அன்புள்ள ஜெ வணக்கம்
நான் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன் தற்போது உங்கள் இணையத்தைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரையில் மிகவும் பயனுள்ளதொன்றாகவே இதைக் கருதுகிறேன். உங்களிடம் ஒரு விடயம் கேட்டுத் தெளிவைப் பெற வேண்டியுள்ளது.
நீங்கள் அதிகமும் ‘அன்’ விகுதியைப் பயன்படுத்துகிறீர்கள் உதாரணமாக
எழுத்தாளன், வாசகன் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதை இரண்டு பாலாருக்கும் சமமாகப் பயன்படுத்துவதாயின் ‘அர்’ விகுதிதானே வரவேண்டும். ஒரு வேளை நான் பிற்போக்குத்தனமாகச் சிந்திக்கிறேனோ தெரியவில்லை. முடிந்தால் இது பற்றிய
தெளிவை எனக்கு ஏற்படுத்திவிடுங்கள் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
கேதீஸ்
அன்புள்ள கேதீஸ்
ர் விகுதி போடும்போது அது மரியாதையைக் குறிப்பிடுவதாக ஆகிறது. அப்போது அது ஒரு தனி மனிதரைக் குறிக்கிறது. ன் விகுதி அந்த முன்னிலையை ஒரு உருவகமாகக் காட்டுகிறது. இறைவன் என்பது போல,கலைஞன் என்பது போல.
ஆனால் நீங்கள் குறிப்பிடுவது யோசிக்கவேண்டியதுதான். ன் விகுதி ஆண்பாலை மட்டுமே குறிப்பிடுவதாக உள்ளது. ர் தான் பொதுவானது.
இனிமேல் ர் போடலாமென்று நினைக்கிறேன். நன்றி
ஜெ
அன்புடன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
நான் சிலகவிதைகள் எழுதும் ஒரு ஆர்வலர். உங்கள் நூல்களை வாசிக்கும் ஒரு வாசகன் . நவீன இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு.அந்தவகையில் எனது சந்தேகம் ஒன்றினை உங்களிடம் கேட்கலாம் என்று எண்ணுகிறேன். நவீன கவிதையில் கையாளப்படும் மொழி வடிவம் எத்தகையது. பாரதி குறிப்பிட்ட வசன கவிதை என்ற தளத்துக்குத்தான் செல்கிறதா? கவிதை என்பது ஒரு புரிதல் மொழி அது சாதாரண மொழிகளாக இருக்கும் போது அக்கவிதை தரமான கவிதையாக ஆகமுடியுமா? சொல் உருவாக்கம் என்பது இன்றைய கவிஞர்களில் எந்தளவுக்கு உள்ளது? போன்ற எண்ணங்கள் என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனது கவிதை ஒன்றும் அனுப்பி வைக்கிறேன் இது தரமான கவிதையா என விமர்சனம் சொல்வீர்களா?
விடிவு
அப்படி ஒன்றும் விடிந்ததாகத் தெரியவில்லை
சூரியன் வரவை
மேகம் மறைத்துக்கொண்டுதான் நிற்கிறது
வெள்ளிகள் விரட்டியடிக்கப்பட்ட
கொடிய இருளின் வன்மை
இன்னும் நீங்கவேயில்லை
விடிதலுக்கான அறிகுறிகள் தென்படடாலும்
விடியாமலேயே இருக்கிறது
பறவைகள் வரவேற்புப்பாடி களைத்துவிட்டன
மலர்கள் ஆரத்தி எடுப்பதற்காக
இன்னமும் காத்துக்கொண்டுதான் நிற்கின்றன
இது விடிதலுக்கான பொழுது
எனினும்
விடியாமலேயே இருக்கிறது
முகங்கள் மாற்றப்படடாலும்
பொழுது புலரவில்லையே
மரக்கிளையில் ஆந்தையின் விளிப்பு
அச்சத்தையல்லவா திணிக்கிறது
இன்னும்
புலர்தலுக்கான காலம் கூடவில்லையோ…..?
கு.றஜீபன்
அன்புள்ள றஜீபன்
கவிதை பற்றி நிறைய எழுதிவிட்டிருக்கிறேன். அவற்றையே சுருக்கமாகச் சொல்கிறேன்
1. கவிதை நேரடியாகச் சொல்லப்படுவதல்ல. நேரடியாக ஒன்றை சொல்லிவிடமுடியும் என்றால் அப்படியே சொல்லிவிடுவதே நல்லது. சொல்லமுடியாத ஒன்றைக் குறிப்புணர்த்தல் வழியாகச் சொல்வதே கவிதை
2. ஆகவே கவிதை என்பது மொழிக்குள் செயல்படும் தனிமொழி. வார்த்தைகளை நேரடியாகப் பொருள்கொள்வதன் மூலம் அல்ல அவற்றைக் குறியீடுகளாகவும் அடையாளங்களாகவும் எல்லாம் எடுத்துக்கொண்டு பொருள் கொள்வதன் மூலமே கவிதையை அறிகிறோம்.
இந்த அம்சங்கள் கவிதையில் உள்ளனவா என்று பார்த்தால் உங்கள் கவிதை நேரடியாகவே உரையாட முயல்கிறது இல்லையா? இது முதல் சிக்கல்
கவிதையின் அழகியல்குறைபாடுகளை உருவாக்கும் சில அம்சங்கள் உள்ளன
1. பழகிப்போன சம்பிரதாயமான உவமைகள், வருணனைகள், படிமங்கள் போன்றவை. கவிதையில் ஒரு உவமை வந்தால் அது புதியதாக இருக்கவேண்டும். வருணனைகள் உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். [உங்கள் கவிதையில் புலரிக்கான எல்லா விஷயங்களும் வர்ணனைகள் என்ற அளவிலும் படிமங்கள் என்ற அளவிலும் பழையவை]
2. குறிப்புணர்த்தியபிறகு அத்துடன் நின்றுவிட வேண்டும். மேலும் விளக்க முனையக்கூடாது. [ இன்னும்
புலர்தலுக்கான காலம் கூடவில்லையோ போன்ற வரிகள் விளக்க முயல்கின்றன]
3.கவிதையில் உணர்ச்சிகளை மிகையாகச் சொல்லக்கூடாது. எந்த அளவுக்கு அனுபவம் உள்ளதோ அதை விட மிகக்கூடாது
இந்த அம்சங்களைப் பரிசீலியுங்கள்
நல்ல கவிதையின் இலக்கணங்கள் மூன்று 1. பிறிதொன்றிலாத புதுமை 2. கச்சிதமான வடிவ ஒருமை 3. உண்மையான அகவெழுச்சி
நல்ல கவிதைகளைத் தொடர்ந்து படிப்பதும் விவாதிப்பதும் வடிவச்சிக்கல்களைத் தாண்ட உதவும். தமிழினி வெளியீடான ராஜமார்த்தாண்டன் தொகுத்த ‘கொங்குதேர்வாழ்க்கை2’ ஒரு நல்ல தொகுதி. அனேகமாக எல்லா நல்ல கவிதைகளும் உள்ளன
ஜெ