பாரதி விவாதம் – 1- களம்-காலம்

பாரதியின் இலக்கிய இடம் ஜெ. சொல்லியிருக்கும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை. அவற்றை நான் மறுக்கிறேன். இத்துடன், அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் பாரதியை “வழிச்சிந்தனையாளர்” என்று குறிப்பிட்டது, அவருடன் ஈவேராவையும் இன்னொரு வழிச்சிந்தனையாளர் என்று இணை வைத்தது இரண்டையும் மறுக்கிறேன்.

இந்தத் திரியில் பேசுபவர்களில் எத்தனை பேர் பாரதியார் கவிதைள் புத்தகத்தையும், சில உதிரிக் கட்டுரைகளையும் தாண்டி, சீனி.விசுவநாதன் பதிப்பித்த “காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள்” தொகுதிகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. (ஜெ, நீங்கள் 1995ல் அந்தமதிப்புரை எழுதும் போது இந்தத் தொகுப்புகள் வந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்). பாரதி என்ற பன்முக ஆளுமையின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள அது அவசியம்.

இது குறித்துக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நீள்கட்டுரை – ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய “பாரதிக் கல்வி”. தமிழினியில் தொடராக வந்தது. இத்துடன் பாரதியின் சாக்தம் என்ற இன்னொரு கட்டுரையும் சேர்த்து “பாரதிக் கல்வி” என்ற பெயரில் தனிப் புத்தகமாகவும் வந்திருக்கிறது. பாரதி அன்பர்கள் அனைவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்.

இணையத்தில் தேடிப் பார்த்தேன், இந்தக் கட்டுரை கிடைக்கவில்லை. யாருக்காவது கிட்டினால் சுட்டி தரவும். பாரதி மீது வழிபாட்டுணர்வு என்பதைத் தாண்டி முழு விமர்சன நோக்கில் மதிப்பீடு செய்திருக்கிறார். மோகனரங்கன் ஒரு சிறந்த கவிஞர், தத்துவவாதி, தமிழறிஞர், பன்முகசிந்தனையாளர்.

இந்த நூலைப் பற்றிக் கட்டாயம் ஒரு புத்தக அறிமுகம்/விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.. அவகாசம் கிடைக்கும்போது எழுதுவேன்.

[தளத்தில் உள்ள குறிப்பு: கண் என்பது கண் திறக்கும் அறிவேயாகும் பாரதி ஒரு கல்வி பாரதியைப் புரிந்து கொண்டால் பல விஷயங்களை நாம் புரிந்துகொண்டால் தான் பாரதியைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. பாடலாசிரியரின், கவிஞன், கட்டுரையாளன் பத்திரிக்கையாளன் கதை சொல்லி என்பதையெல்லாம் மீறி அவனுடைய உள்ளியல்பில் சிந்தனையாளன் என்ற பரிமாணத்தை உன்னிப்பான அவதாகத்திற்கு இந்நூல் கொணர்கிறது உணர்ச்சிமயமாகக் கனவுகளில் திரிதருவோன் என்ற வழக்கமான பிடித்து வைத்த எண்ணத்திலிருந்து நாம் மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்நூல். யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, கடந்த காலத்தின் நன்மைகளில் எதுவும் சேதாரம் ஆகாமல், நாட்டின் நலந்திகழ் எதிர்காலம் நனவாக வேண்டும் என்றுகனவு கண்டவன் பாரதி என்று நிறுவுவது இந்நூலின் பயன்.]

[புத்தகம் வாங்க –http://www.udumalai.com/index.php?prd=barathik%20kalvi&page=products&id=9697]

ஜடாயு

ஜடாயு

[ஜடாயு]

*

ஜடாயு,

பாரதியின் மிகப்பெரும்பாலான படைப்புகள் எழுபதுகளிலேயே அச்சில் ரா.அ.பத்மநாபன் அவர்களால் கொண்டு வரப்பட்டுவிட்டன. [பாரதி ஆய்வாளர்களுக்கு அவரே முன்னோடி. மேலும் பலர் உள்ளனர், ஐம்பதுகள் முதலே பாரதி ஆய்வுகளும் வெளியீடுகளும் தொடர்ந்து நடந்து வந்துள்ளன] பாரதியாரின் ஆக்கங்களை அனேகமாக முழுமையாகவே வாசித்திருக்கிறேன். சீனி.விசுவநாதன் கொண்டுவந்த கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் சிற்சில விடுபடல்களை மட்டுமே சரிபார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ரா.அ.பத்மநாபனின் ஆய்வுப்பதிப்புகளைக் கொண்டு பாரதியை மட்டுமே வாசிக்கமுடியும். நான் பாரதி யாருடனெல்லாம் விவாதித்தாரோ அவர்களையும் கிட்டத்தட்ட முழுமையாகவே வாசித்திருக்கிறேன். ஜஸ்டிஸ் சுப்ரமணிய அய்யர், அயோத்திதாச பண்டிதர் உட்பட. நவீனத்தமிழின் தொடக்கப்புள்ளி என்ற அளவில் பாரதி மீதான கவனத்தை நெடுங்கால உழைப்பால் வளர்த்திருக்கிறேன். வேறெந்த பாரதி ஆய்வாளர் அளவுக்கு பாரதியை வாசித்தவர்களே ஜேசுதாசன் போன்றோர். [திருவனந்தபுரம் பல்கலை நூலகம் ஒரு பெரிய புதையல்] ஆகவே என் வாசிப்பை நீங்கள் ஓரளவு நம்பலாம்

ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் எழுத்தை அது தமிழினியில் வெளிவந்த காலகட்டத்திலேயே வாசித்திருக்கிறேன்.

உணர்ச்சிவசப்படாமல் இதைப்பற்றி பேசும்போதே நாம் இலக்கியம் பற்றி விவாதிப்பவர்களாக ஆகிறோம். இலக்கிய விமர்சனம் என்பது உலகளாவிய ஒரு அறிவுத்துறை. உலகின் எல்லா மொழிகளிலும் இலக்கிய முன்னோடிகள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தலைமுறையிலும் விவாதிக்கப்படுகிறார்கள். விமர்சிக்கப்படுகிறார்கள். அது அவர்களை அறிய, உள்வாங்கிக் கொள்ள, ஏற்கனவே இருக்கும் மரபின் விரிந்த புலத்தில் அவர்களை சரியாகப் பொருத்த மிகமுக்கியமானது.

ஒருபடைப்பாளியைத் துல்லியமான ரசனையுடனும், எதிர்பார்ப்புடனும் அணுகி அவர் அளித்த உச்சங்களைப் பெற்றுக்கொள்வதுதான் அவருக்குச் செய்யும் சிறந்த வாசிப்பு. அவர் எழுதியதெல்லாமே உச்சங்கள் என்றால் நமக்கு வாசிக்கத்தெரியவில்லை என்றே பொருள். பாரதிக்கு நிகரான கவிஞர்களான தாகூர், ஆசான் போன்றவர்களை அம்மொழிகளில் எல்லாக் கோணங்களிலும் விரிவாகவே விமர்சித்திருக்கிறார்கள். ஆசானின் வழிவந்த நித்ய சைதன்ய யதியே கூட ஆசானை விமர்சித்து இரு நூல்களை எழுதியிருக்கிறார்.

நான் என்னுடைய கருத்துக்களில் பாரதி எப்படி தமிழ் நவீன இலக்கியத்துக்கும், இன்றைய நவீன தமிழ்பண்பாட்டுச் சூழலுக்கும், இன்றுள்ள உரைநடை மொழிக்கும் முன்னோடியாக விளங்கினார் என்று திட்டவட்டமாகவே சொல்லியிருக்கிறேன். இவ்வளவும் சொன்னபின் ’அவர் முன்னோடி தெரியுமா?’ என்று விவாதத்தை ஆரம்பிப்பதில் அர்த்தமே இல்லை.

அதற்கு அப்பால் நான் கேட்கும் கேள்விகள் இரண்டுதான். பாரதியின் கவிதைகளில் முழுமையான கவிதையனுபவத்தை அளிக்கும் கவிதைகள் எவ்வளவு? அவற்றை மட்டும் கொண்டு அவரை ஒரு மகாகவி என்பது எவ்வளவுதூரம் சரி? அவரது புனைகதைகளும் கட்டுரைகளும் அவரது சமகால பிற இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் எந்த அளவுக்கு முக்கியமானவை?

மோகனரங்கனின் வாசிப்புக்கும் நான் சொல்வதற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. அவருடையது ஒரு சம்பிரதாயமான ‘தொகுத்துச்சொல்லும்’ அணுகுமுறை மட்டுமே

இந்தியச்சூழலில் 1830களில் பிரம்மசமாஜத்தின் சொல்லாடல்கள் வழியாக நவீன இந்தியச்சூழலில் வேதாந்தம் மறுவிவாதத்துக்கு வந்தது. ஆங்கிலம் மூலம் வந்துசேர்ந்த மேலைநாட்டுச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு உருவான இந்த வேதாந்தத்தை நவவேதாந்தம் என்று சொல்லலாம். தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் முதல் நாராயணகுரு வரை பலரால் அரை நூற்றாண்டுக்காலம் இந்த விவாதங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

பாரதி இந்த ஒட்டுமொத்த நவவேதாந்த விவாதத்தின் எதிர்வினையாகவே சிந்தனை செய்திருக்கிறார். அந்த நவவேதாந்தப் பெருவிவாதத்தில் அரவிந்தர் ஒரு முக்கியமான தரப்பு. பாரதி அந்தத் தரப்பின் ஒரு சிறு பகுதியே. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அந்த நவவேதாந்த விவாதத்தில் மிகமிக விரிவாக பேசப்பட்டவை. சொல்லப்போனால் பி.ஆர்.ராஜம் அய்யர் கூட அதில் பாரதியை விட அதிகமாகப் பங்களித்திருக்கிறார். [Rambles in Vedanta]

பாரதி பின்னர் சக்தி உபாசனைக்குத் திரும்பினார். அதுவும் அரவிந்தரிடமிருந்து, அரவிந்த ஆசிரமத்து வங்காளிகளிடமிருந்து, பெற்றுக்கொண்டதே.

பாரதியின் சிந்தனைகளை அவர் தத்துவக் கட்டுரைகளாக எழுதியதில்லை. அவரது சிந்தனைகளாக நாம் அவரது இதழியல் எழுத்துக்களில் இருந்தும் கவிதைகளில் இருந்தும் எடுத்து தொகுப்பவை – மோகனரங்கன் முன்வைப்பவை- எல்லாமே இந்த இரு நவீன இந்து மறுமலர்ச்சி விவாதங்களில் இருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்கள் மட்டுமே. அவரது அசல் சிந்தனைகள் அல்ல. அவற்றில் அவரது பங்களிப்பு மிகமிக குறைவு

தமிழகத்தில் திராவிட-மார்க்ஸிய எழுத்துக்கள் அதிகமாக வந்ததன் காரணமாக 1830 முதல் நடந்த இந்த மாபெரும் ஞானவிவாதம் பற்றி தமிழில் அனேகமாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. பாரதி அந்த அலையின் சிருஷ்டி என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. தாகூரும் ஆசானும் கூட அதன் சிருஷ்டிகளே. தமிழகத்தில் நாம் அந்த அலையை அறியாமல் பாரதியை அதில் இருந்து துண்டாக்கிக் கொண்டு சிந்திக்கிறோம். ஆகவே பாரதி எழுதியதெல்லாம் பாரதி உருவாக்கிய சிந்தனைகள் என்ற அளவில் மதிப்பிட்டுக் கொள்கிறோம்.

ஜெ

*

மரபின்மைந்தன்

[மரபின்மைந்தன் முத்தையா]

ஜெ,

இந்தத் விவாதத்தின் சௌகரியம், அசௌகரியம் இரண்டுமே தனிப்பட்ட அபிப்பிராயங்களின் தொகுப்பாக இருப்பதுதான். பாரதியை அளக்கக் கம்பனை அளவுகோலாக்கும்போது, கம்பனை அளக்கக் கம்பன் அளவுகோலானால் என்ன மதிப்பீடு என்று பாருங்கள். காவியம் பாடிய கம்பனை அளவுகோலாக்கிக் கொண்டு, ஏரெழுபது பாடிய கம்பனை, சடகோபர் அந்தாதி பாடிய கம்பனை அளக்கும்போது என்ன நிகழ்கிறது?

களம்-காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரதியின் சொல்லாட்சி, பாடுபொருள் ஆகியன கணக்கிலெடுக்கப்பட்டால் அவன் மகாகவி என்பதில் மறுப்புச் சொல்ல முடியாது.

மரபின்மைந்தன் முத்தையா

***

அன்புள்ள முத்தையா

இலக்கியம் எப்போதும் இலக்கியம் சம்பந்தமான அளவுகோல்களாலேயே அளக்கப்படுகிறது. அந்த அளவுகோல்களை உருவாக்குவது அந்த மொழியின் இலக்கியப் பாரம்பரியம்தான். அதையே நாம் கிளாஸிஸம் என்கிறோம். அதேபோல உலக அளவில் ஒரு இலக்கிய ஆக்கத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை உருவாக்குவது மானுடப்பொதுவான செவ்விலக்கியங்களாக அங்கீகரிக்கப்படும் நூல்கள். அதைத் தமிழின் முதல் நவீன இலக்கிய விமர்சகரான வ.வே.சு அய்யர் அவரது கம்பன் பற்றிய கட்டுரையில் பேசுகிறார். உலகப்பெருங்கவிகளின் ஒரு பட்டியலை அவர் போடுகிறார் [அதில் காளிதாசன் இல்லை] அதில் கம்பனை ஏன் சேர்க்கலாம் என எழுதுகிறார். அரவிந்தரும் அதே நோக்கில் விரிவாக எழுதியிருக்கிறார்.

இலக்கிய விமர்சனத்தில் ரசனைவிமர்சனம் என்பதே அடிப்படையானது. அதைப்பற்றிய விரிவான சித்திரத்தை நான் என்னுடைய இலக்கிய முன்னோடிகள் வரிசை நூலின் முன்னுரையில் பேசியிருக்கிறேன். ரசனை விமர்சனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் எல்லா அளவுகோல்களும் முந்தைய பேரிலக்கியங்கள் மீதான வாசிப்புகளில் இருந்தே உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன.

அதைத் தவிர்க்க முடியாது. ரசனை என்பதே அதுதான். ஒன்றை நீங்கள் ரசித்துத் தரம் பிரிக்கும்போது அதுவரை நீங்கள் வாசித்து ரசித்தவற்றைக் கொண்டே அதைச் செய்கிறீர்கள். அப்படித் தரம்பிரிக்காமல் ஒரு ரசனை நிகழ்வதே இல்லை. இலக்கியத்தில் மட்டுமல்ல எதிலும்.

இங்கே தனிப்பட்ட அபிப்பிராயங்களை நான் சொல்லவில்லை என்பதை கவனித்தால் அறிந்து கொள்ளலாம். நான் ரசனை விமர்சனம் சார்ந்த ஓர் அளவுகோலை உருவாக்குகிறேன். இந்த அளவுகோல் தமிழில் ஒரு புறவயமான மதிப்பீடாக பாரதி எழுதிய காலம் முதல் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்று நம் கையில் கிடைக்கும் படைப்பு நமக்களிப்பது என்ன என்பதே கேள்வி. ஷேக்ஸ்பியரையும் கம்பனையும் அப்படித்தான் வாசிக்கிறோம். கவியனுபவத்துக்காக என்றால் பாரதியையும் அவ்வாறே வாசிக்கவேண்டும். பாரதியின் கவிதைகள் அன்றைய சூழலில் ஆற்றிய பணியை நான் நிராகரிக்கவில்லை. நான் பேசுவது அவை இன்று என்னவாக நமக்கு இருக்கின்றன என்பதைப் பற்றித்தான். அப்படி யோசிக்கவே கூடாது என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அது இலக்கிய விமர்சனத்தின் வழி அல்ல

இன்றைய வாசகனுக்கு அவர் கவிதைகள் என்ன அளிக்கின்றன என்று பேசும்போது அவர் அன்றைய அரசியலில் என்ன செய்தார், எந்தசூழலில் அவற்றை எழுதினார் என்பதெல்லாம் பொருட்டல்ல. அவை இன்று அக்கவிதைகளின் கவித்துவத்தை மதிப்பிடும் அளவுகோல்களும் அல்ல. அந்தப் படைப்புகளை பொருள் கொள்ள அந்தப் பின்னணி உதவலாம். ஆனால் மதிப்பிடுவதைக் கவித்துவ அனுபவத்தை மட்டும் கொண்டே செய்யவேண்டும்

இலக்கியம் என்பது காலம் கடந்தது, மொழி கடந்தது. நூறு வருடம் முன்னால் எழுதப்பட்ட படைப்புகளை நாம் இன்று வாசிப்பது அன்றைய சூழலை வைத்து அல்ல. இன்றைய சூழலில் நின்றுதான். அப்படியும் இலக்கிய அனுபவம் அளிக்கும் படைப்பே காலத்தை வென்றது எனப்படுகிறது. பேசும் சூழலும் மொழிச்சூழலும் கடந்தும் படைப்புகள் எங்கோ வாழும் எவனோ ஒருவனுக்கும் இலக்கிய அனுபவம் அளிக்கும். அதுவே பேரிலக்கியம். நாம் உலக இலக்கியமாக வாசிக்கும் பெரும்பாலான கவிதைகள், படைப்புகள் அத்தகையவை.

பாரதி எழுதிய காலகட்டத்தைப் பார்,பாரதி எழுதிய சூழலைப் பார், இன்றைய சூழலை வைத்து மதிப்பிடாதே என்றெல்லாம் சொல்வது அவரது எழுத்து, கால இடம் கடந்த பேரிலக்கியம் இல்லை என்று நீங்களே சொல்வதுதான். பேரிலக்கியம் படைப்பவர்களே பெரும் கவிஞர்கள்.

பாரதியின் கவித்துவம் எப்போதும் உச்சநிலையில் வைத்து மதிப்பிடப்பட்டதில்லை என்பதையே நான் குறிப்பிடுகிறேன். அவர் எழுதிய காலகட்டத்திலேயே வ.வே.சு.அய்யர் அவரது இடத்தைத் தமிழ்ப் பேரிலக்கிய மரபில் வைத்துக் கறாராகவே மதிப்பிட்டிருந்தார். அதன் பின் இன்றுவரை திறனாய்வுத் தளத்தில் அவரது பாடல்களின் கவித்துவம் பற்றிய ஒரு விமர்சனம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதையே நான் குறிப்பிட்டேன்

நான் ஒரு விமர்சகனாகச் சொல்லும் இரு கருத்துக்களை மட்டும் வாசகர்களாகப் பரிசீலியுங்கள் என்றே கோருகிறேன்.

  1. பாரதியின் கவிதைகளில் அன்றைய சூழலை விட்டு உயர்ந்து எப்போதும் எக்காலத்துக்கும் உரிய பேரிலக்கியத் தன்மையுடன் இன்றும் நீடிக்கும் படைப்புகள் மிகக்குறைவே. அவரை ஒரு முக்கியமான கவிஞர், ஒரு காலகட்டத்தின் குரல் என்று சொல்லலாம், மகாகவி என்று சொல்லக்கூடாது.
  2. பாதியின் புனைகதைகளில் அவரது சமகால இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளின் அளவுக்கு முக்கியமானவை எவையும் இல்லை. இன்றும் எந்த சமகால உலகநாவல்களுக்கு நிகராக நிற்கும், இன்றும் பேரிலக்கியமாக வாசிக்கப்படும், தாகூரின் ’கோரா’ என்ற மகத்தான நாவல் 1910ல் பாரதி அவரது ‘ஆறில் ஒருபங்கு ‘ போன்ற எளிய ஆரம்பநிலைக் கதைகளை எழுதியபோதே வெளிவந்துவிட்டது. இன்றும் மனதை உலுக்கும் முன்ஷி பிரேம்சந்தின் கதைகள் வெளிவந்துவிட்டன. அந்தப் பின்னணியில் நாம் பார்க்கவேண்டும்.

மற்றபடி பாரதியின் பண்பாட்டு பங்களிப்பு, முன்னோடித்தன்மை, மொழி பற்றியெல்லாம் இங்கே பிறர் எழுதியதைவிட நானே எழுதிவிட்டேன். அதற்கு மேலாக நான் வைக்கும் விமர்சனங்கள் இவை

ஜெ

[குழும விவாதத்தில் இருந்து]

[தொடரும்]

முந்தைய கட்டுரைபாரதியின் இன்றைய மதிப்பு
அடுத்த கட்டுரைஉணவும் விதியும்