அன்புள்ள ஜெமோ,
நலமா ? நீங்கள், “நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” நூலில் கூறிய, “ஆங்கில வழி கல்விகற்று, இன்டர்நெட் மூலம், இலக்கியத்தைக் கண்டடயும் நான்காவது வகையை”ச்சார்ந்த ஒரு
இளைய வாசகன். நண்பர் ஒருவர் உங்களுடைய “கன்னி நிலம்” கதையை அனுப்பினார். காதலை இவ்வளவு தீவிரத்துடன் இதற்குமுன் நான் படித்ததில்லை. உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வலைத்தளத்தை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.
“நான் ஒரு அறிவாளி, ஒருவர் எழுதி எனக்குப் புரியாதா?” என்ற அகந்தை எனக்கு இருந்தது. நீங்கள் எழுதிய விஷ்ணுபுரம், இந்து மரபின் ஆறு தரிசனம், பின் தொடரும்
நிழலின் குரல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கொடும்பாளூர் கண்ணகி ஆகியவற்றை வாங்கினேன். [ நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். சமீபத்தில் விடுமுறைக்கு
சென்னை வந்தேன். ஹிக்கின் பாதம்ஸ் சென்று உங்கள் புத்தகங்களைக் கேட்டால் “அவருதுலாம் இங்க இல்லைங்க” என்றார் ஒருவர்.]
விஷ்ணுபுரத்தை ஒருமுறை படித்துவிட்டு ஒரு பெரும் அயர்ச்சி ஏற்பட்டது. [தர்க்க விவாதப் பகுதிகள், கவிதைகள், ஆகிவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என் வாசிப்பு அனுபவம் இல்லை என்ற ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன்]. மேலும், நான் சிறு வயதில் இருந்து நம்பிய பல விஷயங்களில் எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.யோசித்து, யோசித்து, எனக்கு மூளை குழம்ப ஆரம்பித்தது. seriously, I was confused. [இப்ப கொஞ்சம் பரவாயில்லை :-)].
உங்கள் மூலமாக நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாகி உள்ளது. இதற்குமுன் விகடன், சுஜாதா என்ற அளவுக்கு தமிழில் இருந்த என் வாசிப்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருகிறது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
நன்றி,
விசு.
அன்புள்ள விசு
ஒரு புதிய கலைவடிவுக்குள் ஒரு புதிய அறிவுத்துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒருவருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக்கொண்டபொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது.அதைவிட அது போடக்கூடிய விரிவான கோலம். முன்னும்பின்னும் கதை பின்னிச்செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு வாசித்தால் பெரியவிஷயம் அல்ல.
தொடர்ந்து விவாதிப்போம்
ஜெ
அன்புள்ள ஜெ,
நலமா? கூந்தல் சிறுகதைத் தொகுப்பில் ‘சிலந்தி வலையின் மையம்’ வாசிக்கும் போதே மனதை என்னவோ செய்தது. வாசித்த பின்னும், நானே அறிய முடியாத படி, உள்ளுக்குள் ஏதோவொரு தந்தியைத் தொட்டு மீட்டிய வண்ணமே இருக்கிறது, மிக நெருக்கமான இந்த உணர்வு.
அன்புடன்,
வள்ளியப்பன்.
—
அன்புள்ள வள்ளியப்பன்
நன்றி
அந்தக்கதையைக் குறைவானபேர்களே சொல்லியிருக்கிறார்கள்
ஜெ