யார் இந்து?-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி.
உண்மைதான். என்னுடைய குலதெய்வம் என்னுடைய சொந்த ஊரில் இல்லை. எந்த தலைமுறையில் நாங்கள் புலம்பெயர்ந்தோம் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த வழிபாடு மட்டும் இன்னும் நீடிக்கிறது. இரு வருடங்களுக்கு ஒரு முறை அறுபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அந்தக் கோவிலுக்குச் செல்வோம். அங்கு நான் விசாரித்த வரை அவர்கள் சொன்னது இதைத்தான். “கருப்பசாமி பல தலைமுறைகளுக்கு முன் ஊர் காவலுக்கு நேர்ந்து விடப்பட்ட மனிதன்தான். (அநேகமாக குலுக்கல் முறையில்?). அவனுக்கு ஊர் சார்பில் உணவு, உறைவிடம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. காலபோக்கில் நான் ஏன் மற்றவர்களுக்காக என்னுடைய வாழ்கையை தியாகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தவுடன் அவர் வாழ்ந்த இடங்கள் கோவிலாக மாறிவிட்டன. எனக்குப் புரிந்தவகையில் அது இவ்வளவுதான். மேலும் அங்கு இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வழிபாடு நடப்பதாலும், நாங்கள் புலம் பெயர்ந்து வாழ்வதாலும், அங்கிருந்து பிடி மண் எடுத்து கொண்டு வந்து எங்கள் ஊருக்கு அருகில் (திருத்தங்கல்) ஒரு கருப்பசாமி கோவில் கட்டியதாக எங்கள் ஊரில் சொல்லக்கேட்டதுண்டு. ஆச்சர்யம் என்னவென்றால், எங்கள் அந்த மூல குலதெய்வம் கோவிலில் பலி கிடையாது, ஆனால் திருத்தங்கலில் உண்டு.

உண்மைதான்! தீபம் ஏற்றுவது (பச்சை தண்ணீரில் விளக்கேறிவாதாக நம்பிக்கையும் கூட), விபூதி பூசுவதும் இங்கும், அங்கும் உண்டு. உங்கள் விளக்கத்தின் படி என்னுடைய புரிதலில் இந்த கருப்பசாமி (நாங்கள் வணங்கும்) குடும்பவழிபாடு என்பதாக மட்டுமே இருக்கிறது. இதை உள்ளீடு செய்யும்போதுதான் என் முந்தைய கடிதத்தில் உள்ள இன்னொரு அபத்தமும் தெரிகிறது. இந்த மாதிரி வழிபாடும் கிட்டத்தட்ட நீர்த்தார் கடன் செய்வது போலத்தான் இல்லையா?..

நீங்கள் கூறியபடி ஒரு சமூகம் முன்னேறினால் அந்த சிறுதெய்வ வழிபாடு நகர்ந்து பெருவடிவமாக மாற்றியிருக்கும். பஞ்சத்திலும், கல்வி இல்லாமையாலும் அவை அப்படியே நீடித்து வந்து இருக்கின்றன என்றே எனக்கும் தோன்றுகிறது.

நான் முன்கூறிய கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல முடியும். சைவர்கள், வைணவர்களும் இதே கேள்வியைக் கேட்க முடியும். உண்மைதான்! இது முழுக்க முழுக்க இந்து மதத்தை வரையறை செய்ய செய்யப்படும் முயற்சியும், அதில் ஏற்படும் குழப்பங்களும்தான்.

உங்கள் பதிலை ஒட்டுமொத்தமாக நான் இப்படி புரிந்து கொள்கிறேன். “இந்து என்பது வேறு மதமாகக் கருத வாய்ப்பு இல்லை. வேறு மதம் என்பதை எந்த நோக்கிலும் நம்மால் வரையறுக்க முடியாது. ஏனென்றால் இவை எல்லாம் சேர்ந்ததுதான் இந்து மதம் – சிவனும், கருப்பனும், சுடலைமாடனும் ஏனைய தெய்வ வழிபாடு அனைத்தும் இணைந்ததுதான் இந்து மதம்”.

இந்து மதம் எப்போதும் இணைவதைப் பற்றி வலியுறுத்துவதில்லை. அது காலப்போக்கில் நடந்து வரும் பரிணாம மாற்றம் போலவே நிகழ்கிறது. சிவ வழிபாட்டு முறையும், விஷ்ணு வழிபாட்டு முறையிலுமே அந்த வேறுபாடுகள் உள்ளன (இன்னும் சொல்லப்போனால் நான் சொல்லியிருப்பதை விட அதிகமாக..இல்லையா?..). இவைகளே இந்து மதமாக ஆகியிருக்கும்போது இந்த சிறு வழிபாடு முறைகள் அதன் கூறுகளாக இருப்பதால் அவைகளும் அந்தக் கடலின் துளிகள்தாம்!

நாட்டார் தெய்வங்கள் பற்றி இன்னும் படிக்க வேண்டும். படிக்கிறேன்.

மீண்டும் உங்கள் நேரத்திற்கு நன்றி!

அன்புடன்,
காளிராஜ்

அன்புள்ள காளிராஜ்,

உங்கள் குலதெய்வம், நாட்டார் தெய்வங்களைப்பற்றி அறிய அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாசியுங்கள். தெய்வங்கள் முளைக்கும் நிலம், தமிழக நாட்டுப்புறக்கலைகள், தோல்பாவைநிழல்கூத்து முதலிய நூல்கள் ஒரு நல்ல தொடக்கமாக அமையக்கூடும்

இணையத்தில் கிடைக்கும் நாட்டுப்புறக்கதைகள் பல உள்ளன. அகா பெருமாள் விக்கி மூலம்

ஜெ

முந்தைய கட்டுரைநம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]
அடுத்த கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு