அறம் வாழும்-கடிதம்

அன்புள்ள ஜெயன்
யானை டாக்டர் , மத்துறு தயிர் , மற்றும் சோற்று கணக்கு மூன்று கதைகளும் இரண்டு வாரங்களாக எனது சிந்தனையிலும் உணர்விலேயும் மத்துக் கொண்டு கடைவது போலவே இருக்கிறது. டாக்டர் கே , கேத்தேள் சாஹிப், பேராசிரியர், போன்ற மனிதர்கள் எங்காவது தென் படுகிறார்களா அல்லது இந்த முப்பது வருஷ வாழ்க்கையில எங்கேயாவது சந்தித்திருக்கின்றோமா என்று மனம் தேடிக் கொண்டே இருக்கின்றது .

டாக்டர் தம்பையா, எனது ஐந்தாம் வகுப்பு சாமுவேல் சார், சென்னை அண்ணா நகரில் பெரும்பாலான சிவில் செர்விசெஸ் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு ஐம்பது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மாத்திரையும் கொடுக்கும் டாக்டர் ஜெயக்குமார், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தின் போது தாத்தா ஒருவர் கண்ணீருடன் சொன்ன அவருடைய ஆசிரியர் (அந்த ஆசிரியர் ஒரு பாதிரியார். பள்ளியில் பேனா நோட் போன்றவற்றை ஒரு மேஜையில் வைத்து விடுவாராம் . மாணவர்கள் காசு போட்டு விட்டு அவர்களே எடுத்து கொள்ளலாம். மாணவர்கள் திருடுவதில்லை. ஏமாற்றுவதில்லை. மன சாட்சியோடு வளர்த்தெடுக்கப்பட்டனர். ) இன்னும் சில மனிதர்கள் என்று மிகச் சிலரே தென் பட்டனர். அனைவருமே எழுபது தாண்டியவர்கள். புதிய தலை முறையில் யாரும் தென்படவில்லை. என் குறுகிய அனுபவம் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இது போன்ற மனிதர்களும் அவர்களின் வேராக இருந்த அறங்களும் சமுதாயம் முழுவதும் பரவி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கமும் , நாம் இன்று யதார்த்தம், காசு இருந்தாதான் மதிக்கும் போன்ற அறிவுரைகளாலும், அறம் என்ற ஒன்றே இல்லை என்ற தத்துவங்களாலும் வாழ்க்கையோடு காம்ப்ரமைஸ் செய்கிறோமோ என்ற குற்ற உணர்வும் எழும்பிக் கொண்டே இருக்கின்றது.

பேராசிரியர் போன்று மாணவர்களிடம் உணர்வு பூர்வமாகப் பிணைந்திருக்கும் ஆசிரியர்களோ, தாய்மை உணர்வோடு உணவளிக்கும் உணவகத்தையோ காண முடிய வில்லை. எல்லாம் பணம் என்ற ஒன்றின் வழியாகவே பிணைக்கப்பட்டது போலத் தோன்றுகின்றது. எழுத்துலகமும், அரசியல் உலகமும் இந்த அற உணர்வுகளை, மனிதர்களை முன்னால் வைக்காமல் சமூக நீதி, முற்போக்கு, பகுத்தறிவு, என்ற மேலான விஷயங்களையே முன்னால் வைத்தனவோ என்று தோன்றுகிறது. உதாரணமாக, கோட்டாறு குமரன் பிள்ளை பேராசிரியருக்குக் கல்வி கொடுத்தார் என்றால் அதில் உள்ள அற உணர்வைப் பார்க்காமல் அவர் சாதீய வெறி கொண்டவர், குரு குலத்தை ஆதரிப்பவர் என்று ஒதுக்கும் மனப்பக்குவமே இலக்கிய உலகத்துக்கு உள்ளது. உதாரணமாக விளிம்பு நிலை மனிதர்களைக் காட்டும் போக்கில் அவர்கள் வாழும் வாழ்க்கையினை நியாயப்படுத்துவது மற்றும் சிலாகிப்பது. குடிப்பது தவறு என்று ஒரு அறம் சொன்னால் நீ யார் அறம் சொல்ல, அது மேல் குடியின் அறம் என்று மறுத்துக் குடிப்பதைப் பெருமையாக எழுதி மீண்டும் மீண்டும் அந்த மனிதர்களை விளிம்பு நிலையிலேயே வைத்திருப்பது ( இவர்கள் கதை கட்டுரை எழுத விளிம்பு நிலை மனிதர்கள் வேண்டும் அல்லவா). அரசியல் அதற்கு மேல். அரசு வேலை, அதிகாரம் வேண்டும். அது சமூக நீதி. ஆனால் அவர்கள் செய்யும் ஊழலைக் கேட்க முடியாது. இவ்வளவு நாள் பார்ப்பனர்கள் ஊழல் செய்யவில்லையா, என்று மறு கேள்விவரும் . மேல் சாதியின் சதி என்பார்கள்.
ஆனாலும் ஜெயன் சார், இந்த அறங்கள் புகாரின், வீர பத்ரபிள்ளை, அருணாசலம் என்ற வரிசைபோல யாரோ ஒருவரால் எடுத்து செல்லப்படும் என் நம்புகிறேன். ஆனால் இது எல்லாராலும்,எடுத்து செல்லப்பட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு அறத்தை மையமாகக் கொண்ட இலக்கியங்களும், தத்துவங்களும், பேச்சுக்களும் கட்டுரைகளும், திரைப்படங்களும் வரவேண்டும். சங்க காலம் தொட்டு சிலம்பு, கம்ப ராமாயணம், பாரதி, மு வ, ஜெய மோகன் என அறம் ஏதோ ஒரு வடிவத்தில் நீந்தி வந்து கொண்டே இருக்கின்றது . அந்த ஆறு வற்றி விடக் கூடாது. இது போன்ற அற உணர்வுள்ள மனிதர்களைத் தொடர்ந்து காட்டுங்கள். அது இன்றைய மிகப் பெரிய தேவை என்றே நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்
கேசவன்

அன்புள்ள கேசவன்

இலட்சியவாதம் எப்போதுமே மிகமிகச் சிறுபான்மையினரால்தான் ஒரு வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு அது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அந்தரங்கத்தின் ஆழம், அவ்வளவுதான்.

சென்றகாலத்தில் ஒருமரபான இலட்சிய வாழ்க்கையை வாழ இடமிருந்தது. அதை வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று நாம் உருவாக்கியிருக்கும் நுகர்வுக்கலாச்சாரத்தில் அப்ப்டி ஒரு இயல்பான இடம் கிடையாது. ஒருவர் தனக்கென ஒரு இலட்சியவாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான். அப்படி உருவாக்கிக்கொள்ள அவர் தன் இயல்புகளை அறிந்திருக்கவேண்டும். அவற்றின் வெளிப்பாட்டுக்கான தருணம் அவருக்கு வாய்க்க வேண்டும். அது பலசமயம் தற்செயலாகவே நிகழ்கிறது.

சில வரலாற்றுத்தருணங்களில் இலட்சியவாத வாழ்க்கை பெரும் அலைபோல சமூகம் முழுக்க பரவுகிறது. அப்போது லட்சக்கணக்கானவர்கள் அதனால் ஈர்க்கப்படுகிறார்கள். புத்தரும் காந்தியும் அந்த அலையை இந்தியாவில் உருவாக்கினார்கள்.

ஆனால் எப்போதுமே இலட்சியவாதம் சார்ந்த வாழ்க்கை அதற்குரிய கவர்ச்சியுடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. லௌகீகத்தின் எல்லையைத்தாண்டி அதற்குள் மனிதர்கள் சென்றுகொண்டேதான் இருக்கிறார்கள்.

ஜெ