«

»


Print this Post

அனல்காற்று மேலும் கடிதங்கள்


ஜெமோ அவர்களுக்கு,
அனல்காற்று தொடக்கத்தில் நீங்கள் பாலுமகேந்திரா இதற்கு திரைக்கதை அமைக்க விரும்பியதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.  பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ பார்த்த பிரமிப்பு இன்றும் அகலவில்லை எனக்கு.  உங்கள் கதையை படிக்கும்போதே அது பாலுவின் படமாக மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.  காட்சி விவரணைகளும் அதன் உள்ளார்ந்த தர்க்க விசாரமும் கதையின் தளத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.  முதல் சில அத்தியாயங்களில் ‘புதிதான’ ஒரு ஜெமோ தெரிந்தார்.  எப்படி இவரால் இத்தனை அவதாரம் எடுக்க முடிகிறது என்ற ஆச்சர்யத்துடன் தொடர்ந்து படித்து வந்தேன்.
இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயத்தில் அருண் ஏர்ப்போர்ட்டுக்கு வெளியே நின்று கதறுவதோடு கதை முடிந்துவிட்டது போல் ஒரு உணர்வு.
இந்த சொற்சித்திரத்தினூடே இருக்கும் காட்சிகளை திரையில் காண முடிந்தால் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
– ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்

கதையின் உணர்வெழுச்சித்தளம் அங்கே முடிகிறது, அதனால் அப்படி தோன்றியிருக்கலாம். ஆனால் நிதானமான வாசிப்பில் அப்படி தோன்றாது. கதையின் மையமே ஓர் உறவு முனைகொண்டு உச்சம் கொண்டு முறிவடையும் அந்த ரத்தம் தோய்ந்த தருணம்தான். அதன் பின்னர் இறக்கம். ஆகவே அதை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது

உச்சகடத்தில் முடிக்க வேண்டுமென நாம் விரும்புவது கவித்துவத்துக்காக. உண்மையான வாழ்க்கையில் அப்படி இல்லை. இது அதிதீவிரமாக அடித்து சட்டென்று ஓயும் அனல்காற்று. அதன் பின் மனிதர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். கொஞ்சநாள் கழிந்து திரும்பிப்பார்த்து புன்னகையும் செய்கிறார்கள்.  உறவுகள் நிரந்தரமாக முறிவதெல்லாம் மிகமிக அபூர்வம்.
ஜெ

***

அன்புள்ள ஜெ

நான்கு நாட்கள் வெளியூர் வாசம்.  ‘நெட்’ வசதியில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டேன்.  இன்றுதான் ஊர் திரும்பினேன்.  உடனே ‘அனல் காற்று’ 13, 14 மற்றும் 15 படித்து முடித்தேன்.  சிக்கலான கதைக்கு திருப்தியான முடிவு.  தெளிவான நீரோட்டம் போன்ற நடை.  பாராட்டுக்கள்.

அன்பன்,

சூரி

அன்புள்ள சூரி அவர்களுக்கு,

நலம்தானே?

கலங்கித்தெளிவதே உறவுகள் உருவாக்கும் உணவெழுச்சிகளின் ஆதார இயல்பு. அதை சொல்ல முயன்றிருந்தேன்.  உறவுகளின் சதுரங்க ஆடத்தை, வலியை, வலியில் உள்ள மறைமுக இன்பத்தை பெரும்பாலான உறவுகள் எளிமையானவை. மனிதர்கள் அதை உள்ளூர விரும்பித்தான் சிக்கலாக ஆக்கிக் கொள்கிறார்கள்
****

அன்புள்ள ஜெயமோகன்

நலம்தானே? அனல்காற்று படித்தேன். அருமையான கதை. கதையின் பொதுவான அமைப்பு ஒருவகையில் சாதாரணமாக இருந்தது. அதன் சூழலை நீங்கள் சொல்ல முற்படவே இல்லை. மேலும் பேச்சுக்கள் நாம் வழக்கமாக கதைகளில் காணும் பேச்சுக்களின்  அக்ஸெண்டில் இருந்தமையால் ஒரு புதுமை தோன்றவில்லை. ஆனால் மிக அடர்த்தியான உணர்ச்சிக்கொந்தளிப்பான கதையாக இருந்தது அனல்காற்று. பல இடங்களை நான் திரும்பத்திரும்ப வாசித்தேன். பல இடங்களில் வரிகள் என் மனதை உலுக்கின. வேண்டியவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசே அவர்கள் விரும்பும் பாவனை தானே என்ற வரியை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். தோலையும் சதையையும் கிழித்து உள்ளே சென்று உண்மையைக் கண்டு சொல்கிறீர்கள்.

காமத்தை இந்த அளவுக்கு உள்ளே சென்று பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயம். எத்தனை மாய்மாலங்கள்  எவ்வளவு ஜாலங்கள். எல்லாம் காமத்தை காமம் அல்ல என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதற்காகத்தான் இல்லையா? கடைசியில் இருவருமே ஆமாம், இது காமம் மட்டும்தான் என்று ஒத்துக்கொள்ளும்போது கதை முடிவதும் சிறப்பாக இருக்கிறது.

–ஸ்ரீனிவாசன் அனந்தராமன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன் அனந்தராமன்

கதையில் நான்கு மனங்கள் அன்றி வேறு எதுவுமே வரக்கூடாது, கதை ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச்சூழலுக்குள் நிற்கக் கூடாது என்பதே என் நோக்கமாக இருந்தது. காமத்தின் மனநாடகம் தவிர எங்குமே மனம் குவியக்கூடாது என்பதுதான் இலக்கு.

ஜெ

*****

அன்புள்ள ஜெ

இந்தக்கடிதத்தை நான் தயங்கித் தயங்கி எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். எனக்கு ஆங்கிலமே நன்றாக தெரிந்த மொழி. நான் 30 வயதானவன். பொறியியலாளராக வேலை பார்க்கிறேன். நிறைய வாசிப்பது உண்டு. அனல்காற்று என்னை உலுக்கிவிட்டது. ஏனென்றால் அது அப்படியே என்னுடைய கதை. எனக்கு 25 வயது முதல் என்னுடைய நண்பனின் அம்மாவுடன் உறவு ஏற்பட்டது. அந்த அம்மாள்தான் அந்த உறவை உருவாக்கினார் என்று நான் இப்போது திட்டவட்டமாக நம்புகிறேன். ஆனால் அந்த வயதில் அது ஒரு சாகசம் ஆக தோன்றியது.  என் நண்பர்கள் எல்லாம் செக்ஸைப்பற்றி பேசிக்கோண்டுதான் இருந்தார்கள். எனக்கு செக்ஸ் கையிலேயே இருந்தது. இது எனக்கு பெருமையாக இருந்தது.

மேலும் ஈடிபஸ் காம்பெள்க்ஸ். ஜெ, நீங்கள் எழுதியிருந்தது முழுக்க முழுக்க உண்மை. அந்தப் பெண்மணிக்கு அப்போதே 40 வயது. அவரது பெரிய முலைகள் மேல் பெரும் மையல் எனக்கு இருந்தது. அவரது பருத்த உடலும் பிடித்திருந்தது. எனக்கு இப்போது அதையெல்லாம் நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது. அந்த பெண் எப்போதுமே நான் அவளை விட்டுவிட்டுச்சென்றுவிடுவேன் என்று சொல்லி அழுவாள். உடல் உறவு முடிந்ததுமே அரைமணி நேரம் அழுகைதான். கட்டிப்பிடித்து வாக்குறுதிகள் கொடுத்து சமாதானம்செய்யவேண்டும். இது ஒரு வழக்கமான வேலை. அவர் நான் விட்டுவிட்டு போகக்கூடாது என்பதற்காக நிறைய பணம் கொடுத்தார். வாய்வழிப்புனர்ச்சியும் அளிப்பார்.

ஒரு கட்டத்தில் எனக்கு பயம் வந்தது. இதை விட்டுவிடவேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன். ஆனால் விடுவதை நினைக்கும்தோறும்  என்னுடைய மோகம் ஏறிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் மனப்போராட்டம். ஊரைவிட்டே நான்குமுறை ஓடிப்போய்விடு திரும்பிவந்தேன். மாசக்கணக்கில் அலைபாய்ந்துகோண்டிருந்தேன். அனல்காற்று அடித்தது என் வாழ்க்கையிலும் தான். பிறகு இந்தக்கதையில் வருவதைப்போல ஒரு கணத்தில் திடீரென்று அது முறிந்தது. ஏன் எப்படி என்றெல்லாம் எனக்கே தெரியவில்லை. ஒருநாள் என்ன இது என்று தோன்றிவிட்டது. அதன்பின்னர் அந்தப்பெண்மணியை பார்க்கவே பிடிக்கவில்லை. அவர் என் வீட்டுக்கெல்லாம் வந்து என்னை அழைத்தார். அழுது மன்றாடினார். தினமும் கடிதங்கள் போட்டார். இரக்கப்பட்டு போனால் பிடிக்கவே பிடிக்காது. முன்பு தெரியாத குறைகள் எல்லாம் தெரிய ஆரம்பித்தன. அந்தப்பெண்மணி பித்து பிடித்தவள் போல ரொம்ப கீழ்த்தரமாக ஆட ஆரம்பித்தார்.

நல்ல வேளையாக நான் சென்னைக்கு ஹாஸ்டலுக்கு போனேன். ஹாஸ்டலில் இருக்கும்போது தினமும் இரண்டு  கடிதங்கள் வரும். பிறகு கடிதங்கள் குறைந்தன. அபப்டியே  அந்த உறவு இல்லாமல் ஆகியது. நான் மனநிலை பிறழ்ச்சிபோல பல சிக்கல்களுக்கு ஆளானேன். தூக்கமே வராது. மற்ற பையன்களைப்போல என்னால்  சுயபோகம் செய்ய முடியாது. எனக்கு விரைப்பே இல்லை. அதை எண்ணி எண்ணி பயந்துகொண்டிருந்தேன். யாரிடமும் சொல்ல முடியாது. எனக்கு போதைப்பொருட்கள் பழக்கம் வந்தது. குடிப்பேன். பான்பீடாவும் போடுவேன். ஆனால் எப்படியோ தட்டிதடுமாரி எஞ்சீனியரிங் முடித்தேன். வேலையும் கிடைத்தது. நான் படித்த காலத்தில் எப்படியும் வேலைகிடைக்கும். அதனால் தப்பினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக நான் மனநிலைச்சிக்கல் இல்லாமல் ஆனேன். ஆனால் போதைப்பழக்கம் நீடித்தது. நினைக்காதபோது எனக்கு விரைப்பு வரும். வேண்டிய நேரத்தில் விரைப்பு வராது. கல்யாண திட்டங்கள் வந்தபோது நான் அவற்றை தட்டிக்கழித்தேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஒரு சித்தா டாக்டரிடம் போனேன். அவர் எனக்கு ஆண்மலடு என்று சொல்லி மருந்து கொடுத்தார். மருந்து மட்டும் நான்குவருடம் சாப்பிட்டேன். இந்தக்காலகட்டம் என் வாழ்க்கையிலே மிக மோசமான காலகட்டம்.

அதன்பிறகுதான் நான் என்னுடன் வேலைசெய்யும் ஒரு பெண்ணிடம் பழகினேன். அவள் என்னை காதலிப்பதாகச் சொன்னாள். நான் அவளை திட்டி துரத்தினேன். அவள் என்னை விடவில்லை. அவள் என் மீது நீங்காத காதலுடன் இருந்தாள். நான் ஆறுமாதம் எனக்குள்ளேயே அழுதேன். அதன்பிறகு அவளுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில் எல்லாவற்றையும்  சொல்லியிருந்தேன். அவள்தான் எனக்கு தைரியம் தந்தாள். ஒன்றுமே பிரச்சினை இல்லை என்று சொல்லி ஆறுதல் அளித்தாள். அவளை முத்தமிட்டபோது எனக்கு உணர்ச்சிகள் வந்தன. நானும் அவளும் திருச்சியில் ஒரு விடுதியில் உறவு வைத்துக்கொண்டோம். அன்று அவள் மடியில் விழுந்து நான் விடிய விடிய அழுதேன். அவளை நான் திருமணம் செய்துகொண்டேன்.

இப்போது ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நான் இப்போது பீர் கூட குடிப்பதில்லை. கடுமையான வேலைக்கு நடுவிலும் படிக்கிறேன். எனக்கு பிடித்த எழுத்தாளர் நீங்கள். சொல்லப்போனால் இப்படி ஒரு கதையை நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை! படித்தபோது ஒவ்வொரு அத்தியாயத்திலும் எனக்கு படபடவென்று வந்தது.

இப்போதுநான் ஊருக்குச் செல்லும்போது அந்தப்பெண்மணியை பார்ப்பேன். கிழவி மாதிரி இருக்கிறாள். என்னைப்பார்த்தால் சாதாரணமாக நலம் விசாரிப்பாள். அவளுக்கும் இப்போது எல்லாமே பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது. அவளைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இதெல்லாம் உண்மையிலேயே நடந்ததா என்று தோன்றுகிறது.

ஜெ, இதில் என்ன கொடுமை என்றால் நான் அவளை சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தேன் என்பதுதான். கள்ளக்காதலி மேல் ஒருபோதும் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. உங்கள் கதையில் இந்த விஷயம் விடுபட்டுள்ளது.  அவளை நான் எப்போதுமே வேவுபார்த்துக்கொண்டே இருப்பேன். அதனால் எனக்கு மனநிம்மதி என்பதே இல்லை. பிறகு நான் நான்குமுறை எலிஸா டெஸ்ட் செய்துகோண்டிருக்கிறேன். இருந்தும் எய்ட்ஸ் இருக்கிறது என்று தோன்றும். போதையைப்போட்டாலே எய்ட்ஸ் ஞாபகம்தான். எவ்வளவு கொடுமை. ஜெ, அது உண்மையிலேயே அனல்காற்றுதான்.

ஜெ, சித்தமருந்துகளினாலே என்க்கு இப்போது கிட்னி பிரச்சினை உருவாகியிருக்கிறது. உப்பு சாப்பிட் முடியாது. கடுமையான விரதம். நிறைய நேரம் வேலைபார்த்தால் என் கால்களும் முகமும் வீங்கிவிடும். இதைநான் என் மனைவிக்குக்கூட  விரிவாகச் சொல்லவில்லை. பிரஷர் என்று சொல்லியிருக்கிறேன். கிட்னி போனால் நான் ஆபரேஷன் செய்யமாடேன், அபப்டியே நிம்மதியாக செத்துவிடுவேன் என்று எண்ணியிருக்கிறேன். கிட்னி மருத்துவமே ஒரு பெரிய மோசடி. பணத்தைபிடுங்கிக்கோண்டு என் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்கள்.

நீங்கள் எழுதியவரிகள் பொன்னெழுத்துக்கள். மனதுடன் விளையாடலாம். ஆத்மாவுடன் விளையாடலாம். ஒருபோதும் உடலுடன் விளையாடக்கூடாது. அதை அனுபவித்தவன் நான். நன்றி ஜெ.

அன்புடன்
கெ

அன்புள்ள கெ

உங்கள் கடிதம். உங்களுக்கு எல்லாமே தெளிவாகிவிட்டது. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை.  பிறருக்காக இந்தக் கடிதத்தை நான் பிரசுரிக்கிறேனே.
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/2146

2 pings

  1. jeyamohan.in » Blog Archive » அனல்காற்று:கடிதங்கள்

    […]   அன்புள்ள ஜெயமோகனுக்கு, தங்கள் கடிதத்திற்கு நன்றி.பண்பாடு பேணப் படவேண்டும் என்றெல்லாம் இது வரை எனக்குத் தோன்றியதேயில்லை. நான் என் கடிதத்தில் குறிப்பிட முயன்றது கதைவெளியினை பொறுத்தவரை14வது பகுதி மற்றும் 15வது பகுதிக்கான இடைவெளி குறித்து மட்டுமே. தவிர, அருண் கதாபாத்திரம் மரணம் எய்துதல் பற்றியும் எனக்கு அதிக கவனம் இல்லை.14வது பகுதி அருணின் மரணத்தை முன் நிறுத்துவதாகவும் நான் நினைக்கவில்லை. ஒரு வேளை அவன் வேறொரு முறையில் கூட காப்பாற்றப் பற்றிருக்கலாம்- அவ்வகையில் 15து பகுதி சொல்லபடாத பொழுது கதையின் முடிவுக்கு வாசக மனதை பொறுத்து (15 வது பகுதிக்கான சாத்தியத்தையும் சேர்த்து) எண்ணற்ற சாத்தியங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். நான் கிழக்கு- மேற்கு- மதிப்பீடுகள் என குறிப்பிட்ட காரணம் கதை நடக்கும் களம் சார்ந்த மனிதர்களின் மன அமைப்பும் அவை கதையில் பொருந்தும் விதம் பற்றியும் சொல்ல முயன்றதனால் மட்டுமே. அல்பர் காம்யுவின் அன்னியனில் ஒரு இடத்தில் அவன் தன் தோழி அவர்கள் இருவருக்குமான திருமணம் பற்றி கேட்கையில் அவசியம் இல்லை, செய்து கொண்டாலும் தவறு இல்லை என்று குறிப்பிடுகிறான். அது அக்கதை சார்ந்தது. அதுவே தமிழ் சூழலில் ஒரு கதையில் கதாபாத்திரம் சொல்ல வாய்பு இருக்கிறதா என்றால் – நிச்சயம் இருக்கிறது அது கதையின் அமைப்பு சார்ந்து என்றே தோன்றுகிறது. முழுக்க முழுக்க அந்த கதை இயங்கும் தளம் சார்ந்து இதன் பொருத்தம் அமையும் என்றும் பொருத்தம் அமைவது மட்டுமே முக்கியம் எனவும் படுகிறது. இக்கதையை பொருத்தவரை சந்திராவின் மகனின் கருத்துக்கள் எவ்விடத்திலும் 15வது பகுதிக்கு முன் கதையில் முக்கியத்துவம் பெறவில்லை. அதுவே நான் சொல்ல முயன்றது. இதில் மதிப்பீடுகள் எங்கு வருகின்றன? காதல்- காமம் எனபதெல்லாம் வார்த்தைகளை பிரித்து கையாண்டு பார்த்தாலும் அவை ஒரே நாணயத்தின் இருபக்கங்களாகவே உணர்கிறேன். அந்த அடிப்படை உணர்ச்சியின் சரி- தவறு பற்றி தான் கொண்ட அறம் சார்ந்தும், தன்னிலை வசதி சார்ந்தும்,சூழல் சார்ந்தும், மனித மனம் மதிப்பீடு செய்து, அதை நடைமுறைபடுத்திக் கொள்ள முயல்கிறது.இத்தகைய நிகழ்வில் நிலபரப்பு, காலம், இவை உருவாக்கும் சமூக சூழல்கள் போன்றவை இந்த நூதனமான மனதின் கட்டமைப்பில் தங்கள் ஆளுமையை செலுத்துவதன் மூலம் மதிப்பீடுகளில் மறைமுகமாக தன் வினையாற்றுகிறது. பண்பாடு என்பது பொதுப்படையான சொல். என்னை பொறுத்தவரை என் லயிப்பு அதனை உருவாக்கும், அதனுடம் மோதும், தன் கட்டுமானத்தின் புதிர்களுக்கிடையே தன் நிலையை தேடி அலைந்து அலைகழியும் தனிப்பட்ட பிரத்யேக மனங்களின் மீதே.          ஆக இத்தகைய மனதின் பிரத்யேக செயல்பாடுகளைச் சொல்ல வருகையிலேயே கிழக்கத்திய மதிப்பீடுகள் மெற்கத்திய மதிப்பீடுகள் எனக் குறிப்பிட நேரிடுகிறது.           எனக்கான தங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, மனிதர்கள் மிக மிக நடைமுறை வாழ்வு சார்ந்தவர்கள் எல்லாவற்றையும் தாண்டி வாழவே முற்படுகிறார்கள் என்பது மறுக்கவே முடியாத உண்மையாக இருக்கும் பொழுதும், அவர்கள் தாண்டிச் சென்று வாழும் முறையை கவனித்தால் அது தேசத்திற்கு தேசம் வேறு படவே செய்கிறது. இந்தியாவை பொருத்தவரை குழந்தைகளுக்காக என சொல்லிக் கொண்டு தொடரும் மணப்பாண்மை இருக்கிறது என்றால் அமெரிக்க சூழலில் அத்தகைய தேவையே கிடையாது, விவாகரத்து பெற்று குழந்தைகளை வார இறுதியில் பார்த்தபடி அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து விடக் கூடிய சமூகம் அது. நான் வாழும் ஆப்ரிக்க நாடான மலாவியில் என்றால் விவாகரத்து வரை எல்லாம் கூட தேவையில்லை, சாதரணமாகவே இங்கே இருவரும் பிரிந்து சென்று விடுவார்கள்- முதல் கணவனின் குழந்தையை தன் பிள்ளையாக்கி வளர்க்கும் கணவன்மார்கள் இங்கே அனேகம்.         இதில் என் பெற்றொர்களின் தலை முறையினைச் சார்ந்தவர்களுக்கு பார்க்கக்கிடைத்ததை விட என் தலை முறையினருக்கு பார்க்க கிடைத்த அமெரிக்க திரைப் படங்களும், ருசிக்க கிடைத்த பீசா வைகைகளும், வருமானத்திற்கு வழி செய்த அமெரிக்கன் ப்ராஜெக்ட்டுகளும் அதிகம். இதன் மூலம் இயல்பாகவே மனதின் புரிதல் முறைகள் மாறி வளர்கிறது. சென்ற வருடம் அப்போலோ மருத்துவமனையில் ஜெனரல் செக்கப்புக்காக சென்றிருந்தேன். அப்போது கேட்க பட்ட கேள்வி- திருமணமாகிவிட்டதா, என் பதில்- இல்லை. அடுத்த கேள்வி- லிவ்ங்க் டு கெதர் முறை நான்- சிரித்த படி இல்லை.      இக் கேள்வி பத்து வருடத்திற்கு முன் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆக புதிய தலை முறையினரிடன் ‘ஈசி கோ ஆட்டிடுயூட்’ – எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. இதை எப்படி இக்கதையில் இணைத்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. அப்படி இணைக்க கதையில் முதல் பகுதிகளில் அத்தகைய இணைப்புக்கான சரடு எதுவும் இருந்திருக்க வேண்டும் அல்லவா- அப்படி இல்லாததையே நான் இரு தலைமுறையின் இரு வித முறையிலான் மதிப்பீடுகள் அவற்றின் முரண்கள் சந்திக்காமலேயே ஒற்றை வரியில் “தெளிவென” கொண்டாடப் படுகிறது என குறிப்பிட முயன்றேன். மற்றபடி இக்கதையை விடுத்துப் பார்த்தால் எனக்கான உங்கள் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சம்மதமே. அத்தகைய அடிப்படையிலேயே 27 வயதான நான் இதுவரையான என் வாழ்கையையும், பிற படைப்புகளையும் அணுகி வருவதாக நம்புகிறேன். —————————– ஆனந்த் அண்ணாமலை அனல்காற்று மேலும் கடிதங்கள் […]

  2. jeyamohan.in » Blog Archive » அனல்காற்று கடிதங்கள்,அனுபவங்கள்

    […] அனல்காற்று மேலும் கடிதங்கள் […]

Comments have been disabled.