நூல்கள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இன்றைக்கு பழைய திண்ணை பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன். இரண்டாயிரத்து நாலு வாக்கில் உங்கள் மீது அதிக பட்சமாக எழுத்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எப்படி இத்தனை சுலபமாக எதிர்கொண்டீர்கள்.?? மனதை பாதிக்கவே இல்லையா?

உண்மையான இலக்கியம் படைத்தவர்கள் மட்டும் உங்கள் பக்கம் இருக்க மற்றவர்கள் அனைவரும் இனைந்து தாக்குதல் நடத்தி எப்படியாவது உங்களை ஒழித்து விடவேண்டும் என தீர்மானித்து செயல்பட்டுள்ளனர் . உங்கள் வாசகர்கள் திண்ணையிலே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டதுபோல காலம் எல்லாவற்றையும் நிராகரித்து இன்று உங்களுக்கென ஒரு தனி அடையாளமும், தீவிர வாசிப்பும் கொண்ட வாசகர்களை உருவாக்கியுள்ளது. உங்களது எழுத்தில் இருக்கும் உண்மை மட்டுமே உங்களை அத்தகைய விஷச் சூழலில் இருந்து காப்பாற்றியுள்ளது என நினைக்கிறேன்.

உங்களது அனல்காற்று மீண்டும் ஒரு அழகான உணர்ச்சிக்காவியம். மனித மனங்களின் போராட்டங்களும், சிக்கல்களும், உறவுகளுடனான வரைமுறை குறித்த கோடுகள் தாண்டப்பட்டுள்ளது உங்களது தொடரில். சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாயிருக்கும். இங்கு கத்தரில் பதினோரு மணிவாக்கில் உங்கள் அனல்காற்று தொடரை படித்த பின்பே நானும், என் மனைவியும் உறங்கசெல்வோம். அத்தனை அருமையாக இருந்தது. உங்களுக்கு வாழ்த்துக்களும், உங்களது இலக்கிய பங்களிப்புக்கு இறை துணை நிற்க பிரார்த்தனைகளும். அன்புடன், ஜெயக்குமார்


அன்புள்ள ஜெயக்குமார்,

நான் எழுத ஆரம்பித்த கட்டம் முதல் ஒரு குறிப்பிட்ட தனித்தன்மை எனக்கு இருந்துள்ளது. பொதுவாக எழுத்தாளர்களின் எழுத்துக்கள்  கண்டடையப்படுவதற்கு நெடுநாட்கள் ஆகும். அதற்கு அவர்கள் விமரிசகர்களையும் இலக்கிய– அரசியல் அமைப்புகளையும் நாடவேண்டியிருக்கும்.  விருதுகள் அங்கீகாரங்கள் கிடைக்க மேலும் தாமதமாகும். ஆனால் நான் எழுதிய முதல் சில கதைகள் மூலமே விரிவான கவனத்¨ப் பெற்றேன். அங்கிகாரங்கள் விருதுகள் எல்லாமே மிகச்சிறுவயதிலேயே அமைந்தன.

அதற்கான முக்கியமான காரணம் நான் கதைசொல்லி என்பதுதான். என்னுடைய எந்தக்கதையையும் ஒரு நல்ல வாசகன் கதைச்சுவாரசியம் கெடாமல் வாசிக்கலாம். என் முதல் தொகுப்பு முதலே கதை என்ற அமைப்பில் எனக்கு இருக்கும் நம்பிக்கையை என் முன்னுரைகளில் சொல்லிவருகிறேன்.

எண்பது தொண்ணூறுகள் தமிழில் ‘கதை மறுப்பு’ காலகட்டம். வெறும் படிமங்களே போதும் என்று நம்பி  வெற்று மொழிவிளையாட்டுகளே இலக்கியம் என்று சிலர் முயன்றுவந்த காலம். என் கதைகள் அதற்கான திட்டவட்டமான மறுப்பாக இருந்தன. வரலாறு இலக்கியம் நாட்டாரியல் என பல தளங்களை தொட்டுவிரியும் கதைகளை நான் உருவாக்கினேன்.

மேலும் ஆன்மீகமான ஒரு தேடலை என் கதைகள் கருவாக ஆக்கியிருந்தன. மீண்டும் மீண்டும் இருத்தலியல் துயரத்தை போலிசெய்துகொண்டிருந்த சிற்றிதழ்ச் சூழலில் என் கதைகள் வலுவாக மாற்றாக இருந்தன. போதி படுகை போன்ற என் தொடக்க கதைகள் சாதாரணமாக சிறுகதைகள் உருவாக்காத பெரிய அதிர்வுகளை உருவாக்கின. அப்போதைய பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்கள் அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

‘அழகியலுக்குப் பதிலாக அரசியல்’ என்ற கோஷம் வழியாக இலக்கியத்தின் தனித்தன்மை நிராகரிக்கபப்ட்டு இலக்கியமும் ஒரு அரசியல் மட்டுமே என்று சொல்லபப்ட்ட காலகட்டத்தில் அதற்கு எதிராக இலக்கிய அழகியலை முன்னிறுத்தியவை என் கதைகள். இந்த கருத்துக்களை நான் எப்போதும்  நேரடியாக எதிர்கொண்டு தொடர்ச்சியாக விவாதித்தும் வருகிறேன்

இதன்மூலம் என் படைப்புகளுக்கு உருவான தனி வாசகர் வட்டமே என் மீதான தாக்குதல்களுக்கும் கசப்புகளுக்கும் காரணம். அத்துடன் நான் எனக்கு உவப்பில்லாத கருத்துக்களுக்கு எதிராக எப்போதும் திடமான குரலை எழுப்பியதும் சேர்ந்துகொண்டது.

ஆனால் என் தொடர்ச்சியான எழுத்து மூலம் என் வாசகர் வட்டம் விரிவடைந்தது. நான் சொல்லி வந்தவற்றை ஏற்கும் பரிசீலிக்கும் ஒரு தலைமுறை உருவாகி வந்தது. தொண்ணூறுகளில் ஆன்மீகம் என்றால் உடனே சாமிகும்பிடுதல் என்று புரிந்துகொள்ளும் ‘அரசியல்’ வாசகர்கள் இருந்தார்கள். இன்று அவர்கள் இல்லை.

என் எழுத்துக்கள் படிப்படியாக அவற்றின் இடத்தை உருவாக்கிக் கொண்டன. அப்படி உருவாகும் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்பின் வெற்றி தோல்வி உள்ளூர தெரிந்தே இருக்கும் என்று நினைக்கிரேன். ஆகவே எப்போதுமே எனக்கு எதிர்ப்புகளும் வசைகளும் ஒரு பொருட்டாகவே பட்டதில்லை

ஜெ

 

ஜெ:

இன்று மீண்டும் ”பின்தொடரும் நிழலின் குரலை” எடுத்து ஏதோ ஒரு அத்தியாயத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன். விஷ்ணுபுரம் உட்பட எந்த ஒரு நாவலும் இந்த அளவு என்னை ஆட்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனம் பதைப்பதை தடுக்க முடிவதில்லை. அருணாச்சலத்தின் கடைசி மனப்பிறழ்வுக்கு முன் அவன் கந்தசாமியிடம் (ரிஷி) பேசுவதை, பின்னர் ஊசி நுனியினால் சிறுகச் சிறுக ஏற்றப்படும் விஷத்தைப் போல சித்தாந்த சொல்விளையாட்டில் உடல் நினைத்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மனம் தெளிந்த மாய உறக்கத்தில் இருந்து  பதறி, படபடத்து ‘“அருணாச்சலம், மறந்திராத அருணாச்சலம்” என்ற குரல் கேட்டு எழும்பும் வரை உள்ள பகுதி அலாதியானது. ஒவ்வொரு முறை இந்தப் பகுதியைப் படிக்கும் போதும் புத்தகத்தையே என் முழுபலத்தோடு கிழித்து தூர எறிய வேண்டும் என்ற வெறி என்னுள் பெருகும். அதிலும்  அருணாச்சலம் பேசும் இந்தப் பத்தியை ஒவ்வொரு முறை படிக்கும் போது தீராத சுயவெறுப்பும், செயலின்மையும் என்னுள் வந்து கூடுகிறது.

”என்ன நடக்குதுன்னு சுற்றிலும் பார்க்கிறான் மனுஷன். வாழ்க்கை பிய்ச்சிகிட்டு ஓடுது. பரபரன்னு இருக்கு. புரியாக விழிக்கிறான். அப்ப அவனுக்குள்ள சாத்தான் கிசுகிசுக்க ஆரம்பிச்சிடறான். நீ பெரிய மேதை. உன் மூளை இந்த பிரபஞ்சத்தைவிடப் பெரிசு. உனக்குப் புரியாத ஒண்ணு உன்னைச் சுத்தி நடக்கலாமா? நல்லாக் கவனிச்சுப்பாரு. நல்லா ஒவ்வொண்ணா அடுக்கிப் பாரு. தெரிஞ்சிடப் போவுது. என்ன பெரிய வாழ்க்கையும் வரலாறும்! இங்க தானய்யா சித்தாந்தங்கள் பிறக்குது.ஒவ்வொரு மேதையும் தனக்குத் தெரிஞ்சமாதிரி வரலாற்றை அடுக்கிக் காட்டறான். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அடுக்கு. அகங்காரம் மேதமையோடு சேருறப்பதான் சித்தாந்தம் பிறக்குது. அகங்காரம் அறியாமைமோட சேருறப்ப அதுமேல நம்பிக்கையும் பிறக்குது”.

மனக்காழ்ப்புடைய வசை விமர்சனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த நாவலைச் சுற்றி பெரிய விவாதம் ஏதும் நடந்ததாக தெரியவில்லை. இந்த ஆதங்கம் எனக்கும் இருந்தது.  ஆனால், விவாதங்களால் அல்ல, மௌனத்தால் மட்டுமே இந்த நாவலை உள்வாங்க முடியும் என்று இப்பொழுது தோன்றுகிறது. பமுக் எழுதிய ‘மை நேம் இஸ் ரெட்’ போன்ற செறிவுள்ள, கலை-இலக்கிய-தத்துவ விசாரம் கொண்ட இந்திய நாவலுண்டா என்று என் அமெரிக்க இந்திய நண்பர்களின் கேலிப் பேச்சை கேட்கும் போது முன்னர் ஆவேசமாக விவாதிக்கப் போவேன். அவர்களின் சாதுர்யமான புறக்கணிப்பு அரசியலின் முன்னர் ஒவ்வொரு முறையும் தோற்றுத் தோற்று திரும்ப வருவேன்.  “In discourse, the unforced force of the better argument prevails’ என்று ஹாபர்மாஸ் சொல்வது எல்லாம் செல்லுபடியாகவில்லை. தர்க்கம் சுயஅடையாளத்தோடு பிண்ணிப் படர்ந்து இருக்கும் வரை விவாதங்களால் ஒரு பயனும் இல்லை. இப்பொழுதிலிருந்து மௌனம் தான்

ஒன்று மட்டும் செய்யலாம். பஷீரை மொழிபெயர்த்த ஆர்.ஈ.அஷேர் போன்ற திறனுள்ள மொழியாக்க அறிஞரைத் தேடி கண்டுபிடிக்கலாம். புறநாநூறிலும், குறுந்தொகையிலும் மூழ்கி்த் திளைக்கும் ஆத்மாக்களை கொஞ்சம் நாகர்கோவிலுக்குச் சென்று வர ஏற்பாடு செய்யலாம். அதைத் தவிர செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. உரையாடி, உரையாடி… வலைபூக்களின் ஆக்கப்போர்களின் ஈடுபட்டு, குழுமங்களிலும் விவாதித்து..வன்கவிதைகள் எழுதி… டிவிட்டரில் வம்பரசியல் பேசி.. வேறு எதுவும் செய்வதற்கில்லை.  சுந்தர ராமசாமி சொன்னார் என்று நினைக்கிறேன் – ‘நம் இலக்கியத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல நமக்கு வக்கனை இல்லை’. ‘நமக்கு’ என்று சொன்னது அவரது பெருந்தன்மை.

வாசகனாக ஒரு படைப்பாளியின் முன் தலைகுனிந்து நிற்கிறேன்.

-அரவிந்த்

 

அன்புள்ள அர்விந்த்

நன்றி

நான் எப்போதுமே சொல்லிவரும் ஒரு விஷயம் உண்டு. நான் எழுதுவது தமிழ் வாசகர்களுக்காக. அவர்கள் வாசிக்கும்போதே தமிழ்ப்படைப்பு முழுமை பெறுகிறது. தமிழ் வாசகர்கள் வாசிக்க வேண்டுமென்பதே உஅனடிக் கனவு. தமிழர்களில் 10 சதவீதம் பேர் என் படைப்பை வாசிப்பார்கள் என்றால் எனக்கு கிட்டத்தட்ட ஒருகோடி வாசகர்கள். அதன்பின் என்ன குறை?  உலக அங்கீகாரம் ப்போது தானாகவே தேடிவரும்.

உலக அங்கீகாரம் என்பது ஒரு படைப்புக்கு மட்டுமாக எளிதில் வராது. அந்தபப்டைப்பு காலூன்றி நின்றுகொண்டிருக்கும் பண்பாட்டுத்தளமும் உலகளாவ அறிமுகமாகவேண்டும்– ஜப்பானிய, சீன பண்பாடுகளைப்போல. அப்போதுதான் அப்படைப்பு உலகளாவிய வாசகரக்ளுக்கு புரியும். இந்திய அளவில் அது நிகழவே இல்லை. ஆகவேதான் இங்குள்ல சில விஷயங்களை எடுத்துக்கொண்டு மேலைவாசகர்களுக்காக மறு சமையல்செய்யபப்டும் இந்திய ஆங்கில நூல்கள் அங்கே சென்றுசேர்கின்றன

இந்தியர்கள் உலகமெங்கும் இந்தியப்பண்பாட்டைக் கொண்டு செல்லும் நாளில்தான் இந்திய இலக்கியமும் சென்றுசேரும். அதுவரை சிவராம காரந்த் இருட்டில் இருபபர் அர்விந்த் அடிகா புகழ்பெறுவார்.

ஆனால் நம்மவர்கள் அவர்களின் தாழ்வுணர்ச்சியால் ஆங்கிலத்தில் வாசிக்கும் ஆக்கங்கள் மேல் விசித்திரமான பிரமிப்புடனும் இந்திய எழுத்துக்கள் மேல் அதேபோன்ற இளக்காரத்துடனும் இருக்கிறார்கள். எனக்கே தாங்கள் ஆங்கிலத்தில் சிலவற்றை வாசித்து ‘தொலைத்து’ விடதனால் தமிழிலக்கியம் பெரிதாகத் தெரியவில்லை என்று எழுதியவர்கள் உண்டு. அது நம் கல்விமுறை உருவாக்கும் கோளாறு. அந்து நீடிக்கும் வரை குறைந்தது அரைநூற்றாண்டுக்காலம் இந்திய இலக்கியம் இருட்டில்தான் இருக்கும்

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.
நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் (இணையம் மூலமாக தமிழிலும் கூட!). சில வருடங்களுக்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்திருந்த போது நானும், என் நண்பர் பாலாவும் சந்தித்திருக்கிறோம். அப்போது நீங்களும் உங்கள்
மனைவியும் தமிழ் முறைப்படி வணக்கம் செய்தது ஆச்சரியமான, எதிர்பாராத ஒன்று (that was very cute). அக்காட்சி புகைப்படம் போல் மனதில் இருக்கிறது. தமிழ் வணக்கத்தையே மறந்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

ஊருக்கு வரும் போது நேரில் பேச வேண்டும் என்று நினைத்திருந்ததை இப்போது எழுதுகிறேன்…

சிங்கப்பூர் வந்த புதிதில் இங்குள்ள நூலகங்களில் பார்த்த ஓஷோ, ஜே.கே, மற்றும் ஆன்மீக புத்தகங்களையே தேடி வாசித்து கொண்டிருந்த எனக்கு, வாசிப்போம் இயக்கம் பார்வைக்கு வைத்திருந்த அசோகமித்ரனின் ஒற்றன் நாவல்
மூலம், எழுத்தாலான உலகம் ஒன்று இருப்பது தெரிந்து ஆச்சர்யமாக இருந்தது..

அதன் பின் ஏதேச்சையாக சந்தித்த பக்கத்து ஊர் நண்பர் பாலா கேட்டார், நமது மாவட்ட எழுத்தாளர்களான  சுந்தர ராமசாமி, ஜெயமோகனை தெரியுமா என்று. இந்த  பெயர்களை நான் கேள்விப்பட்டதேயில்லை என்றேன். அதன் பிறகு உங்களை
நூலகங்களில் தேடியபோது கிடைத்தது காடு-ஜெயமோகன். பத்து வருடங்களுக்கு மேலாக வெளியூரில் வசிப்பதால் ஏறக்குறைய மறந்திருந்த வட்டார பேச்சு வழக்கை மறுபடி கேட்க நேர்ந்த போது புன்னகையும், சிரிப்பும் மாறி மாறி வந்தது.  பக்கங்கள் செல்ல செல்ல குறைந்தது ஒரு அத்தியாயத்துக்கு இரு முறையாவது
பின் அட்டையில் இருந்த உங்களை பார்த்து புன்னகைத்து எனக்குள்   சொல்லிக்கொண்டது, எப்படி இவரால் இவ்வாறு எழுத முடிந்தது என்று. இதுவே பின் தொடரும் நிழலின் குரலை வாசிக்கும் போதும் தொடர்ந்தது. ஏழாம்  உலகத்தில் உஙகள் புகைப்படம் இல்லாதது வருத்தமே, பதிப்ப்கத்தார் செய்த சதி என்றே நினைக்கிறேன் !. விஷ்ணுபுரம், கொற்றவை இன்னும் படிக்கவில்லை.  உங்கள் எழுத்துக்களை படிப்பதன் மூலம் உஙகளை ஒரு குருவாகவே உணர்கிரேன்.
ஓஷோவின் புத்தகங்களை படிக்கும் போதும் இதைப்போல் உணர்ந்திருக்கிரேன்.

அதன் பிறகு சுந்தர ராமசாமி, தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், மாதவன் எழுத்துக்களை தேடி வாசித்த போது, என்னுடைய உலகம் மேலும்  விரிவடைந்து பல முடிவிலா கதவுகளை திறந்து கொண்டது. தமிழ் இலக்கிய உலகத்தை அறியும் தோறும் மேலும் தன்னை விரித்துக் கொண்டே செல்கிறது.

காடு, வாசித்த பிறகு பாலாவை சந்தித்து கேட்ட முதல் கேள்வி, ஏன் நமது  மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றி நம்மில் பெரும்பாலோர்க்கு  தெரியவில்லை ?!. நாம் தான் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன். நடைமுறை சிக்கல்கள் புரிந்தாலும் அதை மனம் எற்க மறுக்கிறது. ண்முன்னே இப்படி ஒரு உலகம் இருக்கிரது என்ற ப்ரக்ஞையே இல்லாமல் அனைவரும்
சென்று கொண்டிருப்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

கன்யாகுமரி மாவட்ட நூலகங்களின் நிலைமையை ஒரு முறை மிகச்சரியாகவே  கூறியிருந்தீர்கள். அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள எங்கள் ஊரில் (கோட்டவிளை) நூலகம் என்பது இரண்டு பெஞ்ச்களும், தினமலரும் தான். பக்கத்து ஊரான மருங்கூரில் நல்ல முறையில் இருந்தது ஆனால் இப்போது எப்படி   இருக்கிறது என்று தெரியவில்லை. அரசு கிராமப்புர நூலகங்களுக்கு பணம்
ஒதுக்குகிறதா? அது எங்கு செல்கிறதென்றும் தெரியவில்லை. இதைப்பத்தி நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் பேசுகிறோம் ஆனால் என்ன செய்வது என்று  புரியாமலும் இருக்கிரோம்.

சொல்ல வந்ததை எனக்கு தெரிந்த வார்த்தைகளில் கூட்டாஞ்சோறு வைத்து  குளப்பியிருக்கிறேன்.தவறுக்கு மன்னியுங்கள். பல வருடங்கள் கழித்து  தமிழில் எழுதுவதால் குறில், நெடில், மற்ற அனைத்தும் சரியாக வராமல்
அவ்வப்போது மனம் திடுக்கிட்டது. தெரிந்த அனைத்தும் ஒரு நாள் மறந்து போகுமா என்று யோசிக்கும் போது பயமாக இருக்கிரது.

உங்கள் நேரத்திற்க்கு மிக்க நன்றி.

அன்புடன்
சேகர்.
Technology Consultant
SG.

முந்தைய கட்டுரைஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா பயணம்