அன்புள்ள ஸ்ரீதர்
கதையின் உணர்வெழுச்சித்தளம் அங்கே முடிகிறது, அதனால் அப்படி தோன்றியிருக்கலாம். ஆனால் நிதானமான வாசிப்பில் அப்படி தோன்றாது. கதையின் மையமே ஓர் உறவு முனைகொண்டு உச்சம் கொண்டு முறிவடையும் அந்த ரத்தம் தோய்ந்த தருணம்தான். அதன் பின்னர் இறக்கம். ஆகவே அதை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது
உச்சகடத்தில் முடிக்க வேண்டுமென நாம் விரும்புவது கவித்துவத்துக்காக. உண்மையான வாழ்க்கையில் அப்படி இல்லை. இது அதிதீவிரமாக அடித்து சட்டென்று ஓயும் அனல்காற்று. அதன் பின் மனிதர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். கொஞ்சநாள் கழிந்து திரும்பிப்பார்த்து புன்னகையும் செய்கிறார்கள். உறவுகள் நிரந்தரமாக முறிவதெல்லாம் மிகமிக அபூர்வம்.
ஜெ
***
அன்புள்ள ஜெ
நான்கு நாட்கள் வெளியூர் வாசம். ‘நெட்’ வசதியில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டேன். இன்றுதான் ஊர் திரும்பினேன். உடனே ‘அனல் காற்று’ 13, 14 மற்றும் 15 படித்து முடித்தேன். சிக்கலான கதைக்கு திருப்தியான முடிவு. தெளிவான நீரோட்டம் போன்ற நடை. பாராட்டுக்கள்.
அன்பன்,
சூரி
அன்புள்ள சூரி அவர்களுக்கு,
நலம்தானே?
கலங்கித்தெளிவதே உறவுகள் உருவாக்கும் உணவெழுச்சிகளின் ஆதார இயல்பு. அதை சொல்ல முயன்றிருந்தேன். உறவுகளின் சதுரங்க ஆடத்தை, வலியை, வலியில் உள்ள மறைமுக இன்பத்தை பெரும்பாலான உறவுகள் எளிமையானவை. மனிதர்கள் அதை உள்ளூர விரும்பித்தான் சிக்கலாக ஆக்கிக் கொள்கிறார்கள்
****
அன்புள்ள ஜெயமோகன்
நலம்தானே? அனல்காற்று படித்தேன். அருமையான கதை. கதையின் பொதுவான அமைப்பு ஒருவகையில் சாதாரணமாக இருந்தது. அதன் சூழலை நீங்கள் சொல்ல முற்படவே இல்லை. மேலும் பேச்சுக்கள் நாம் வழக்கமாக கதைகளில் காணும் பேச்சுக்களின் அக்ஸெண்டில் இருந்தமையால் ஒரு புதுமை தோன்றவில்லை. ஆனால் மிக அடர்த்தியான உணர்ச்சிக்கொந்தளிப்பான கதையாக இருந்தது அனல்காற்று. பல இடங்களை நான் திரும்பத்திரும்ப வாசித்தேன். பல இடங்களில் வரிகள் என் மனதை உலுக்கின. வேண்டியவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசே அவர்கள் விரும்பும் பாவனை தானே என்ற வரியை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். தோலையும் சதையையும் கிழித்து உள்ளே சென்று உண்மையைக் கண்டு சொல்கிறீர்கள்.
காமத்தை இந்த அளவுக்கு உள்ளே சென்று பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயம். எத்தனை மாய்மாலங்கள் எவ்வளவு ஜாலங்கள். எல்லாம் காமத்தை காமம் அல்ல என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதற்காகத்தான் இல்லையா? கடைசியில் இருவருமே ஆமாம், இது காமம் மட்டும்தான் என்று ஒத்துக்கொள்ளும்போது கதை முடிவதும் சிறப்பாக இருக்கிறது.
–ஸ்ரீனிவாசன் அனந்தராமன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன் அனந்தராமன்
கதையில் நான்கு மனங்கள் அன்றி வேறு எதுவுமே வரக்கூடாது, கதை ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச்சூழலுக்குள் நிற்கக் கூடாது என்பதே என் நோக்கமாக இருந்தது. காமத்தின் மனநாடகம் தவிர எங்குமே மனம் குவியக்கூடாது என்பதுதான் இலக்கு.
ஜெ
*****
அன்புள்ள ஜெ
இந்தக்கடிதத்தை நான் தயங்கித் தயங்கி எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். எனக்கு ஆங்கிலமே நன்றாக தெரிந்த மொழி. நான் 30 வயதானவன். பொறியியலாளராக வேலை பார்க்கிறேன். நிறைய வாசிப்பது உண்டு. அனல்காற்று என்னை உலுக்கிவிட்டது. ஏனென்றால் அது அப்படியே என்னுடைய கதை. எனக்கு 25 வயது முதல் என்னுடைய நண்பனின் அம்மாவுடன் உறவு ஏற்பட்டது. அந்த அம்மாள்தான் அந்த உறவை உருவாக்கினார் என்று நான் இப்போது திட்டவட்டமாக நம்புகிறேன். ஆனால் அந்த வயதில் அது ஒரு சாகசம் ஆக தோன்றியது. என் நண்பர்கள் எல்லாம் செக்ஸைப்பற்றி பேசிக்கோண்டுதான் இருந்தார்கள். எனக்கு செக்ஸ் கையிலேயே இருந்தது. இது எனக்கு பெருமையாக இருந்தது.
மேலும் ஈடிபஸ் காம்பெள்க்ஸ். ஜெ, நீங்கள் எழுதியிருந்தது முழுக்க முழுக்க உண்மை. அந்தப் பெண்மணிக்கு அப்போதே 40 வயது. அவரது பெரிய முலைகள் மேல் பெரும் மையல் எனக்கு இருந்தது. அவரது பருத்த உடலும் பிடித்திருந்தது. எனக்கு இப்போது அதையெல்லாம் நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது. அந்த பெண் எப்போதுமே நான் அவளை விட்டுவிட்டுச்சென்றுவிடுவேன் என்று சொல்லி அழுவாள். உடல் உறவு முடிந்ததுமே அரைமணி நேரம் அழுகைதான். கட்டிப்பிடித்து வாக்குறுதிகள் கொடுத்து சமாதானம்செய்யவேண்டும். இது ஒரு வழக்கமான வேலை. அவர் நான் விட்டுவிட்டு போகக்கூடாது என்பதற்காக நிறைய பணம் கொடுத்தார். வாய்வழிப்புனர்ச்சியும் அளிப்பார்.
ஒரு கட்டத்தில் எனக்கு பயம் வந்தது. இதை விட்டுவிடவேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன். ஆனால் விடுவதை நினைக்கும்தோறும் என்னுடைய மோகம் ஏறிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் மனப்போராட்டம். ஊரைவிட்டே நான்குமுறை ஓடிப்போய்விடு திரும்பிவந்தேன். மாசக்கணக்கில் அலைபாய்ந்துகோண்டிருந்தேன். அனல்காற்று அடித்தது என் வாழ்க்கையிலும் தான். பிறகு இந்தக்கதையில் வருவதைப்போல ஒரு கணத்தில் திடீரென்று அது முறிந்தது. ஏன் எப்படி என்றெல்லாம் எனக்கே தெரியவில்லை. ஒருநாள் என்ன இது என்று தோன்றிவிட்டது. அதன்பின்னர் அந்தப்பெண்மணியை பார்க்கவே பிடிக்கவில்லை. அவர் என் வீட்டுக்கெல்லாம் வந்து என்னை அழைத்தார். அழுது மன்றாடினார். தினமும் கடிதங்கள் போட்டார். இரக்கப்பட்டு போனால் பிடிக்கவே பிடிக்காது. முன்பு தெரியாத குறைகள் எல்லாம் தெரிய ஆரம்பித்தன. அந்தப்பெண்மணி பித்து பிடித்தவள் போல ரொம்ப கீழ்த்தரமாக ஆட ஆரம்பித்தார்.
நல்ல வேளையாக நான் சென்னைக்கு ஹாஸ்டலுக்கு போனேன். ஹாஸ்டலில் இருக்கும்போது தினமும் இரண்டு கடிதங்கள் வரும். பிறகு கடிதங்கள் குறைந்தன. அபப்டியே அந்த உறவு இல்லாமல் ஆகியது. நான் மனநிலை பிறழ்ச்சிபோல பல சிக்கல்களுக்கு ஆளானேன். தூக்கமே வராது. மற்ற பையன்களைப்போல என்னால் சுயபோகம் செய்ய முடியாது. எனக்கு விரைப்பே இல்லை. அதை எண்ணி எண்ணி பயந்துகொண்டிருந்தேன். யாரிடமும் சொல்ல முடியாது. எனக்கு போதைப்பொருட்கள் பழக்கம் வந்தது. குடிப்பேன். பான்பீடாவும் போடுவேன். ஆனால் எப்படியோ தட்டிதடுமாரி எஞ்சீனியரிங் முடித்தேன். வேலையும் கிடைத்தது. நான் படித்த காலத்தில் எப்படியும் வேலைகிடைக்கும். அதனால் தப்பினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக நான் மனநிலைச்சிக்கல் இல்லாமல் ஆனேன். ஆனால் போதைப்பழக்கம் நீடித்தது. நினைக்காதபோது எனக்கு விரைப்பு வரும். வேண்டிய நேரத்தில் விரைப்பு வராது. கல்யாண திட்டங்கள் வந்தபோது நான் அவற்றை தட்டிக்கழித்தேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஒரு சித்தா டாக்டரிடம் போனேன். அவர் எனக்கு ஆண்மலடு என்று சொல்லி மருந்து கொடுத்தார். மருந்து மட்டும் நான்குவருடம் சாப்பிட்டேன். இந்தக்காலகட்டம் என் வாழ்க்கையிலே மிக மோசமான காலகட்டம்.
அதன்பிறகுதான் நான் என்னுடன் வேலைசெய்யும் ஒரு பெண்ணிடம் பழகினேன். அவள் என்னை காதலிப்பதாகச் சொன்னாள். நான் அவளை திட்டி துரத்தினேன். அவள் என்னை விடவில்லை. அவள் என் மீது நீங்காத காதலுடன் இருந்தாள். நான் ஆறுமாதம் எனக்குள்ளேயே அழுதேன். அதன்பிறகு அவளுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில் எல்லாவற்றையும் சொல்லியிருந்தேன். அவள்தான் எனக்கு தைரியம் தந்தாள். ஒன்றுமே பிரச்சினை இல்லை என்று சொல்லி ஆறுதல் அளித்தாள். அவளை முத்தமிட்டபோது எனக்கு உணர்ச்சிகள் வந்தன. நானும் அவளும் திருச்சியில் ஒரு விடுதியில் உறவு வைத்துக்கொண்டோம். அன்று அவள் மடியில் விழுந்து நான் விடிய விடிய அழுதேன். அவளை நான் திருமணம் செய்துகொண்டேன்.
இப்போது ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நான் இப்போது பீர் கூட குடிப்பதில்லை. கடுமையான வேலைக்கு நடுவிலும் படிக்கிறேன். எனக்கு பிடித்த எழுத்தாளர் நீங்கள். சொல்லப்போனால் இப்படி ஒரு கதையை நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை! படித்தபோது ஒவ்வொரு அத்தியாயத்திலும் எனக்கு படபடவென்று வந்தது.
இப்போதுநான் ஊருக்குச் செல்லும்போது அந்தப்பெண்மணியை பார்ப்பேன். கிழவி மாதிரி இருக்கிறாள். என்னைப்பார்த்தால் சாதாரணமாக நலம் விசாரிப்பாள். அவளுக்கும் இப்போது எல்லாமே பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது. அவளைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இதெல்லாம் உண்மையிலேயே நடந்ததா என்று தோன்றுகிறது.
ஜெ, இதில் என்ன கொடுமை என்றால் நான் அவளை சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தேன் என்பதுதான். கள்ளக்காதலி மேல் ஒருபோதும் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. உங்கள் கதையில் இந்த விஷயம் விடுபட்டுள்ளது. அவளை நான் எப்போதுமே வேவுபார்த்துக்கொண்டே இருப்பேன். அதனால் எனக்கு மனநிம்மதி என்பதே இல்லை. பிறகு நான் நான்குமுறை எலிஸா டெஸ்ட் செய்துகோண்டிருக்கிறேன். இருந்தும் எய்ட்ஸ் இருக்கிறது என்று தோன்றும். போதையைப்போட்டாலே எய்ட்ஸ் ஞாபகம்தான். எவ்வளவு கொடுமை. ஜெ, அது உண்மையிலேயே அனல்காற்றுதான்.
ஜெ, சித்தமருந்துகளினாலே என்க்கு இப்போது கிட்னி பிரச்சினை உருவாகியிருக்கிறது. உப்பு சாப்பிட் முடியாது. கடுமையான விரதம். நிறைய நேரம் வேலைபார்த்தால் என் கால்களும் முகமும் வீங்கிவிடும். இதைநான் என் மனைவிக்குக்கூட விரிவாகச் சொல்லவில்லை. பிரஷர் என்று சொல்லியிருக்கிறேன். கிட்னி போனால் நான் ஆபரேஷன் செய்யமாடேன், அபப்டியே நிம்மதியாக செத்துவிடுவேன் என்று எண்ணியிருக்கிறேன். கிட்னி மருத்துவமே ஒரு பெரிய மோசடி. பணத்தைபிடுங்கிக்கோண்டு என் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்கள்.
நீங்கள் எழுதியவரிகள் பொன்னெழுத்துக்கள். மனதுடன் விளையாடலாம். ஆத்மாவுடன் விளையாடலாம். ஒருபோதும் உடலுடன் விளையாடக்கூடாது. அதை அனுபவித்தவன் நான். நன்றி ஜெ.
அன்புடன்
கெ
அன்புள்ள கெ
உங்கள் கடிதம். உங்களுக்கு எல்லாமே தெளிவாகிவிட்டது. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை. பிறருக்காக இந்தக் கடிதத்தை நான் பிரசுரிக்கிறேனே.
ஜெ