தூக்கு இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். தாங்கள் எழுதிய ‘தூக்கி’லிடல் பற்றிய எண்ணங்களிலிருந்து எனக்கு சில மாற்று எண்ணங்கள் உண்டு.

இந்த தூக்கு விஷயத்தை சட்ட ரீதியாகப் பார்க்கையில் இந்திய சட்டப் பிரிவுகளில் இப்படிப்பட்ட ஒரு தண்டனை தேவையா என்றே கேட்கத் தோன்றும். ஆனால் என் வரையில் இன்று இருக்கும் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை என்பதே. இதில் தங்களுடன் உடன்படுகிறேன்.

இப்படி நிலைக்கொண்டமையால் நான் என்னைக் கொடுமைக்காரராக நினைக்கவில்லை. ஆனால் இன்று தூக்கு தண்டனையை நிராகரிக்கும் பலரும் கருணைப்போர்வையில் அரசியல் செய்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய கருணை இந்த அரசியல் சதுரங்கத்தில் சம்மந்தமில்லாமல் இறந்தவர்களிடம் காட்டபடுவதில்லை. இதிலும் தங்களுடன் உடன்படுகிறேன்.

தாங்கள் இளைய பருவத்தில் உணர்ச்சிவசத்தால் செய்த குற்றத்திற்காகப் பழுத்த வயதில் தண்டனை தேவையில்லை என்று கூறுகிறீர்கள். மேலும் அரசியல் கொள்கையின் அடிப்படையில் செய்யப்படும் செயல்களுக்கு இப்படிப்பட்ட தண்டனை தேவையில்லை என்றும் கூறுகிறீர்கள். எனக்கென்னமோ இந்த இரண்டு வாதங்களும் ஏற்புடையதாகயில்லை. காரணம் தண்டனை தவறை ஒட்டியே இருக்கவேண்டுமே தவிர வயதை ஒட்டி அல்ல. ஏனனில் அப்போது ஒரு குற்றத்தை ஒரு சிறு வயது நபரை வைத்து செய்யத் தூண்டும். ஒரு அரசியல் தத்துவத்தின் அல்லது மத போதனையின் அடிப்படையில் செய்யப்படும் குற்றங்கள் நெடு நாட்களாக மனதில் உரு ஏற்றி தன் மனதை உறையவைத்தே செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு குற்றத்தை உணர்ச்சிவசத்தால் செய்தது என்று எளிமையாக்கக் கூடாது. ஒரு சாதாரண மனிதன் கூட கோபத்தில் செய்யும் குற்றத்தில் வேறு யாரும் பாதிப்பதைப் பெரிதும் விரும்புவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட கொள்கை குற்றங்கள் பிறர் அதுவும் அப்பாவிகளின் பாதிப்பை பெரிதும் விரும்புகிறார்கள். மேலும் இப்படிப்பட்ட குற்றங்களை புரிகிறவர்கள் தன் மரணத்தை எதிர் நோக்கியே அக்குற்றங்க்களை செய்கிறார்கள். அவர்களை சாதாரண கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியன்று.

ஒரு நோக்கத்திற்காக செய்த குற்றம் காலப்போக்கில் அந்நோக்கம் மறைந்த படியால் செய்த குற்றம் மன்னிக்க படவேண்டும் என்ற எண்ணமும் எனக்கு உடன்பாடில்லை. ஏனனில் மீண்டும் தண்டனை குற்றத்திற்குதானே தவிர அதன் (சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட காரணங்களுக்கு அப்பால்) நோக்கத்தை வைத்து அல்ல. ஒரு குற்றம் புரிந்த உடன் அதன் விளைவு நடந்துவிடுகிறது. காலப்போக்கில் அக்குற்றத்திற்கு பின்னால் உள்ள நோக்கம் வலு இழந்தது என்றால் அதன் விளைவுகள் மாறிவிடுமா என்ன? அப்போது அந்த விளைவுகளை அனுபவித்தவர்களின் நிலை என்ன?

அன்புடன்

வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள ஜெமோ,

வணக்கங்களுடன் பூபாலன் எழுதுவது , எனது முதல் கடிதம் “வரலாற்று சோகமாய்” தங்கள் தளத்தில் பதிவேறியது நன்றி.”தூக்கிலிருந்து மன்னிப்பு” கட்டுரை வாசித்தேன்,ஒரு சாரசரி மனம் புற அழுத்தத்தால் விளைவிக்கும் மிக அபத்தமான வெளிப்பாடாகவே உணர்ந்தேன்.எந்தவித ஆழ்ந்த பார்வையுமின்றி நிகழ்ந்த ஒன்று.அதற்கு வந்த எதிர்வினைகளும் வெற்றுக் கொந்தளிப்பாகவே இருந்தது.இன்றைய தமிழக அறிவுசார் சூழலில் ஜெயமோகன் என்ற ஆளுமை ஏற்படுத்தும் அதிர்வுகள் மிக முக்கியமானவை.அத்தகைய இடத்திலிருந்து இதுபோன்ற வெளிப்பாடு மிகவும் வேதனையான ஒன்று.

மரணதண்டனைகள் குறித்து ஒரு சராசரி மனம் கொள்ளும் குழப்ப நிலையிலேயே நீங்களும் இருப்பதாகவே உணர்கிறேன்.

முதலில் தண்டனைகள் ஏன் தோன்றின?அவை சமூக தளத்தில் எற்படுத்தும் விளைவுகள் எத்தகையவை என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து அணுகினாலே இதை எளிமையாக விளக்கலாம்.

மனிதன் நதிக்கரையில் தங்கத்துவங்கிய உடனே,தொகைப்பெருக்கத்தின் விளைவாய் உணவு,இருப்பிடம் எனத் தேவைகள் அதிகரிக்க எல்லைகளை விவாக்க வேண்டிய கட்டாயத்தில் இனக்குழுக்கள் மோதியிருக்கும்.தோற்றவர்கள் அடிமைகளாகப்பட்டபோது,தண்டனைகள் தோற்றம் கொண்டிருக்கும்.எப்படி?அடிமைகள் திமிறியபோது தண்டனைகளால் ஒடுக்கப்பட்டிருப்பர்.

தண்டனைகளின் நோக்கம் என்ன?தனிமனித மனத்தில் அச்சத்தைத் தோற்றுவிப்பது.பின் இந்த தனி மனித அச்சத்தை சமூகத்தளத்திற்கு கடத்தி அதை ஒரு சமூக அச்சமாக பரிணமிப்பது.இந்த சமூக அச்சம் ஏன் தேவை? சமூகத்தில் ஓர் ஒழுங்கை நிலைநாட்ட ஆளுவோர்க்கு இந்த சமூக அச்சம் நிச்சயமாகத் தேவை.சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு ‘பூச்சாண்டி’ என்று ஏற்படுத்தப்படும் அச்சம் போல இது.

இந்த அடிப்படையில் நாகரிக உலகில் மரணதண்டனைகள் எற்படுத்தும் விளைவுகள் மிக மிகக் குறைவு.நிகழ்ந்த ஒரு சில நாட்களில் அந்த அதிர்வுகள் மறைந்து போகும்..என்ற அடிப்படையில் மரண தண்டனைகள் பொருளற்றவையாகின்றன.

இன்னும் கொஞ்சம் ஆழமாகக் குற்றங்கள் குறித்து ஆராய்ந்தோமானால் ஒரு குழந்தை பிறந்து அதன் மனம் அறியத்துவங்கும் போதே புறச் சூழல்கள் அந்த மனத்தையும் அறிதலையும் முழுமையாகக் கட்டமைக்கின்றன.தன்னை ஆண்,பெண் என்று ஒரு குழந்தை அறிந்து கொள்வதே நம் வீட்டுப் பெண்களிடமிருந்துதான்.எவ்வாறு?நம் வீட்டின் பெண்கள் குறிப்பாக பாட்டிகள் ,நம் வீட்டுக்குழந்தைகளின் பாலுறுப்புகளை அதிகமாகத் தொட்டுக் கொஞ்சி அவர்களை அறியாமலேயே அந்தக்குழந்தைக்கு அதன் பாலியல் வேறுபாட்டை உணர்த்திக்கொண்டிருபார்கள்.இப்படி என் மொழி,என் செயல்,என் உணர்வு என அனைத்தையும் நான் அறியத்துவங்கியதிலிருந்து என் சூழல் தீர்மானிக்கிறது.இந்த அடிப்படையில் எந்த மனிதனுக்கும் தன்னுணர்வு(சுயம்) என்பதே இல்லை.

நாம் அனைவரும் அறிந்த விவிலியக்கதை ,யூத நீதிமன்றத்தால் மரணதண்டனை பெற்ற பெண்ணைத் துரத்தியபடி வருகிறது ஒரு கூட்டம்.வழியில் சென்றுகொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவின் காலடியில் வந்து விழுகிறாள் அந்தப்பெண்.கூட்டத்தை நிறுத்துகிறார் கிறிஸ்து.இவள் வேசி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவள்;இவளால் சமூகம் சீரழிகிறது கொடூரமாய் அலறுகிறது கூட்டம்.அனைவரையும் பார்த்து கிறிஸ்து கேட்கிறார்…இவள் பிறப்பாலே வேசியா..? பதில் தெரிந்தவர்கள் கல்லெடுங்கள்….!கூட்டம் அப்படியே சலனமற்று நிற்கிறது.பெண்ணை எழுப்பி அழைத்துக்கொண்டு நகர்கிறார் இயேசு.

ஆம் குற்றங்களையும்,குற்றவாளிகளையும் சமூகம் தீமானிக்கிறது.அப்படியென்றால் தண்டனைகளே தேவையில்லையா..?இல்லை ..அப்படியில்லை.நிச்சயம் தண்டனைகள் தேவை.சமூகத்தில் ஓர் ஒழுங்கை,ஒரு முறைமையைப் பேண தண்டனைகள் நிச்சயம் தேவை.

ஒரு மனிதனை அவன் இயல் சமூகத்திலிருந்து பிரித்து வைப்பதைவிட கொடுமையான தண்டனை வேறேதுமில்லை.

சென்னையின் பழைய மத்தியச் சிறைச்சாலை இடிக்கப்பட்ட போது பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.அங்கு சென்ற நான் சுவர் முழுதும் கருப்பு வண்ணம் பூசப்பட்ட 4X4 அறையில் நிற்கிறேன்.அதில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ளது கழிவறைக்கோப்பை.எப்படி பார்த்தாலும் முழுவதுமாய் நீட்டிப் படுக்க முடியாத,கழிவறையின் அருவருப்பு எங்கும் நிறைந்திருக்கும் ஓர் இருட்டறையில் ஒரு மனிதனை அடைப்பதைவிடக் கொடுமையான தண்டனை வேறென்ன இருக்க முடியும்.

உச்சபட்ச தண்டனைகளால் குற்றங்கள் குறைகின்றன என்றால்,பல நூற்றாண்டுகாலமாக கொடுமையாகப் பொதுமக்கள் முன்னிலையில் சில நாடுகளில் நிகழ்த்தப்படும் உச்சபட்ச தண்டனைகள் ஏன் இன்றும் நிகழ்கின்றன?

ஒரு மனிதனை மரணிக்கத் தூண்டுவதோ,மரணிக்கச் செய்வதோ மிகப்பெரும் கொடுஞ்செயல்.அது லட்சியவாதக் கொலைகளோ,ஜேப்படிக் கொலைகளோ சட்டரீதீயான கொலைகளோ வன்மையாகக் கண்டிக்கபடவேண்டியவை.

நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணையர் அவர்களின் வார்த்தைகளில் “Capital punishments are judicially sanctioned murders “, எங்கள் அங்கீகாரமில்லாக் கொலைகளுக்கு நாங்கள் சட்ட அங்கீகாரத்தோடு கொல்கிறோம் என அரசு சொல்வது எந்த விதத்தில் பொருள்ளது.

செங்கொடியின் மரணம்,ஆவேசமாக வைகோ தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்தார்.சத்தம் கேட்டு மூலையில் படுத்திருந்த என் அப்பத்தா,எழுதப்படிக்கத் தெரியாத முக்கால் நூற்றாண்டு அந்தக்கிராமத்து மனுசி கேட்டார்.

என்னப்பு….சத்தமா பேசிக்கிட்டிருக்காக…!

ஒரு புள்ள தீகொழுத்திகிட்டு செத்துருச்சு ப்த்தா…

ஆத்தாடி..ஏம்பு..

ராஜீவ் காந்திய கொன்னுட்டாகன்னு மூனுபேர தூக்குல போடப் போராக,அது கூடாதுண்டு இந்தப்புள்ள இப்படி செத்துருச்சு…!

அது யாருப்பு செத்தவரு.?

அவரு நம்ம நாட்டோட முந்நாள் பிரதமர்..

பிரதமர் ன்டா..?

நம்ம நாட்டுக்கே பெரிய மந்திரிப்தா…இந்திராகாந்தி மயெம்ப்த்தா..

இந்திராகாந்தி மயெனா? அவரு செத்து கொள்ள வருசமாச்சே..?

ஆமப்தா 21 வருசமாச்சு…இப்பத்தேன் கேசு முடிஞ்சு தூக்குல போடப்போறாக..?

தூக்குல போடுரதுண்டா ?நாண்டுகிட்டு நிக்க சொல்லுவாகலோ…?

இல்லப்த்தா….மொகத்த கருப்பு துணியவச்சு மூடி… சுருக்க கழுத்துல மாட்டி கெணருமாறி பள்ளத்து மேல பலகையப்போட்டு ;அது மேல நிக்கவச்சு…,ஒரு கம்பியப்புடிச்சு இழுப்பாக..பலக வெலகி ஆளு பள்ளத்துல தொங்கி சுருக்கு இறுகி செத்துருவாரு….

விளக்கினேன் நான்…

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு….

அப்ப இவுகளும் கொல்லராக…

இல்லப்தா..கோர்ட்டு தீர்ப்பு சொல்லித்தான போலீகாரங்க செய்ராக..

அவுகளும் யாரோ சொல்லித்தான கொன்றுப்பாக….!இப்டியே கொன்டுகிட்டிருந்தா….

ஆழ்ந்த மௌனம்…!

முருகந்தேன் எல்லாத்தையும் காப்பாத்தனும்…!

என்று என்னைச் சலனப்படுத்திவிட்டுப் புரண்டு படுத்தார்..

பல்லாயிரம் ஆண்டுப் பரிணாமத்தில் பக்குவப்பட்ட தொல்மூதாதையின் மனம் என்முன் நிழலாடியது

கண்ணுக்குக் கண் ஒரு நாள் இந்த உலகையே குருடாக்கும் என்ற காந்தியச்சிந்தனையின் வடிவம்.

ஆம் கொலைக்குக் கொலை பொருளற்ற செயல்.

பேரறிவாளனோ,அப்சல் குருவோ,கசாப்போ,கொடுங்கொலைகாரன் ராஜபக்சேவோ…யாராக இருந்தாலும் உலகில் இனி யாருக்கும் மரணதண்டகள் வேண்டாம்.

குற்றவாளிகளை இயல் சமூகத்திலிருந்து பிரித்துவைக்கும் வாழ்நாள் சிறையே உச்சபட்ச தண்டனையாகட்டும்.

இவையனைத்திற்கும் தீர்வு குற்றமற்ற சமூகங்கள்.அதற்குத்தேவை நல்ல கல்வி.நான் சொல்லும் கல்வி எது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.இது பெருங்கனவாகத் தோன்றினாலும்…நிச்சயம் நிகழக்கூடியது.இன்னும் சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பமும்…பரிணாமத்தில் பக்குவப்படும் மனிதமனமும் இதை சாத்தியப்படுத்தும்.

அதை நாம் முன்னெடுப்போம்.


அன்புடன்,
சு.பூபாலன்.

பின் இணைப்பு:

நீங்கள் சந்தித்த பெண்கள் எல்லாம் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற விரும்புவதாகவே கூறுகிறீர்கள்.முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகும் நம் பெண்கள் காங்கிரசிற்கே வாக்களித்தார்கள் என்கிறீர்கள்.உண்மை.ஆனால் எந்த விஷயத்தையும் அந்த அந்தக் காலகட்டத்தில் வைத்து அணுகச்சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தும் நீங்கள் இதில் தவறியிருப்பதாகவே தெரிகிறது.முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மிக நேர்த்தியாக இந்திய,இலங்கை அரசுகளால் திட்டமிடப்பட்டு இந்திய குறிப்பாக தமிழக வெகுமக்கள் ஊடகங்களில் இருந்து மறைக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.நானும்,நீங்களும் கண்ட , அறிந்த காணொளி காட்சிகளிலோ,புகைப்படங்களிலோ வெகு சிலதைப் பார்த்திருந்தாலே நம் பெண்களில் பலர் மனப்பிறழ்வுக்கு ஆளாகியிருப்பர்.அதையும் மீறி…நம் தமிழ்ப் பெண்கள் சமூகம் அதிலும் குறிப்பாக நடுத்தரப் பெண்கள் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் அமிழ்ந்து அறிவிழந்துபோய் ஆண்டுகள் பலவாகின்றன.”பெண் சக்தி” என்ற பேராற்றலை தமிழகம் முற்றிலுமாய் இழந்து கிடக்கிறது.எதிர்கால சமூகத்தை ஆக்கும் பெரும்பொறுப்பு தங்களுக்குதான் உண்டு என்ற அறிதலை உணரமுடியாத நம் பெண்களின் கைகளில் வளரும் நம் பிள்ளைகளால் ஒரு அபத்தமான தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை.இந்த நிலையில் நம்பெண்களின் கருத்துகளை எப்படிப் பொருள் கொள்ளமுடியும்.

முந்தைய கட்டுரைபாரதி-கடிதங்கள்
அடுத்த கட்டுரையுவன் வாசிப்பரங்கு