(கோபிநாத்துடன்)
சேலம் நண்பர் கோபிநாத் சேலத்தில் விஷ்ணுபுரம் நண்பர் வட்டம் ஒன்றை வெண்முரசு வாசகர்வட்டம் என்னும் பேரில் அமைக்கவேண்டும் என்றும், அதன் சார்பில் ஒரு கட்டண உரை நிகழ்த்தவேண்டும் என்றும் சொன்னார். சேலத்தில் நிகழ்ந்த சென்ற புத்தகவிழாவில் அதை முடிவுசெய்தோம். சேலம் பிரசாத் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஆரம்பிக்கும் நாளில் இருந்தே உடனிருக்கும் மிக அணுக்கமான நண்பர், எங்களுடன் பல பயணங்களில் கலந்துகொண்டவர். குறிப்பாக காஷ்மீர் பயணத்தில். அவருடைய தங்கையின் திருமணம் ஜனவரி 31. என்னை அழைத்திருந்தார்
நான் திருமணங்களை பொதுவாகத் தவிர்க்கிறேன். ஏனென்றால் இன்று நான் எனக்கு அணுக்கமானவர்களின் திருமணங்களுக்குச் செல்வதாக இருந்தாலே ஆண்டு முழுக்கச் செல்லவேண்டியிருக்கும். ஏற்கனவே உறவினர்களின் திருமணங்களுக்குச் செல்வதை முழுமையாகவே தவிர்த்துவிட்டிருக்கிறேன். ஆனால் சேலம் கட்டண உரை பிப்ரவரி 2 ஆம் தேதி நிகழவிருந்தது. பிப்ரவரி1 ஆம் வாசகர்வட்ட அறிமுகம். ஆகவே ஒருநாள் முன்னதாகச் செல்லலாம் என முடிவெடுத்தேன், திருமணத்திற்கும் செல்லலாம் என.
அந்தத் திட்டம் போடப்பட்டதும் கிருஷ்ணன் அடுத்த திட்டத்தைப் போட்டார். ஒன்றாம் தேதி காலையில் ஒரு சிறிய உள்ளூர்ப்பயணம். கட்டண உரைக்கான உளநிலை சிதறிவிடுமோ என எனக்கு பயமிருந்தாலும் பயணம் என ஒன்றை ஏன் தவறவிடவேண்டும் என்று தோன்றியது. அத்துடன் கிருஷ்ணன் சுவாரசியமான ஒன்றையும் சொன்னார். சின்னத்தம்பிப் பாளையம் என்னும் ஊரில் இதுவரை முறையாக ஆவணப்படுத்தப்படாத மாபெரும் நெடுங்கல் ஒன்று உள்ளது என்று.
முப்பத்தொன்றாம் தேதி சேலத்துக்கு விஷ்ணுபுரம் நண்பர்கள் பலர் வந்துவிட்டிருந்தனர். சென்னையில் இருந்து குருஜி சௌந்தர், ராஜகோபாலன், சண்முகம் ஆகியோர். திருப்பூரில் இருந்து ராஜமாணிக்கம் குடும்பத்துடன் வந்திருந்தார். திருமணத்திற்குச் சென்றுவிட்டு சேலம் கிளப்பில் அளிக்கப்பட்டிருந்த அறையில் அன்றிரவு தங்கினேன். உரைக்கான முன்வரைவு ஒன்றை தயாரிக்க முயன்றேன். ஒரு சொல்லும் உள்ளத்தில் தோன்றவில்லை.
மறுநாள் காலையிலேயே நண்பர் கோபி வந்து அழைத்துச்சென்றார். சென்னீஸ் விடுதிக்கு சென்று அறையில் பொருட்களை வைத்து குளித்துவிட்டு கிளம்பினேன் வாழப்பாடி மூர்த்தி காரில் வந்து என்னை அழைத்துக்கொண்டார். வழியில் பிறநண்பர்கள்ச் சேர்ந்துகொண்டார்கள். புதியதாகத் திருமணமாகவிருக்கும் பிரேம், அவர் அண்ணா என புதிய நண்பர்கள். (பிரேம் அவருடைய திருமண அழைப்பை ஒரு சிறு காணொளியாக சேலம் புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் அரங்கில் பதிவுசெய்திருந்தார். காணொளி )
இரண்டு கார்களிலாகச் சின்னத்தம்பிப் பாளையம் சென்றோம். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் உட்பட நண்பர்கள் இன்னொரு காரில் அங்கேயே வந்தார்கள். ஒரு தனியார் நிலத்தில் உள்ளது அந்த நெடுங்கல். அதன் மேற்பகுதி உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இன்னொன்றும் இருந்திருக்கலாம், அது விழுந்துவிட்டது. உழவுக்காக டிராக்டர் மிக அண்மையில் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறது. சாதாரணமாக ஒரு முட்டு முட்டினாலே எஞ்சிய நெடுங்கல்லும் விழுந்துவிடும்.
இப்போது சுமார் பதினைந்தடி உயரத்திற்கு எழுந்து நிற்கிறது. மிகத்தொன்மையான கற்காலத்தில் உருவாக்கப்பட்ட கல். ஆகவே எவ்வகையிலும் பண்படுத்தப்படாத ஒரு கற்பாளம் மட்டும்தான் அது. அது சிறுதெய்வமாக கும்பிடப்பட்டிருக்கிறது என்பதற்கு அடியில் கிடக்கும் கள்ளுப்பானைகள் சான்று.
ஆனால் இன்றுவரை எவரும் அடையாளம் காணவில்லை. இப்பகுதியை விரிவாக ஆவணப்படுத்தியிருக்கும் ஆய்வாளரான வேலுதரன் கூட இதை எழுதியதாகத் தெரியவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்னும் நண்பர் நாங்கள் நெடுங்கற்கள் பற்றி எழுதும் குறிப்புகளிலிருந்து புரிந்துகொண்டு இது நெடுங்கல்லாக இருக்குமோ என்று எங்களிடம் சொன்னார்.
நெடுங்கல் நின்றிருக்குமிடம் பழங்காலத்தில் மானுடர் வாழ்வதற்கு உகந்ததுதான். பெரிய மரங்கள் செறிந்து வளரமுடியாத மேட்டுநிலத்திலேயே பொதுவாக கற்கால மனிதர்கள் வாழ்வது வழக்க்கம். மரங்களை முறிக்கும் ஆயுதங்கள் அவர்களிடம் இருந்ததில்லை. அங்கே கல்வட்டங்கள் போன்றவையும் இருந்திருக்க வாய்ப்புண்டு. வேட்டைக்கான கற்கருவிகளுக்கான கற்கள் நிறைந்த இடம் அது. புஞ்சைவேளாண்மையும் செய்திருக்கலாம்.
சேலம் – நாமக்கல் சாலையில் புதுசத்திரம் அருகில் பாய்ச்சல் என்னும் ஊரில் உள்ள செல்லாண்டியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாகச் சென்றோம். செல்லியம்மன், செல்லாண்டியம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தச் சிறுதெய்வம் கொங்குவட்டாரத்தில் அதிகமாக வழிபடப்படுகிறது. இந்த ஆலயத்தின் வெளியே நின்றிருக்கும் கல்லால் ஆன பத்தடி உயரமான குதிரைச்சிலை அனேகமாக தமிழகத்திலேயே பெரியது என்று படுகிறது.
தமிழகத்தின் மரபார்ந்த சிற்பக்கலைப் பாணியிலான சிலை. பெருங்கோயில்களில் அணியலங்காரங்களுடன் நந்தி சிலைகள் உண்டு. நாயக்கர் கால ஆலயங்களின் சுவர்களில் குதிரைகள் சீறி கால்தூக்கி நிற்பதுண்டு. நந்தி சிலைகளின் அலங்காரமும், குதிரைச்சிலைகளின் அழகியலும் கொண்ட அழகான சிலை இது. சிலையின் கழுத்தணி தலைகளாலானது. சேணத்தில் யாளித்தலைகொண்ட பறவைகள். ஆனால் நான்கு கால்களையும் ஊன்றி நின்றிருக்கும் இத்தகைய குதிரைச்சிலை எந்த பெரிய ஆலயத்திலும் இல்லை என்றே நினைக்கிறேன்.
செல்லாண்டியம்மன் கோயில் பிற்காலத்து கொங்குச் சோழர்களின் காலகட்டத்தில் கட்டப்பட்டது எனப்படுகிறது. இந்தக் குதிரையும் அப்போது செய்யப்பட்டதாக இருக்கலாம். சோழர்காலத்தைய வட்டெழுத்திலான கல்வெட்டு கோயிலின் கல்உத்தரத்தில் உள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டு என்று தோன்றுகிறது. முறையான ஆய்வுகள் ஏதும் கண்ணில்படவில்லை. அருகே ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளது.
செல்லாண்டியம்மனின் கோயிலில் குலமுறையாக வழிபாடு செய்து வரும் பூசாரி இருந்தார். சிறிய ஆலயம். கருவறையில் அம்மன். சிறிய துணைத்தெய்வங்கள் நின்றிருந்தன. செல்லாண்டியம்மன் குறிப்பிட்ட சில சாதியினரின் குலதெய்வமாக இருப்பதாகச் சொன்னார்.
திரும்பும் வழியில் சேலத்துக்கு 10 கிமீ தொலைவிலுள்ள பொய்மான்கரடு என்னும் ஊருக்குச் சென்றோம். ஓர் உச்சிப்பெரும்பாறை அமைந்த சிறு குன்று. அந்தப்பெரும்பாறை பிளந்து நின்றிருக்கிறது. அதன் அடிப்பகுதி மண் அடித்துச்செல்லப்பட்டு ஆழமான குகைபோன்ற அமைப்பு உள்ளது. அதுபோன்ற திறந்த அமைப்புகொண்ட பாறையடிப்பகுதிகள்தான் தொன்மையான மானுடர் வாழ்ந்த இடங்கள். அவை குகைகள் எனப்பட்டாலும் குகைகள் அல்ல. மழைநனையாத பாறையடிகள்தான்.
(பொய்மான் கரடு)
மேலேறிச்சென்று அந்த பாறைநிழலுக்குள் சென்றோம். தொல்குடிகளின் காலகட்டத்தில் பிள்ளைகுட்டிகளுடன் இருபதுமுப்பது பேர் அங்கே தங்கியிருக்க வாய்ப்புண்டு. பாறையில் ஓவியங்களும் இருந்திருக்கலாம். ஆனால் நீண்டகாலமாக அங்கே ஆடுமாடு மேய்ப்பவர்கள் சமையல் செய்திருக்கிறார்கள். பாறைப்பகுதி முழுக்கவே கரிபடிந்திருந்தது.
கீழே சாலையைக் கடந்து ஓர் இடத்தில் நின்று மேலே பிளந்திருக்கும் பாறையின் நடுவே நிழலில் பார்த்தால் அங்கே ஒரு மான் நின்றிருப்பதுபோல ஒரு மாயத்தோற்றம் தெரிகிறது. நான் உள்ளூர் மக்களின் சற்று மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்றே நினைத்தேன். ஆனால் மான் என நினைத்துவிட்டால் உண்மையிலேயே அங்கே மான் நிற்பதாகவே தெரியும். சற்று இடம் மாறினாலும் மான் மறைந்துவிடும். அந்தப் பிளவுக்குள் விழும் ஒளியின் தோற்றம்தான் அது.
(இருளில் வெண் நிழலாக மான்)
இக்காரணத்தால் இந்த இடம் பின்னாளில் ராமன் மாயமானைத் தேடிவந்த இடமாக அறியப்பட்டு அங்கே ஓர் ஆலயம் கட்டப்பட்டது. இருநூறாண்டு தொன்மையான ஆலயத்தை பங்காளிச்சண்டைகளால் இடித்துவிட்டார்களாம். இப்போது கான்கிரீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்களாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலே செல்லும் வழியில் பழைய ஆலயங்களின் உடைந்த பகுதிகள் படிகளாகப் போடப்பட்டுள்ளன.
சேலத்திற்கு திரும்பும் வழியிலேயே மதிய உணவு சாப்பிட்டோம். சென்னீஸுக்கு திரும்புவதற்கு முன்பு இறுதியாக சேலம் தலைவெட்டி முனியப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். சேலத்தில் கோட்டை சாலையில், அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள தலைவெட்டி முனியப்பன் மற்றும் திருமலையம்மன் கோவில் அண்மையில் செய்திகளில் அடிபட்ட ஒன்று.
சேலத்தைச் சேர்ந்த பி ரங்கநாதன் என்பவர் புத்தர் அறக்கட்டளை சார்பில் 2011 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஆலயத்தில் வழிபடப்படும் தலைவெட்டி முனியப்பன் என்னும் தெய்வத்தின் சிலை உண்மையில் தொன்மையான புத்தர்சிலை என்றும், அதை மீட்டுத்தரவேண்டும் என்று ஒரு வழக்கு தொடுத்தார்.
இது புத்தர் சிலைதான் என்று மயிலை சீனி வேங்கடசாமி எழுதியிருக்கிறார். 2008 முதலே பி.ரங்கநாதன் இது புத்தர்சிலை என்றும், பௌத்தர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரி முதல்வருக்கு மனுக்கள் அனுப்பியிருந்தார். இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறை ஆட்சியில் உள்ளது. 2011ல் அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கும் நிகழ்ந்தது. அப்போதுதான் ரங்கநாதன் மேலதிக ஆதாரங்களைச் சேகரித்து நீதிமன்றம் சென்றார்.
சென்னை உயர்நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும்படி தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதியில் தொல்லியல் துறையினரின் கூட்டு ஆய்வுக்குழு ஆய்வுசெய்து அறிக்கையை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்தது .இங்கிருக்கும் தலைவெட்டி முனியப்பன் புத்தர்தான் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்து அறநிலையத் துறை எதிர்த்து வாதிட்டாலும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்தச் சிலை புத்தருடையதுதான் என்றும், இந்த இடம் பௌத்தர்களின் வழிபாட்டிடம் என்றும், அதை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், அங்கே இந்துச் சடங்குகள் செய்யப்படலாகாது என்றும் ஆணையிட்டார்.
தமிழகத்தில் இதைப்போல தலை வெட்டப்பட்ட நிலையில் பல புத்தர்சிலைகள் உள்ளன. பல சிலைகள் முனியாண்டி, முனியப்பன், அய்யனார் என்னும் பெயர்களில் வழிபடப்படுகின்றன. அவ்வகையில் இது ஒரு திருப்புமுனைத் தீர்ப்பு. இதைப்பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் விரிவாக எழுதியிருக்கிறார். தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்
நாங்கள் செல்லும்போது மதியம் ஆகிவிட்டது. காவலர் மட்டுமே இருந்தார். முனியப்பன் ஆலயம் மூடப்பட்டிருந்தாலும் கம்பி வழியாக பார்த்தோம். முனியப்பன் எனப்படும் புத்தர் சிலை புத்தர், போதிசத்வர்கள் அமர்ந்திருக்கும் அரைப்பத்மாசன நிலையில், தாமரைப்பீடம் மேல் அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நாங்கள் பார்த்தபோது முழு உடலும் சரிகையிட்ட ஆடையால் மூடப்பட்டிருந்தது
புத்தர்சிலையின் உடைந்துபோன தலையின்மேல் கம்பிநட்டு அதில் இப்போதுள்ள தலை ஈயத்தால் ஒட்டவைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வு சொல்கிறது. தலை கொஞ்சம் பிழையாகத் திரும்பியிருக்கிறது. அந்த தலையும் புத்தருடையதா என்று தெரியவில்லை. ஆனால் முகத்தில் பெரிய வெள்ளிவிழிகளும் மூக்கும் மீசையும் பதிக்கப்பட்டிருந்தன.
நாங்கள் பார்த்தவரை அங்கே நீதிமன்ற ஆணைப்படி அது புத்தர்கோயில் என்று எங்கும் எழுதிவைக்கப்பட்டிருக்கவில்லை. முனியப்பன் வழிபாடுதான் நடைபெற்று வருகிறது.
மாலை சென்னீஸ் விடுதிக்கு வந்தேன். சற்று நேரம் ஓய்வு. குளித்து உடைமாற்றி நண்பர் கோபியின் ஏ.என்.ஐ அலுவலகம் சென்றேன். அங்கே பதினைந்து நண்பர்கள் வந்திருந்தார்கள். வெண்முரசு வாசகர் வட்டம் அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அதன் நெறிகள், இலக்கு குறித்து நான் பத்து நிமிடம் பேசினேன். தொடர்ந்து நண்பர்களின் இலக்கியவினாக்களுக்கு பதில் சொன்னேன். ஒரு மணிநேரத்தில் நிகழ்வு முடிந்தது.
மறுநாள் எங்கும் செல்லவில்லை. பகல் முழுக்க அறையிலேயே இருந்தேன். கிருஷ்ணன் உடனிருந்தார். மதியம் ஒரு வட இந்திய உணவகம் சென்று சாப்பிட்டேன். மிகச்சுவையான உணவு. அன்று மாலை கட்டண உரை. இருநூற்றியிருபதுபேர் கொண்ட அரங்கு நிறைந்திருந்தது. உரை முடிந்தபின் அறையில் சிறு உரையாடல். அன்று இரவே நாகர்கோயிலுக்கான ரயில்.