காக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியவர் மார்க்ஸ். அந்த உறவில் உருவான கருவை அழித்தவர். மீறி ஹெலென் டெமுத் ஒரு பிள்ளையைப்பெற்றபோது அந்தப் பிள்ளைக்குத் தந்தையாக இருக்க மறுத்தவர். அந்த சோரபுத்திரனுக்கு எங்கெல்ஸ்தான் தன் குடும்ப அடையாளத்தைக் கொடுத்தார். அனாதையாக அவமதிக்கப்பட்டவனாக வாழ்ந்து மறைந்தான் அவன்.

காந்தியைப்பற்றிப் பேசும் யோக்கியதை கொண்ட மார்க்ஸியர்கள் வெகுசிலரே.

*

ஜெ,

கடைசியாக ஒரு கேள்வி, மன்னிக்கவும்

இந்தியாவின் பிரிவினையை ஒட்டிய மதக்கலவரங்கள்தானே இந்தியாவின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றன? எப்படி நம்மை நாம் ஆன்மீகதேசம் பண்பாடுள்ள தேசம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியும்?

முருகபூபதி

அன்புள்ள முருகபூபதி,

சரி, பண்பாடுள்ள தேசம் வேறு எது?

இருநூறாண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் பொருளியல் ரீதியாக ஒட்டச்சுரண்டப்பட்டு பஞ்சத்தால் நாலில் ஒருபங்கு மக்கள் செத்து அழிந்துபோன தேசம் இந்தியா. அது பிரிட்டிஷார் நிகழ்த்திய முதல் மானுடப்பேரழிவு.

திட்டமிட்டு பிரிட்டிஷார் உருவாக்கிய இரண்டாவது மானுடப்பேரழிவு என தேசப்பிரிவினையைச் சொல்லலாம். அதற்கான மதம்சார்ந்த மனப்பிளவை உருவாக்கியது அவர்களே. முஸ்லீம் லீக் நடத்திய நேரடிநடவடிக்கை வன்முறையை அவர்களின் அரசே ஆதரித்து ஊக்குவித்தது. மதக்கலவரங்களுக்கு ராணுவத்தை ஒருபோதும் அர்த்தபூர்வமாக பிரிட்டிஷார் பயன்படுத்தவில்லை

தேசப்பிரிவினையை அவர்கள் நிகழ்த்திய விதமே பேரழிவை உருவாக்கியது. ராட்கிளிஃப் ஒருவாரத்தில் ஒரு மாபெரும் தேசத்தை இரண்டாக்கினார். அவர் ஒருபோதும் கண்ணால் பார்த்திராத இடங்களை வெறும் வரைபடத்தைப்பார்த்து கோடுபோட்டு பிளந்தார். மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள் திட்டம்போட்டு பிளக்கப்பட்டன

ராட்கிளிஃப் செல்லும்போது எல்லா இந்திய வரைபடங்களையும் தன்னுடன் எடுத்துச்சென்றார். இந்தப் பிரிவினைக்கோடு அமலுக்கு வருவதற்குள்ளாகவே அவர் கிளம்பிச்சென்றார். போதிய விரிவான வரைபடங்கள் இல்லாமல் சுதந்திர இந்திய நிர்வாகம் கைவிடப்பட்டது.

தேசத்தின் புதிய எல்லையை அறிவிப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்புதான் அந்த வரைபடம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. மிகத் தெளிவற்ற நான்கே நான்கு வரைபடங்களுடன். இரண்டுமணி நேரத்தில் அதை ஆரய்ந்து தேசப்பிரிவினையை அறிவித்தார்கள். இது திட்டமிடப்பட்ட ஒரு அழிவுச்செயல்.

ஒரு வலுவான கூட்டரசை உருவாக்கியபின் தேசப்பிரிவினையை அறிவித்து படிப்படியான மக்கள் பரிமாற்றத்தை அரசே செய்திருந்தால் வன்முறை வந்திருக்காது. அந்த எல்லைக்கோட்டை அவசரமாக அறிவிக்காமலிருந்தால்கூட வன்முறை நிகழ்ந்திருக்ககாது

சரி, அப்படியே செய்தாலும்கூட உலகிலேயே பெரிய ராணுவத்தின் ஒரு பகுதியை அந்த எல்லைகளில் நிறுத்திவிட்டு அதை செய்திருக்கலாம். சரி ஒழிகிறது, கலவரம் ஆரம்பித்தபின்னாவது ராணுவத்தை அனுப்பியிருக்கலாம். இந்திய ராணுவம் முழுக்க இந்தியாவை விட்டு கிளம்பிய பிரிட்டிஷாருக்கு காவலுக்கு நிறுத்தப்பட்டது. அதன் மீது இந்தியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்கவில்லை. மௌண்ட்பாட்டன் அதைக் கட்டுக்குள் வைத்துத் தன் விருப்பப்படி செயல்படச்செய்தார்.

எந்த மக்கள் திரளும் வன்முறையாக இடம்பெயரச்செய்யப்பட்டு, அரசும் விலகிக்கொண்டால் அராஜகமும் வன்முறையும்தான் உருவாகும். மக்கள்தொகை மிக்க இந்தியாவில் அதன் வாய்ப்பு பல மடங்கு.

இந்தியாவை அராஜகத்தில் விட்டுச்செல்ல திட்டமிட்டனர் பிரிட்டிஷார். நாட்டை காங்கிரஸாரிடம் அவர்கள் கொடுக்கவில்லை. அத்தனை சம்ஸ்தானங்களையும் அந்தந்த மன்னர்களிடமும் நவாபுகளிடமும்தான் கொடுத்தனர். பிடித்திருந்தால் இந்தியாவில் சேரலாம் என்றனர். அதில் பாதிப்பேர் பிரிய நினைத்தால்கூட உலகின் பிரம்மாண்டமான அராஜக வெளியாக இந்தியா ஆகும் என எதிர்பார்த்தனர்.

அது நிகழவில்லை. ஏனென்றால் காந்தி நிகழ்த்திய அகிம்சைப் போராட்டம் பிரிவினைகளைப் போக்கி ஒருங்கிணைக்கும் சமரசத் தன்மை உடையது. பிரிவினைகளை வளர்க்கும் ஆயுதப்போராட்டம் அல்ல அது. அது ஏற்கனவே மக்கள் மனதில் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிவிட்டிருந்தது.

இந்தியா இந்தியரான பட்டேல் கைக்கு வந்தபின் வெறும் மூன்றுமாதத்தில் இந்தியா அமைதிக்குத் திரும்பியது. பகைமையை மன்னித்தது. பேதங்களை மெல்லமெல்ல சமரசம் செய்துகொண்டது. இன்னும் அழியவில்லை.

ஆகவே இந்தியா எந்த மேலைநாட்டைவிடவும் பண்பாடான நாடுதான். அமெரிக்க உள்நாட்டுப்போரையோ ஐரீஷ்விடுதலைப் போரையோ இதனுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்களின் மக்கள்தொகையுடன் இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விகிதாச்சாரம் என்னவென்று ஆராயுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்-கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தி-சுபாஷ் , கடிதம்