கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன்.

வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது. யானை டாக்டர் ஒன்று மட்டுமே அதில் எனக்குப் பிடித்திருந்தது.

மன்னிக்கவும்.. நான் இப்போது சொல்ல வந்ததே வேறு. உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் கொண்டிருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று என நண்பர்கள் சொன்னதால் வாங்கினேன். முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை நெருக்கமாக உணர முடியுமா என்கிற அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அடுத்த அடி,ஜகன்மித்யை. அதில் வரும் பெரியவரும் போதியில் வரும் குருவும் வேறு வேறு வேறான ஆள் என என்னால் நம்ப முடியவில்லை.

வாழ்வின் முடிவில்லாத் துயரத்தை, தாங்கள் தொலைத்த நாட்களைப் பேசும் மனிதர்கள். சிவமயம், வனம், வீடு என குறுக்கு வெட்டாகப் படித்தபடி லங்கா தகனத்துக்கு வந்து சேர்ந்தேன். ஒரு கதையைப் படிக்கும்போது மனிதனுக்கு பீதி உண்டாகும் எனச் சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன் ஆனால் இப்போது நம்புகிறேன். ஒரு குரங்கினைப் போல ஆசான் தாவியபடி வந்து கொண்டிருந்தார் என்கிற கடைசி வரி இன்னமும் எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதையை வளர்த்துப்போய்.. ஆசானின் மாற்றத்தை வாசிப்பவனுக்குக் கடத்தி, என்ன நடக்கப் போகிறது என்பதற்கான கண்ணிகளை மட்டும் ஆங்காங்கே கொடுத்துக் கடைசியில் ஒரு திறந்த முடிவாகக் கதை முடிந்தபோது ஆவென்றிருந்தது.

படித்து முடித்தவுடன் என் நண்பரொருவருக்கு நான் அலைபேசியில் சொன்னது ”******** என்னமா எழுதி இருக்கான், இவனைக் கொல்லணும்டா.. இப்படி ஒரே ஒரு கதை ஒருத்தன் எழுதிட்டான்னா போதும்டா அவன் வாழ்க்கைக்கும்” என்பதுதான்.சத்தியமாக முடியவில்லை சார். அற்புதமான , ஒரு அரசனின் வருகையைத் தெரிவிக்கும் கதை. இந்த ஒரு கதை போதும் மொத்தத் தொகுப்புக்கும். படித்து முடித்தவுடன் உங்களிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணினேன். ஆனால் என்ன உளறுவேனென்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தொகுப்பு முழுதுமே வெவ்வேறு தளங்களில் இயங்கும் கதைகள். இவற்றை இருபது வருடத்துக்கு முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்பதுதான் நம்பமுடியவில்லை. இது சார்ந்து இன்னொரு கேள்வியையும் முன்வைக்க விரும்புகிறேன். ஜெமோவின் முதல் தொகுப்பில் படுகை, லங்கா தகனம் என்று சொல்ல முடிகிறது. காலங்கள் கடந்து இன்றைக்கும் என்னால் அவற்றோடு தொடர்பு கொள்ள முடிகிறது. எஸ்ராவின் முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் பற்றி சொல்ல வேண்டுமா.. என்னால் தண்டவாளம் கதையைச் சொல்ல முடியும். கோணங்கிக்கு மதினிமாரும் கருப்பு ரயிலும்.

ஆனால் கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்ச் சிறுகதைச் சூழலில் இது மாதிரியான காத்திரமான வருகைகள் ஏன் நிகழவில்லை? கடந்த ஆறேழு வருடங்களாகத் தொடர்ச்சியாக சிறுகதைகள் வாசித்து வருகிறேன். ஆனால் இது போன்றதொரு உணர்வை இன்றைய கதைகள் தருவதில்லையே? கவிதைகளைப் பொறுத்தவரையில் நம்மிடையே புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சிறுகதையில் அப்படி ஏதும் நிகழ்ந்து உள்ளதா? குமார் அம்பாயிரத்தின் ஒருசில கதைகள் எனக்கு மிகப் பிடித்து இருந்தன. ஆனால் அதுபோலத் தொடர்ந்து பெயர் சொல்லும்படியான சிறுகதைகள் ஏன் வரவில்லை? அப்படி வந்திருப்பின் அவை ஏன் பேசப்படவில்லை? ஒரு வாசகனாக என்னுடைய எளிய சந்தேகங்களைக் கேட்டிருக்கிறேன்.இது பற்றி விரிவாகப் பேசுவீர்கள் என நம்புகிறேன்.

பிரியமுடன்,
கார்த்திகைப்பாண்டியன்

சு.வேணுகோபால்

[சு வேணுகோபால்]

அன்புள்ள கார்த்திகைப்பாண்டியன்,

உங்கள் கடிதத்தைத் தாமதமாக வாசித்தேன். நடுவே இருபதுநாட்கள் ஊரில் இல்லை.

கதைகளைப்பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்துகொண்டேன். கதைகளை நாம் எங்கே எப்படி தொடர்புகொள்கிறோம் என்பதில் நம்முடைய ரசனை மற்றும் கருத்தியலின் தரப்பும் உள்ளது. உங்கள் கருத்துக்கள் என் கதைகளுடன் நீங்கள் கொண்ட தொடர்புப்புள்ளிகளைக் காட்டுகின்றன.

செல்பேசியை அதிர்வில் போட்டிருந்தால் அழைப்பு வரும்போது அது தன் அதிர்வினாலேயே இடம் மாறுவதைப் பார்க்கிறோம். கதை எழுதும்போதும் இது நிகழ்கிறது. ஒரு கதையை நாம் எழுதும்போது அந்தக்கதையின் உணர்வுநிலையாலும் கருத்துநிலையாலும் நாம் மாறுகிறோம். [வளர்கிறோம் என்று உறுதியாகச் சொல்லத்தோன்றவில்லை] கதையின் வழியாக நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். கதையின் வழியாக நாம் புதிதாக உடைத்து வார்க்கப்படுகிறோம். ஆகவே ஒரு கதை எழுதியபின் அந்த இடத்துக்குத் திரும்பிப்போக முடிவதேயில்லை.

நான் ஆரம்பத்தில் எழுதிய திசைகளின்நடுவே,படுகை,போதி,லங்காதகனம் போன்றகதைகள் விஷ்ணுபுரத்துக்கு முன்னால் எழுதியவை. அன்றைய கதைச்சூழலில் ஒரு வாழ்க்கைத்தருணத்தைச் சுருக்கமான சொற்களில் சொல்லிவிடுவதே நல்ல கதை என்ற எண்ணம் இருந்தது. நான் அந்த இலக்கணத்தை ஏற்கவில்லை. எனக்கிருந்த சஞ்சலங்களை தேடல்களை முழுமையாகவே சிறுகதைகளில் கொண்டுவர முயற்சி செய்தேன்.அந்த விரிவான வடிவமும், வளர்ந்துசெல்லும் உணர்ச்சிநிலைகளும் அவ்வாறு உருவானவையே.

ஆனால் விஷ்ணுபுரம் அந்த அத்தனை உணர்ச்சிநிலைகளையும் மிகமிக விரிவாகப் பேசிவிட்டது. மானுடத்தேடலின், தவிப்பின், கையறுநிலையின், ஏறத்தாழ எல்லா முகங்களும் அதில் உள்ளன. கலையின் அழகும் மூர்க்கமும் அதில் உள்ளது. அதன் பின் திசைகளின் நடுவே அல்லது லங்காதகனத்தை எழுதவேண்டியதில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது. விஷ்ணுபுரம் எத்தனையோ லங்காதகனத்துக்குச் சமம்.

விஷ்ணுபுரம் பெற்ற பெரும் வரவேற்புக்குப்பின்னால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதாமலிருந்தமைக்கான காரணமும் இதுவே. அந்தப் பகுதியை உணர்ச்சிரீதியாக, தத்துவ ரீதியாகக் கடந்து வந்துவிட்டேன். விடைகளால் அல்ல. அழகியல்சார்ந்து.

மேலும் எழுதும்போது அன்று உருவான ஆழமான நம்பிக்கையிழப்பே என் சிக்கலாக இருந்தது. கருத்துக்களின் மேல், அமைப்புகளின் மேல். ருஷ்யாவின் உடைவும், ராஜீவ் கொலை மூலம் ஈழ விடுதலைப்போர் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையுமாக மிகப்பெரிய ஒரு மனச்சோர்வின் காலகட்டம் அது. ஆகவேதான் பின்தொடரும் நிழலின் குரல்.

நாவல்கள் எழுதும் காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதும் தூண்டுதல் பெருமளவுக்குக் குறைகிறது. எழுதினாலும் நாவலில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சார்ந்தே அவை அமைகின்றன. பின்தொடரும்நிழலின் குரல் காலகட்டக் கதைகள் பெரும்பாலும் கோட்பாடுகளை எங்கோ சென்று சந்திப்பதாகவே இருந்தன. வரலாற்றைச் சார்ந்தவையாக இருந்தன. அந்தப்பயணமே ஒரு நிகர்வரலாறாகவும் நிகர்தொன்மவெளியாகவும் அமைந்த கொற்றவைக்குக் கொண்டுசேர்த்தது.

கொற்றவையே நான் இன்று வரை எழுதியவற்றின் உச்சம் என நினைக்கிறேன். அது உருவாக்கும் அர்த்தவெளியை வாங்கிக்கொண்ட வாசகர்கள் மிகக் குறைவு. அது இந்திய வரலாற்றையும் தொன்மங்களையும் எப்படி மறுஆக்கம் செய்து மீண்டும் மறுஆக்கம் செய்கிறது என்று புரிந்துகொள்ள ஏற்கனவே அவற்றைப்பற்றிய ஒரு புரிதல் உள்ள வாசகன் தேவை.

எஸ்.செந்தில்குமார்

[எஸ்.செந்தில்குமார்]

கொற்றவைக்குப் பின்னர் நான் எழுதிய கதைகள் எல்லாமே ஒரு நீண்ட தேடலின் முடிவில் ஒரு கட்டத்தில் மெல்லிய நிறைவொன்றைக் கண்டுகொண்டபின் எழுதியவை. புனைவுமூலம் வாழ்க்கையை அல்லது மானுடமனத்தை அள்ளி எடுப்பதை ஒரு விளையாட்டாக நினைத்து எழுதியவை. எனக்குநானே ரசித்துக்கொள்ளும் பொருட்டு எழுதியவை. அதுவரை இலக்கியம் என்பதற்கு நான் வைத்திருந்த எல்லா இலக்கணங்களையும் நானே கலைத்துக்கொண்டேன். எல்லாமே கதைதான் என்று எண்ணிக்கொண்டு எல்லா வகைக் கதைகளையும் எழுத ஆரம்பித்தேன்.

பேய்க்கதைகள், அறிவியல்கதைகள், வரலாற்றுக் கற்பனைக் கதைகள் என எல்லா வடிவிலும் இந்தத் தருணத்தில் எழுதிப்பார்த்திருக்கிறேன். ஒரு யதார்த்தக்கதை எந்த நிலையிலும் சென்று தொட முடியாத ஒரு மானுடநிலையை ஒரு பேய்க்கதை அதன் வடிவம் காரணமாகவே தொட்டுவிடமுடியும் என்று தெரிந்துகொண்டேன். அன்றாடவாழ்க்கையில் ஒருபோதும் கைக்குச் சிக்காத ஒரு படிமத்தை ஓர் அறிவியல்கதை எளிதில் அளித்துவிடும் என அறிந்தேன். அனுபவங்களைக் கதைபோலவும் கதைகளை அறிக்கைகள் போலவும் எழுதினேன். இந்த எல்லாவகைகளிலும் முக்கியமான கதைகள் உள்ளன என்றே நினைக்கிறேன். ஊமைச்செந்நாய், மத்தகம் எல்லாம் இந்தக்காலகட்டத்து ஆக்கங்கள்.

இந்த வரிசையில்தான் அறம் கதைகள் வருகின்றன. அவை இதுவரை என் கதைகள் எதிலும் இல்லாத அளவுக்கு எளிமைகொண்டவை. நேரடியானவை, அப்பட்டமானவை. அதன் அழகியல் அது. உணர்ச்சிகளின் மன எழுச்சிகளின் தீவிரத்தால் மட்டுமே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் கதைகள் அவை. அவை என் பரிணாமத்தில் முக்கியமானவை.என்னைப்பொறுத்தவரை ஒரு படைப்பை எழுதும்போது எனக்கும் அதற்குமான இடைவெளி இல்லாமலாகும் நிலை உருவானதா இல்லையா என்பது மட்டுமே அளவுகோல். அது நிகழ்ந்துவிட்டால் அது கலை. அது அழகியல்ரீதியாக, சமூக ரீதியாக முக்கியமானது. அறம் கதைகளில் அது நிகழ்ந்தது.

இன்றுவரை நம் நவீன இலக்கியம் கொண்டுள்ள இலக்கணங்களை வைத்து அறம் வரிசைக் கதைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பொதுவாக வாசகர்களும் விமர்சகர்களும் சமகால அழகியல் மற்றும் கருத்தியல்களை வைத்தே புதியவற்றை மதிப்பிடுகிறார்கள். புதியவை அவற்றுக்கே உரிய புதிய அழகியலைக் கோருகின்றன. பூடகமாகச் சொல்லுதல், தொட்டுவிட்டு விட்டுவிடுதல், படிமத்தை மட்டும் விட்டுவைத்தல் போன்ற சில அழகியல் இலக்கணங்களைச் சமகாலச் சிறுகதை கொண்டிருக்கிறது. அறம் வரிசைக் கதைகள் அவற்றை வீசி விட்டு நேரடியாகப் பேசுகின்றன. அவை தேர்ந்துகொண்ட வடிவம் அது, அவ்வளவே.

எண்பதுகளின் இறுதியில் லங்காதகனம் வெளிவந்தபோது அன்றைய விமர்சகர்களுக்கு அது பிடிபடவில்லை. ‘கதையாக இருக்கிறது’ என்ற விமர்சனமே அன்று பெரிதாக எழுந்தது. காரணம் கதை இல்லாமல் நிகழ்ச்சியாக எழுதுவதே அன்றைய பாணி. சுருக்கமாக நான்குபக்கம் எழுதுவதே மரபு. சுந்தர ராமசாமி ‘ரொம்பவும் நீளமான கதை. சுருக்கியிருக்கலாம்’ என்று மட்டும் கருத்து சொன்னார். அந்தகதைக்குப்பின் பிறந்து வந்த வாசகர்களிடமே அது பெரும் வரவேற்பை, புதிய வாசிப்புசாத்தியங்களைப் பெற்றது.

இலட்சுமணப்பெருமாள்

[இலட்சுமணப்பெருமாள்]

இன்று அறம் கதைகள் பேசும் பேசுபொருளை வைத்து அவற்றை விவாதிப்பதையே எல்லா வாசகர்களும் செய்கிறார்கள். அந்தக்கதைகள் முன்வைக்கும் இலட்சியவாதம் நோக்கி உணர்ச்சிகரமாகச் சென்றுசேர்வது வாசிப்பின் முதல்தளத்தில் இயல்பானதே. ஆனால் ஒரு விமர்சகனாக நல்ல வாசகன் கவனிக்கவேண்டிய தளம் அங்கே நின்றுவிடுவது அல்ல.எளிமையான கதைகளே என்றும் விமர்சகர்களை ஏமாற்றி வந்துள்ளன. அறிவால் உடைத்துப் பின் பொறுக்கவேண்டிய கதைகள் மிக இலகுவாக அவர்களைச் சென்றடைகின்றன

இலட்சியவாதத்தை நோக்கி ஒரு சமகால மனம் கொள்ளும் எழுச்சியைப் பதிவுசெய்யும் அறம் கதைகள் அதேசமயம் அவற்றுக்கு உருவாக்கும் வாழ்க்கைச்சட்டகமும், மையத்துக்கு எதிர்நிலைகளும்தான் நல்ல வாசகன் மேலதிகமாகக் கவனிக்கவேண்டியவை. அவை அக்கதைகளை வேறுதிசைகளில் திறக்கக்கூடியவை. நானே அவற்றை மெய்ப்பு திருத்தும்போது ஒரு விமர்சகனாக வாசிக்கையில் வேறு அர்த்தங்களை நோக்கியே சென்றேன். அத்தகைய ஒரு தேர்ந்த வாசிப்பு எதிர்காலத்தில் அக்கதைகள்மேல் நல்ல திறனாய்வாளர்களால் நிகழ்த்தப்படுமென நினைக்கிறேன்.

எழுத்தாளனாக ஒரு குறிப்பிட்ட வகையான கதைவடிவுக்குள் ஏன் செல்கிறோம், ஏன் அதிலிருந்து வெளியேறுகிறோம் என்பதெல்லாம் நம்மால் எளிதில் சொல்லப்படத்தக்கவை அல்ல. நாம் அவற்றைக்கொண்டு நம்மை உருவாக்கிக்கொண்டு கண்டறிந்துகொண்டு மேலே சென்றுகொண்டே இருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

என்னுடைய புனைவுலகம் சீரான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது அல்ல. மிகமிகச் சிக்கலான இடங்கள், என்னாலேயே விளக்கிக்கொள்ள முடியாத இடங்கள் உள்ளன. மிக நேரடியாக சொல்லப்பட்டவையும் உள்ளன. எல்லாவகையான கதைசொல்லல் முறைகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் வாசித்து ஒரு பெரிய வரைபடத்தை உருவாக்கிக்கொண்டு என்னை மதிப்பிடும் விமர்சகர்களை வாசகர்களை நான் எதிர்காலத்திலேயே பெறமுடியும் என நம்புகிறேன்.

*

சென்ற பத்து வருடங்களில் கூட நல்ல கதைகள் வந்தபடியேதான் உள்ளன. தமிழில் எல்லாக் காலகட்டத்திலும் நல்ல கதைகள் வந்துகொண்டுள்ளன. சிலசமயம் ஒரு பத்தாண்டுக்கு தொடர்ச்சியாக நல்ல கதைகள் வெளிவரும். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் நல்ல எழுத்தாளர்கள் அறிமுகமாகும் காலகட்டம் அது என்ற விடைகிடைக்கும். அவர்கள் இன்னும் விரிவான புனைவுச்சவால்களை ஏற்கும்போது, நாவல்களை நோக்கிச் செல்லும்போது, சிறுகதைகள் குறைகின்றன.

தமிழில் வெவ்வேறு தளத்தில் நல்ல சிறுகதைகள் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் ’வெண்ணிலை’ [தமிழினி பதிப்பகம்] என்ற தொகுதியைப்பற்றி அடிக்கடி பேசியிருக்கிறேன். அதிலுள்ள எல்லாக் கதைகளுமே புதிதாகப் பிரசுரமானவை. பல முக்கியமான கதைகள் அவற்றில் உள்ளன. லட்சுமணப்பெருமாள் கதைகள் [வம்சி புக்ஸ்] முக்கியமான ஒரு தொகுப்பு. அக்கதைகளைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். எஸ்.செந்தில்குமார் தொகுப்புகளில் பல நல்ல கதைகள் உள்ளன.

ஆனால் பொதுவாகச் சொன்னால் சிறுகதைகளின் வீச்சு குறைந்துள்ளது என்றும் சொல்லலாம். நான் எல்லாக் கதைகளையும் வாசிக்கிறேன். எனக்கு முக்கியமாகப் படும் கதைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். பெரும்பாலும் கதைகள் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. அடுத்த தலைமுறை எழுத்துக்களைப்பற்றி எதிர்மறையாக ஏதும் சொல்லவேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இன்னும்சொல்லப்போனால், சமகால இலக்கியவாதிகளை விமர்சனமே செய்யவேண்டாமென்ற மனநிலைகொண்டிருக்கிறேன்.

ஏமாற்றத்தை அளிக்கும் கதைகள் இரு வகை. எந்த அனுபவவெம்மையும் இல்லாமல் மொழியையை வைத்து எதையாவது செய்ய முயல்வது. ஒரு நல்ல மொழிவிளையாட்டை நிகழ்த்திக்கொள்ளும் மொழிப்பயிற்சியோ, அதற்கான பின்புல வாசிப்போ இல்லாத நிலையில் இவை வெற்றுச்சொற்களாக சலிப்பை அளிக்கின்றன. இரண்டாவதாக, உயிர்மை போன்ற இதழ்கள் பாலியல் அதிர்ச்சியை அளிக்கும் ஆக்கங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அவ்வகை எழுத்தை எழுதுவது. அவையும் வெறும் மனப்பயிற்சிகளாகவே எஞ்சுகின்றன. பாலியல்அம்சம் எங்கே மானுட அகம் சார்ந்ததாக மானுட இருப்பின் ஒரு சிக்கலாக ஆகிறதோ அங்கேதான் அதற்கு இலக்கிய முக்கியத்துவம் வருகிறது.

தொடர்ந்து நம் இதழ்களில் வெளிவரும் கதைகள் அளிக்கும் சலிப்பு காரணமாக பெரும்பாலான வாசகர்கள் கதைகளையே வாசிப்பதில்லை என்பதைப் பலமுறை வாசகர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு கதையை யாராவது சுட்டியதும்தான் உடனே சென்று அதை வாசிக்கிறார்கள். அதாவது தேர்வை வேறு யாரோ செய்யவேண்டியிருக்கிறது. ஆகவே நல்ல கதைகள்கூடக் கவனத்தைவிட்டு காணாமலாகியிருக்கலாம்.

புதிய கதைகளைப்பற்றிப் புதிய விமர்சகர்கள் தொடர்ந்து விரிவாகப் பேசி ஒரு விவாதத்தை முன்னெடுக்கலாம். நீங்களே கூட

அன்புடன்
ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 16, 2011

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11