எப்படி வாசிப்பது?

அன்புள்ள ஜெ,

உங்களின் எழுத்துக்கள் மிகவும் வீரியம் கொண்டவை அதனாலேயே கேட்கிறேன் உங்களைப் படிப்பதற்கு என்ன மாதிரியான மனநிலை வேண்டும்? உங்களை படித்து விட்டு இயல்பான உலகை வெளியே எதிர்கொள்வது மிகச் சிரமமாக உள்ளது? நீங்கள் ஏதோ ஒரு உயரத்துக்குக் கூட்டிச் செல்கிறீர்கள் முழுமையாக உங்களோடு வரவும் பயமாக இருக்கிறது உங்களை விடவும் மனமில்லை. கொஞ்சம் விளக்குவீர்களா?

அன்புடன்
சந்தோஷ்

அன்புள்ள சந்தோஷ்,

இதற்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நான் என் தரப்பில் இருந்து பதில் சொல்கிறேன். ஒரு வாசகனாக நான் வியக்கும் எழுத்துக்கள், ஒரு எழுத்தாளனாக நான் நிறைவடையும் எழுத்துக்களை வைத்து.

எழுத்து என்பது முழுமையான உண்மையை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லக்கூடியதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். செவ்வியல்தன்மை என நான் அதைத்தான் குறிப்பிடுகிறேன். தனித்தனி அலகுகளாக நெகிழ்ச்சியை எழுச்சியை கோபத்தை எல்லாம் உருவாக்கும் எழுத்துக்கள் உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாக என்ன எஞ்சுகிறதென்பதையே நான் முக்கியமாகக் கருதுகிறேன்

ஒட்டுமொத்த தரிசனம் கொண்ட எழுத்து சின்னச்சின்ன நெகிழ்ச்சிகளை மகிழ்ச்சிகளை இல்லாமலாக்கிவிடுகிறது. எழுச்சியை வீழ்ச்சியாலும் கனிவைக் கடுமையாலும் சமன்படுத்தி விடுகிறது. ஆகவே வாசிப்பின் முடிவில் ஒரு வெறுமையை மட்டுமே உணர முடிகிறது.

ஆனால் அந்த வெறுமையானது எதிர்மறையானது அல்ல. அது ஒரு நிறைநிலை. அதில் நம் துயர்களும் சஞ்சலங்கலும் சிறுமைகளும்கூடத்தான் சாதாரணமாகி விடுகின்றன. குன்றுமேலேறி நகரத்தைப் பார்ப்பதுபோல. தன் பரபரப்பை இழந்து நகரம் ஒரு ஓவியக்கோலம் போல அசையாமல் கிடப்பதைக் காணலாம். நல்ல இலக்கியம் வாழ்க்கையையும் வரலாற்றையும் அப்படிக் காட்டிவிடும்.

இலக்கியம் ஒத்திசைவுள்ள ஒரு முழு உலகை உருவாக்கியளிப்பதனால் அதனுள் வாழ்வது நமக்கு இனிதாக உள்ளது. புற வாழ்க்கை கீரீச்சிடல்கள் உரசல்கள் கொண்டதாக ஆகக்கூடும். ஆனால் இலக்கியம் காட்டும் உலகம் அதன் தரிசனத்தால் ஒழுங்கமைக்கப்பட்டது என்ற உணர்வு, புறவுலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முன்னோடி படம் மட்டுமே அது என்ற உணர்வு , காலப்போக்கில் உருவானால் அதிலிருந்து வெளிவந்துவிடமுடியும்.

நல்ல இலக்கியம் சமநிலையை அளிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த சமநிலை நீங்கள் சொல்வதுபோல உயரத்தில் நின்று பார்ப்பதனால் வரக்கூடியது

ஜெ