சிற்பம், போர்- ஶ்ரீராம்

அன்பு ஜெ

ஹம்பி கிருஷ்ணர் கோவிலில் கண்ட காட்சி. பாதிக்கு மேல் இடிப்பட்ட நிலையில் இருக்கும் கோபுரத்தின் (மொத்த ஹம்பியே இடிபாடுகளின் நிலம் தான்) கீழ் நிலையில் வீரர் கத்தி கேடயம் சுமந்து, புரவி விரையும்

போர் வர்ணனை. அதன் மேல் தளத்தில் தலைவனும் தலைவியும் உறவு கொள்ளும் காட்சி. இரண்டையும் ஒரு சேர பார்த்த போது முழு சங்க காலத்தையும் கண் முன் கண்ட உணர்வுஅகமும் புறமும். A.K.Ramanujan Poems of Love and War நூலில் வாசித்த ஒரு கவிதை நினைவிற்கு வந்தது.

சிற்றில் நல் தூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டு உளனோ?’ என வினவுதி; என் மகன்

யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

கிருக்ஷ்ணதேவராயர் 1513 CE உதயகிரி நாட்டின் மீது போர்கொண்டு வென்றதை கொண்டாடும் விதமாக கட்டப்பட்ட கோவில். பாடல் புறநானூறு காவற்பெண்டின் பாட்டுஇரண்டிற்கும் ஆயிரம் ஆண்டிற்கு மேல் தொலைவு. போர்சமூகம் வீரமும் காதலும் விழுமியங்களாக கொண்டு உருவாகி வந்தது தெரிகிறது

இருந்தும் ஒரு நெருடல். போரின் இரு புறமும் தலைவனுடன் இணைந்து பிள்ளை பெற்று இறக்க அனுப்பும் கல்குகையாக பெண் இருக்கிறாள். ஒரு புலி நுழைந்து இன்னொரு புலி உருவாக்கும் எந்திரம். டால்ஸ்டாய் சொன்னது போல அனைத்தும் பீரங்கி தீவனம்

நல் தூண் பற்றி என்கிறாள். அவள் வீட்டின் தூண்கள் ஒவ்வொன்றாக போர்க்களம் நோக்கி அல்லவா சென்று கொண்டிருக்கிறது. தூணில்லாக்காலி கற்குகையாக அன்னை நிற்கிறாள்

மற்றொரு பாடல்:

கெடுக சிந்தைகடிது இவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,

யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,

பெரு நிரை விலக்கிஆண்டுப்பட்டனனே;

இன்றும் செருப்பறை கேட்டுவிருப்புற்று மயங்கி,

வேல் கைக் கொடுத்துவெளிது விரித்து உடீஇப,

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

ஒரு மகன் அல்லது இல்லோள்,

செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

எஞ்சி இருக்கும் ஒரு மகனின் தலையில் எண்ணெய் வைத்து மயிர் சீவி போர்களம்/படுகளம் அனுப்பும் அன்னை ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி இருப்பாள் அல்லவாநீங்கள் குறள் உரையில் சொன்னது நினைவிற்கு வந்தது:

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

இக்கோபுரங்கள் இன்று இடிபாடுகளாக தேய்ந்திருப்பதன் காரணம் என்றோ விடுத்த அன்னையரின் ஆற்றாத கண்ணீர் என்றே எண்ணத்தோன்றுகிறது

ஓநாயின் மூக்கு கதையின் முடிவு:

“1730 ல் நடந்ததற்கு 1987 ல் இப்படி பதில் வந்திருக்கிறதுஎன்றார் குமாரன் மாஸ்டர்

இப்போது நடந்ததற்கு இனி எப்போது பதில் வரும்?” என்று ஸ்ரீதரன் கேட்டான்

மகனே ஸ்ரீதரா, எல்லாவற்றுக்கும் பதில் உண்டு. சிவன்பிள்ளையின் குடும்பம் அந்த ரத்தபழியை அதுவே 

தேடிச்சென்று வாங்கி அப்படியே தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறதுஅதை தலைமுறை தலைமுறையாக சுமந்துசெல்லும்ஏதோ பெரிய பொக்கிஷம்போலஎன்றார் குமாரன் மாஸ்டர்

மாஸ்டர் நான் ஒன்று சொல்கிறேனே, சரித்திரமே ஆனாலும் இந்த அளவுக்கு அது மனிதர்களிடம் குரூரமாக இருக்கக்கூடாதுஎன்றான் ஔசேப்பச்சன். “மனிதன் யார்? பாவப்பட்ட மிருகம். பயம், ஆசை, காமம், பகை ஆகியவற்றால் ஆட்டுவிக்கப்படுபவன். சரித்திரம் இப்படி ஓநாய் போல ரத்தவாடைதேடி மூக்கை நீட்டி தலைமுறை தலைமுறையாக பின்னால் வருமென்றால் 

என்ன செய்வான்? எதுவானாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”

நியாயம்

All is fair in love and war.

ஶ்ரீராம்

முந்தைய கட்டுரைஆழ்நதி- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைஇராம. இருசுப்பிள்ளை