கலாப்ரியா-வண்ணதாசன் கடிதம்

அன்புமிக்க ஜெயமோகன்,

வணக்கம்.

இந்த தினத்தை உங்களின் “ தேர் திரும்பும் கணங்கள்” வாசிப்பின் வழி துவங்க வாய்த்தது.

எவ்வளவு அனுபவிப்பு, எத்தனை உண்மை உங்களுடைய ஒவ்வொருவரியிலும், சொல்லிலும். மனசார எழுதியிருக்கிறீர்கள். இப்போது நான்அடைந்திருக்கும் நெகிழ்வை எப்போதாவது மட்டுமே அடைய முடியும்.
நீங்கள் தொடர்ந்து கோபாலுக்கு, அவனுடைய கவிதைகளையும் இந்தக்கட்டுரைகளையும் முன்வைத்துச் செய்திருப்பவை, ஒருவகையில் சற்றுத்தொய்ந்தே இருக்கிற அவனுடைய மனதின் நொய்மையைச் சமன் செய்து மேலும் செயல்பட வைக்கும், வைத்திருப்பதை நான் தனிப்பட அறிகிறேன்.

இது ஒரு பெரிய காரியம். வெளியில் இருக்கும் யாரும் அறிய ஒண்ணாதது. தேவதேவன் என்கிற ஆளுமையை. லௌகீகத்தின் புழுதியில் சரிந்துவிட அனுமதிக்காமல், நீங்கள், அவருடைய கவிதைகளின் வழி அவரை ஏந்தி, நிமிர வைத்ததும் இப்படித்தான். இப்படி வேறு சில நல்ல படைப்பாளிகளுக்கும் உங்களின் காருண்யம் கிடைத்திருக்கலாம். பெரியவர் ஆ.மாதவனுக்குக் கிடைத்த உங்களின் தொடல் இதன் இன்னொரு வகைதான்.
பூமணிக்கு ஏதோ இப்படிச் செய்யப் போகிறீர்கள் போல. தொடர்பில் இருப்பதாகச் சொன்னார்.

எழுதி மட்டுமல்ல, எழுதுவதற்கு அப்பாலும் இப்படிச் சில நுட்பமான செயல்பாடுகளுக்கு உங்கள் வாழ்விலிருந்து உங்களைத் தேர்ந்து தெளிந்து கொண்டீர்கள். எப்போதுமே இறந்த காலங்கள் மரியாதைக்குரியவை எனத்தோன்றும் எனக்கு. இப்போது உங்கள் ஞாபகத்துடன் யோசித்தால் அவை மகத்தானவை எனவும் படுகிறது.

நல்லா இருங்க ஜெயமோகன்.

குடும்பத்தினர்க்கு அன்புடன்,
சி.க.
[வண்ணதாசன்]

அன்புள்ள வண்ணதாசன் அவர்களுக்கு,

எழுத்தாளர்களில் இருவகை உண்டு. கருத்துக்களைச் சொல்லி வாதாடி நிறுவக்கூடியவர்கள். புனைவுகளை மட்டும் எழுதக்கூடியவர்கள். என் தலைமுறையில் நான் முதல்வகை,யுவன் இரண்டாம்வகை. இதெல்லாம் அவரவர் மனநிலை சார்ந்தது.

முதல்வகை எழுத்தாளர்களுக்கு சற்றே அதிகமான பொதுவாசிப்பும் கவனமும் கிடைக்கும். சுந்தர ராமசாமிக்கு அது இருந்தது. எனக்கும். இந்த வகையில் கவனம் பெற்ற எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களை கவனப்படுத்த, கௌரவிக்க இயன்ற வரை முயலவேண்டும் என்பதே என் எண்ணம். அது ஒரு இலக்கியக் கடமை. அதையே செய்துவருகிறேன்.

நான் முதன்மையாக ஒரு நல்ல வாசகன், ரசிகன். இதுநாள்வரை அந்த சுயத்தை இழக்கவில்லை. இருபதாண்டுகளுக்கும் மேலாக உங்கள் ஆக்கங்களைப் பின்தொடர்ந்து வருபவன், என்னைக் கவர்ந்த எல்லாக் கதைகளுக்கும் எதிர்வினை ஆற்றியிருக்கிறேன் இல்லையா?

இது ஒரு வகை வழிபாட்டுணர்வுதான். எனக்கு கலாப்ரியா மீது இருப்பதும் அதுவே. எனக்கு என் சொந்தக் கதைகளும் கட்டுரைகளும் நினைவில்லை. உங்கள் கதையை அல்லது கலாப்ரியா கவிதையை அல்லது சுகுமாரன் கவிதையை மறக்கமாட்டேன். இந்த வழிபாட்டுணர்வு மிக இயல்பான ஒன்று என்றுதான் நினைக்கிறேன். இதுவே என்னைக் கலைஞனாக வைத்திருக்கிறது. நான் ஈடுபட்டிருக்கும் கலைமீதான வழிபாட்டுணர்வு என்றும் சொல்லலாம்

இந்த லௌகீக வாழ்க்கையில் அறிவுப்பிடுங்கலில் கலை என்ற ஒரு மென்மையான பகுதியைப் பாதுகாத்துக்கொள்ள இதெல்லாம் தேவையாகிறது. கலாப்ரியாவின் கதைகளில் சில இடங்கள் மிக நுட்பமானவை. கதவைக்கூடத் தட்டாமல் வீட்டுக்குள் வரும் கிராமப்பெரிசுகள் மாதிரி சர்வசகஜமாக அவை நமக்குள் நுழைந்துவிடுகின்றன

அவர் நாவல் எழுதுவதாகச் சொன்னார். அது மிக முக்கியமான நாவலாக அமையுமென நினைக்கிறேன்

வணக்கங்களுடன்

ஜெ

முந்தைய கட்டுரைஇரு இளைஞர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாரல் விழா உரை