பாரதியின் இன்றைய மதிப்பு

எஸ்.வையாபுரிப்பிள்ளை

ஜெ,

பாரதியின் பாடல்களுக்கு இந்திய சுதந்திரம் என்ற பின்னணி இல்லாமல் பொருள் இருக்கிறதா? நான் பாரதி படித்திருக்கிறேன். சுதந்திரப்பாடல்கள் என்பவை ஒரு பிரிவே. அதைத்தாண்டி அவர் வசனக்கவிதை, கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல வகைகளில் எழுதியுள்ளார். நீங்கள் சொல்லுங்கள், அவர் முன்னோடி என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும் தாண்டி சமகால இலக்கிய உலகில் அவரது இடம் என்ன?

-ராம்

பாரதி

ராம்,

முதன்முதலாக 1995ல் இலங்கையில் ஹட்டன் நகரில் இருந்து வந்த ஒரு இதழில் பாரதி பற்றிய என் கருத்தை எழுதியிருந்தேன். இதழின் பெயர் நந்தலாலா என நினைக்கிறேன்.

சுருக்கமாக அக்கருத்துக்கள் இவை.

1. பாரதி நவீனத்தமிழின் முதல்புள்ளி. நவீனத்தமிழ்க்கவிதையின் தொடக்கம். இந்திய தேசிய எழுச்சியின் விளைவாக உருவான இந்திய நவகவிஞர்களில் முக்கியமான சிலரில் ஒருவர். தாகூர், ஜீபனானந்ததாஸ், குமாரன் ஆசான்,குவெம்பு என்று நீளும் அந்த நவகவிஞர்கள்தான் நவீன இந்திய இலட்சியவாதத்தை உருவாக்கியவர்கள். நம் ஜனநாயகத்தின் உண்மையான சிற்பிகள். அந்த இடம் பாரதிக்கு உண்டு

2. பாரதி நவீனத் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கிய முன்னோடி. நாம் இன்று உணரும் தமிழ்ப் பண்பாட்டு சுயம் என்பது பாரதியால் தமிழ்ச்சமூக மனத்தில் உருவாக்கப்பட்டது. செவ்விலக்கியம், நாட்டார் கலை, மதங்கள் அனைத்தையும் இணைத்து அவர் அதை உருவாக்கினார்.

3. பாரதியின் ஆக்கங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளவை இசைப்பாடல்கள். ஆனால் அவை கவிதைகள் அல்ல. அவை எடுத்தாளப்பட்ட கவிதைகள். இசைப்பாடல் என்பது நேரடியான கவிதை வடிவம் அல்ல. இசையில்லாமல் அவற்றின் இடம் முழுமையடைவதில்லை.பாரதியின் இசைப்பாடல்கள் பெரும்பாலும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் அஷ்டபதியின் சாயல் கொண்டவை. அவரைத் தமிழின் மிகச்சிறந்த இசைப்பாடலாசிரியர்களில் ஒருவராக கருதலாம்

4. பாரதியின் காலகட்டத்திலேயே நல்ல நவகவிதைகள் எல்லா மொழிகளிலும் உருவாகிவிட்டிருந்தன. பாரதியின் கவிதைகளில் குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் சில தனிக்கவிதைகள் முக்கியமானவை. மழை, அக்கினிக்குஞ்சு, பிழைத்த தென்னந்தோப்பு போன்றசில கவிதைகள் மிகச்சிறப்பானவை.ஆனால் ஒட்டுமொத்தமாக அவை எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஒரு பெரும் கவிஞரை நிறுவுவதற்கு அவை போதாது.

5. ஆகவே பாரதி ஒரு சிறந்த கவிஞர், மகாகவிஞர் அல்ல. தமிழின் மாபெரும் கவிமரபை வைத்துப்பார்த்தால் மகாகவி என்ற பட்டத்தை ஒருவருக்கு எளிதில் வழங்கிவிடமுடியாது. கபிலர், பரணர், அவ்வையார்,பாலைபாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ,திருத் தக்கதேவர், திருவள்ளுவர், நம்மாழ்வார், கம்பர் , சேக்கிழார் என நம் பெருங்கவிஞர்களை நாம் பட்டியலிட்டால் அதில் ஒருபோதும் பாரதியைச் சேர்க்கமுடியாது.

6. பாரதியின் நல்ல கவிதைகள் கூடத் தரிசனத்தாலும் மொழிநுட்பத்தாலும் என்றும் நீடிக்கும் அழியாத பெருங்கவிதைகள் அல்ல. மனவேகத்தால் மட்டுமே நிலைகொள்வன. வேகம் மூலம் கைவரும் அபூர்வமான சொற்சேர்க்கைகளுக்கு அப்பால் நல்ல கவிதைகளில் நிகழும் வடிவ-தரிசன முழுமை அவரது கவிதைகளில் மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. பலகவிதைகளில் நல்ல வரிகள் உண்டு, ஒட்டுமொத்தக் கவிதையில் அந்த முழுமை கைகூடியிருப்பதில்லை.

7. பாரதி தமிழின் வழக்கமான மரபுக்கவிதையை இசைத்தன்மை மற்றும் நாட்டார்தன்மையை சேர்த்துக்கொண்டு உடைத்துப் புதிதாக ஆக்கினார்.அதன் மூலம் நம் மரபுக்கவிதையில் ஒரு குறுகியகால சலனத்தை உருவாக்கினார். ஆனால் அவரது சாதனை உரைநடையில்தான். அவர் நவீன உரைநடையின் பிதா என்பதே அவரது முதல்முக்கியத்துவம். அவரில் இருந்தே இன்றைய புதுக்கவிதை பிறந்தது

8.பாரதி தமிழ் இதழியலின் தொடக்கப்புள்ளி. இன்றைய இதழியல்தமிழ் அவரது உருவாக்கமே. அதன் சொல்லாட்சிகள், அதன் மொழிபுமுறை எல்லாமே அவரால் உருவாக்கப்பட்டவையே

9. பாரதி உலக இலக்கியத்தை நோக்கித் திறந்த தமிழின் முதல் சாளரம். மொழியாக்கத்திலும் மேலைக்கருத்துக்களை எடுத்தாள்வதிலும் அவர் தமிழின் முன்னோடி.

10. பாரதி தமிழ் நவீன உரைநடையின் அமைப்பை உருவாக்கியவர். ஆனால் பாரதியின் புனைகதைகள் மிகச்சிலவே இலக்கியமாகப் பொருட்படுத்ததக்கவை. அவரது சமகால வங்க, இந்தி, கன்னட ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் பாரதியின் கதைகள் எளிய நற்போதனைக்கதைகளாக உள்ளன. கதைமாந்தரும் சரி, கதைச்சந்தர்ப்பங்களும்சரி, சித்தரிப்பும்சரி மிக ஆரம்பநிலையில்மட்டுமே உள்ளன.

இக்கருத்துக்கள் ஈழத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பின.பாரதியை ஆதரித்து எனக்குப் பல கடிதங்கள் வந்தன. அந்த இதழில் எழுதிய கட்டுரை மட்டும் என்பார்வைக்கு வரவே இல்லை. பின்னர் தமிழ்நாட்டிலும் அக்கருத்துக்களை எழுதி அவை விவாதமாக ஆயின.

எஸ்.வையாபுரிப்பிள்ளை

[எஸ்.வையாபுரிப்பிள்ளை]

ஆனால் இக்கருத்துக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இவற்றுக்கு என் வரையில் இரு மரபுகள் உண்டு.

ஒன்று எஸ்.வையாபுரிப்பிள்ளை மரபு. அவர் பாரதியை நேரில் அறிந்தவர். பாரதியைப் போற்றுபவர். ஆனால் பாரதி ஒரு மகாகவி அல்ல என்றே எண்ணினார். உண்மையான எழுச்சி நிகழ்ந்த கவிதைகள் குறைவு என்றே எண்ணினார். அதை வகுப்புகளில் சொல்லியும் ,மென்மையாக எழுதியுமிருக்கிறார்.

வையாபுரிப்பிள்ளையின் மாணவர் பேராசிரியர் ஜேசுதாசன் வையாபுரிப்பிள்ளையின் அதே கருத்தை கொண்டிருந்தார். வையாபுரிப்பிள்ளைக்கும் ஜேசுதாசனுக்குமெல்லாம் கம்பனே அளவுகோல். கம்பனை வைத்து வாசித்தால் பாரதியின் ஆகிருதி சுருங்குவதை எவராலும் உணரமுடியும். 2001ல் சொல்புதிதுக்கு அவரளித்த பேட்டியில் ஜேசுதாசன் பாரதியாரின் நல்ல கவிதைகள்கூட மிட்டாய் சப்புவதுபோல எளிய தித்திப்பை மட்டுமே அளிக்கின்றன என்று சொன்னார். அதை ஒட்டி அப்போதும் ஒரு பெரிய விவாதம் நிகழ்ந்தது.

இன்னொரு பாரதி விமர்சன மரபு க.நா.சுவில் இருந்து ஆரம்பித்தது. பாரதியின் சிறந்த கவிதை மழை என்று சொல்லும் க.நா.சு.,அந்தத் தரத்தில் மிகச்சில கவிதைகளே உள்ளன , அவர் ஒரு பெரும் கவிஞர் அல்ல என்று சொன்னார். இலக்கியவட்டம் இதழில் வந்த அவரது கருத்துக்கள் ஐம்பதுகளில் விவாதத்துக்கு உள்ளாயின.

அதன்பின் சுந்தர ராமசாமி கநாசுவை ஆதரித்து அதே கருத்தை எழுதினார். ’பாரதியும் நானும்’ என்ற அவரது கட்டுரையில் சுந்தர ராமசாமி பாரதி ஒரு கவிஞராகத் தன்னைக் கவரவில்லை, பாரதியின் வசனமே தனக்கு முக்கியம் என்று எழுதினார். அது அறுபதுகளில் பெரிய அலையைக் கிளப்பியது. சுந்தர ராமசாமியை வசைபாடி நிறையவே எழுதப்பட்டது. க.நா.சுவின் கருத்தே நகுலனுக்கும் இருந்தது. சுந்தர ராமசாமியை ஆதரித்து அக்காலகட்டத்தில் வலுவாக எழுதியவர்களில் நகுலனும் ஒருவர்.

ஹெப்சிபா ஜேசுதாசன், ஜேசுதாசன், சுந்தர ராமசாமி

[ஹெப்ஸிபா, சுந்தர ராமசாமி, பேரா.ஜேசுதாசன்]

ஜேசுதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் கருத்துக்களில் இருந்து நான் என் தர்க்கங்களை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் என் வாசிப்பில் இளமையிலேயே பாரதியின் போதாமையையும் உணர்ந்திருந்தேன். ஏனென்றால் நான் முறைப்படி தமிழ்கற்று, கம்பனைப் பாடம் கேட்டபின்புதான் பாரதியை முழுமையாக வாசித்தேன்.

இந்த விவாதத்துக்கு முன்னால் ஒரு விவாதம் நிகழ்ந்தது. கல்கி பாரதியை ஒரு மகாகவி எனக் கொள்ளமுடியாது என்று எழுதினார். கல்கி டி.கே.சிதம்பரநாதமுதலியாரின் தொடர்பால் கம்பனில் கொண்ட ஈடுபாடுதான் அந்த மதிப்பீட்டை உருவாக்கியது. அது சரியானதும்கூட.

ஆனால் அன்று கல்கிமேல் பொறாமையால் கொதித்துக்கொண்டிருந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் அதைக் கல்கியைத் தாக்குவதற்கான சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டார்கள். கு.ப.ராஜகோபாலன், சிட்டி இருவரும் சேர்ந்து கல்கி மகாகவிதான் என வாதாடி ஒரு பெரிய கட்டுரைத்தொடரை எழுதினர். அது ‘கண்ணன் என் கவி’ என்ற பேரில் பின்னர் நூலாக வெளிவந்தது.

கல்கி சொல்லும் வாதங்கள் அதற்கு முன்னரே இலக்கிய விமர்சகராக வ.வே.சு.அய்யர் சொன்னவை. வ.வே.சு.அய்யர் பாரதியை ஒரு மறுமலர்ச்சிக் கவிஞர் என்ற எல்லைக்குள் மட்டுமே நிறுத்தினார். கம்பனே அவரது அளவுகோலைத் தீர்மானித்தவர். கிட்டத்தட்ட அதே அளவுகோலை ரா.ஸ்ரீ.தேசிகனும் கொண்டிருந்தார்.

கல்கி தெளிவாகவே அவற்றைச் சொல்லி வாதிட்டார். பாரதியாரின் கவிதைகள் முழுமையான வாழ்க்கைநோக்கையும் கவித்துவமான எழுச்சியையும் ஒரேசமயம் அடையும் மகத்தான கவிதைகள் அல்ல, அவை ஷெல்லி எழுதியவை போன்ற மாற்றத்துக்கான உணர்ச்சிகரமான அறைகூவல்கள் மட்டுமே என்றார்.

ஆனால் கு.ப.ராஜகோபாலன், சிட்டி இருவரும் கல்கியை உணர்ச்சிகரமாகவே எதிர்கொண்டனர். பாரதியின் கவிதைகளை விட அவரது ஆளுமை, தனிவாழ்க்கை இரண்டையுமே அவர்கள் முன்வைப்பதைக் காணலாம். அவர்கள் கல்கியின் வாதங்களை எதிர்கொள்ளவேயில்லை.

கு.ப.ராஜகோபாலன், சிட்டி இருவரின் தரப்பே வென்றது. அதற்குக் காரணம் அன்றிருந்த தேசிய எழுச்சியை ஒட்டி பாரதி ஒரு பெரும் பிம்பமாக கட்டமைக்கப்பட்டிருந்தமை. ஆகவே பாரதி மேல் விமர்சனம் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள். கல்கி சடாரெனத் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பாரதிக்கு மணிமண்டபம் கட்டி அந்த உரையில் பாரதி மகாகவிஞரே என்று சொன்னார்.

அதன் பின் இன்றுவரை இலக்கியச்சிற்றிதழ்களின் உலகுக்கு வெளியே, பொதுத்தளத்தில், திட்டவட்டமான இலக்கிய விமர்சன நோக்குடன் பாரதி அணுகப்பட்டதே இல்லை. பாரதிபற்றிய வரலாற்றாய்வுகள் நிறைய நிகழ்கின்றன. ஒட்டுமொத்தமாக பாரதியின் படைப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றின் கலைப்பெறுமதி, கருத்தியல் உள்ளடக்கம் பற்றி விமர்சனங்கள் எழுதப்பட்டதில்லை. அதற்குப் பல மானசீகமான தடைகள் நமக்குள்ளன.

அவை ஒருபக்கம் பாரதி பற்றி உருவாக்கப்பட்டுள்ள பெரும் பிம்பம். மறுபக்கம் கலைநோக்கோ சமநிலையோ இல்லாமல் அவரை சாதிய நோக்கில் அவதூறுசெய்யும் எழுத்துக்கள். இரண்டும் இரண்டு வகையில் இலக்கிய வாசகனைக் கட்டாயப்படுத்துகின்றன.

பாரதியின் கவிதைகள்,கதைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு அவற்றின் சாதனைகளை சரிவுகளை விரிவான விமர்சன விளக்கத்துடன் எழுதவேண்டியிருக்கிறது. அதையே இன்றைய இளைஞர்களில் பலரின் எதிர்வினைகள் காட்டுகின்றன. ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாரதியின் தேசியப்பாடல்கள் இன்றைய இலக்கிய ரசிகனுக்குப் பெரிய அனுபவத்தை எதையும் அளிப்பவை அல்ல.

இன்னொருபக்கம் அவரது தோத்திரப்பாடல்கள் போன்றவை வெறும் செய்யுள்களாகவே நின்றுவிட்டவை. இன்று முழுபாரதி தொகுப்பை வாசித்தால் அந்த செய்யுட்களே அளவில் அதிகம் என்பதை ஒரு வாசகன் காணமுடியும்.

இவ்விரு தளங்களுக்கும் அப்பால் பாரதியின் சாதனைகள் அவரது குறைவான பாடல்களில் அவர் அடைந்த நேரடியான மன எழுச்சியை சார்ந்தவை. க.நா.சு சுட்டிக்காட்டிய மழை ஒரு சிறந்த உதாரணம். வசனகவிதைகளில் பாரதி அவரைத் திணறடித்த யாப்பின் தளை இல்லாமல் சுதந்திரமாகப் பறந்திருக்கிறார்.

இதெல்லாம் இன்றைய இலக்கியவாசகனுக்குத் தெளிவாகவே தெரிபவை. ஆனால் இவற்றை எழுத, விவாதிக்க நம்மிடம் பெரும் மனத்தடை இருக்கிறது.

எதையுமே உணர்ச்சிக்கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்வது, வெட்டிச்சண்டையாக மாற்றுவது என்றே நம் இலக்கிய விமர்சனச்சூழல் இருக்கிறது. எந்த விமர்சனமும் ஒரு படைப்பாளி மீதான வாசிப்பைக் கூர்மையே ஆக்கும் என்ற புரிதலுடன் நாம் விவாதித்தால் ஒருவேளை வரும்காலத்தில் நம்மால் பாரதி பற்றி ஒரு நல்ல கூட்டுவாசிப்பை நோக்கிச் செல்லமுடியலாம்

ஜெ

[குழும விவாதத்தில் இருந்து]


வ வே சு அய்யரின் விமர்சன அணுகுமுறை பற்றி வேதசகாயகுமார்

வையாபுரிப்பிள்ளை பற்றி வேதசகாயகுமார்
கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
 பாரதி வரலாறு…
ஆவுடையக்கா
பாரதிபற்றி செல்லம்மாள்

முந்தைய கட்டுரைஆல்காட்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாரதி விவாதம் – 1- களம்-காலம்