இன்றைய நடுவிரல் பதிவு குறித்து நண்பர்களிடையே கொஞ்சம் தீவிரமான உரையாடல் நடந்துக்கொண்டிருக்கிறது. அதில் ஆதாரமானதாக எனக்கு தோன்றும் ஒரு கேள்வியை உங்களிடம் முன்வைக்கிறேன்.
பகடியின் முக்கியத்துவத்தை நீங்கள் விரிவாக பேசியுள்ளீர்கள்.. பகடி கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள்.. ஆனால் உங்கள் பார்வையும் மாறிக்கொண்டு வந்துள்ளது…
பகடி குறித்த பழைய பதிவில்…
பகடி ஒரு ஜனநாயகச்செயல்பாடு. கருத்தியல் அதிகாரம் நேரடி வன்முறையை இழந்து உரையாட முன்வரும்போது அதுபகடியை அனுமதிக்கிறது. புன்னகைக்கும் அதிகாரமே ஜனநாயகம் காணும் ஆகப்பெரிய கனவு. அதுபகடிமூலம் நிறைவேறுகிறது என்று சொல்லலாம். .. .. பகடிஉண்மையில் கருத்தியல் அதிகாரத்துக்கு எதிரான ஒரு சமூகத்தின் எதிர்வினை .. பகடிஎளிமையான, ஒடுக்கப்பட்ட, அடித்தள மக்களின் ஆயுதமும் கூட.
என கூறியிருக்கிறீர்கள்..
ஆனால், 2020ல் இளிப்பியல் என்ற கட்டுரை, இன்றைய உங்கள் பார்வையை ஒற்றி அமைந்திருந்தது… “அடிப்படையில் இந்தக் கேலி மாற்றத்துக்காக நிலைகொள்பவர்களை காலி செய்வதில்தான் சென்று முடியும். சீரிய அரசியல் பிரச்சினைகளை பேசமுடியாமலாக்கும். மேலோட்டமான இளிப்பை மக்களுக்கு அளித்து அவர்களை அமரச்செய்துவிடும்” என கல்பற்றா நாராயணன் கூறியதை பகிர்ந்திருந்தீர்கள்.. அன்றே..
நான் கேலியை, பகடியை எதிர்க்கவில்லை. அது என்றுமிருக்கும். ஆனால் இன்றிருப்பது கேலியோ பகடியோ அல்ல வெற்று இளிப்பு. கேலியிலும் பகடியிலும் ஒர் அறிவுத்தன்மை இருக்கும், நாம் யோசிப்பதற்கு ஏதாவது இருக்கும். இளிப்பு வெறும் காழ்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறது. கேலியிலும் பகடியும் சற்று நன்னோக்கம், நாகரீகம் இருக்கும். இளிப்பு காறித்துப்புவதுபோல.
–என கூறியிருந்தீர்கள்…
இன்றைய பதிவில் நடுவிரல்
மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழியாக திட்டமிட்டு நுணுக்கமாக உருவாக்கி உலகமெங்கும் பெரும்பொருட்செலவில் ஏற்றுமதி செய்யப்பட்டவை. நிதிக்கொடைகள் வழியாக கீழைநாட்டுப் பல்கலைகளில் நுழைக்கப்பட்டவை.
–என பகடியை கூறுகிறீர்கள்… பின் நவீனத்துவ பகடியை ஒரு சதி கோட்பாடாக முன் வைக்கிறீர்கள்.
இவற்றின் இடையே உள்ள வித்தியாசம் எனக்கு ஓரளவிற்கு புரிகிறது.. ஆனாலும் நீங்கள் இதை விவரித்தால் இன்னும் தெளிவாக இருக்கும் என்பதால் கேட்கிறேன்..
பகடி.. vs ஏளனம்.. இளிப்பு spoof.. vs பின் நவீனத்துவ பகடி எனும் மோஸ்தார்.. இவற்றினிடையேயான வித்தியாசம் என்ன?
இன்று இந்த முதலாளிகளை அறிவார்ந்து நுண்மையான பகடி செய்தால் அது உங்களுக்கு ஏற்பா??
அன்புடன்
சந்தோஷ் சரவணன்.
அன்புள்ள சந்தோஷ்
இந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நிலையில் இருந்து சொல்லியிருக்கிறேன். பகடி பற்றிய என் பார்வை என்பது இங்கே பல நூறாண்டுகளாக இருந்து வந்தது.
நான் கேரளச் சூழலில் வளர்ந்தவன். கேரளத்தின் செவ்வியல்கலைகளில் முதன்மையானதான சாக்கியார் கூத்து, ஓட்டன் துள்ளல் ஆகியவை முழுக்க முழுக்க பகடிக்கலைகள். கதகளியிலும் பகடி உண்டு. அந்தப் பகடி அரசை, மத அதிகாரத்தை பகடி செய்யும் உரிமையைத் தான் எடுத்துக்கொண்டது. அரசனோ, மத மேலாதிக்கமோ கோபம் கொள்ள முடியாது. சாக்கியார் அல்லது துள்ளல் கலைஞர் கலையின்போது சொன்னவை அந்த தருணத்தின் தெய்வங்களே சொன்னவை. அவர் தன் ‘முடி’யை கழற்றிவிட்டால் தெய்வசாபம் வந்து நாடு அழியும் என்பது நம்பிக்கை.
வரலாறெங்கும் பகடி அதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டக் கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் சமூக அதிகாரம் என்பது கருத்தியல் வழியாக நிலைநிறுத்தப்படுவது. கருத்தியல் தன்னை நம்பிக்கைகளாகவும், ஆசாரங்களாகவும் ஆக்கிக்கொண்டு செயல்படுகிறது. பகடி அந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் தலைகீழாக்கம் செய்கிறது. விளைவாக அதிகாரத்தின் செயல்முறையை வீரியமிழக்கச் செய்கிறது. இந்தக்கோணத்திலேயே நாம் ஔவையை, காளமேகப்புலவரை, இரட்டையரை, ஆண்டான் கவிராயரை முதன்மையான கவிஞர்களாக நினைக்கிறோம். அவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை ஏற்கிறோம்.
உலகமெங்கும் நவீன இலக்கியம் உருவானபோது பகடிதான் முதன்மையாக எழுதப்பட்டது. ஜெரோம் கே ஜெரோம், ஸ்டீவன் லீகாக் தொடங்கி பிரிட்டிஷ் பகடி எழுத்தின் இலக்கிய இடம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. அமெரிகக எழுத்தில் மார்க் ட்வைன் பகடி எழுத்தின் முதன்மைப்பெயர். செக்காவ் எழுதிய பகடிப் படைப்புகள் உலக இலக்கியத்தின் உச்சங்களில் வைக்கப்படுபவை. அனைத்துக்கும் மேலாக செர்வாண்டிஸின் டான் குவிசாட். உண்மையில், கலிவரின் பயணங்கள், அற்புத உலகில் ஆலீஸ் போன்றவைகூட எழுதப்பட்டபோது பகடிகளாக உத்தேசிக்கப்பட்டவை என்பார்கள்.
தமிழில் தொடக்ககால எழுத்திலேயே பகடி ஆற்றலுடன் வந்தமைந்துவிட்டது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மாதவையா இருவருமே மிகச்சிறந்த பகடிகளை எழுதியுள்ளனர். பாரதியின் ஞானரதம், சின்னசங்கரன் கதை போன்ற படைப்புகளிலுள்ள பகடி மகத்தானது. அதன் தொடர்ச்சியே புதுமைப்பித்தன். பின்னர் சுந்தர ராமசாமி வரை வந்தமைந்தது அப்பகடி. கவிதையிலும் புதுமைப்பித்தன் முதல் ஞானக்கூத்தன் வரை பகடியின் அழகிய வண்ணங்கள் உள்ளன.
என் முதற்கட்ட கருத்து அந்த புரிதலை ஒட்டியது. பின்நவீனத்துவம் மேலைநாட்டில் உருவானபோது அது முன்னெடுத்த பகடியும் இந்தவகையான அதிகார எதிர்ப்பு – கருத்தியல் சிதைப்புத் தன்மை கொண்ட பகடியே. ஆகவே அதை உலகமெங்கும் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அது என்றுமிருக்கும் பகடி இலக்கியம் இன்னும் கூர்மைகொண்டு முன்னெழுவது என நினைத்தனர்.
ஆனால் பின்நவீனத்துவம் மிகமிக எளிதாக இலக்கியவாதிகளில் இருந்து மேற்கத்திய கல்விநிலையங்களால் ‘கடத்திச் செல்லப்பட்டது’. தோன்றிய சில ஆண்டுகளிலேயே அதன் வரையறைகள் உருமாற்றம் அடைந்தன. ‘எல்லாவற்றையும் பகடி செய்தல்’ ‘பகடியை ஜனநாயகப்படுத்தல்’ என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பகடியே புனிதப்படுத்தப்படாலாயிற்று. இன்றும் பாருங்கள், மிக எளிதாகப் புண்படுபவர்கள் பகடி எழுத்தாளர்களே. நான் இரண்டாம்நிலையில் சுட்டிக்காட்டியது இந்த திசைமாற்றத்தையே.
இதை இப்படி ஒப்பிடுவேன். வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புக்கு அவசியமானவை. அவை உள்ளே வரும் கிருமிகளை எதிர்த்து அழிப்பவை. ஆனால் ஒரு வகை புற்றுநோயால் அவை கட்டுக்கடங்காமல் பெருகி உடலின் செல்களையே அழிக்க ஆரம்பித்தால் அது உயிர்க்கொல்லி நோய். இன்று பகடி அப்படி ஆகிவிட்டிருக்கிறது.
இன்று பகடி ஓர் இலக்கிய உத்தி அல்ல. ஒரு பொதுமக்கள் மனநிலை. பின்நவீனத்துவத்தை கடத்திச்சென்ற மேலைக் கல்வியாளர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப, நிகழ்த்தியது இதையேதான். இந்த மாற்றத்தையே என் இப்போதைய குறிப்பில் சுட்டிக்காட்டுகிறேன். சென்ற பல ஆண்டுகளாக நான் உணர்ந்ததும், அவ்வப்போது எழுதியதும்தான். ஆனால் இன்று டேவிட் ஃபோஸ்டர் வாலஸ் போன்ற பின்நவீனத்துவத்தை கடந்தவர்கள் அதைச் சொல்லும்போதே இன்னும் திட்டவட்டமாகப் புரிகிறது.
அரசும் அரசியல்வாதிகளும் இன்று கிண்டலடிக்கப்படுகிறார்கள், ஆனால் அரசும் அரசியல்வாதிகளும் அதை பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் அரசு இன்று கருத்தியல் சார்ந்து தன் அதிகாரத்தை உருவாக்கவோ தக்கவைக்கவோ இல்லை. இன்றைய அதிகாரம் முழுக்கமுழுக்க பொருளியல் சமரசங்களால் ஆனது. அரசு மக்களைச் சுரண்டும்பொருட்டு மக்களில் ஒரு சாராருக்குச் சலுகைகள், அதிகாரப்பகிர்வு வழியாக அவர்களை தன் கருவியாக்கிக் கொள்கிறது. மொத்த மக்களுக்கும் எதையோ ஒன்றை சலுகையாக விட்டெறிகிறது. அதன் பொருட்டே மக்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இன்றைய அரசதிகாரம் என்பது இயற்கையின் வளங்களை, தொழில்களின் லாபத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொதுப்புரிதலால் உருவாவது. அதாவது, இன்றைய நவீன அரசு என்பது மக்களும் அரசும் இணைந்து தொழில்நுட்பம் வழியாக நிகழ்த்தும் இயற்கைக்கொள்ளையும் பங்கிடலும்தான். இன்றைய சுரண்டலும் ஊழலும் ஒட்டுமொத்தமாக மக்களின் ஊழலும் சுரண்டலுமேதான். மக்களிடம் அரசுக்கு எதிராக எந்த அறச்சீற்றமும் இன்றில்லை. உரிய பங்கு வரவில்லை என்னும் கோபங்களும் பூசல்களுமே அவ்வப்போது உள்ளன
இந்நிலையில் கருத்தியலுக்கு எதிரான பகடிக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. அது எந்த அதிகாரத்தையும் எதிர்ப்பதில்லை. மாறாக அது மக்களை அறிவார்ந்தும், மெய்யியல் சார்ந்தும் இணைக்கும் ஆக்கபூர்வமான கருத்தியல்களையே தாக்கி அழிக்கிறது. அதாவது, மக்களிடையே உள்ள அறவுணர்ச்சியை எதிர்த்து அழிக்கிறது. தாங்கள் பாதிக்கப்படும்போதுகூட, அந்த பாதிப்புக்கு எதிரான சீற்றத்தைக் கொள்ளக்கூட முடியாதவர்களாக அவர்களை ஆக்குகிறது. இதுதான் பகடி என்னும் புற்றுநோய் என்று சொல்லும் நிலை.
இன்றைய பொதுமனநிலை எல்லாவகையான நேர்நிலைச் செயல்பாடுகளையும் ஏளனமாகப் பார்க்கிறது, பகடி செய்கிறது. மக்கள் ஏற்புக்காகவோ, அல்லது அந்த பொதுமனநிலையின் பகுதியாக நின்றோ அதையே செய்யும் சராசரித்தனம் கொண்ட எழுத்தாளர்களும் இன்று ஏராளமாக உள்ளனர். எல்லாவகையான அறங்களும் கேலிப்பொருளாகின்றன. தியாகங்கள் அர்த்தமற்றவை ஆகின்றன. வரலாறு ,பண்பாடு, மரபு எல்லாமே பகடிக்கான கச்சாப்பொருட்களாகிவிடுகின்றன.
அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, கருத்துக்கள் இந்தப் பகடிகளால் சிதறடிக்கப்படுகின்றன. எந்த கருத்தும் ஒரு வாரத்துக்குள் வெறும் ‘மீம்’ ஆக மாறிவிடுகிறது. ஒருவாரம் கடந்தால் எதற்குமே எந்த முக்கியத்துவமும் இல்லாமலாகிவிடுகிறது. எவரும் எதையுமே பேசமுடியவில்லை. நாமனைவருமே இந்த பகடிவெளிக்குள் நீருக்குள் வாழ்பவர்கள் போல் இருக்கிறோம். நாம் பேசுவதெல்லாமே வெறும் குமிழிகளாக வெளிவந்து மேலே சென்று உடைந்து அழிகின்றன. நான் சுட்டிக்காட்டுவது இச்சூழலையே.
இதை இன்றைய அரசியல்வாதிகள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இணைய அணிக்கள் உருவாக்கப்பட்டு எல்லா தரப்புகளும் மாறிமாறி பகடி செய்யப்படுகின்றன.அரசியல் கட்சிகளின் மாபெரும் ‘மீம் தொழிற்சாலை’ கள் செயல்படுகின்றன. இன்று அறியப்படும் அரசியல்பேச்சாளர்கள், ஊடகவியலாளர்கள் எல்லாருமே அந்த தொழிற்சாலையின் இயந்திரங்களே. தனிநபர்களின் கருத்துக்கள் இந்த மாபெரும் இயந்திரங்கள்முன் நிற்கவே முடியாது.
இன்று யூடியூபில் இன்றைய இளைஞர்கள் எதையேனும் பார்க்கவேண்டும் என்றால் ஒவ்வொரு வரிக்கும் நடுநடுவே வடிவேலு, கவுண்டமணி ‘பஞ்ச்’களை போட்டு அதை மலினமான ‘காமெடி’யாக ஆக்கியே ஆகவேண்டும். மிக எளிய அன்றாட அவசியச் செய்திகளை மட்டுமல்ல எளிய பயனுறு தகவல்களைக்கூட அப்படி அளித்தால்தான் பார்க்கமுடிகிறது அவர்களால். பல லட்சம் ‘ஹிட்’ கொண்ட எல்லா காணொளிகளும் அப்படித்தான் உள்ளன. பத்து நிமிடம்கூட எதையாவது தீவிரமாகச் சொல்லும் எதையும் எவரும் பார்ப்பதில்லை.
இன்று பார்த்த ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். மினு முனீர் என்னும் பெண்மணி கேரளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கையை ஒட்டி உருவான விவாதத்தில் மலையாளத் திரைப்பிரபலங்கள் எப்படியெல்லாம் பெண்களைச் சுரண்டினார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவர் சினிமாவை விட்டுச்சென்றுவிட்டார். அதிர்ச்சி, அருவருப்பு, ஆத்திரம் வரவழைக்கும் பதிவுகள் அவை. பெண்கள் மேல் மதிப்புள்ள எவரையும் கொதிக்கச் செய்பவை. பெண்களைப் பெற்ற தந்தையரை பற்றி எரியச் செய்பவை.
ஆனால் அந்த மூலக் காணொளியை இன்று தேடிப்பிடிக்கவே முடியாது. அது மிகமிக பின்னால் சென்றுவிட்டது. பதிலாக அந்தப் பெண்மணி பேசிய ஒவ்வொரு வரிக்கும் மலையாள சினிமாவின் ஒற்றைவரி நையாண்டிகளை இணைத்துப்போட்டு வெளியிடப்பட்ட காணொளிகள் பற்பல லட்சம் ‘ஹிட்’களுடன் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. அந்தப்பேட்டி துண்டு துண்டுக் காணொளிகளாக ஆக்கப்பட்டு பல்லாயிரம் மீம்களாக மாற்றப்பட்டுவிட்டது. அவை அந்த மூலக்காணொளி உருவாக்கிய எதிர்ப்பை ஒரே வாரத்தில் அழித்து அனைத்தையும் கேலிக்கூத்தாக்கிவிட்டன. அந்த காணொளிகளுக்குக் கீழே உள்ள எதிர்வினைகளிலுள்ள நையாண்டி எல்லாம் பைத்தியம் பிடிக்கச் செய்யும் அபத்தம்.
இதைப்பற்றி ஓரு மலையாள எழுத்தாளரிடம் பேசினேன். அவர் தொடர்ச்சியாக முகநூலில் மீம் பகிரும் ஆளுமை. “இல்லேன்னா நம்மளை பூமர்னு இன்னிக்குள்ள பிள்ளைங்க சொல்லிடுவாங்க” என்றார். “அந்த அற்பச்சருகுகள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று நிற்க தைரியம் இல்லை என்றால் ஏன் எழுதவரவேண்டும்?” என்று நான் சீற்றத்துடன் சொன்னேன். “அடிப்படை அறிவுள்ள ஐந்துபேர் அவங்களிலே இருந்து நம்மை வாசிச்சா போதும். அவங்க மட்டும்தான் நம்ம வாசகர்கள்” என் நிலைபாடு அதுவே.
ஜெ
அஜிதன் உரையாடல் – பின்நவீனத்துவம் பற்றி