மதிப்பு மிகு ஜெயமோகனுக்கு
வணக்கம்
உங்கள் வலைப்பூவில் என்னைப்பற்றிய பதிவைப்படித்தேன். இன்னும் கொஞ்சம் இளமை பூத்தது.நல்ல எழுத்து மனித மனத்துக்கு ‘கூட்’டுப்பசளை’ போல.
படிக்கும் தோறும் நினைக்கும் தோறும் கொத்துக்கொத்தாய் பூத்துக்குலுங்கும் மனசு. அத்தகைய எழுத்துக்களின் சொந்தக்காரர் அல்லவா நீங்கள்.யானை டாக்டர் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.
என்ன சொன்னீர்கள் விவசாயம் விஷக்கன்னியா?உண்மைதான் வெள்ளாப்பில் எழுந்து வாப்பாவின் கைப்பிடித்து தோணியில் ஆற்றைக்கடந்து வயலுக்குப்போன முதல் நாள் எந்த நாளோ என்ன நட்ஷத்திரமோ நானறியேன் ?
வயலும் பயிரும் எனக்கு தீராக்காதலி போல. லா.ச.ரா என்னிடம் ” எழுத்தை வேசி என்பேன். உயிரையே குடிக்கும் வேசி என்பேன் ” என்றார்.
1980க்குப்பிறகு வயல் வாழ்வும் இப்படித்தான்.என்னதான் பசுமைப் புரட்சி வந்தாலும் விவசாயியின் வாழ்வு தூக்குக்கயிற்றில் தொங்கும் வாழ்வுதான்.ஆனாலும் நீங்கள் சொன்னீர்கள் அங்கு ஐந்து இரப்பர் மரம் இருந்தால் இரு நூறு வருமானம் என்று.உங்களுடனான உரையாடலில் மனசு குளிர்ந்த சங்கதிகளில் அதுவும் ஒன்று.
இங்கு இலங்கையில் ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு நூறு ரூபா. ஒரு கிலோ நெல் இருபது ரூபா.யாரிடம் சொல்லி சிரிப்பது.அங்கு கேரளத்தில் நிறைய மரவள்ளி சேனைகளைப்பார்த்து மகிழ்ந்தேன்.
சமீப நாட்களாக உங்கள் கதைகளைக்காணவில்லையே ! மெய்தான் லா.ச.ரா என்னை வைத்து ஒரு கதை எழுதினார்.1990களில் தினமணிக்கதிரில் பிரசுரமானது.”சங்கு புஷ்பம்” ஒரு கதையில் இரண்டு நிகழ்வுகள். ஒரு சிறீலங்கன் என்னைத்தேடி வந்தார் என்ற பகுதி என்னைப்பற்றியது .அவரைத்தேடிச்சென்ற ஒரே இலங்கையனும் நான்தானாக்கும்.
இன்று ஆபிதீன் பக்கங்களில் அம்ரிதா ஏ.யெம் தொகுதியிலிருந்து குளம் கதை வலையேறுகிறது.நான்கு வரியில் உங்கள் எண்ணத்தைப் பதிவு செய்யுங்களேன்.
நான் மீண்டும் உங்களைப் படிக்கத்தொடங்குகிறேன்.எனது மேசையில் 1995 இல் ஸ்நேகா கொண்டு வந்த மண்தொகுதியும், இரப்பர் நாவலும் .
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா.
அன்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்குப் பதில் அனுப்பியதில் ரொம்ப சந்தோஷம். எல்லோராலும் முடிவதில்லை. என்னளவில் மட்டுமல்ல, என்னைப் போல் பலரின் மனத்தில் ஜெயமோகன் என்கின்ற மானிடச் சுடர் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். தேக சௌக்கியத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வேண்டியே மீண்டும் நான் பார்வதிபுரம் வருவேன்.
இன்று காலையில் நானும் பாரதி மணி ஐயா அவர்களும் பூர்வீக பார்வதி புரம் பற்றிப் பேசிக் கொண்டோம். அவர் மனத்தில் அவரின் உசுக்குட்டிப் பருவ பார்வதி புரம் ஒரு அழகான கவிதையாக ஓவியமாக ஒட்டிக் கிடக்கிறது. தொலைபேசியில் தனது கிராமத்தைப் பறிகொடுத்த ஆற்றாமை அருவியாகக் கொட்டியது. ஒவ்வொரு கிராமங்களும் இவ்வாறுதான் அழிந்து போகிறது. நான் வாழ்ந்த கிராமத்தில் பிரமாண்டமான விருட்சங்கள் ஆங்காங்கே விண்ணை நோக்கி எழுந்து நின்றன. அந்த விருட்சங்கள் இருந்த இடத்தில் மாடி மனைகள் விண்ணை நோக்குகிறது.
விடை பெறுகிறேன்.
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா
குறிப்பு: அம்ரிதா ஏயெம்மின் கதை பற்றி எனக்கு ஒரு குறிப்பு எழுதுங்களேன். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அவனுடைய பயணம் சரிதானா என்பதை அறிவதுதான் எனது ஆசை.
அன்புள்ள ஹனிபா அவர்களுக்கு,
நன்றி
மணியின் பார்வதிபுரம் கொஞ்சம் தாமதமாக மாறிக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான். நினைவுகளில் உள்ள ஊர்களே எப்போதுமே அழகானவை.அம்ருதா இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்கிறேன்
ஜெ