இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு

அசோகமித்திரனின் வாழ்க்கையை ஒரு பெருநகரத்தில் இருந்து இன்னொரு பெருநகரத்துக்கான இடமாற்றம் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியும். அவரது இளமைப்பருவம் செகந்திராபாதில் கழிந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திராபாத் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த ஒரு பெருநகரம் என்று சொல்லலாம். முதல் உலகப்போர் காலத்தில்தான் செகந்திராபாத் ஒரு ராணுவக்குடியிருப்பு என்பதைவிட்டு வளர்ந்து நகரம் என்ற நிலையை நோக்கிச்செல்ல ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்போர் அடுத்தகட்ட வளர்ச்சியை சாத்தியமாக்கியது. இடைப்பட்ட அந்த வளர்ச்சிக்காலகட்டத்தில் அங்கே இளமைப்பருவத்தைக் கழிக்க நேர்ந்தவர் அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கதைகளை செகந்திராபாத் பின்னணி கொண்டவை, சென்னைப் பின்னணி கொண்டவை என எளிதாக இரண்டாகப்பிரித்துவிடலாம். இவ்விரு சட்டகங்களுக்கு வெளியே செல்லும் கதைகள் மிகச்சிலவே. இவ்விரு கதைக்கட்டங்களுக்கும் இடையே அழகியல் ரீதியாகவும், வாழ்க்கை நோக்கிலும் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. செகந்திராபாத் கதைகள் கதைசொல்லியின் இளமைப்பருவத்தைச் சித்தரிப்பவை. வாழ்க்கையின் சுமையே தெரியாத கதைசொல்லி எப்போதும் உற்சாகமான ,சாகச எண்ணமும் பயந்தாங்கொள்ளித்தனமும் கொண்ட , சிறுவன். வாழ்க்கையின் சிக்கல்கள் எல்லாமே வேடிக்கைகளாக உருமாறி அவனுக்குக் காட்சியளிக்கின்றன.

நேர்மாறாக சென்னையைப் பின்னணியாகக் கொண்ட அசோகமித்திரன் கதைகள் எல்லாமே லௌகீக வாழ்க்கையின் அர்த்தமில்லாத துயரத்தையும் தனிமையையும் பற்றியே பேசுகின்றன. பிற்காலத்தில் ஒரு விமர்சகரால் சோகமித்திரன் என்று அசோகமித்திரன் அழைக்கபபடக் காரணமாக அமைந்த கதைகள். மிக அடங்கிய குரலில் வாழ்க்கையின் துக்கத்தைச் சொல்லும் அசோகமித்திரன் கதைகள் ஏராளம். அதேசமயம் உக்கிரமான சித்தரிப்பால் குரூரத்தையும் இழிவையும் காட்டிய அசோகமித்திரனின் கதைகளும் பல உண்டு.

ஒரு மதிப்பீட்டுக்காக இப்படிச் சொல்லிப்பார்க்கலாம். செகந்திராபாத் சூழலில் அமைந்த அசோகமித்திரன் கதைகளில் கதைசொல்லி வாழ்க்கையை வாழத்தொடங்குவதற்கு முந்தைய கோணத்தில் நின்று பார்க்கிறான். சென்னை சூழலில் அமைந்த கதைகளில் கதைசொல்லி வாழ்க்கையை வாழ்ந்து முடிந்த கோணத்தில் நின்று பார்க்கிறான். எளிமைப்படுத்தலாக இருந்தாலும் அசோகமித்திரன் கதைகளைப்பற்றிய ஒரு நல்ல பார்வையை இது அளிக்கும். பெரும்பாலான சென்னைக் கதைகளில் கதைசொல்லி அவர் சொல்லும் துயரங்களைத் தாண்டிவந்துவிட்ட ஒரு நிதானத்துடன், அல்லது பெருமூச்சுடன் பேசுவதை நாம் கண்டுகொள்ள முடியும்.


இரு நகரங்கள்

கர்நாடக நவாப்களின் வம்சத்தில் வந்தவரான ஹைதராபாத் நைஜாமின் தலைநகர் ஹைதராபாத்தான் தொன்மையும் சரித்திர முக்கியத்துவமும் கொண்ட நகரம் . கிபி ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்ட கோல்கொண்டா அரசைச்சேர்ந்த நிலப்பகுதி அது. வாரங்கல் காகதீய அரசின் கீழும், தேவகிரியின் யாதவ மன்னர்களின் கீழும் அது இருந்திருக்கிறது. கோல்கொண்டா டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டது. பின்னர் சுல்தான்களின் தளபதிகளால் ஆளப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் அலாவுதீன் பாமின் ஷா டெல்லி சுல்தான்களுக்கு எதிராகக் கலகம்செய்து தனி உரிமையை நிறுவிக்கொண்டார். அவ்வாறு பாமினிசுல்தான்கள் தென்னகத்தில் உருவானார்கள். பாமினி சுல்தானின் தளபதியான சுல்தான் குய்லி கொல்கொண்டாவைத் தலைமையாக்கி குதுப் சாகி வம்சத்தை நிறுவினார். கொல்கொண்டாவில் குடிநீர்ப்பிரச்சினை வாட்டியது. பெரிய பீரங்கிகள் புழக்கத்துக்கு வந்ததும் சமநிலத்தில் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு காவல்காப்பது சாத்தியமாகியது. ஆகவே குன்றின்மேல் இருந்த கொல்கொண்டாவுக்கு பதிலாக மூசி ஆற்றின் கரையில் 1591ல் ஹைதராபாத் நகரம் நிறுவப்பட்டது.

செகந்திராபாத் முற்றிலும் வேறுபட்ட ஒரு வரலாறு கொண்டது. 1798ல் ஹைதராபாத் நைஜாம் இரண்டாம் அசஃப் ஜா பிரிடிஷாரால் தோற்கடிக்கப்பட்டார். அவரைக் கட்டுப்படுத்த ஒரு நிலைராணுவத்தை ஹைதராபாத் அருகே நிறுத்த பிரிட்டிஷார் முடிவெடுத்தார்கள். அதற்கான செலவுகளை ஹைதராபாத் நைஜாமே கொடுக்கவேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நியதி. அவ்வாறு ஹைதராபாத் நைஜாமுக்கு ‘உதவி’ செய்வதறாக வந்த பிரிட்டிஷ் ராணுவம் ஹூசெய்ன் சாகர் ஏரிக்கு மறுபக்கம் அனேகமாகக் காலியான புல்வெளிகளாகக் கிடந்த உளுவில் என்ற கிராமத்தில் முகாமடித்தது. மெல்ல மெல்ல அது ஒரு நிரந்தர ராணுவக்குடியிருப்பாக ஆகியது. 1803ல் ஹைதராபாத் நைஜாம் சிகிந்தர் ஷா அவர் பெயரால் அந்த இடத்துக்கு சிகிந்திராபாத் என்று பெயர்சூட்டினார். பிரிட்டிஷ் உச்சரிப்பில் செகண்டிராபாத். அதாவது இரண்டாவது நகரம். அதிகாரம் மீதான அதிகாரத்தின் நகரம்.

ஒருவகையில் செகந்திராபாத் ஹைதராபாதின் நிழல். அல்லது ஹைதராபாதின் எதிர்வினை. ஹைதராபாத் நைஜாமின் அதிகாரமையம் என்றால் அதன் மீதான அதிகாரத்தின் மையமாக செகந்திராபாத் இருந்தது. கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் இந்த அதிகாரப்போட்டி இருநகர்களுக்கும் நடுவே இருந்திருக்கிறது. இவ்விரு நகரங்களுக்கும் இடையே குண அடிப்படையில் உள்ள வேறுபாடும் அவ்வாறு அமைந்ததே. பிரிட்டிஷ் கண்டோன்மெண்டை மையமாகக் கொண்டு உருவாகி வந்த செகண்டிராபாத் ஐரோப்பியத்தன்மை மிக்கது.ராணுவநோக்குடன் பிரிட்டிஷார் அமைத்த ரயில்பாதைகளின் மையமுடிச்சாகவும் அது அமைந்தது. விளைவாக அது வெளியுலகுடன் நேரடித்தொடர்புள்ளதாக ஆகியது.

ரயில்பாதைகளை செகந்திராபாத் நகரின் நரம்புகள் எனலாம். அதனூடாக அது விரிந்து பரந்த பிரிட்டிஷ்இந்தியாவுடனும் உலகுடனும் இணைந்திருந்தது. இரு உலகப்போர்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் செகந்திராபாத்துக்கு வந்து தங்கிச் சென்றார்கள். செகந்திராபாத் ராணுவநோக்குடன் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம். நேரான விரிந்த தெருக்களும் சீரான குடியிருப்புகளும் கொண்டது. அதன் அமைப்பிலும் கட்டுமானத்திலும் ஐரோப்பிய பண்பாட்டு, கலை அம்சங்கள் ஓங்கியிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் செகந்திராபாத் நகரத்தை ஒரு துண்டு பிரிட்டிஷ் இந்தியா என்று சொல்லிவிடமுடியும்

நேர்மாறாக ஹைதராபாத் அத்தகைய உலகத்தொடர்புகள் இல்லாத நகரமாக, தன்னுள் தானே சுருங்கிக்கொள்வதாக இருந்தது. சொல்லப்போனால் ஹைதராபாத் தன்னைத் திறந்துகொண்டு ஒரு நவீன நகரமாக ஆக ஆரம்பித்ததே தொண்ணூறுகளில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிகளால்தான் என்கிறார்கள். அது பழமையின் மிதப்பும் சரித்திரத்தின் தூசுநெடியும் கொண்ட நகரம். புராதன காலத்தில் அன்றைய பல்லக்குகளுக்காக உருவாகி வந்த தெருக்கள். அரச சேவகர்களின் சந்துபொந்துகள். நடுவே பழமையின் சின்னமாக ஓங்கி நிற்கும் சார்மினார். அதைக் காலத்தில் மூழ்கி மறைந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய ஒரு துண்டு எனலாம்.

சென்னையை ஹைதராபாதையும் செகந்திராபாத்தையும் ஒன்றாகக் கலந்து கலக்கினால் உருவாகும் நகரம் என்று உருவகிக்கலாம். ஒருவகையில் சென்னை பிரிட்டிஷாரின் உருவாக்கம். 1639ல் சர் பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரு கூகன் இருவரும் விலைக்கு வாங்கிய நிலத்தில் இந்தப் புதியநகரத்தின் முதல்புள்ளியை வைத்தார்கள். ஆனால் ஒரு பெரிய கோலமாக விரிந்த மாநகரம் விரைவிலேயே வரலாற்றுப்புகழ்மிக்க மைலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற ஊர்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டது. பிரிட்டிஷ்ராஜின் ஒரு பகுதியும் பல்லவர்களின் தொண்டைநாட்டின் ஒரு பகுதியும் இரண்டறக்கலந்து உருவான நகரம் இது.

செகந்திராபாதில் ஒரு ரயில்நிலைய ஊழியரின் மகனாக ஜ.தியாகராஜன் என்ற அசோகமித்திரன் பிறந்தார். தன் இளமைப்பருவத்தை அங்கே கழித்தார். தந்தையின் மரணத்துக்குப்பின் படிப்பை முடிக்காமல் வாழ்க்கையைத்தேடி சென்னை நகரத்துக்குக் குடிபெயர்ந்தார். சென்னையில் திரைத்துறை உட்பட பல தளங்களில் பணியாற்றி அல்லற்பட்டு எழுதி தன்னை நிறுவிக்கொண்டார். சென்னையின் கீழ்நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வாழ்நாள் முழுக்க இருந்த அசோகமித்திரன் அந்த வாழ்க்கையைத் தமிழிலக்கியத்தில் நிகழ்த்திக்காட்டிய கலைஞராக அறியப்படுகிறார். அவரைப் பெருநகரநடுத்தரவர்க்கத்தின் குரல் என்று பொதுவாக விமர்சகர்கள் வரையறைசெய்கிறார்கள்.


இரு வாழ்க்கைகள்

ஒருபெருநகரில் வாழும் வாழ்க்கை எத்தகையது? கிராமவாழ்க்கையுடன் ஒப்பிட்டுக்கொண்டால் அதைப்பற்றிய ஒரு சித்திரத்தை அடையமுடியும். கிராமம் என்பது ஒரு நிலப்பரப்பு, ஒரு வரலாற்றுப்புலம், ஒரு சமூகம் ஆகியவற்றைக்கொண்டது. அதன் அளவு காரணமாகவே அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதன் ஒட்டுமொத்தம் பற்றிய ஒரு மனச்சித்திரம் இருக்கும். இந்த கிராமத்தின் எல்லை எது, இந்த கிராமத்தின் கதைகளும் தொன்மங்களும் என்ன, இந்த கிராமத்தில் யார் யார் வாழ்கிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பெரும்பாலும் கிராமவாசிகள் பதிலளித்துவிடுவார்கள்.

ஆகவே ஒரு கிராமவாசிக்கு அந்த கிராமத்தில் தான் யார், தன் இடமென்ன என்பதைப்பற்றிய ஒரு புரிதலும் இருக்கும். கிராமத்தின் அதிகார அடுக்கில் எங்கே இருக்கிறோம் எனத் தெரிந்திருக்கும். கிராமத்தின் பண்பாட்டுத்தளத்தில் தன் பங்களிப்பென்ன என்று தெரிந்திருக்கும். அக்கிராமத்துக்குப் புதியதாக வரக்கூடிய ஒருவர்கூட மிகச்சில வருடங்களுக்குள் அதில் தன் இடத்தை உருவாக்கிக்கொள்வார். அப்படி ஒரு ‘வரத்தன்’ கிராம சமூகத்தில் தன் இடத்தை உருவாக்கிக் கொள்வதைப்பற்றிய அழகிய சித்திரத்தை அளிக்கும் கதை என கி.ராஜநாராயணனின் நிலைநிறுத்தல் கதையைச் சொல்லலாம்.

ஆனால் நகரம் அப்படி அல்ல. நகரத்தின் அளவு காரணமாகவே அதைப்பற்றிய ஒரு முழுச்சித்திரம் அதன் எந்த குடிமகனின் மனதிலும் இருப்பதில்லை. ஒருநகரின் பண்பாடு வரலாறு அதிகார அடுக்கு பற்றி ஒரு அகச்சித்திரம் உள்ள நகரக்குடிமகன் மிகமிக அபூர்வமானவன். அத்துடன் நகரத்தில் மக்கள் தங்களை ஒட்டுமொத்தத் திரளாக உணர்வதில்லை. தன்னுடைய சிறிய வீட்டுக்குள் சிறிய குடும்பத்திற்குள் சிறிய சமூகக்குழுக்களுக்குள் ஒடுங்கிக்கொண்டு வாழவே விரும்புகிறார்கள். உதாரணமாக, சென்னையில் வாழும் சிந்திகளுக்கு சிந்திகள் அல்லாதவர்களுடனான பழக்கம் என்பது வணிகம்சார்ந்த எல்லைக்குள் மட்டுமே நின்றுவிடும்.

ஆகவே நகரத்தின் குடிமகனுக்கு அந்நகரத்தில் தன் இடமென்ன என்பது எப்போதுமே சிக்கலானது. ஒவ்வொரு வகையில் ஒவ்வொருவரும் அந்த நகரத்தில் ஒரு சிறு இடத்துக்காகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஹைதராபாத் போன்ற தொன்மையான நகரங்களில் அங்கேயே தலைமுறைகளாக நிலைபெற்று, அங்கேயே தங்கள் சுய அடையாளங்கள் உருவாகிக்கொண்ட குடிகள் உண்டு. குறிப்பாக பிரபுக்குலங்கள். அவர்களின் இடம் அங்கே நிறுவப்பட்டுவிட்டது. ஆனால் செகந்திராபாத் சென்னை போன்ற புதியதாக உருவாகி வந்த நகரங்களில் வந்து சேர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்களில் ஒருதலைமுறை வாழ்க்கை என்பது அடையாளத்தேடல் மட்டுமே. அவர்களின் சமூக ஊடாட்டம் என்பது அந்த இடத்தேடலின் விளையாட்டாகவே அமைகிறது.

இந்தப்பின்னணியில் அசோகமித்திரன் கதைகளை வாசித்தால் அவரது இரு நகர்சார் புனைவுகளையும் புரிந்துகொள்வதற்கான ஒரு புதிய வழி திறப்பதைக்காணலாம்.அசோகமித்திரன் அவரது கதைகளில் காட்டும் செகந்திராபாத் நகரில் உள்ள மக்களை இவ்வாறு பிரிக்கலாம்.ஒன்று, நேரடியாக அதிகாரத்துடன் தொடர்புகொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் குட்டி தியாகராஜனால் ஒருவகை பீதியாக மட்டுமே உணரத்தக்கவர்கள். அவர்களைப்பற்றிய தொலைதூரத்துச் சித்திரம் மட்டுமே கதைகளில் உள்ளது. மாடு தொலைந்துவிடும்போது [சுந்தர்] தேடிப்போன இடத்தில் காண நேரும் பூங்கா சூழ்ந்த அழகான பெரிய பங்களாக்கள். திரைச்சீலை ஆடும் சன்னல்கள். வெள்ளைவெளேர் என்ற பெண்கள். உண்மையில் செகந்திராபாத் நகரின் சொந்தக்காரர்கள் இவர்களே.

இரண்டாவது சமூகக்குழு தெலுங்கர்கள். அசோகமித்திரன் கதைகள் அவர்களுக்குத் தெளிவான சாதி அடையாளங்களைக் கொடுப்பதில்லை. அவை அந்த அடையாளங்களைக் கண்டுகொள்ளும் வயது ஆகாத தியாகராஜனால் சொல்லப்படுகின்றன என்பதுதான் காரணம். விவரணைகளில் இருந்து இவர்கள் பெரும்பாலும் பிராமணரல்லாத உயர்சாதித் தெலுங்கர்கள் என ஊகிக்கலாம். இவர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசூழியர்களாகவோ அவர்களை நம்பி வணிகம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு செகந்திராபாதில் தனி இடமெல்லாம் இல்லை என்றாலும் அந்த இடம் தங்களுக்கும் சொந்தமானது என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள்

இருவகை அன்னியர்களை அசோகமித்திரன் அவரது செகந்திராபாத்கதைகளில் சுட்டிச்செல்கிறார். ஒன்று செகந்திராபாத்நகரின் விரிவான சேரிப்பகுதி மக்கள். குசினிப்பறச்சேரி என்ற பேருள்ள ஒரு சேரிப்பகுதி குட்டி தியாகராஜன் வாழ்ந்த லான்ஸர்பாரக் அருகே இருக்கிறது. பெயர் சொல்வதைப்போல அது வெள்ளையர்களுக்கு மாமிச சமையல் செய்வதற்காக வந்து குடியேறிய தலித் மக்களால் ஆன சேரி. குட்டி தியாகராஜன் அல்லது சந்திரசேகரனுக்கு அது ஒரு மர்மப்பிராந்தியம். சின்னப்பையனாக இருக்கும்போது அப்பகுதியைத் தாண்டுவதென்பது பீதியூட்டும் ஓர் அனுபவம். யாராவது கிண்டல்செய்வார்கள், சைக்கிளைப் பறித்துக்கொண்டு சுற்றிவந்து பின்னர் கையில் கொடுப்பர்கள். கையில் உள்ள பொருட்களைத் தட்டிவிடுவார்கள்.

பன்னிரண்டு வயதைத் தாண்டியபின் அதுவே படபடப்புக்குரிய விஷயமாக ஆகிவிடுகிறது.அங்கே அச்சமும் கூச்சமும் இல்லாமல் தெருக்களில் சாதாரணமாகத் தென்படும் பெண்கள் அவன் அந்தரங்க உலகில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். மிக ஆழ்ந்த ஒரு நினைவில் இருந்து தனிமையில் கிளம்பி வந்து படபடப்பூட்டும் குசினிப்பறச்சேரி புஷ்பா அவன் மனத்தில் அந்த இடத்தின் ஒரு அடையாளமாக நிரந்தரமாகவே தங்கி விடுகிறாள். ஆனால் அதற்கு அப்பால் அந்த இடம், அங்குள்ள மனிதர்கள் பற்றி அனேகமாக எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு அந்த இடத்துக்குள் சென்று பார்த்த அனுபவம் அனேகமாக இருப்பதாகவே தெரியவில்லை.அவர்கள் அந்த நகரத்தின் ஆழத்துள் அன்னியர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இன்னொருவகை அன்னியர்கள் முஸ்லீம்கள். ஹுசெய்ன்சாகர் ஏரிக்கு அந்தப்பக்கம் ஹைதராபாதில் முஸ்லீம்கள்தான் ஆட்சி செலுத்துகிறார்கள். அவர்களின் உயர்தர கார்கள், வெள்ளை வெளேரென்ற நிறம், பூனைக்கண்கள், அவர்கள் ஆடும் டென்னிஸ் எல்லாமே குட்டிக் கதைசொல்லிக்கு ஆச்சரியமானவை. ஆனால் செகந்திராபாதில் அவன் காணும் முஸ்லீம்கள் ஏழைகள். பெரும்பாலும் பிழைப்புக்காக வந்து போதிய படிப்போ தொழில்திறனோ இல்லாமல் சில்லறை வேலைகள் எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். கூச்சமும் குறுகலுமாக அவர்கள் கண்ணுக்குத்தெரியாத சமூகமாக வாழ்கிறார்கள்.

இந்த சமூகச்சித்திரத்தில் அசோகமித்திரனின் கதைசொல்லி எங்கே தன்னை அடையாளம் கண்டுகொள்கிறான்? கதைசொல்லி தமிழ்பேசக்கூடியவன். பிராமணன். கீழ்நடுத்தர வர்க்கத்தில் இருந்து படிப்பின்மூலம் பெற்றுக்கொண்ட சிறிய பதவி ஒன்றின்மூலம் அன்னியநகரத்துக்குக் குடியேறி அங்கே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் குடும்பம் ஒன்றைச்சேர்ந்தவன். அம்மா அப்பா அக்காக்கள் எனப் பெரிய குடும்பத்தில் பற்றாக்குறைக்குள் எளிமையான வாழ்க்கை வாழ்கிறான். அப்பா ஒரே ராம்கோபால் சீட்டித்துணியைத் துண்டுதுண்டுகளாக வாங்கிப் பெண்களுக்குப் பாவாடையும் பையனுக்கு சட்டையும் தைக்கும் அளவுக்கு சிக்கனமானவர். நஞ்சங்கூடு பல்பொடி மொத்தமாக வாங்கி வருஷம் முழுக்கப் பயன்படுத்துபவர்கள்.

இவர்களைப்போலவே ஏராளமான தமிழர்கள் அங்கே இருந்திருக்கலாம். எல்லாருமே அந்தப் பெருநகருக்கு அன்னியர்கள். அங்கே ஒண்டிக்கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். பெரியவர்களுக்கு அது தங்கள் ஊரல்ல என்ற தன்னுணர்வு இருக்கிறது. ஆகவே தங்கள் வட்டங்களுக்குள் வாழ்ந்துகொண்டு மெலிதான சமூக உறவுகளை வைத்திருக்கிறார்கள். கதைசொல்லியின் அப்பா சாலையில் சென்றால் அத்தனை தமிழர்களையும் அடையாளம் கண்டு நாலு வார்த்தை பேசித்தான் மேலே செல்கிறார். அவருக்கென ஒரு சிறிய நட்புவட்டம் அங்கே உருவாகியிருக்கிறது.

இவர்களின் ஒரே அடையாளம் பிரிட்டிஷ் பேரரசின் உறுப்புகள் என்பதே. கதைசொல்லியின் அப்பா சாலையில் சென்றால் எதிரே சிங்கம் வந்து நின்று உறுமினாலும்கூட ‘நான் ரயில்வே செர்வெண்ட்’என்று அடையாள அட்டையை எடுத்து நீட்டிவிடுவார் என்கிறார். வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத சம்பளத்தில் பெரிய குடும்பத்தை நடத்திச்சென்றாலும் அந்த அடையாளம் வாழ்க்கைக்கு ஓர் உத்தரவாதமாக மட்டுமல்லாமல் ஒரு தன்னிலையை அளிப்பதாகவும் இருக்கிறது.

ஆனால் அங்கேயே பிறந்த பையன்களின் உலகம் வேறு. அவர்களுக்கு அந்த நகரம் அவர்களே கொஞ்சம்கொஞ்சமாகக் கண்டெடுக்கப்படவேண்டிய ஒன்று. அங்குள்ள ஒவ்வொருவரையும் அந்நகரத்தின் விரிந்த புலத்தில் ஆங்காங்கே நிறுத்தி அவர்களில் தன் இடத்தைக் கண்டடையும் முயற்சியில் குட்டி தியாகராஜன் அல்லது சந்திரசேகரன் அல்லது பாபு ஈடுபடுவதைக் கதைகளில் காணலாம். கிராமத்தைப்போலன்றி ஒவ்வொருவருடைய பண்பாட்டுப்புலமும் ஒவ்வொன்றாக இருக்கிறது. க்ஸேவியர் டேவிட் என்ற மாணவனின் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டில் ஆளைக்கூப்பிட ஒரு மணியை அடிக்கவேண்டியிருக்கிறது. அதைப் பக்கத்துவீட்டுப் பெரியவர் பலமுறை சொன்னபின்னர்தான் அடிக்கமுடிகிறது. அவன் கித்தார் வாசிக்கிறான். குட்டிப்பையன் பலவிதமான நுட்பமான தகவல்களை ஆச்சரியத்துடன் பொறுக்கித் தன் உலகை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் இந்தக்கதைகளின் அழகு என்று சொல்லலாம்

இந்தக் குட்டிப்பையன் அவனுக்கு உகந்ததாகக் கண்டுகொள்ளும் சூழல் ஆங்கிலோ இந்தியர்களுடையது என்பது ஆச்சரியமானது. அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தப் பொது அம்சமும் இல்லை. அவர்கள் மாமிசம் உண்டு மது அருந்துகிறார்கள். பெண்கள் கவுன் அணிந்து ஆண்களுக்கு சமமாக வெளியே சுற்றுகிறார்கள். வீடுகளில் சன்னல்களுக்குத் திரைச்சீலைகளும் மேஜைகளுக்கு விரிப்பும் போட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் குட்டிப்பையன் தெலுங்கர்களையும் முஸ்லீம்களையும் விட இவர்களிடம்தான் அதிகம் நெருங்க முடிகிறது.

அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்தக்கதைகள் காட்டும் ஒரு மெல்லிய சித்திரம் பதிலாகத் தெரிகிறது. இந்த ஆங்கிலஇந்தியர்கள் ஒருவகையான திரிசங்குநிலையில், அடையாளமின்மையில், கைவிடப்பட்டவர்களாக வாழ்கிறார்கள். அன்றைய இந்திய பிரிட்டிஷ் அதிகாரத்தரப்பின் சோரபுத்திரர்களாகவே அவர்கள் கருதப்பட்டார்கள். குற்றவுணர்ச்சி காரணமாகவே அவர்களுக்கு பெரும்பாலும் ரயில்வே துறையில் வேலைகொடுக்கிறார்கள். ஆனால் அடையாளமின்மையின் விளைவான தன்மானமிழப்பு அவர்களைப் படிப்பில் முன்னேறவோ முக்கியமான இடங்களுக்குச் செல்லவோ முடியாதவர்களாக ஆக்குகிறது

அசோகமித்திரன் காட்டும் கதைக்களனிலேயே குட்டிப்பையனுக்குத் தெரிந்த ஆங்கில இந்தியக் குடும்பங்கள் நசிவுப்பாதையில்தான் இருக்கின்றன. சமூக அளவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்களுக்குள் அல்லாமல் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். குடிப்பழக்கம் அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறது. குட்டிப்பையனுடன் விளையாட வரக்கூடிய ஆங்கில இந்தியப் பையன்கள் படிப்பில் ஆர்வமில்லாமல் விளையாட்டுத்தனமும் முரட்டுத்தனமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை மானசீகமாக இழிவாக நினைக்கும் தெலுங்குப் பையன்களுக்கு அவர்கள் காட்டும் எதிர்வினை என்று அந்த முரட்டுத்தனத்தைச் சொல்லலாம்.

இந்த ஒதுங்கலை ஆங்கில இந்தியக் குடும்பங்கள் கைவிடும் தருணம் இரண்டாம் உலகப்போர் முடியும்போது வருகிறது. அமெரிக்க, பிரிட்டிஷ் சோல்ஜர்கள் செகந்திராபாதில் வந்து நிறைகிறார்கள். அவர்கள் வெள்ளையர்கள், ஆனால் அதிகார அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த அம்சம் சோல்ஜர்களைத் தங்களவர்களாகக் கண்டு ஆங்கில இந்தியக் குடும்பங்கள் உற்சாகம் கொள்ளச்செய்கின்றன. தங்கள் வீடுகளில் அவர்களுக்கு விருந்துக்களியாட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள். தங்கள் பெண்களை அவர்கள் மணக்கவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

குட்டிப்பையனுக்குக் கழுத்தில் குட்டையைக் கட்டி சட்டையைக் கால்சட்டைக்குள் தள்ளி விருந்துக்குக் கூட்டிச்செல்கிறார்கள் ஆங்கிலஇந்தியப்பையன்கள். கொஞ்சநாளாகவே எல்லா ‘சட்டைக்காரர்களும்’ வெள்ளையர்களாக மாறிவிட்ட பிரமையில் இருக்கிறான் பையன். அவர்கள் எல்லாரும் சீராக உடையணிந்து ஆங்கில பாணியில் பேசுகிறார்கள். வீடுகளை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்றிரவில் அங்கே கூடியிருந்த சாதாரண சமூகநிலை உள்ள சட்டைக்காரர்களெல்லாருமே துரைகளைப்போல இருந்தார்கள். நடனமும் பாட்டும் குடியும் சாப்பாடும் நடக்கிறது.

ஆனால் சோல்ஜர்களுக்கு இவர்கள் மலிவான கேளிக்கையிடங்களை அளிப்பவர்கள் மட்டுமே. இவர்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. இவர்களின் பெண்களை அனுபவித்துவிட்டு சர்வசாதாரணமாக கைவிட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் இவர்களின் இன்னொரு வேர் இந்தியாவில் இருக்கிறது ‘நாம் ஏதோ கண்ணகி மாதவி கோப்பெருந்தேவி என்கிறோம். திரும்பி வராத அந்த பிரிட்டிஷ் சோல்ஜரை நினைத்து ஏங்கி ஏங்கி சில்வியா இரண்டாண்டுக்குள் டிபி வந்து செத்துப்போனாள்’ என்று முடியும் சில்வியா என்ற கதை இந்த அடையாளமின்மையை ஏக்கத்தை கைவிடப்படுதலை அற்புதமாகச் சித்தரிக்கிறது

இந்த ஒதுங்கல்தான் குட்டிப்பையனை ஆங்கில இந்திய குடும்பத்துடன் நெருங்க வைத்த பொது அம்சம்போலத் தோன்றுகிறது. அவனால் செகந்திராபாதின் முஸ்லீம்கள் , தெலுங்கர்களிடம் ஓர் எல்லைக்குமேல் நெருங்கவே முடிவதில்லை. ஆனால் ஆங்கில இந்தியப் பையன்களுடன் சாதாரணமாக அணுகமுடிகிறது.

மிகத்துல்லியமாக அந்தப் பொது இயல்பைச் சுட்டும் ஒரு இடம் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் வருகிறது. சுதந்திரத்துக்குப்பின்னர் செகந்திராபாத் கலவரபூமியாக இருக்கிறது. நைஜாம் தனியாக பிரிந்துபோக முடிவெடுக்கிறார். ரஜாக்கர்கள் அவருக்கு துணையிருக்கிறார்கள். நகரமே பதற்றநிலையில் இருக்கிறது. ஆனால் ஆங்கில இந்தியக்குடும்பத்துக்கும் தமிழ்க்குடும்பத்துக்கும் அதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை. பின்னாளில் கதை சொல்லி யோசித்துத் திடுக்கிடுகிறார். கலவரம் நடந்து ஆட்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் குட்டிப்பையனின் அப்பா அவரது குடும்பத்துடன் சினிமா பார்த்துவிட்டு இருளில் திரும்பி வருகிறார். ஆங்கில இந்தியப்பையன்களும் சந்திரசேகரனும் சந்தோஷமாகக் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் போராட்டம் நிகழ்ந்தது அவர்கள் இருவருக்கும் சம்பந்தமே இல்லாத இரு தரப்புகள் நடுவே. ரஜாக்கர்கள் பெரும்பாலும் செகந்திராபாதுக்குப் பிழைக்க வந்த எளிய அடித்தட்டு இஸ்லாமியர்கள் என்று அசோகமித்திரன் கதைகள் காட்டுகின்றன. அவர்களுக்கு அங்கே இடமே இருக்கவில்லை. அன்னியர்களாக ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ரஜாக்கர் படை அமைந்ததுமே அவர்களுக்கு சட்டென்று ஒரு மத அடிப்படையிலான அடையாளம் வழங்கப்படுகிறது. அரசியல் பங்கேற்பு அமைகிறது. அவர்கள் அடையும் அதீத உற்சாகம் நாவலில் ஒரு முக்கியமான சித்தரிப்பு.

குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக வந்து அடங்கி ஒடுங்கிக் குறுகி வாழும் சையது திடீரென விஸ்வரூபம் கொள்கிறார். பண்டைய முகலாய மன்னர்களின் வாரிசாகத் தன்னை நினைத்துக்கொள்கிறார். அன்றுவரை உயிர்நண்பராக இருந்த சந்திரசேகரனின் தந்தையை ஒரு இரண்டாம்கட்டப்பிரஜையாக, அடிமையாக எண்ண ஆரம்பிக்கிறார். இவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பரிசோதனை போடுகிறார். அதட்டுகிறார். அதைவிட வேடிக்கை அவருக்கு அப்படிச் செய்ய உரிமை இருப்பதாக சந்திரசேகரனின் அப்பாவும் நினைத்துக்கொள்வதுதான். ஏனென்றால் இப்போது நகரின் அதிகாரம் அவர்களிடம் சென்று விட்டதென அவர் நினைக்கிறார். அவர் என்றும் அங்கே ஊழியர்மட்டுமே.

ரஜாக்கர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். எந்த அதிகாரப்பின்புலமும் எந்தப் பொது அம்சமும் இல்லாத கூலிக்கார முஸ்லீம்களின் கும்பல் அது. அவர்களை அதிகாரச் சதுரங்கத்தில் காயாகப் பயன்படுத்திக்கொண்ட உயர்குடி முஸ்லீம்கள் அந்தக் கலவர காலகட்டத்திலும்கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் டென்னிஸும் கிரிக்கெட்டும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்திய ராணுவத்துக்கு எதிராக அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி கழிகளைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். இரண்டுமணிநேரத்தில் ‘போர்’ முடிவுக்கு வந்தது. ரஜாக்கர்கள் அடித்து ஒடுக்கப்பட்டார்கள். நைஜாம் சரணடைந்து தன் அரண்மனை சொத்துக்கள் எல்லாவற்றையும் தக்கவைத்துக்கொண்டார்.[ பதினெட்டாவது அட்சக்கோடு]

இந்த ஆட்டத்தில் ரஜாக்கர்களுக்கு எதிரணியாக இருப்பவர்கள் தெலுங்கர்கள். தெலுங்கர்கள் கொள்ளும் கலாச்சார சுய உணர்வு சந்திரசேகரனுக்குப் புதிராக இருக்கிறது. செகந்திராபாதில் அவர்கள் பெரும்பாலும் பால்காரர்கள். சட்டென்று அவர்கள் வேமனாவைப் புதியதாகக் கண்டுபிடித்துவிட்டவர்களாகத் தோன்றினார்கள். அதிகாரசக்கரம் திரும்புகிறது. ஐநூறு கோப்பை தட்டுகள் என்ற கதையில் அதே சையது தெருவில்செல்லும்போது சாதாரணப் பையன்களால் ‘ரஜாக்கர் நாயே’ என்று உதைக்கப்படுகிறார். ஆறடி உடம்பை மூன்றடியாகக் குறுக்கிக்கொண்டு உம் உம் உம் என்று சொல்லி மௌனமாக அடிவாங்குகிறார். அப்பாவின் சினேகிதர் கதையில் அவர் மீண்டும் பழைய சையது மாமாவாக ஆகி சந்திரசேகரனின் அப்பாவின் நினைவைப் புதுப்பிக்க அம்மாவைப் பார்க்க வருகிறார்.

தன் லான்சர்பாரக் கதைகள் முழுக்க அசோகமித்திரன் காட்டும் குட்டிப்பையன் அவனுடையதல்லாத ஒரு நகரத்தைப் புதியதாகக் கண்டுபிடித்தபடியே இருக்கிறான். அந்தக்கதைகளின் மையச்சரடே அவனுடைய ஆச்சரியம்தான். பெரும்பாலும் எல்லாக் கதைகளும் ஆச்சரியத்துடன் ஆரம்பிக்கின்றன. ‘எதையும் நாடகத்தன்மையோடு செய்வது கோபாலுக்குப் பழக்கம். என்னை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து வகுப்புக்கும் கொண்டு விட்ட என் அப்பாவிடம் அவன்தான் ஒருவகுப்பில் ஆசிரியரும் இருக்கும்போதே நான்கைந்து வரிசை பெஞ்சுகளைக் கடந்து எங்களிடம் வந்து ‘சம்ஸ்கிருத வாத்தியாருக்கும் ஒரு ரூபாய் தரவேண்டும்’ என்றான் – என ஆரம்பிக்கிறது ஆறாம் வகுப்பு என்ற கதை

அதேபோல பெரும்பாலும் எல்லாக் கதைகளும் ஒரு நினைவுகூரலின், இறந்தகால ஏக்கத்தின் தொனியில் முடிவடைகின்றன்றன.’இரண்டு அச்சுக்கட்டைகளில் என்னிடம் தங்கிப்போனதில் கோபாலின் பெயர் கலைக்கப்படாமலே இருந்தது. அவனுக்கே தந்துவிடவேண்டும் என்றுதான் இருந்தேன்.அவன் என்னிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டுப் போய்விட்டானே’ என்று அதே கதை முடிகிறது. லான்ஸர்பாரக் கதைகளின் பொது அமைப்பே இந்த ஆச்சரியமும் துள்ளலும் கொண்ட தொடக்கமும் மெல்லிய ஏக்கம் கூடிய முடிவும்தான்.

அப்பா இறந்ததுமே அசோகமித்திரன் குடும்பம் % நகரைவிட்டு வெளியேற முடிவெடுத்ததையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டவேண்டும். அந்த நகருடன் அவர்களுக்கு பிணைப்புகள் இல்லை. அவர்களின் குடும்பத்தலைவர் அங்கே வேலைபார்த்தார், அவ்வளவுதான். சென்னையும் அவர்கள் அறியாத நகரம்தான்.ஆனால் அவர்களுடைய நகரம். சென்னைக்குத் திரும்பும் குட்டிப்பையனின் குடும்பம் எப்படிக் கடும் போராட்டம் வழியாக அங்கே வேரூன்றியது என்பதை அசோகமித்திரன் சிலகதைகளில் மெல்லிய கோடிழுப்பால் எழுதிக் காட்டியிருக்கிறார்.

அப்பாவின் சினேகிதர் கதையில் அந்தச் சித்திரம் வருகிறது. ’அவனுக்குத்தெரிந்தவரை வீட்டுச்சாமான்களைத் திரட்டி வேண்டாதென்று தோன்றியவற்றை வண்டி வண்டியாக ஏலக்கடையில் பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் விற்றுவிட்டு அம்மா தம்பி தங்கையோடு சென்னை வந்துசேர்ந்து கிணற்றங்கரையில் ஓர் அறையும் வாசல்கதவருகே ஓர் அறையுமாகப் பிரித்து வைத்திருந்த பழைய மாம்பலத்துப் பழைய வீட்டுக்கு ஒண்டுக்குடித்தனம் வந்துவிட்டான்’

சென்னைக்கு வந்தபின் ஓர் ஆச்சரியம் இருக்கிறது. அசோகமித்திரன் கதைகளில் நான் என நேரடியாகக் கதைசொல்லி வரும் கதைகள் மிகவும் குறைந்துவிடுகின்றன. கதைசொல்லியாக நான் வரும்போதுகூட அது அசோகமித்திரனின் சொந்த ஆளுமைச்சித்திரத்துடன் தொடர்பற்றதாகவே இருக்கிறது. விதவிதமான மனிதர்கள், வெவ்வேறு வகையிலான முகங்கள். கதைசொல்லி என்ற நானை எடுத்துக்கொண்டால்கூட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட பஸ் பிடித்துச் சென்று ‘மக்கள் போராட்டத்தில்’ சிக்கி எங்கோ இறங்கிக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று திரும்பும் குமாஸ்தா முதல் சல்பேட்டா அடித்துவிட்டுப் பேருந்தில் ஏறி ’நான் சாப்ட்டாலும் நியாயமாத்தான் பேசுவேன்’ என்று சலம்புபவர் வரை பல்வேறு ஆளுமைகளைப்பார்க்கிறோம்.

இப்படிச் சொல்லலாம். செகந்திராபாத் கதைகளில் ஒரு தனிமனிதனாக உருவாகிக்கொண்டிருந்த அசோகமித்திரன் சென்னையில் ஒரு சமூகமாக விரிந்தார். சென்னையில் அசோகமித்திரன் காட்டும் அந்த சமூகம் ஒரே சொல்லில் கீழ்நடுத்தர வர்க்கம் என்று நம் சமூகவியலாளர்களால் சொல்லப்படுவது. அந்தக்கீழ் நடுத்தர வர்க்கமே ஒரு தேசத்தில் அமைப்புகளைக் கட்டிக்காக்கிறது, விழுமியங்களை உருவாக்குகிறது,கருத்துக்களைப் பரப்புகிறது, அரசியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. ஆனால் அசோகமித்திரன் காட்டும் கீழ்நடுத்தரவர்க்கம் முற்றிலும் வேறுபட்டது. அது அரசியலற்றது. சாதி இன மொழி பேதம் கடந்தது. உயிர்வாழ்தல் ஒன்றையே வாழ்க்கையாகக் கொண்டது. அதற்கான முண்டியடித்தல்கள், சஞ்சலங்கள், ரகசியக்குமுறல்கள் மட்டும் கொண்டது.

எப்போதும் அந்த கீழ்நடுத்தர வர்க்கத்தின் குரலை மிக நெருக்கமாகப் பிரதிபலிக்கிறார் அசோகமித்திரன். ஆழத்தில் அந்த வர்க்கத்தினரிடம் இருக்கக்கூடிய அவநம்பிக்கை அவரது எல்லாக் கதைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. பலகதைகளின் தொடக்கத்திலேயே எழும் அவருக்கே உரித்தான மெல்லிய கிண்டல் [நான் அந்த ஸ்டுடியோவில் வேலைக்குச் சேரும்போதே நாதமுனிமாமா மத்தியானத்தில் தூங்க ஆரம்பித்துவிட்டார் -கடன்] அந்த அவநம்பிக்கையின் விளைவே.

இந்த வறண்டநகைச்சுவைக்கும் லான்ஸர்பாரக் கதைகளின் மெல்லியகிண்டலுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிக கவனிக்கத்தக்கது. ‘போதிய மாணவர்கள் இல்லை என்ற காரணத்துக்காக அந்த ஆணோடு சம்ஸ்கிருதத்தை எங்கள் பள்ளியில் எடுத்துவிட்டார்கள். சம்ஸ்கிருத வாத்தியாரை டிரில் வாத்தியாராக மாற்றினார்கள். ராமஹ, ராமௌ , ராமாஹ என்று சொல்லிக்கொண்டிருந்தவர் ஒன் டூ த்ரீ என்று இரண்டாம் கிளாஸ் மூன்றாம் கிளாஸ் குழந்தைகளைக் கையைதூக்கி இறக்கவைத்தார்’

சென்னையில் அசோகமித்திரன் ஒரு வாழ்க்கையைச் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு பெருந்திரளின் கதையைச் சொல்கிறார். அதீத உடல்பருமனால் கல்யாணமாகாமலிருக்கும் பெண்கள்[பளு], ஒருமுறைகூட தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாத பெண் [மாலதி] , இரவில் ஒவ்வொருமுறையும் வாசல் கதவைத்திறந்து தெருவைச்சுற்றிக்கொண்டு சிறுநீர்கழிக்கச்செல்லவேண்டியிருக்கும் கிழவர் [தனியொருவனுக்கு],பகலெல்லாம் வேலைசெய்துவிட்டு இரவெல்லாம் தண்ணீருக்கு அலையும் வீட்டுப்பெண்கள்,வேலையே இல்லாமல் நூலகத்தில் கடைசிவரி வரை செய்தித்தாளை வாசிப்பவர்கள் என அந்த மக்கள் கூட்டத்தின் முகம் சட்டென்று யோசிக்கும்போது பிரமிப்பூட்டும்படி வந்து முகத்தை அறைகிறது. என்ன ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கை, அல்லது அதைவிட வேறு என்ன அர்த்தம் இருக்கிறது வாழ்க்கைக்கு?


பெருநகர் கலைஞன்

தமிழகத்தில் பெருநகர் என்ற ஒன்று உள்ளதென்றால் அது சென்னையே. மதுரை ஒரு கிராமத்தொகுப்பு. கோவை ஒரு மாபெரும் ஆலைக்குடியிருப்பு. சென்னை பற்பல கிலோமீட்டர்தூரத்துக்கு விரிந்து பரந்து துறைமுகம் கோயில்கள் தொழில்பகுதிகள் கடற்கரைகள் என பன்முகம் கொண்டு நிறைந்திருக்கிறது. இந்தியாமுழுக்க இருந்து பல்வேறு பண்பாடுகளும் பல்வேறு மொழிகளும் கொண்ட மக்கள் சென்னையில் குடியேறி சென்னையைத் தங்களுடையதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெருநகர்களையும்போலவே சென்னைக்கு ஒருமொழி ஒரு பண்பாடு சார்ந்த அடையாளம் இல்லை. அது பெருநகர்த்தன்மை என்ற அடையாளம் மட்டுமே கொண்டது.

இவ்வளவுபெரிய ஒரு பெருநகர் நமக்கிருந்தும்கூடப் பெருநகர் அனுபவங்கள் இலக்கியத்தில் குறைவாகவே வந்துள்ளன. குறைவாக என்பது மங்கல வழக்கு. டெல்லியின் பெருநகர் வாழ்க்கையை இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். தமிழின் சரியான பெருநகர் எழுத்துக்கள் அவை என்று சொல்லலாம். கி.ஆ.சச்சிதானந்தம் சென்னை என்ற அனுபவத்தின் சில அறியப்படாத பக்கங்களை எழுதியிருக்கிறார். பல தமிழ் எழுத்தாளர்கள் சென்னையில்தான் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்னையைப்பற்றிப் பெரிதாக ஏதும் எழுதியதில்லை. சென்னை வாழ்க்கையின் விரிவைச் சொல்லும் ஒரு தமிழ்நாவல் இல்லை என்றே சொல்லலாம்.

அசோகமித்திரன் சென்னைக்கு இளம் வயதிலேயே வந்தவர், சென்னையைத் தன் பெரும்பாலான படைப்புகளில் களமாக்கியவர். ஆனால் பெருநகர் அனுபவம் என்பதை நாம் அசோகமித்திரன் கதைகளில் காணமுடியாது. உதாரணமாக அசோகமித்திரன் நெடுங்காலம் வாழ்ந்திருந்த பகுதிக்கு மிக அருகே உள்ள சென்னை மெரினா கடற்கரை பற்றிய ஒரு நல்ல சித்திரத்தை நாம் அசோகமித்திரன் படைப்புகளில் காணமுடியாது. சென்னையின் உயர்குடி வாழ்க்கைபற்றிய சித்திரங்களை நாம் அசோகமித்திரன் ஆக்கங்களில் எதிர்பார்க்கமுடியாது என்பது வெளிப்படை. சென்னை என்ற பெருநகரின் பல்வேறு வகையான வாழ்க்கைகளை அசோகமித்திரன் காட்டவில்லை. சேரிகள், மீனவக்குப்பங்கள், ஆங்கிலோ இந்தியக் குடியிருப்புகள், வட இந்தியக் குடியிருப்புகள் என விரிந்துசெல்லும் சென்னையின் சாத்தியங்களை அசோகமித்திரன் பொருட்படுத்தவில்லை. சென்னையின் சென்றகால வரலாறு, வரலாற்று மனிதர்கள், சென்னை சந்தித்த அரசியல் கொந்தளிப்புகள் எவற்றையும் நாம் அசோகமித்திரன் ஆக்கங்களில் காணமுடிவதில்லை.

ஏனென்றால் அசோகமித்திரன் ஆர்வம் அவற்றில் இல்லை. சென்னையின் கீழ்நடுத்தவர்க்க மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தே அவர் அதிகமும் பேசுகிறார். அவர் அந்த மக்களின் குரல் என்றே சொல்லலாம். அந்த மக்களின் வாழ்க்கை எல்லைக்கு மேலேயும் கீழேயும் அசோகமித்திரன் பார்வை செல்வதில்லை. மழைபெய்த சாலையில் சேற்றில் தாவித்தாவிச் சென்று விடியற்காலையில் பால் வாங்க வரிசையில் நிற்கும் அனுபவத்தை நாம் அவரது புனைவுலகில் காணலாம். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சடலத்தைப் பெற்றுக்கொள்ளப் பிணவறை முன்னால் காத்திருப்பதைக் காணலாம். ரேஷன் பொருட்களுடன் நெரிசலான சாலையில் தடுமாறி வருவதைக் காணலாம். மழையில் கூவம் பெருக்கெடுக்கும்போது நிலத்தடிப்பாதைகளில் ஒண்டிக்கொள்ளும் மக்களின் அனுபவங்களைக் காணமுடியாது. சென்னைபற்றி அசோகமித்திரன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில்கூட மாம்பலம், திருவல்லிக்கேணி என அவரது எல்லைக்குட்பட்ட இடங்களே விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த எல்லைக்குட்பட்ட களத்துக்குள் நின்றுகொண்டு சென்னை என்ற அனுபவத்தை நமக்களித்த ஒரே தமிழ்ப்படைப்பாளி அசோகமித்திரன். சென்னையையும் அசோகமித்திரனையும் பிரித்துப்பார்ப்பதே கடினம் என்ற அளவுக்கு அவரது கதைகள் நமக்கு அந்நகரின் ஒரு வாழ்வெல்லையை விரித்துக்காட்டியிருக்கின்றன. சென்னை வாழ்க்கையின் நூற்றுக்கணக்கான நுண்தகவல்களால் நெய்யப்பட்டவை அசோகமித்திரன் கதைகள். நான் சென்னையையே பார்க்காத ஒரு காலகட்டத்தில் அசோகமித்திரன் கதைகள் எனக்கு சென்னையை ஒரு உண்மையான உலகமாக அடையாளம் காட்டியிருந்தன.

பல துளிச்சித்திரங்கள் வழியாக அசோகமித்திரன்னின் சென்னை என் மனதில் நின்றுவிட்டிருக்கிறது. இருளில் தூங்கும் குழந்தைகள் மேல் படாமல் கையை ஊன்றித் தவழ்ந்து வந்து கணவனுடன் ஆழ்ந்த மௌனத்துடன் புணர்ந்துவிட்டுச்செல்லும் பெண் [கரைந்த நிழல்கள்], சாக்கடை கலந்து வந்து கொட்டும் குடிநீர் [தண்ணீர்],நள்ளிரவில் சைக்கிளில் வரும்போது சிவப்பு விளக்குகள் கண்களாக ஒளிர எதிரே வரும் லாரிகள் [இன்று],ஏழாவது மாடியில் இருந்து தற்கொலைக்காகக் குதிக்கும்போது சேலையைக் கால்களுக்கிடையே இடுக்கிக்கொள்ளூம் பெண், கூலிவேலை அழைப்புக்காக டீக்கடைமுன்னால் காத்து நிற்கும் கொலுத்து வேலையாட்கள், சல்பேட்டா குடித்துக் கண்தெரியாமலானவர்கள், ஆஸ்பத்திரியில் கணவன் சாகப்போகிறான் என்று தெரிந்ததுமே மடியில் சில்லறையை எண்ணிப்பார்க்கும் பெண், கடற்கரை வெட்டவெளியில் பொறியில் இருந்து திறந்துவிட்டாலும் ஓடிப்போகாமல் உள்ளே இருக்கும் எலி…

இருவகையில் அசோகமித்திரனின் கதைசொல்லி அவரது இந்த நடுத்தர வர்க்க உலகில் இருந்து வெளியே தள்ளப்படுகிறான். ஒன்று அவன் வாழும் அற்ப உலகைவிடக் கீழான சேரி வாழ்க்கையை நேருக்கு நேராகச் சந்திக்கும்போது. நள்ளிரவில் ரகசியமாக சிகரெட் குடிக்க சாலையோர இருளில் நிற்கும்போது குழந்தைக்கு மருந்து வாங்க வைத்திருந்த கடைசிக்காசையும் பிடுங்கிச்செல்லும் கணவனிடம் அடிபட்டு நிராதரவாகக் கதறும் சேரிப்பெண்ணைக் கண்டு அவளுக்காகக் கொந்தளித்து கொதித்து ஒன்றும் செய்யாமல் நின்று மறுநாள் தூங்கி விழிக்கையில் எல்லாம் சரியாகப்பெறும் நடுத்தரவர்க்கத்து இளைஞன் அதன் சரியான உதாரணம். ஒரு இரக்கம், ஒரு கொதிப்பு அத்துடன் அதை மறந்து தன் அன்றாட அலைகளுக்குள் மாட்டிக்கொள்ளவேண்டியதே அவன் விதியாக இருக்கிறது.

இன்னொருவகை, எப்போதாவது ஒட்டுமொத்த நகரத்தையும் முழுமையாகப் பார்க்கும் ஒரு தருணம். செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு ஏறிச்சென்று அங்கிருந்து பார்க்கையில் நகரம் அதன் ஓயாத அலைக்கொந்தளிப்புகளுடன் அசைவில்லாமல் அர்த்தமில்லாமல் விரிந்து கிடக்கிறது [பிப்லப் சௌதுரிக்கு கடன் மனு].ஒரு ஆழமான பெருமூச்சுடன் மலையிறங்கி வரும் அசோகமித்திரனின் கதைசொல்லி அந்த லௌகீகவெளிக்கு அப்பால் எதையோ எப்போதும் உணர்ந்துகொள்கிறான். அந்தக் கணங்களை எப்போதும் மௌனம் மிக்க சொற்களில் அல்லது முழு மௌனத்தால் மட்டுமே சொல்லவேண்டும் என அசோகமித்திரன் கவனம் கொள்கிறார். அவரது புனைவுலகில் வாசகன் அடையச்சாத்தியமான உச்சம் என்பது அதுவே


நகரங்களில் எஞ்சுவது…

அசோகமித்திரன் பிற்காலத்தில் சில கதைகளில் அவர் செகந்திராபாதுக்குத் திரும்பிச் செல்வதைப்பற்றி எழுதியிருக்கிறார். அழுத்தமான இறந்தகால ஏக்கத்தை மிகச்சாதாரணமான சொற்கள் வழியாக எழுதிக்காட்டும் அக்கதைகளை அவரது ஒட்டுமொத்தப் புனைவுலகின் பின்னணியில் நின்று வாசிக்கும்போது ஒரு வித நிறைவு ஏற்படுவதை கவனித்திருக்கிறேன். கதைசொல்லி இளமைநினவுகளால் கனக்கும் முதிய மனத்துடன் செகந்திராபாத் தெருக்களில் நடக்கிறான். அன்றிருந்த ஒரு தேனீர்க்கடை இப்போதும் இருக்கிறது. ’இங்கே ஒரு விதமான பிஸ்கட் கிடைக்கும், உங்கள் தயாரிப்பு என நினைக்கிறேன். இருக்கிறதா?’ அங்கே இருப்பதெல்லாம் தொழிற்சாலை பிஸ்கட்டுகள். ‘முன்பெல்லாம் கிடைக்குமே’ ‘எப்போது’ ‘ஒரு இருபத்தைந்து முப்பது வருடம் முன்பு’ ‘அப்போது நான் பிறக்கக்கூட இல்லை’

அந்த ஊரில் அவன் நிழல்படாத இடமே இருக்க முடியாது. அவன் அப்பா அந்த ஊரில் ஒவ்வொரு இடத்தையாகக் காட்டி ’இது நீ பிறந்த ஆஸ்பத்திரி, இது நாம் முதலில் குடியிருந்த வீடு’ என்று அடையாளம் காட்டிக்கொண்டே வருவார். எல்லா இடங்களும் இப்போது அவனைக் கைவிட்டிருக்கின்றன. ஒவ்வொரு இடமும் இன்னொன்றாக ஆகிவிட்டிருக்கிறது. ‘எவ்வளவு சுத்தமாக எவ்வளவு பூர்ணமாக மறதி போர்த்திக்கொண்டிருக்கிறது. அதைப்போய்க் கலைத்துவிட்டேனே’ என்று அவன் உணர்கிறான் [தொப்பி]

லான்ஸர் பாரக்கைத் தேடிச்செல்லும் இன்னொரு கதையில் எல்லாமே ஒட்டுமொத்தமாக மண்மீதிருந்து மாறிவிட்டிருக்க டெரென்ஸும் மாரிஸும் குட்டிப்பையனும் ஏறி விளையாடிக் கொண்டாடிய அந்த ஆலமரம் மட்டும் இன்னும் பிரம்மாண்டமாக விழுதுகள் பரப்பி நிற்பதைக் கதைசொல்லி கண்டுகொள்கிறான். அந்த ஆலமரத்தின் கிளையில் அன்று குட்டிப்பையன் தன் பெயரைக் கிழித்து வைத்திருந்தான். அதன் பொந்துகளில் ஒன்றில் தனக்குப் பிரியமான ஒன்றை ஒளித்து வைத்திருந்தான். அந்த ஆலமரத்தில் அதன் மேலும் எத்தனையோ பேர் ஏறி விளையாடியிருப்பார்கள். ஆனால் அது அங்கேதான் இருக்கும் என உணர்கிறான்.

ஆம், ஆலமரம் அறியும்.

[காலம் ,அசோகமித்திரன் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை]

மறுபிரசுரம்/ Nov 2, 2011 

முந்தைய கட்டுரைஒளி- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைஊழ்