புதிய பிரபஞ்சம்

நேற்று முன்தினம் காலை மலையாள அறிவியல் இதழாளர் ஒரு அழைத்து ஐன்ஸ்டீனின் எதிர்காலம் பற்றிய கவலையைப் பகிர்ந்துகொண்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்று சொன்னார். இணையத்தில் அதைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது.

முதலில் தோன்றிய எண்ணமே இந்த ஆய்வின்மீது மாற்றுக்கருத்துக்கள் என்னென்ன வருகின்றன என்று கவனிக்கவேண்டும் என்றுதான். அது ஒரு எச்சரிக்கைமனநிலை. 1989 ல் இதேபோல ஒரு மகத்தான கண்டுபிடிப்பு இரு அறிவியலாளர்களால் அறிவிக்கப்பட்டது. மார்ட்டின் ஃப்ளெஷ்மான் மற்றும் ஸ்டேன்லி பொன்ஸ் என்ற ஒரு அறிவியலறிஞர்கள் குளிர்அணுஇணைப்பு மூலம் அணுஆற்றலை உருவாக்கமுடியும் என்றும் அந்தச்சோதனையில் தாங்கள் வென்றுவிட்டதாகவும் அறிவித்தனர். இருவருமே மதிப்புமிக்க ஆய்வுநிறுவனங்களைச் சார்ந்தவர்கள். [சௌத்தாம்ப்டன் பல்கலை மற்றும் உட்டா பல்கலை] மறுநாள் உலகமெங்கும் எல்லா செய்தித்தாள்களிலும் முகப்புச்செய்தியே அதுதான்.

மனிதகுலத்தின் மிகப்பெரிய சவாலான ஆற்றல்பற்றாக்குறையை அதன்மூலம் முழுமையாக வென்றுவிடமுடியும் என்றார்கள். வெப்பக்கொந்தளிப்பு இல்லாத அணுஇணைப்பு என்பது சாத்தியமென்றால் கையடக்க அணுஉலைகளைக்கூட என்றாவது உருவாக்கிவிடமுடியும். வாகனங்கள் அணு ஆற்றலில் ஓடும். அதன் சாத்தியங்களை நினைக்கவே பிரமிப்பாக இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களுக்குள் அந்தச்சோதனைகள் ஆய்வகப்பிழைகளே என்று நிரூபிக்கப்பட்டது. மார்ட்டின் ஃப்ளெஷ்மான்,ஸ்டேன்லி பொன்ஸ் இருவரும் உருவாக்கிய ஆய்வக உபகரணம் வேலைசெய்யவேயில்லை. இன்று அந்தக் கருதுகோளே பிழை என ஆய்வாளர் நினைக்கிறார்கள்.

ஆகவே நேற்றும் இன்றும் இணையத்தில் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒளியைவிட அதிகவேகத்தில் ஒரு துகள் செல்லமுடியும் என்றால் ஐன்ஸ்டீனின் e=mc2 என்ற புகழ்பெற்ற சூத்திரம் பிழையாக ஆகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் காலதூர பரிமாணங்கள் பற்றிய இதுவரையிலான பல கொள்கைகளை முழுமையாக மாற்றியமைக்கவேண்டியிருக்கும். இதுவரை பெரும்பாலான அணுவிஞ்ஞானிகள் ஐயத்துடன்தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று காலை வரை வந்துகொண்டிருக்கும் செய்திகள் இச்சோதனைமுடிவுகள் உறுதிசெய்யப்படும் என்ற எண்ணத்தையே உருவாக்குகின்றன. அப்படி நிகழ்ந்தால் அது ஒரு மகத்தான மானுடநிகழ்வுதான்.

இந்த விஷயத்தைப்பற்றி நல்ல கட்டுரை ஒன்றை சி.சரவணகார்த்திகேயன் தமிழ் பேப்பரில் எழுதியிருக்கிறார்.[ஐன்ஸ்டீனின் கண்ணீர்த்துளி] வழக்கமாக இவ்வகை விஷயங்களை எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண்நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டுநகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை. சரவண கார்த்திகேயனின் கட்டுரை விஷயத்தை நன்கு புரிந்துகொண்டவருக்குரிய தெளிவுடன், கச்சிதமாக ,ஆர்வமூட்டுவதாக, அமைந்துள்ளது.

அக்கட்டுரையின் முடிப்பு முக்கியமானது. எப்படி நியூட்டனிய இயற்பியலை ஐன்ஸ்டீனிய இயற்பியல் இன்னொரு நுண்தளத்தில் கடந்து சென்றதோ அதேபோல ஐன்ஸ்டீனிய தரிசனங்களை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் உருவாகும் புதிய இயற்பியல்விதிகள் இன்னொரு மேலும் நுண்ணிய தளத்தில் கடந்துசெல்லும் என்கிறார். ஐன்ஸ்டீன் காலாவதியாவதில்லை, கடந்துசெல்லப்படுகிறார்.

நியூட்டனோ ஐன்ஸ்டீனோ உருவாக்கும் அறிவியல்விதிகளை பிரபஞ்ச இயக்கத்தின் விதிகள் என்பதை விட நாம் பிரபஞ்சத்தை அறிவதன் விதிகள் என்று கொள்வதே இன்னும் பொருத்தமானதாக இருக்கும். நாம் பிரபஞ்சத்தை மேலும் மேலும் நுட்பமாக அறியும்தோறும் புதிய விதிகளுடன் புதிய பிரபஞ்சத்தோற்றங்கள் உருவாகி வரலாம். அப்படிப்பார்த்தால் நூறாண்டுகளுக்கும் மேலாக ஐன்ஸ்டீனின் கொள்கை நீடித்திருந்ததே ஓர் ஆச்சரியம்தான்.

http://www.bbc.co.uk/tamil/science/2011/09/110923_lightspeedbroken.shtml

ஒளி – விக்கிபீடியா

http://www.pcmag.com/article2/0,2817,2393587,00.asp#fbid=qbbrfRK6Ry5

http://news.xinhuanet.com/english2010/sci/2011-09/27/c_131161271.htm

முந்தைய கட்டுரைகவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்
அடுத்த கட்டுரைஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?