தமிழின் முதல் கிராஃபிக் நாவல் – கடலூர் சீனு

இனிய ஜெயம்

2000 இல் பிறந்து இப்போது இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்த இளம் தலைமுறையினர் எவரை நான் சந்தித்தாலும் கேட்கும் முதல் கேள்வி “காமிக்ஸ் படித்ததுண்டா” இரண்டாவது கேள்வி  “இதுவரை நீங்கள் பார்த்தவற்றில் உங்களுக்கு மிகப் பிடித்த சினிமா எது” என்பது. முதல் கேள்விக்கு “காமிக்ஸா படம் படமா போட்றுக்குமே அதானே? பாத்திருக்கேன் படிச்சதில்லை” என்றும் இரண்டாம் கேள்விக்கு ஏதேனும் நல்ல படம் ஒன்றின் பெயரும் பதிலாக கிடைக்கும். நீங்கள் சொன்ன படத்தில் உங்களுக்கு மிக மிக பிடித்தது என்ன என்று கேட்பேன். படத்தில் இருந்து ஏதேனும் சம்பவத்தை சொல்வார்கள். திரைப்படம் என்பதன் அடிப்படை அலகான காட்சி என்பதில் இருந்து ஒரே ஒரு காட்சிப் படிமத்தை கூட சொல்ல மாட்டார்கள்.

இதுதான் இன்றைய தலைமுறை வாசகர்கள் புனைவு வாசிப்புக்குள் நுழைகையில் எதிர்கொள்ளும் முதல் சிக்கல். 80,90 ல் பிறந்த தலைமுறையில் பெரும்பாலானவர்களுக்கு வாசிப்பில் படிநிலை உண்டு. முதலில் சித்திர கதைகள். அடுத்து கதை பாதி சித்திரம் பாதி கொண்ட கதைகள். அடுத்து சித்திரம் அற்ற கதைகள். அடுத்து கேளிக்கை கதைகள் அடுத்து தீவிர இலக்கியம் என்று ஒரு வரிசையில் வருவார்கள். அவர்கள் தீவிர இலக்கியத்துக்குள் வரும்போது வாசிக்கையில் கண் தொடும் வாக்கியத்  தொடர் என்பது அக்கணமே அகத்தில் காட்சியாக பூத்துக் கொண்டே செல்லும். இன்றைய தலைமுறை வாசிக்கையில், அக்கணமே எழுத்து உள்ளே காட்சி என்று விரியாது இரண்டும் தனி தனி என்றாகி இரண்டுக்கும் இடையே ஒரு இடைவெளி கிடக்கிறது. 2000 துவங்கி மொபைல் பண்பாட்டில் கண்விழித்த குழந்தைக்கு அங்கே துவங்கி வீடியோ கேம்கள் சினிமாக்கள் ரீல்கள் என்று இத்தனை பிம்ப மழையில் நனைந்த பிறகும் காட்சிப் படிமம் என்பதுடன் (ஓவியக் கலை புகைப்படக் கலை, காண்பியல் கலை இவை எல்லாம் என்ன என்ற அறிமுகமே அவர்களுக்கு இல்லாத நிலை காரணமாக) ஒரு தொடர்பும் இல்லை.

இன்றைய தலைமுறை தீவிர இலக்கியத்துக்குள் நுழைய, தடையாக இருக்கும் இந்த இடைவெளியை கடக்க இப்போதும் காமிக்ஸ்களும் கிராஃபிக் நாவல்களும், அவற்றைக் குறித்து கிங் விஷ்வா அவர்கள் எழுதி யாவரும் பதிப்பகத்தில் வெளியாகி இருக்கும் அறிமுக நூல்களும், காண்பியல் கலைகள் குறித்து, யூனிஃபைடு விஸ்டம்காக a v மணிகண்டன் அவர்கள் எடுக்கும் வகுப்புகளும் நல்ல துணையாக அமையும்.

இலக்கிய வாசிப்பு வழியே உள்ளே உருவாகும் காட்சிக்கும் சித்திரங்கள் வழியே உள்ளே நகரும் கதைக்கும் இடையே ஒரு மெல்லிய ஆனால் அடிப்படை பேதம் ஒன்று உண்டு. இலக்கியத்தின் அடிப்படை அலகு மொழி. முதலாவதாக மொழி வழியே உள்ளே உருவாகும் சித்திரம் அவரது கைரேகை அளவுக்கே அவருக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை தன்னுள் கொண்டிருக்கும். இரண்டாவதாக மொழி வழியே உள்ளே உருவாகும் சித்திரம் 360 பாகை வாசகனை சுற்றி உள்ள கோளமாக ஆகி அவனை அதன் மையத்தில் இருத்தி அவனுக்குள் அது ஒரு நிகர் உலகாகவே இருக்கும். மாறாக காமிக் கிராஃபிக் நாவல் சினிமா உள்ளிட்ட கதை சொல்லும் பிற கலைகளின் அடிப்படை அலகு சித்திரம். அது இரு பரிமாணம் மட்டுமே கொண்டு முற்றிலும் புற வயமாக அமைவது. அதன் தனித்தன்மையும் பலமும் அதன் எல்லையும் அதுவே. இந்த புரிதலோடு காமிக்ஸ் கிராஃபிக் நாவல் வாசிப்புக்குள் நுழைய விரும்புவோருக்கு, நல்ல காமிக் வரிசைகள், கிராஃபிக் நாவல் வரிசைகள் முத்து காமிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.

காமிக்ஸ் என்று வருகையில் அதில் வில்லன் கதாநாயகன், பிரச்னை தீர்வு என்ற மூன்று அங்க கதை அதன் நிகழ்ச்சி ஓட்டங்கள் உணர்ச்சி அனைத்தும் முற்றிலும் சித்திர வடிவில் சொல்லப்பட்டிருக்கும். சித்திரங்கள் அளிக்கும் விவரணையில் வாசகர்கள் கவனம் குவிக்க வேண்டும்.

மாறாக கிராபிக் நாவல் வாழ்க்கை அளவுக்கே கதாபாத்திர குணாதிசயங்களின் பேதங்கள், நிகழ்சிகள் கொண்ட சிக்கல்கள், சமூக வரலாற்று உள் விரிவுகள் இவற்றை கையாளும். உள்ளே கிடந்து கிளர்த்திக்கொண்டே இருக்கும் வலிமையான படிமங்கள் மீது அதன் மைய சித்திரங்கள் அமைந்திருக்கும்.

இந்த இரண்டு வகைமைகள் குறித்துமே இதே தளத்தில் கட்டுரைகள் உண்டு. தமிழ் நிலத்தின் இந்திய நிலத்தின் காமிக்ஸ், கிராஃபிக் நாவல் வகைமைகள் அதற்கான வாசகர்கள் இன்மையால் அருகி இந்த காமிக்ஸ் கிராபிக் நாவல் எல்லாமே மேலை தேசங்களில் இருந்து அவர்களின் கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கே வாசிக்கப்படும் இன்றைய சூழலில், தமிழில் காலச்சுவடு வெளியீடாக வாடிவாசல் நாவலைத் தழுவி, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்தில், ஓவியர் அப்புப்பன் வரைகலை ஆக்கத்தில், வாடிவாசல் கிராபிக் நாவல் வெளியாகி இருக்கிறது.

பிரதிலிபி போன்ற நிறுவனங்கள் பெரும் பொருளை முதலீடு செய்து, மொபைல் ஆப் உள்ளிட்டு எல்லா இடத்திலும் கிடைக்கும் வண்ணம் தமிழ் கிராஃபிக் நாவல்களை உருவாக்கி இவற்றுக்கான புதிய தலைமுறை வாசகர்களை உருவாக்க முனைந்தது. பெரிய விளம்பரத்தில் சிவப்பு கல் மூக்குத்தி எனும் கிராஃபிக் நாவல் வெளியானது. எதுவும் 80 களில் காமிக்ஸ் வாசிக்க துவங்கி இன்று 45+ வயதில் இருக்கும் அந்த பழைய வாசகர்களை தாண்டி, 25+ வயதின் இளம் தலைமுறையை சென்று தீண்ட வில்லை. இந்த தடையை இந்த வாடிவாசல் கிராஃபிக் நாவல் தாண்டிவிடும் என்று நினைக்கிறேன்.

முதல் காரணம் தமிழ் சினிமா. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாடிவாசல் நாவல் படமாக்கம் பெறப்போகிறது என்று ஒரு சேதி பரவ, வாடிவாசல் இலக்கியதை தாண்டி வெகு மக்கள் மத்தியில் பரபரப்பாக வாசிக்க பட்டது. ( இதே நிலை பூமணி எழுதிய வெக்கை நாவலுக்கும் ஏற்பட்டது ). அந்த வரிசையில் இந்த கிராபிக் நாவலும் சேரும் என்றே நினைக்கிறேன். வாடிவாசல் ‘ அப்படியே ‘ படமாகவும் வெளியாகும் பட்சத்தில், தீவிர இலக்கிய புனைவாக, இடை நிலை இலக்கிய கிராபிக் நாவலாக, வெகுமக்கள் பார்வைக்கான திரைப்படமாக என்ற மூன்று நிலையிலும் அமைந்த பிரதியாக சி சு செல்லப்பாவின் வாடிவாசல் அமையும். (மேலை தேசத்தில் முதலில் கிராபிக் நாவலாக வந்து பின்னர் திரைப்படம் என்றாகி வென்ற பல படங்கள் உண்டு. சிறந்த உதாரணம் பிராங்க் மில்லர் எழுதிய கிராபிக் நாவலான 300.)

தமிழ் கிராபிக் நாவல் எனும் களத்தில் இலக்கியத்தை கிராபிக் நாவல் என்றாகும் வகைமை 90 களில் குற்றப் புனைவு சார்ந்த கேளிக்கை இலக்கியத்தில்தான் முதலில் துவங்கியது. புஷ்பா தங்கதுரை எழுதிய கிளுகிளுப்பும் குற்றமும் கலந்த துப்பறியும் கதைகள் பல, ஓவியர் ஜெயராஜ் வரைகலை ஆக்கத்தில் (கிளுகிளுப்பான படங்களுடன்) அன்றைய கிராஃபிக் நாவலாக  (அன்று கிராபிக் நாவல் என்ற பெயர் புழக்கத்தில் இல்லை) வெளியானது. இன்றும் இந்த 2025 இலும் அவை தங்க தாமரை பதிப்பகம் வழியே வாசிக்க கிடைக்கிறது. அன்று 90 களில் கேளிக்கை இலக்கியம் சென்று தொட்ட எல்லையை இன்று தீவிர இலக்கியம் வந்து தொட இத்தனை ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த வாடிவாசல் முன்னோடி முதல் முயற்சி, பெரிய அளவில் வெகு மக்கள் வாசகர்களை ஈர்க்க வாய்ப்பு உள்ள பிரதி என்ற வகையில் இதன் வெளியீட்டுக்கு பின்னால் நின்ற அனைவருக்கும் பாராட்டுகள். வாடிவாசல் நாவலை தழுவி எழுதப்பட்ட தனித்ததொரு கிராபிக் நாவல் ஆகவே அதற்கும் இதற்கும் ஒப்பீடு தேவையில்லை. அதைக் கடந்து இந்த தனித்த கிராபிக் நாவல் பிரதி கொண்ட பலமான அம்சம் அப்புப்பன் அவர்களின் வரைகலை. பறவைப் பார்வையில் ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமத்துக்கு செல்லும் நிலப்பரப்பை காட்சிப்படுதியது துவங்கி, காரி காளை செத்துக் கிடக்கும் இறுதி காட்சி சட்டகம் வரை, அப்புப்பன் அந்த ஒவ்வொரு சட்டகத்துக்கும் வைத்த பார்வைக் கோணம் பிரமாதம். கறுப்பு வெள்ளை இரண்டை மட்டுமே பயன்படுத்தி, அந்த நிலமும் பொழுதும் வெம்மையும் புழுதியும் ஒட்டு மொத்த சனம் போடும் கூச்சல் எல்லாமே அவரது தூரிகை இழுப்புக்குள் எழுந்த ஓவியங்களுக்குள் சிக்கிக்கொண்டு விட்டது. அபாரமான ஓவிய வரிசை.அதில் மூன்று சட்டகங்கள் மிக முக்கியமானது காரி காளை அறிமுகம் ஆகும் காட்சி சட்டகம். வாடிவாசல் திறந்து முதல் காளை பாயும் சட்டகம். தன்னை அணைந்த பிச்சி உடன் சேர்ந்து நான்கு கால்களும் தரையில் படாது எகிறும் காரியின் சித்திரம். முதல் சித்திரம் பார்க்கும் போதே அதன் கம்பீரம் வந்து தொடுகிறது. இரண்டாம் சித்திரத்தில் வாடிவாசல் சட்டகத்துக்குள் அமைய, அதிலிருந்து பாயும் மாடு சட்டத்துக்கு வெளியே பாயும் வண்ணம் அமைந்து, பார்வை கோணம் பார்வையாளர்கள் நோக்கியது எனவே கிட்டத்தட்ட ஒரு முப்பரிமான தன்மை அந்தச் சட்டகத்துக்கு அமைந்து, பாயும் மாடு முன்னால் நேர் எதிரே நாம் நிற்கும் உணர்வு. மூன்றாவது ஓவிய சட்டகம் அதன் நோக்கு நிலை வழியே, நிற்கும் பார்வையாளர்களை விட்டு உதறி, பார்க்கும் நம்மை காரி உடன் சேர்ந்து எகிறும் உணர்வை அளிக்கிறது. இப்படி இதன் ஓவிய வரிசை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கு வெளியே இந்த கிராபிக் நாவல் கொண்ட பலவீனங்கள் இரண்டு. முதலாவது இதில் உள்ளது மிக மிக  எளிய கதை. அப்பன் பிடிக்க முயன்று தோற்ற, தோல்வியே அறியாத காரி காளையை மகன் வந்து பிடிக்கிறான். கௌரவ குறைச்சல் கண்ட காரியின் வளர்ப்பாளர் ஜமீந்தார் அதை சுட்டுக் கொன்று விடுகிறார். அவ்வளவுதான் கதை. ஒரு காமிக்ஸ் அளவுக்கு கூட நிகழ்வுகள் நிறைந்த கதை என்ற ஒன்று இதில் இல்லை. இரண்டாவது பிரதான பலவீனம் ஒட்டுமொத்தமாகவே நாவல் முழுமையிலும் அசைவு என்பதே இல்லை. ஒரு மாதிரி அது பாட்டுக்கு கிடக்கும் கூழாங்கல் போல அசைவே இன்றி கிடக்கிறது நாவல். காரணம் நாவலை இயங்க வைக்கக்கூடிய நிகழ்வு பின்னல்கள் மேல் அமைந்த உணர்ச்சிகரம் இதில் இல்லை. உடல் மொழி முகங்கள் கொண்ட பாவம் இவை யாவும் கதகளி கலையில் வெளிப்பாடு போல உள்ளது. கதகளி நிகழ்வில் வெளிப்படும் கோப பாவம் என்பது வேறு, அதை சித்திரம் ஆக்கினால் என்ன ஒரு உறை நிலை கூடுமோ. அப்படி உறைநிலை கூடி ஒவ்வொரு சட்டகமும் ஒரு தனித்த ஸ்லைடு காட்சி போல உறைந்து நிற்கிறது. முதல் சட்டத்தில் இருந்து அடுத்த சட்டகத்துக்கு நீளும் முதல் சட்டகத்தின் காலோ கையோ போன்ற தொழில் நுட்பங்கள் இருந்தாலும் கூட, உறைந்து நிற்கும் ஸ்லைடு காட்சிகள் வரிசை என்பதை தாண்டி இந்த நாவல் உள்ளே எந்த ஒரு அசைவும் இல்லை.

அபாரமான சித்திரங்கள் சில அடங்கிய, எந்த வயதினரும் வாசிக்கதக்க நல்லதொரு தமிழ் காமிக்ஸ் இது. கிராபிக் நாவல் என்ற நிலைக்கு இது செல்ல இன்னும் நெடிய தூரம் இருக்கிறது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஎதை இழக்கிறீர்கள்?- கடிதம்
அடுத்த கட்டுரைஇரா.நாறும்பூ நாதன்