தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் முதல்வராக 1953 வாக்கில் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் பணியாற்றினார். தமிழின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான சீனிவாசராகவன்,எஸ்.வையாபுரிப்பிள்ளை டி.கெ.சிதம்பரநாத முதலியார் போன்றவர்களின் நெருக்கமான நண்பர். ஆங்கிலப் பேராசிரியர். மரபுக்கவிஞர். கம்பராமாயணத்திலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் பேரறிஞர்.திருநெல்வேலியில் இருந்து கம்பராமாயணம் பிழைநீக்கப்பட்டு செம்பதிப்பாக வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தவர்.
அன்று புகழ்பெற்று வந்த இளம்துறவியான சித்பவானந்தரை ஒரு கூட்டத்துக்காக அ.சீனிவாச ராகவன் அழைத்திருந்தார். சித்பவானந்தர் உள்ளே நுழையும்போது பையன்கள் வேறு ஒருபையனின் விகடத்தைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்தார்கள். ஆனால் அ.சீனிவாச ராகவன் அது எளிய காவி உடையில் கரிய சிறிய உடலுடன் வந்த சுவாமி சித்பவானந்தரைக் கண்டு சிரித்தது என எடுத்துக்கொண்டார். அவர் முகம் சிவந்துவிட்டது.
சித்பவானந்தர் சென்ற பின் அ.சீனிவாச ராகவன் கடும் சினத்துடன் மாணவர்களிடம் வந்தார். ’நான் என்ன வேடிக்கைமனிதரையா அழைத்துவந்தேன். இந்த நாட்டுக்கு மிகச்சிறந்த கல்விப்பணி ஆற்றக்கூடிய ஒருவரைத்தானே கூட்டிவந்தேன்? விருந்தினரை உபசரிக்க வேண்டாம், அவமதிக்காமல் இருக்கக் கூடாதா? இதுவா நான் காட்டிய அன்புக்கு நீங்கள் காட்டிய மரியாதை?’ என்று கண்களில் நீர் மல்கக் கேட்டார்.
அன்று இறுதிவருடம் முடித்து பிரிந்துசெல்லும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் அட் ஹோம் என்னும் விருந்து இருந்தது. ‘சான்றோரை அவமதித்த பண்பாடற்ற உங்களுக்கு அட் ஹோம் விருந்து வேறு வாழுதோ’ என்று அ.சீனிவாச ராகவன் சீறினார். மாணவர்களில் தலைவராக இருந்த நடராஜன் பதில் சொல்லமுனைந்தும் அதைக்கேட்க அ.சீனிவாச ராகவன் தயாராகவில்லை.
’உங்களுக்கு அட் ஹோம் விருந்து வேறு வாழுதோ’ என்று அ.சீனிவாச ராகவன் கேட்டது மாணவர்களின் உள்ளத்தைப் புண்படுத்தியது. ஆகவே அந்த விருந்தைப் புறக்கணிப்பது என்று மாணவர்கள் நடராஜன் தலைமையில் முடிவெடுத்தார்கள். மற்ற ஆசிரியர்களுக்கு விஷயம் தெரியவில்லை. அவர்கள் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள். மாணவர்கள் விருந்தைப் புறக்கணிப்பது தெரிந்து ஆசிரியர்கள் சமாதானம் செய்தார்கள். மாணவர்கள் விஷயத்தைச் சொன்னதும் அவர்கள் அ.சீனிவாச ராகவனுக்குச் சொன்னார்கள்.
கோபம் கொள்வதற்குப் பதிலாகப் பெரும் வேதனையுடன் அவர்களை நோக்கி வந்தார் அ.சீனிவாச ராகவன். ‘நான் கூப்பிடுகிறேன். வந்து சாப்பிடுங்கள்’ என்று அவர் அழைத்தார். மாணவர்கள் கண்கலங்கி அழுதுவிட்டார்கள். அவரே மாணவர்களை விருந்துமேஜையில் அமரச்செய்து உணவு பரிமாறினார். அதைப்பார்த்த மற்ற ஆசிரியர்களும் பரிமாறினார்கள்.
வீடுதிரும்பும்போது எல்லா மாணவர்களும் அழுதுகொண்டிருந்தார்கள். அ.சீனிவாச ராகவனிடம் மன்னிப்புக் கேட்பதென்று முடிவாகியது. ஆனால் எப்படிக் கேட்பது. ஒரு கடிதம் எழுதிவிடலாமென நடராஜன் முடிவெடுத்தார். நடராஜன் எழுதிய நீளமான மன்னிப்புக் கடிதத்தில் எல்லா மாணவர்களும் கையெழுத்திட்டார்கள். அதை சேர்ந்துபோய் அ.சீனிவாச ராகவனிடம் கொடுத்தார்கள்.
அ.சீனிவாச ராகவன் அவருக்கே உரிய வெண்கலக் குரலில் ‘அதை இன்னுமா மறக்கலை? கசப்பை அப்பவே மறந்திடணும்’ என்றார். ‘மனச்சுமை எல்லாம் நீங்கணும்..போய்ப் பரீட்சைக்குப்படிங்க’ என்று அனுப்பினார். மறுநாள் எல்லாரையும் வரிசையாகத் தன் அறைக்குள் அழைத்துத் தேர்வறை நுழைவுச்சீட்டைக் கொடுத்தார் அ.சீனிவாச ராகவன். கடைசியில் நடராஜனை அழைத்தார். கட்டாயப்படுத்தி அமரச் சொன்னார்.
‘நீதான் எல்லாப் பிள்ளைகளையும் விருந்தைப் புறக்கணிக்கச் சொன்னாய்…நீ உன் அப்பாவிடம் ஒரு தப்பு செய்தால் என்ன செய்வாய்? ஊர் உலகைக்கூட்டி முச்சந்தியில் வைத்தா மன்னிப்புக் கேட்பாய்? தனியாக வந்து அல்லவா மன்னிப்பு கேட்கவேண்டும்?’ என்று சிரித்துக்கொண்டு சொல்லி ‘நன்றாகப் படி…நன்றாகத் தேர்வு எழுது…இந்தா என் நினைவாக இதை வைத்துக்கொள்’ என்று அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுத்தார்
அரைநூற்றாண்டாக அந்த நினைவுச்சின்னத்தைப் பேணிவந்திருக்கிறார் நடராஜன். அந்த நிகழ்ச்சியும் கடிதமும் திண்டுக்கல்லில் இருந்து வெளிவரும் குறி என்ற சிற்றிதழில் வெளியாகியிருக்கின்றன. அன்பே ஓர் உருவாய் வந்த அருமைத்தந்தை அ.சீனிவாச ராகவன் அவர்களுக்கு..’ என்று ஆரம்பிக்கும் அக்கடிதத்தை வாசிக்கும்போது நெகிழ்ச்சி அடைந்தேன்.
அதன் கீழே உள்ள பெயர்கள் எஸ்.நடராஜன், கல்யாணசாமி, நிக்கோலஸ் கோமஸ்,சண்முக வேலாயுதம், கெர்னேஸ் மச்சடோ, சா.காளியப்பன், ஆல்பர்ட் கோயில்ராஜ், மைக்கல் ரொசாரியோ,ஆர்தர் ஜேம்ஸ்,சீனிவாசன், சத்தியசிங் தனராஜ் என நீளும் மாணவர் பட்டிலின் கையெழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் எப்படிப் பூத்திருப்பார் அ.சீனிவாச ராகவன். அவர்களின் வாழ்நாளெல்லாம் எப்படி உள்ளிருந்து வழிகாட்டியிருப்பார்!
[குறி மாத இதழ்.MKM Complex, Classic Agency, Vadamadurai Road, Vedasandur, Dindigul St 624710
]
இணைப்பு
அ.சீ.ரா- தினமணி கட்டுரை
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Oct 28, 2011