எதற்காக அடுத்த தலைமுறை?

ஜெயமோகன் ஐயா,

வெகு நாட்களாக மனதில் இருந்த கேள்வி; உங்களிடம் விளக்கம் கிடைக்கும் எனக் கருதினேன். ஊரைச் சுற்றி ஊழல், பொய், பகட்டு, பொறாமை, லஞ்சம் என அடுத்து அடுத்துத் துரத்தி வந்து நம்மை வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் அதில் இருந்து விடுபட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று இருக்கும் சில பேருக்கு மிஞ்சிய பட்டம் பிழைக்கத் தெரியாதவர்கள். இப்படி உள்ள கால கட்டத்தில் எதை அடுத்த தலைமுறைக்கு சொல்லவது. ஊர் தவறாகப் பேசும்; என்றாலும் நேர்மையாக இரு என்றா? ஊரோடு ஒத்து வாழ் என்றா?

அடுத்த தலைமுறை நேர்மையாக நல்லொழுக்கத்துடன் இருக்க மிக மிக சிரமப்படும் என்று நினைக்கும்போது அடுத்த தலைமுறை ஒன்று வேண்டாமே என்று கூட சில நேரம் தோன்றுகிறது. நல்லொழுக்கத்துடன்  அன்பை மட்டும் பரிமாறிக் கொள்ளும் ஒரு சமுதாயத்தை விட்டுச் செல்ல வேண்டும், இல்லை என்றால் அடுத்து ஒரு தலைமுறை வேண்டாம் என்றே தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால்; பொய், பகட்டு, பொறாமை, லஞ்சம் என்று பல் வேறு சாத்தானிடம் மாட்டித் தவிக்கும் இந்த உலக சமூகத்துக்கு எதற்கு அடுத்த தலைமுறை? வேண்டாமே. ஏதற்காக அவர்கள் இந்தக் கொடுமைகள் நடுவில் இருக்க வேண்டும்? கொடுமையை அனுபவிக்கும் கடைசித் தலைமுறையாக நாம் இருந்து விடுவோமே?

ஒரு நல்ல சமுதாயத்தை விட்டுச் செல்ல முடியவில்லை எனில்,அடுத்து ஒரு சமுதாயம் வளராமல் இருப்பது நல்லது தானே?

ஏதற்காக இந்த சகதியில் நம் தலைமுறைகள் தொடர வேண்டும்? உங்கள் கருத்து என்ன?

உங்கள் பதிலுக்கு நன்றி.

ஜெகதீசன்

அன்புள்ள ஜெகதீசன்

பொதுவாசகனுக்கு இந்த வினா கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றக்கூடுமென்றாலும் இதற்கிணையான வினாக்களை அவ்வப்போது நண்பர்கள் விவாதங்களில் கேட்பதுண்டு. ஒரு கட்டத்தில் சிலருக்கு இந்தக் கேள்வி உண்மையாகவே வந்து மனதை உலுக்குகிறதென நினைக்கிறேன். தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் என்ற படம் இந்த சஞ்சலம் அல்லது துக்கத்துடன்தான் ஆரம்பிக்கிறது.

முதல் விஷயம், ’இன்று’ அறம் ஒழுக்கம் எல்லாம் சீரழிந்துள்ளன என்பது ஒரு மனப்பிரமை. ஒருவேளை வரலாற்றில் இன்றளவுக்கு அறமும் நேர்மையும் ஒழுக்கமும் மதிப்புடனிருக்கும் காலம் எப்போதும் இருந்திருக்காது.பண்பாடும் வரலாறும் முன்னால்தான் செல்கின்றன, பின்னோக்கி அல்ல. விரிவாக வாசிக்கவேண்டுமென்றால் இதைப்பற்றி அரவிந்தர் எழுதியவற்றைத்தான் சுட்டிக்காட்டவேண்டும்.

இன்று நாம் பேசும் மானுட சமத்துவம், அடிப்படைத் தனிமனித உரிமைகள் போன்ற அறங்கள் எப்போதுமே வரலாற்றில் இருந்ததில்லை என்பதே உண்மை. இன்றைப்போல மாறுபட்ட வாழ்க்கை நோக்குள்ள மனிதர்கள் சேர்ந்து விட்டுக்கொடுத்து வாழும் சூழல் மண்ணில் இதற்கு முன்னால் எப்போதுமே நிகழ்ந்ததில்லை. இன்றுபோலக் கலையும் இலக்கியமும் சிந்தனையும் இந்த அளவுக்கு என்றுமே ஓங்கியிருந்ததில்லை.

இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது உயிர்கள் தங்கிவாழ்வதற்காக நடத்திக்கொண்டிருக்கும் மூர்க்கமான போராட்டம். புழுக்கள் முண்டிமோதி அழுகலில் நெளிவது போலத்தான் மானுடம் இப்பூமி மீது வாழ்கிறது. அது இயற்கையின் விதி. அந்த முண்டியடித்தலில் வெற்றியடைவது மட்டுமே நீடித்தால்போதும் என்பது இயற்கையின் இயக்கவியல். அதைத்தவிர வேறெதுவும் இயற்கையானது அல்ல.

இந்த இயற்கை விதிக்கு எதிராக மானுடம் உருவாக்கிக்கொண்டதே அறம், ஒழுக்கம் போன்றவை. அவை மானுடப்பரிணாமத்தில் உருவாகி வந்தவை. பல்லாயிரம் வருடம் பேசி, எழுதி, வரைந்து, பாடி, சட்டமியற்றி, தண்டித்து, சமரசம் செய்து இன்றைய நிலை நோக்கி நாம் வந்திருக்கிறோம். இன்னும் மேலே செல்வோம். இது ஒரு மிகப்பெரிய பரிணாமம். மண்ணில் நிகழ்வதிலேயே மகத்தான விஷயம் என்றால் மானுடப்பிரக்ஞையில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வளர்ச்சிதான்.

ஒரு நூறு வருட வரலாற்றைப் பின்னால் திரும்பிப்பார்த்தால்கூட மானுடத்தின் அறவுண்ர்ச்சி நம்மால் கற்பனைசெய்யமுடியாத அளவுக்குக் கீழ்த்தரமாக இருந்திருப்பதைக் காணலாம். எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒட்டுமொத்த மானுட இனங்களை அழித்திருக்கிறார்கள். சுரண்டல்மூலம் பெரும் பஞ்சங்களில் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவற்றை இன்று செய்யமுடியாது. அந்தச் சமூகங்களுக்குள்ளேயே அறத்தின் குரல் எழுந்து வந்து தடுக்கும்

எத்தனையோ போர்கள், எவ்வளவோ இழப்புகள் வழியாகத்தான் நாம் இந்த இடத்தை வந்து சேர்ந்திருக்கிறோம். இதில் கேவலமான பின்னடைவுகள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் மானுடம் முன்னால்தான் செல்கிறது.அரிஸ்டாடிலில் இருந்து நாம் சாம்ஸ்கி வரை, புத்தரில் இருந்து அண்ணா ஹசாரே வரையிலான மானுடச் சிந்தனைத்தொடர்ச்சி வீணானது என நான் நினைக்கவில்லை.

என் அப்பாவை விட நான் இன்னும் மேலான ஒரு பண்பாட்டுக்குள் பிறந்து வளர்ந்தவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவருக்கு மானுட சமத்துவத்தில் இல்லாத நம்பிக்கை எனக்கிருக்கிறது, என் தலைமுறைக்கு இருக்கிறது. என் மகன் என்னைவிட மேலான அறத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கிறான். அவனிடமிருக்கும் பூமியின் முழுமை பற்றிய பிரக்ஞை எனக்கு இருந்ததில்லை. நம் அடுத்த தலைமுறை நம்மைவிட மேலானது என்பதைக் கண்கூடாகவே காண்கிறேன்.

ஆகவே உங்கள் வினாவுக்கே அர்த்தமில்லை என்பதே என் எண்ணம். மேலும், மனித வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஓட்டம் மனிதனின் கையில் இல்லை. மண்ணில் வாழும் கோடானுகோடி மனங்கள் சேர்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை அந்த மனங்களில் ஒன்றால் ஊகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.பிரம்மாண்டமான சிதல்புற்றைஉருவாக்கும் சிதல்களில் ஒரு சிதலால் அந்தப் புற்றைக் கற்பனைசெய்யவே முடியாது.

ஆகவே நாம் நம்மை நம் உயிரியல் இயல்புகளில் இருந்து, நம்மைக் கொண்டுசெலுத்தும் மானுடப்பிரக்ஞையின் ஒட்டுமொத்த ஒழுக்கில் இருந்து, வேறுபடுத்திக் கற்பனைசெய்வதில் எந்த பொருளும் இல்லை. அது ஒருவகை வெற்று அகங்காரம் மட்டுமே. அதன்மூலம் கற்பனையான துயரங்களை மட்டுமே அடைகிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைதுறவு-கடிதம்
அடுத்த கட்டுரைதிருவண்ணாமலையில்