உப்பு-கடிதங்கள்

உலுக்கிப் போடும் ஒரு கட்டுரை, ஜெ.

Churchill’s secret war புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியாண்டுகளில் நிகழ்ந்த சுரண்டல் பற்றிய மனம் கொந்தளிக்க வைக்கும் சித்திரத்தை அளிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகம் தங்கள் ஆட்சி வேரூன்றும் காலத்திலேயே எப்படி அதற்கான அமைப்பை பிரிட்டிஷார் உருவாக்கினார்கள் என்பதைப் பேசுகிறது. இரண்டு புத்தகங்களும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் உண்மையான தாக்கம் பற்றி நாம் தெரிந்து கொள்ள Companion புத்தகங்காக இருக்கும் என்று தோன்றுகீறது.

எவ்வளவு பெரிய வரலாற்றுத் தடங்களை எவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட்டிருக்கிறோம் என்ற உணர்வே மேலெழுகிறது.

அன்புடன்,
ஜடாயு

*
அருமை! கம்ப்யூட்டர் ஜாலம் போலக் கட்டுரையின் விவரிப்பில் ஒரு சிறிய பாம்பு ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரம் பூமியில் பிறந்து, பின்னர் மளமளவென ராட்சதப் பச்சைப் பாம்பாக வளர்ந்து, காஷ்மீரில் ஒரு மலைமுடியில் தலையை வைத்து, ஒரிய கடலுக்குள் வாலை விட்டு நீரை அளையும் விரல்போல் ஆட்டிக்கொண்டு சாவகாசமாக ஆறரைக்கோடி மக்களை முழுங்கி விட்டு முறுங்கி நெளிவது போல தோன்றியது. இத்தனை ஆண்டுகள் தெரியாமல் போனதை விட, புத்தகமாக வெளியிடப்பட்டும் 1996க்குப் பிறகு, இணைய யுகத்திலும் இது பரவலாகத் தெரியாமல் போனது ஆச்சர்யமே. பிபிசி போன்றவை இதையெல்லாம் எப்படி டாக்குமெண்டரி ஆக்காமல் விட்டார்கள் என்றும் தெரியவில்லை. இதெல்லாம் பாடங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியா மேற்கிற்கு எப்பொழுதும் ‘மாயாஜாலப் பெட்டி’ போல, ஒவ்வொருமுறை கையை விட்டாலும் ஏதாவது ஆச்சர்யமான விஷயம் கிடைக்கிறது.

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ போன்று பல பழமொழிகள் பண்பாட்டில் அப்படிச் சும்மா வந்துவிடவில்லை என்பதைப் புரியவைக்கிறது. தன் நாட்களைச் செலவிட்டு ஆரய்ந்து உண்மைகளைப் பூசிமெழுகாமல் சொன்ன ராய் மாக்ஸ்ஹாமுக்கும், அறிமுகப்படுத்திய ஜெமோவுக்கும் நன்றிகள்.

– பிரகாஷ் சங்கரன்
www.jyeshtan.blogspot.com

காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை மார்க்சியர்கள் கிண்டல் செய்தார்கள் என ஜெ எழுதும் போது சந்தோஷமாக இருந்தாலும், எனக்குத் தெரிந்த உண்மையையும் சொல்ல வேண்டும். எல்லா மார்க்சியர்களும் அல்ல. உப்பு சத்தியாகிரகம் குறித்த ஒரு மிக முழுமையான ஆதரவுக் கட்டுரை எழுதியவர் மார்க்சியரான ஹால்டேன். அவருடைய ‘Biochemistry and Mr.Gandhi’ ஒரு மிக முக்கியமான கட்டுரை. ‘Continuation of Salt Tax is the biological argument for Swaraj’ என ஹால்டேன் முடிக்கிறார்.(கூடவே அந்தக் கட்டுரையில் ஹால்டேன் பனங்கள் தேவை என்றும் சீமை சாராயம் தடை செய்யப்படுவது நல்லது என்றும்
கூறுகிறார்) ஹால்டேனின் காந்தி ஆதரவு மார்க்சிலிருந்து வந்ததாகக் கருத முடியாது. ஆனால் அவர் அப்போது மார்க்சிய குரலாக கருதப்பட்டார். இறுதியில் அறிவியல் உண்மையா மார்க்சிய சோவியத்தா என வந்த போது ஹால்டேன் இந்தியாவை
வந்தடைந்தார்.

அரவிந்தன் நீலகண்டன்

*

கோவை மாவட்டக் கல்யாணத்தில் ”உப்புவாங்குதல்” என்ற ஒரு தனிச்சடங்கே உண்டு. இரு சிறிய கூடை உப்பை பெண் மட்டும் மாப்பிள்ளை வீட்டார் கலந்து மாற்றிக்கொள்வார்கள்; மண ஊர்வலத்திலும் சிறிய உப்புக்கூடையைச் சுமந்து செல்வார்கள் சின்ன வயது ஞாபகம். இன்றும் வழக்கம் உள்ளதா கோவையில் அல்லது வேறு ஊர்களில்….

வேணு தயாநிதி

*

அருமையான கட்டுரை. ச்சே எந்தளவிற்கு புத்திசாலித்தனமாக சுரண்டப் பட்டிருக்கிறோம் என்று நினைக்கும் போது வியப்பாகவும், மனச்சோர்வாகவும் இருக்கிறது.

உப்பு நம் மரபில் இன்றும் முக்கியமான இடத்திலேயே வைக்கப் படுவது புரிந்துகொள்ள முடிகிறது. இன்று எங்கள் ஊர் பக்கங்களில், புதுமனை புகுவிழாக்களுக்குச் செல்பவர்கள் உப்பு மஞ்சள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் இருகிறத.

நன்றி,
சுந்தரவடிவேலன் சுப்புராஜ்

*

கட்டுரையில் ஸ்லீமன் என்ற பெயர் பொறி தட்டியதில் , என் மின் நூலகத்திலிருந்து கண்டது.
W.H.Sleeman எழுதிய Rambles and Recollections of an Indian Official, கிடைக்கும் இடம் இதோ.
http://www.gutenberg.org/files/15483/15483-h/15483-h.htm

இந்து திருமணங்கள், சதி , கோஹினூர் மற்றும் அன்றைய பாரதம் பற்றின பல சுவாரஸ்ய விஷயங்கள் படித்து இன்புற.

சிவராமன்

*

ஜெ,

நெருங்காலமாகவே மூன்று விஷயங்களை நீங்கள் சொல்லி வருகிறீர்கள். பலசமயம் அவற்றையெல்லாம் சொற்பொழிவுகளில் சொல்லிச்செல்கிறீர்கள். பிரிட்டிஷார் இந்தியாவிலே ஊழல் மிகுந்த அரசைத்தான் உருவாக்கினார்கள், இந்தியாவிலே உண்மையை அன்றைவிட ஊழல் இன்றைக்குக் குறைவு என்று சொல்கிறீர்கள். இந்தியாவிலே மாபெரும்பஞ்சங்களை பிரிட்டிஷ் ஆட்சிதான் உருவாக்கியது என்கிறீர்கள். இந்தியாவின் ஏழை அடித்தள மக்கள் இந்த அளவுக்குக் கேவலமான வாழ்க்கை வாழ பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்கிறீர்கள்

இந்த விஷயங்களை உங்கள் இணையதளத்திலே பலர் மறுத்து எழுதியிருக்கிறார்கள். [ உதாரணமாக இந்தியாவில் பஞ்சம் இருந்ததா? என்ற கட்டுரை] என்னிடமே ஜெயமோகன் ஆதாரமில்லாமல் ஊகமாக அடித்துவிடுகிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் ஆதாரம் வைத்திருப்பார் என்று சொல்லுவேன். இப்போது மிக விரிவாக ஆதாரம் காட்டியிருக்கிறீர்கள். அதுவும் பிரிடிஷாரே எழுதிய ஆதாரம்.

இப்போதாவது பிரிட்டிஷார் இந்தியாவை வளர்த்தார்கள் என்று சொல்லக்கூடியவர்கள் மனசாட்சியுடன் யோசிக்கவேண்டும்

சத்யநாதன், சென்னை

*

அன்பிற்குரிய ஜெ ,

கண்ணீர் சிந்தாமல் இதனைப் படிக்க இயலாது , நன்றி கலந்த விம்மல்கள் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததற்காக நன்றிக் கடன்கள்.

இந்நாள்வரை இதனைப் பற்றி ஒரு புரிதலும் இல்லாமல் இருந்தமைக்கு வருத்தப்பட்டுக் கொண்டேன், காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் ஒன்று வலது சாரி மேல்ஜாதி வசைகள் , அல்லது இடது சாரி மேட்டிமைவாதம் -இதைத் தவிர ஒரு சமனிலைக் கூற்றை இதுவரை கேட்டதில்லை.

இல்லாவிட்டால் காந்தியை ஒரு சிலை பிம்பமாக ஆக்கி வோட்டு வசூல் செய்தார்கள் , ஒரு தொகுப்பே இல்லை.நன்றி இந்தியப் பஞ்சத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கட்டுரை, நான் சாப்பிடும் பொழுது தினமும் நினைவிற்கு வரும். வார்த்தைகள் வரவில்லை. நன்றி

மது லட்சின்

உலகின் மிகப்பெரிய வேலி

முந்தைய கட்டுரைசிற்பச்செய்திகள்
அடுத்த கட்டுரைநுண்தகவல்களும் நாஞ்சிலும்