மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James Rollins ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை கவர்ந்த எழுத்தளர்கள்). 2008 வரை தமிழ் வாசிப்பு மிக குறைவு. 80s இல் சுஜாதா, வாசித்ததோடு அவ்வப்போது விகடனில் எஸ் ராமகிருஷ்ணன் , நாஞ்சில் நாடன் வாசிப்பதுண்டு. அலுவலக நண்பர் ஒருவர் உயிர்மையில் தங்களது ஊமைச்செந்நாய் வாசிக்க அறிமுகப்படுத்தினார். என்னை மிகவும் பாதித்த கதைகளுள் ஒன்று அது. பல முறை வாசித்து விட்டேன்.
நான் தங்களது ப்ளாக் கடந்த மூன்று வருடங்களாக படித்து வருகிறேன். தங்களது சிறுகதை தொகுப்பு (முழு தொகுப்பு) , மண் சிறுகதை தொகுப்பு, விஷ்ணுபுரம் , இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், இரவு, உலோகம் ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். தங்கள் எழுத்துக்கள் எப்போதும் என் மனதில் ஒரு ஆழமான பாதிப்பை , தேடலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தங்கள் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி வைத்துவிட்டேன் , படிக்கத்தான் நேரம் ஒதுக்க வேண்டும்:-)
தற்போது நான் Richard Dawkins இன் “The Greatest show on earth ” புத்தகம் வாசித்து வருகிறேன். Evolution பற்றி மிக அழகாக படங்களுடன், ஆதரங்களுடன் விவரித்திருக்கிறார். Charles Darwin இன் புத்தகத்தையும் Richard Dawkins இன் இதர புத்தகங்களையும் படிக்கத் தூண்டுகிறது. புத்தகம் படிக்கும் போது ஒரு சந்தேகம் மனதில் தோன்றியது. இந்திய தரிசனங்களில் , இந்து மதத்தில் , பரிணாம வளர்ச்சியைப் பற்றி என்ன கூறபட்டிருக்கிறது ? அவை evolution theory உடன் ஒத்துப் போகின்றனவா ? நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் இந்து மதம் “ஆன்ம வளர்ச்சியில் evolution theory உடன் ஒத்துப் போவதாகக் கூறினார் அதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் “physical” level இல் பரிணாம வளர்ச்சியை இந்து மதம் எவ்வாறு நோக்குகிறது? தங்களது கருத்தை அறிய ஆவல். இது தொடர்பாக நான் படிக்கக் கூடிய நல்ல புத்தகங்களைத் தாங்கள் பரிந்துரைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
முதல் முறை கணினியில் தமிழில் இவ்வளவு நீண்ட கடிதம் எழுதி உள்ளேன். பிழை ஏதும் இருப்பின் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி
வெண்ணி
***
அன்புள்ள வெண்ணி,
ரிசர்ட் டாக்கின்ஸின் “The Greatest show on earth’ சமீபத்தில்தான் நானும் வாசித்தேன். அற்புதமான நூல். என் மகனின் புத்தகம். நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதைப்பற்றி எழுதக் கை துறுதுறுக்கிறது, ஆனால் என் விஷயங்களின் எல்லையைத்தாண்டி எதையும் எழுதக்கூடாதென்பதனால் பேசாமலிருக்கிறேன்.
சில பிரபஞ்ச இயங்குவிதிகள் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு இயற்கையில் இருந்து இயல்பிலேயே கிடைத்திருக்கலாம். அனேகமாக உலகின் எல்லாச் சிந்தனைகளிலும் ஏதேனும் வகையில் அவை காணப்படுகின்றன. உதாரணமாக டைலடிக்ஸ் என கிரேக்க சிந்தனை சொல்லும் முரணியக்கம். அது இந்திய சிந்தனையில் யோகாத்மதரிசனம் அல்லது யோகாத்ம வாதம் என்ற பேரில் சுட்டப்படுகிறது. கீதை அதனடிப்படையில் அமைந்த நூல்.
அதேபோல பரிணாமம் என்ற இயங்குவிதியைப்பற்றியும் அனேகமாக எல்லா அசல் சிந்தனை மரபுகளும் அறிந்திருக்கின்றன. பல பழங்குடி சிந்தனைகளில் கூட பரிணாமவாதம் பற்றிய எளிமையான சில கொள்கைகள் உள்ளன. ஒன்று அதன் உள்ளியல்புகளின் வளர்ச்சி காரணமாக இன்னொன்றாக ஆவதுதான் பரிணாமம். அதைப் பல்வேறு வகையில் இயற்கையில் கண்டுணர்ந்துள்ளார்கள்.
இந்திய சிந்தனையில் பரிணாமவாதம் என்ற ஒன்று உண்டு. எப்போதும் அதைப்பற்றிய விவாதம் நிகழ்ந்துகொண்டும் இருந்தது. பரிணாமவாதத்தின் மிகத்தீவிர ஆதரவாளர்கள் சமணர்கள். உண்மையில் சமணத்தின் ஆதாரக்கோட்பாடுகளில் ஒன்று அது. அதை சார்வாகர்கள் தொட்டு பெரும்பாலும் எல்லா ஜடவாதிகளும் மறுத்தார்கள். வேதாந்தம் அதில் சார்பில்லா நிலை எடுத்தது.
ஆனால் அது சார்ல்ஸ் டார்வினின் பரிணாமவாதம் அல்ல. டார்வினின் பரிணாமவாதத்தை உயிர்ப்பரிணாமவாதம் என்றும் இதை ஆன்மபரிணாமவாதம் என்றும் வேறுபடுத்திச் சொல்லலாம்.
டார்வின் உயிர்கள் தங்கள் தகவமைவால் ஒன்றில் இருந்து இன்னொன்றாகப் பரிணாமம் கொண்டதைச் சொல்கிறார். இந்திய மரபில் உள்ள பரிணாமவாதம் என்பது ஒரு ஆன்மா தன் செயல்கள் மூலம் இன்னும் மேலானதாகப் பரிணாமம் கொண்டு கடைசியில் முழுமை அடைவதைப்பற்றிச் சொல்கிறது.
[பிற்கால வேதாந்திகள் சொல்லும் பரிணாமவாதம் வேறு. பிரம்மம் தன் இச்சையால் பிரபஞ்சமாக ஆனதை அவர்கள் பரிணாமம் என்கிறார்கள்]
இந்த ஆன்மப்பரிணாமத்தைப்பற்றி சமண,பௌத்த,இந்து மூலநூல்களில் எல்லாமே சொல்லப்பட்டுள்ளது.மண்ணில் உள்ள எல்லாத் தாவரங்களுக்கும் புழு,பூச்சி போன்ற பிற உயிர்களுக்கும் உணர்ச்சிகளும் ஆன்மாவும் உண்டு என்பது இந்த மதங்களின் பொது நம்பிக்கை. ஆகவே அவற்றுக்கு மீட்பும் உண்டு. சமணத்தைப் பொறுத்தவரை சிற்றுயிர் என்பது சிறிய ஆன்மா கொண்டது. ஆகவே ஒரு புழுவுக்கான மீட்பு என்பது அதன் ஆன்மா இன்னும் பெரிதாவதே. ஆகவே பூமியில் உள்ள எல்லா உயிர்களும் தங்கள் செயல்கள் மூலம் ஓர் நிரந்தரமான ஆன்ம பரிணாமத்தில் உள்ளன என்ற கொள்கை உருவானது.
இதற்காகவே இங்கே மறுபிறப்புக்கொள்கை உருவானது. ஓர் ஆன்மா தன்னை உடலில் இருந்து விடுவித்து இன்னும் மேலான உடலை எடுத்துக்கொண்டு பரிணாமம் அடைந்து செல்வதே மறுபிறப்பு. அப்படி அது மேலே செல்ல முந்தைய பிறவியின் செயல்களின் விளைவுகள் காரணமாக அமைகின்றன. அதுவே ஊழ்.
இந்தக் கொள்கையைத்தான் ‘புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாய் பல்விருகமாய் பறவையாய் பாம்பாய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்’போன்ற வரிகள் சுட்டுகின்றன. இத்தகைய ஏராளமான பாடல்களை, ஓவியங்களை நாம் காணமுடியும்.
இந்த நோக்கு பெருமாளின் தசாவதாரத்திலும் உள்ளது. மண்ணில் உள்ள எல்லா உயிர்களிலும் பெருமாள் அவதரித்தார் என்று காட்டுவதற்காகவே மீன் முதல் கல்கி வரை அவதாரங்கள் கற்பனைசெய்யப்பட்டன.
சொல்லப்போனால் டார்வின் சொல்வது உடலின் பரிணாமம். இந்த மதங்கள் சொல்வது ஆன்மாவின் பரிணாமம். மேலோட்டமாகப் பார்த்து இந்திய மதங்கள் பரிணாமத்தை ஏற்கனவே பேசிவிட்டன என்று சிலர் சொல்வது பிழை. உயிர்க்குலங்கள் தங்கள் உடலை மாற்றிக்கொண்டு ஒன்று இன்னொன்றாகப் பரிணாமம் அடைவதைப்பற்றி எந்த இந்திய நூலிலும் நான் வாசித்ததில்லை.
செமிட்டிக் மதங்கள் படைப்புவாத நம்பிக்கை கொண்டவை. அவர்களின் படைப்புவாதத்தின் அடிப்படைகள் மூன்று.
1. இந்த உலகை இப்படியே இறைவன் படைத்தான்.
2. எல்லையற்ற பிரபஞ்சம் என்ற கருதுகோள் இல்லை. வானமும் பூமியும் மட்டுமே உள்ளது. வானம் பூமிக்கு மேலே உள்ளது. வானத்தின் விண்மீன்களும் கோள்களும் பூமிக்காகப் படைக்கப்பட்டவை. பூமியே மையமானது.
3. மனிதனே உயிர்க்குலங்களில் முதல்வன். பிற எல்லாப் படைப்பும் அவனுக்காகவே உருவாக்கப்பட்டன.
இந்த மூன்று அடிப்படைகளுடன் நவீன அறிவியல் மோதுவதனால்தான் இஸ்லாமும் கிறித்தவமும் நவீன அறிவியலை எதிர்த்தன. இரண்டாவது கொள்கைக்காக புருனோவும் கலிலியோவும் தண்டிக்கப்பட்டாலும் அந்த உண்மை இருநூறாண்டுகளாகப் புறவயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டமையால் அதை மட்டும் இப்போது இவர்கள் திருத்திக்கொண்டார்கள். பிற இரண்டையும் இன்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அவையும் புறவயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டன.ஆனால் ஏற்கத்தயங்குகிறார்கள். டாக்கின்ஸின் நூலில் முதல் அத்தியாயம் அதைப்பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது.
அந்த இரு கொள்கைகளின் அடிப்படையில் செமிட்டிக் மதங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை நிராகரிக்கிறார்கள். படைப்புவாதப் பரிணாமக் கொள்கை போன்ற போலி அறிவியல்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
இந்தியமதங்களைப் பொறுத்தவரை மேலே சொன்ன மூன்று கொள்கைகளுமே அவர்களுக்கு இல்லை.
1. இந்தப் பிரபஞ்சம் பிறிது ஒன்றில் இருந்து பரிணாமம் கொண்டு வந்தது என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஏற்கிறார்கள். வேதாந்தத்தைப் பொறுத்தவரை அருவமான எல்லையற்ற பிரம்மத்தில் இருந்து மாயையாக உருவம் கொண்டு வந்தது பிரபஞ்சம். சாங்கியத்தின்படிஆதி இயற்கையில் இருந்து பருவடிவில் பரிணாமம் கொண்டு வந்தது பிரபஞ்சம். பௌத்த,சமண மதங்களின்படி எப்போதுமிருக்கும் பொருளின் மீது மகாதர்மம் அல்லது பேரூழ் உருவாக்கும் அலைகளே இப்பிரபஞ்சம். மொத்தத்தில் இது பரிணாமம் கொண்டு வந்தது, மாறிக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.
2. பிரபஞ்சம் என்ற எல்லையற்ற கால-பரு வெளி பற்றி மிக ஆரம்பத்திலேயே, ரிக்வேதத்திலேயே, பேசப்பட்டுவிட்டது. முடிவற்ற பிரபஞ்ச வெளியில் பூமி ஒரு சிறு துகள் மட்டுமே என்ற நம்பிக்கை இந்திய மதங்களுக்குப் பொது. உலகங்கள் முடிவே இல்லாதவை. அந்தக் கோடானுகோடி உலகங்களில் ஒன்றுதான் பூமி.
3. இந்திய மதங்களின் நோக்கில் பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு. வாழ்க்கை உண்டு. ஒவ்வொன்றும் தன்னளவில் பிரபஞ்ச விதிகளுக்கும் தன் செயல்களுக்கும் கட்டுப்பட்டது. சமண பௌத்த மதங்களில் மனிதன் ஒப்புநோக்க முதன்மையானவன். காரணம் அவனுக்கு சிந்தனை உண்டு. ஆனால் வேதாந்தத்தில் மனிதனுக்கும் புழுவுக்கும் அணுவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஆகவே இந்திய மதங்களுக்குப் பரிணாமக் கொள்கையை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. டார்வினின் உயிர்ப்பரிணாமக் கொள்கை இந்திய மதங்களின் ஆன்ம பரிணாமக் கொள்கையை மறுக்கவில்லை. சொல்லப்போனால் அதை இன்னும் வலுவாக்கிக் கொடுக்கிறது. உடலைப்போலவே ஆன்மாவும் பரிணாமம் அடைகிறது என்ற வாதத்தை அது வலுப்படுத்துகிறது. உடலைத் தன் இச்சை மூலம் ஆன்மா மாற்ற முடியும் என்றால் ஆன்மாவை ஏன் உடலின் செயல்கள் மாற்றமுடியாது என்று வாதிட வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது.
ஆகவே இந்திய மதங்கள் டார்வின் கொள்கையை, விண்வெளி ஆய்வுகளை, உயிரியல் ஆய்வுகளை, மூளைநரம்பியல் ஆய்வுகளை எதையும் மறுத்து வாதிடவேண்டிய இடத்தில் இல்லை. அந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமான கொள்கைகளுடன் இந்திய மதங்களின் ஆதாரமான கொள்கைகள் முரண்படவில்லை. விளக்கங்கள் முரண்படலாம். உதாரணமாக மறுபிறவி போன்றவை. ஆனால் அவற்றை எளிதாக மாற்றிக்கொண்டு மேலே செல்ல இந்தியமதங்களில் எப்போதும் இடமுள்ளது
ஜெ
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் 2011