பரமக்குடி

ஜெயமோகன் அவர்களுக்கு ,
உங்களது உளவியல் கட்டுரைகள் பல  படித்திருக்கிறேன். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன. நீங்கள் முதற் கொண்டு எந்த எழுத்தாளரும் இதை பற்றி கருத்து தெரிவிக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் .
அன்புடன்

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்

ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில்அரசியல் என்பது தொடர்ச்சியான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மோதல்கள், விவாதங்களால் ஆனது. இந்தச் சூழலில் ஓர் எழுத்தாளன் அரசியல் விஷயங்கள் அனைத்துக்கும் உடனடியாக எதிர்வினை தெரிவித்து விவாதிக்க ஆரம்பித்தால் அவன் அரசியல் விமர்சகனாக மட்டுமே இருக்க முடியும். அது ஓர் ஓயாத அலை

ஆகவே கூடுமானவரை சமகால அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதில்லை என்பதை என் கொள்கையாக வைத்திருக்கிறேன். பெரும்பாலும் அப்படித்தான் செயல்படுகிறேன். அதை மீறி கருத்துச்சொல்லும் தருணங்கள் என்பவை ஒரு விரிவான கருத்துவிவாதத்துக்கான வாய்ப்பும், எழுத்தாளனாக என் பங்களிப்பு தேவை என்ற கட்டாயமும் உள்ளவையாக இருக்கும் – கூடங்குளம் போல.அத்தகைய இடமேதும் பரமக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.

என்னுடைய கட்டுரைகள நீங்கள் தொடர்ந்து வாசித்திருந்தால் நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

தமிழில் சமகால அரசியல் விவாதங்களில் ஈடுபடும் எல்லா எழுத்தாளர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அரசியல் விவாதங்களில் ஈடுபடாதவர்களைக் கட்டாயப்படுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைநிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அடுத்த கட்டுரைஹனீஃபா கடிதம்