கடிதங்கள்

ஜெ,

நான் உங்கள் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகன்.

எனக்குத் தமிழிலக்கியங்களை (சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பிறகு சங்க இலக்கியம்) உரைகளின் உதவியின்றி சொந்தமாகப் படித்தறிய விருப்பம். இதைச் செய்ய எந்தத் தமிழ் அகராதி சரியாக இருக்கும் என்று தெரிவித்தால் உதவியாக இருக்கும். என்னிடம் கதிரைவேற்பிள்ளையின் அகராதியும், சந்தியா பதிப்பகத்தின் தமிழிலக்கிய அகராதியும் உள்ளது. இவையிரண்டும் போதவில்லை. (பல சொற்களுக்கு இவற்றில் இடமில்லை).

இந்த விஷயத்தை உங்களிடம் கேட்பது அசட்டுத்தனமாக இருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்
சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்

பெரும்பாலான சொற்களுக்கு இந்த அகராதியிலேயே சொற்கள் இருக்கும். மிக அபூர்வமாக வடமொழி திசைச்சொற்கள் போன்றவை காணப்படாது. கம்பராமாயணம் வாசிக்கும்போது அந்தக் குறையை உணர முடியும்

அதற்கு எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி [லெக்ஸிகன் ] உதவிகரமானது. சென்னைப் பல்கலை வெளியீடு.

இது இணையத்திலேயே உள்ளது
http://www.tamilkalanjiyam.com/dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary.html

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அதைத் தேர்வுசெய்ததில் நேருவுக்குப் பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது.

http://www.jeyamohan.in/?p=661

ஒரு கிராம விவசாயி எப்படி சப்பாத்தி தட்டுவான் என கடைசிவரைக்கும் தெரியாமலேயே அவர் இந்தியாவை ஆண்டார்.

http://www.jeyamohan.in/?p=4087

இரண்டில் எது சரி? அல்லது நடுவில் என் புரிதலில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டதா?

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்தகுமார்.

அன்புள்ள வசந்தகுமார்

இதில் முரண்பாடு ஏதுமில்லை

நேரு இந்தியாவைப் புத்தகங்கள் மூலம் அறிந்தவர். ஒரு நல்ல பேராசிரியரைப்போல. இந்தியாவின் ஞானத்தின் சாரம் அவரது நூல்களில் உண்டு. மதநோக்குகளால் குறைவுபடுத்தப்படாத ஒரு இந்திய வரலாற்றுத்தரிசனத்தை அவரால் அடையமுடிந்தது

ஆனால் நேரு இந்தியாவெங்கும் பயணம் செய்தவரல்ல, காந்தியைப்போல. இந்தியாவின் கிராமிய வாழ்க்கையை, அடித்தள மக்களின் வாழ்க்கையை அவர் அறியவேஇல்லை. ஆகவே முழுக்கமுழுக்க மையத்தில் இருந்து கீழே இறங்கிச்செல்லும் ஒரு அதிகார அமைப்பை அவர் கற்பனை செய்தார். நல்லெண்ணம் கொண்ட அதிகாரத்தால் இந்தியாவை வலுக்கட்டாயமாக சீர்திருத்திவிடலாமென நினைத்தார்

நேரு மட்டுமல்ல நேரு யுகத்தின் பிறரும் அந்த மனநிலை கொண்ட படிப்பாளிகளே. அம்பேத்கர், லோகியா, மகாலானோபிஸ் போன்ற அனைவருமே. அவர்களால் காந்தி கண்ட இந்திய யதார்த்தத்தை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்கள் வலைத் தளத்தில் ஓவியர் எம்.எப்.ஹுசைன் பற்றி படித்தேன். நேற்று அவர் இறந்து விட்டார் என்று செய்தி கேட்ட பொழுது உங்களுடைய அந்தக் கட்டுரை ஞாபகம் வந்தது. ஊடகங்களில் வெறும் கிளர்ச்சிக்காக அவரைப் பற்றிப் பத்துப் படங்களுடன் துணுக்குகள் போடுகிறார்கள். அதிலும் மறக்காமல் இரண்டு படங்களில் அவருக்கு மாதுரி தீட்சித் பிடிக்கும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒன்றில் கூட அவரை நாட்டை விட்டு வெளியேறும் படி நிர்ப்பந்தத்தை உண்டாக்கியது பற்றி ஒரு தீவிர விவாதமோ அல்லது விமர்சனமோ எழுதப்படவில்லை.
தெஹல்கா மட்டும் அவரிடம் 2008 எடுக்கப்பட்ட ஒரு பேட்டியை பிரசுரித்திருக்கிறார்கள். மிகவும் சிறிய பேட்டி என்றாலும் அவர் வார்த்தைகளில் படைப்புகளைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் கேட்பதற்கு மிகப் புதிதாக இருந்தது.
http://tehelka.com/story_main37.asp?filename=Ne020208in_hindu_culture.asp
அவரின் சுயசரிதையான “பந்தர்பூரின் ஒரு சிறுவன்” தமிழில் கிடைக்கிறதா? நீங்கள் வாசித்து இருக்கிறீர்களா?

என்றும் அன்புடன்,
முத்துகிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைஅசடனாக இருப்பது
அடுத்த கட்டுரைசுரா- தினமணி