அனல் காற்று – கடிதங்கள்

அன்பான ஜெயமோகன்,

உங்கள் கதையை தொடராக படிப்பதன் கஷ்டம் மிகப் பெரியது. சில சமயம் எரிச்சலூட்டுவது. தொடர்ந்து படித்தபடியே இருந்து ஏதோ ஓரிடத்தில், சம்பவங்களின் கனத்தில் ஸ்தம்பித்து அடுத்து நகர இயலாமையின் காரணமாகவே படிப்பதற்க்கு இடைவெளி ஏற்படுத்தும் என்போன்றொர்க்கு. இருந்தாலும் உங்கள் எழுத்தில்லாமல் ஆகாது என்பதால் தொடராகவும் படிக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இணையம் கிடையாது. அலுவலகத்தில்தான் இணையம் இருக்கிறது. ஆதனால் விடுமுறையில் கூட பொது இணையம் இருக்கும் இடம் தேடி ஓடச் செய்தது அனல்காற்று.
 
எல்லா ஆண்களுக்கும் பொதுவான,  மனதின் மிக ஆழத்தில், வார்த்தையாக்க முடியாதபடி மண்டிக்கிடந்த ஒன்றை வார்த்தைகளாக்கி எங்கள் முன் அலையவிட்டுவிட்டீர்கள். இதனால் நான் அவமானப்பட்டேன். திருப்திப்பட்டேன். அமைதியானேன். ஒருவகையான விடுதலை உணர்வு ஏற்பட்டது. என் வாழ்வில் நடைமுறையில் இது போன்ற சம்பவங்கள் இல்லையெனினும், மனம் இதனை போன்ற கற்பனைகளை ஏராளமாய் உருவாக்கியிருக்கிறது. அனல்காற்று மிகச்சிறந்த குறு நாவல். இதில் உங்கள் வழக்கமான எழுத்து நடையில் இருந்து மிக விலகி எளிமையாய் எழுதி இருப்பதாய் தோன்றியது. எப்போதும் உங்கள் எழுத்தில்  இழையோடும் நகைச்சுவை இல்லாதிருப்பது கதையின் கனத்தில் மறந்து போய்விடுகிறது.


Best Regards
Dhanasekaran A

அன்புள்ள தனசேகர்,
ஆம் தொடராகப்படிப்பது சிரமமானதுதான். ஆனால் அத்தனைபெரிய படைப்பை ஒரேயடியாக பிரசுரிக்கவும் முடியாதல்லவா? என் கதைகள் பலவகையில் விரியக்கூடியவை. அடுத்து என்ன எழுத்வேன் என்று எனக்கே தெரியாமலிருக்கும்போதுதான் எனக்கே அதில் ஆர்வம் ஏற்படுகிரது. அதிலும் எனக்கு கொஞ்சம்கூட தெரியாத தளம் என்றால் இன்னும் உற்சாகம். அனல் கார்றின் ஒரு கதபாத்திரம்கூட , ஒரு நிகழ்ச்சிகூட எனக்கு முன்னரே தெரியாதது. அந்த அனுபவத்தளமே முற்றிலும் அன்னியம். அனால் அப்போதுதான் கற்பனை அதன் முழுவீச்சை நிகழ்த்த முடிகிறது!
ஜெ
முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்