கூடங்குளம் அனுபவப்பதிவு

21-09-2011 காலை மீண்டும் கூடங்குளம் செல்வதாக முடிவெடுத்தேன். சென்றமுறை சென்றபோது கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரைக்குப் பேருந்து விடப்படுவதில்லை என அறிந்து வெயிலில் வெந்து நடந்துசெல்ல நேரிட்டது. ஆகையால் பார்வதிபுரத்தில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்துச் செல்ல முடிவெடுத்தேன்.டாக்ஸி இருப்பதனால் அ.கா.பெருமாளை அழைத்துப்பார்த்தேன். அவர் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். வேதசகாயகுமார் வருவதாகச் சொன்னார். இருவருமாகக் கிளம்பினோம்.

 

பத்துமணிக்கு கூடங்குளம் தாண்டிச்சென்றோம். கூடங்குளத்தில் வழக்கத்தைவிட அதிகமான போலீஸ்பாதுகாப்பு. படைபடையாக சீருடையணிந்த காவலர்கள் இறக்கப்பட்டிருந்தார்கள். எங்கள் வண்டியை அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை என்றாலும் கூட்டமாக மக்கள்செல்லும் வேன்களை நிறுத்தி சோதனையிட்டு கேள்விகள் கேட்பதைக் கண்டேன். விஜயாபதி என்ற ஊரைத்தாண்டி இடிந்தகரைக்குச் செல்லவேண்டும். இடிந்தகரை கடலோரமாக அமைந்த ஒரு சின்னஞ்சிறு மீனவக் கிராமம். அங்கே லூர்துமாதா ஆலயத்தருகே அமைந்த பந்தலில் உண்ணாவிரதம் நடக்கிறது.

கூடங்குளத்துக்குள் எந்த வகையான போராட்டத்துக்கும் அனுமதி இல்லை என்பதனால்தான் இந்த சிற்றூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஓரளவு வசதியான சிற்றூர். பேருந்து வசதி வழக்கமாகவே மிகக் குறைவு. இப்போது முற்றாகவே நிறுத்திவிட்டார்கள். ஆனால் ஒரு வகையில் நல்லதுதான். நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்கான இடமும் மக்கள் கூடுவதற்கான வசதியும் இங்கே உள்ளன. இந்தச் சிற்றூர் எப்படியோ வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது

நாகர்கோயிலில் நல்ல சிலுசிலுவென இளமழை. நேர்மாறாக அஞ்சுகிராமம் தாண்டியதுமே திருநெல்வேலியின் அனல் அடிக்க ஆரம்பித்திருந்தது. இடிந்தகரைசெல்வதற்குள் உடல்கொதிக்கும் வெயில். அந்த வெயிலில் திருவிழாக்கூட்டம்போல மக்கள் நாலாபக்கமும் கிராமங்களில் இருந்து கிளம்பி வந்து குவிந்துகொண்டே இருந்தார்கள். பத்தாம் நாளாகிய இன்று கூட்டம் உச்சகட்டம். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம்பேர் வரை பந்தலிலும் வெளியிலுமாக கூடியிருந்தார்கள்.

கூட்டத்தைப்பற்றிய அவதானிப்புகள் ஆச்சரியம் அளித்தன. கூட்டத்தில் எழுபது சதவீதம்பேர்வரை பெண்கள். குழந்தைகளுடன் நிறையப்பெண்கள் இருந்தார்கள். பல ஊர்களில் இருந்து திரளாக கிளம்பிக் கால்நடையாகவும் வண்டிகளும் வந்தார்கள். அவர்கள் பந்தலுக்குள் நுழையும்போது எந்த ஊரில் இருந்து வருகிறார்கள் என்பது அறிவிக்கப்பட்டுக் கூட்டாக கோஷம்போடப்பட்டது. பெரும்பாலும் பெண்கள் பந்தலில் அமர ஆண்கள் வெளியே கூடி நின்றார்கள்.

ஏற்கனவே கடலோர மக்கள் நிகழ்த்தும் சில போராட்டங்களை நான் கவனித்திருக்கிறேன். கரைமக்கள் அவற்றில் பங்கெடுப்பதில்லை. நெடுங்காலமாகவே அவர்களுக்குள் நிகழ்ந்து வந்த பூசல்கள் ஒரு நிரந்தரப்பகையை உருவாக்கியிருந்தன. மேலும் கடலோர மக்களின் போராட்டங்களைப் பெரும்பாலும் கிறித்தவ கத்தோலிக்க திருச்சபை முன்னின்று நடத்துவதனால் அவற்றுக்கு எப்போதுமே ஒரு மத அடையாளம் உண்டு. இந்தப் போராட்டத்திலும் திருச்சபையின் பங்கே மையமானது. ஆனால் பெருமளவில் கரையோர மக்கள் பங்கெடுத்ததைக் காணமுடிந்தது. குறிப்பாக அய்யாவழி குருவான பாலபிரஜாபதி அடிகள் பங்கெடுத்தமையால் அவரது ஆதரவாளர்கள் நிறைய பேர் பந்தலில் இருந்தனர்.

 

எண்பதுகளின் இறுதியில் கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அதற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்தன. அவற்றில் சிலவற்றில் நான் காசர்கோட்டில் இருந்து வந்து கலந்துகொண்டிருக்கிறேன், ஒருமுறை சுந்தர ராமசாமியும் வந்திருக்கிறார். அப்போது ஆர்ப்பாட்டங்களுக்கு இருநூறுபேர் இருந்தால் அதிகம். கடலோர மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கரைமக்கள் அணுமின் நிலையம் வந்தால் தங்கள் தரிசு நிலங்களுக்குப் பெரும் விலைமதிப்பு உருவாகும் என்ற நம்பிக்கையில் அதற்கு ஆதரவாக இருந்தார்கள்.

அரசுத் தரப்பில் செய்யப்பட்ட கடுமையான பிரச்சாரங்கள் காரணமாக அன்று மெல்லமெல்ல எதிர்ப்புப் போராட்டங்கள் வலுவிழந்தன. ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி முதல்வராக பின்னாளில் பணியாற்றிய ஒரு இயற்பியல் பேராசிரியர் தலைமையில் ’அறிஞர்’படை கிராமம் கிராமமாகச் சென்று அணு உலை என்பது அதிகபட்சம் நூறு செங்கற்சூளை அளவுக்கு வெப்பத்தை உமிழக்கூடியது, அவ்வளவுதான் என பிரச்சாரம்செய்தார்கள். அத்துடன் சர்வதேச அணுசக்தி குழும எதிர்ப்பினால் திட்டம் கிடப்புக்குச் சென்றபோது எதிர்ப்பும் மழுங்கியது.

அதன்பின்னர் 2001ல் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் திட்டம் புத்துயிர் பெற்றது. அப்போது எதிர்ப்பு வலுவாக உருவாக ஆரம்பித்தது. அதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நண்பர் ’அசுரன்’ சிலமுறை என்னைச் சந்தித்திருக்கிறார். [அவரது நூலை நான் நியூயார்க்கில் வெளியிட்டிருக்கிறேன்]  இன்றைய அளவில் எதிர்ப்பியக்கம் உருவாக சுப.உதயகுமார் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து இதில் ஈடுபட ஆரம்பித்தது முக்கியமான காரணம். அத்துடன் மீனவர்கள் உண்மையான பாதிப்புகளை உணர ஆரம்பித்ததும் சேர்ந்துகொண்டது.

அன்றிருந்த எதிர்ப்பியக்கத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது சூழியல் ஆர்வம் கொண்ட சிலர் முன்னெடுக்கும் இயக்கமாக இல்லை. பெரிய மக்களியக்கமாக உள்ளது. மக்களியக்கத்துக்கே உரிய வேகம், கட்டின்மை, கொந்தளிப்பு எல்லாமே உள்ளது. அங்கே அத்தனை மக்களைப்பார்த்தது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அனேகமாக ஒரு சூழியல் இயக்கத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பு தமிழகத்தில் இதுவே முதன்மையானதாக இருக்கும்.

மேடையில் கவிஞர் மாலதி மைத்ரியைப் பார்த்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். என்னையும் வேதசகாயகுமாரையும் அமைப்பாளர்களுக்கு அறிமுகம்செய்து வைத்தார். முன்னால் அமர்ந்துகொண்டோம். தொடர்ந்து பல்வேறு சூழியல் குழுக்களைச்சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்தவகையான இயல்பான மக்களியக்கத்தை அருகில் இருந்து கவனிக்கும்போது நான் கொண்டிருக்கும் பல எண்ணங்கள் உறுதிப்பட்டன. பல புரிதல்கள் உருவாயின. ஏற்கனவே அண்ணா ஹசாரே இயக்கம் பற்றி இவ்வகை மனப்பிம்பங்களே எனக்கிருந்தன.

ஒரு குறிப்பிட்ட கோட்பாடு அல்லது கொள்கை சார்ந்து ஒருங்கிணைந்த தொண்டர்படைக்கும் இந்த மக்களுக்கும் பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.இவர்கள் பொதுவான நம்பிக்கைகள் கொண்டவர்கள் அல்ல.   பொதுவான அச்சங்களையும் பொதுவான கோரிக்கைகளையும் கொண்டவர்கள் அவ்வளவுதான். இவ்வாறு தன்னிச்சையாகத் திரளும் கூட்டம் மீது அதன் அமைப்பாளர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு மிக குறைவானது. இத்தகைய போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால் அல்லது ஊடகம் எதிர்மறையாக சித்தரிக்க நினைத்தால் மிக எளிதில் இதில் பேதங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிவிடமுடியும்.

ஏனென்றால் அமைப்பாளர்கள் எந்த ஒரு தரப்பின் ஆதரவையும் மறுக்க முடியாது. போராட்டக்களத்தில் நின்றுகொண்டு ஆதரவாளர்களின் உண்மையான நோக்கத்தையும் கொள்கைகளையும் பரிசீலிப்பதும் சீர்தூக்கிப் பார்ப்பதும் சாத்தியமல்ல. முடிந்தவரை அனைவரையும் கூட்டி ஆதரவுத்தளத்தை விரிவாக்கம்செய்வதை மட்டுமே செய்யமுடியும். இந்நிலையில் போராட்டத்தை நடத்தும் மையக்குழுவின் கருத்துக்களை மட்டுமே அந்தப் போராட்டத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டும், அந்த மேடையில் ஒலிக்கும் எல்லாக் குரல்களையும் அப்படி எடுத்துக்கொள்ள கூடாது.

ஆனால் பொதுவாகப் போராட்டத்தின் எதிரிகள் அப்படி தங்களுக்குத் தாக்க வசதியான குரலை எடுத்துக்கொண்டு அதையே போராட்டத்தின் குரலாகக் காட்டமுயல்வார்கள். அண்ணா ஹசாரேயின் போராட்டத்தில் அதுவே நடந்தது. அதற்கான எல்லா வாய்ப்புகளும் இந்த மேடையில் இருந்தன. தீவிர இடதுசாரிகள், தமிழ்த் தேசியவாதிகள், கிறித்தவ பாதிரிமார் என மேடையேறியவர்கள் தங்கள் அரசியலையே பேசினார்கள்.  தங்கள் எதிரிகளைத் தாக்கினார்கள். பலருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

முன்னாள் நக்சலைட் சுப.இளவரசன் தலைமை தாங்கும் தமிழ்தேசியக் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு விதிக்கப்பட்ட தமிழ்தேசியவாதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்று துண்டுப்பிரசுரம் அச்சடித்து வந்து வினியோகம் செய்தார்கள். பங்கேற்றிருந்த பல கிறித்தவர்களுக்கு அவ்வெண்ணம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. சுப.தமிழரசன் அனல் கக்கப் பேசுவார் என நினைத்தேன். தட்டுத்தடுமாறி ஏதேதோ பேசினார். தமிழகத்தில் போலீஸ் என்கவுண்டருக்கு நாள் குறித்தபின் தப்பியவர் அவர் மட்டுமே என்றார். தன் கட்சியின் அரசியலைப்பற்றி சொன்னார். தமிழர்களைக் கொல்ல இரு அணுநிலையங்களை வடவர் அரசு அமைத்துள்ளது என்பதே அவரது பேச்சின் சாரம்.

சில இளைஞர்கள் வன்முறையாகப் பேசிக் கைதட்டல் பெற முனைந்தார்கள். இத்தகைய அரங்குகளை இவ்வாறு சம்பந்தமற்ற கோரிக்கைகளுக்கான களமாக ஆக்குவது மிக எளிதாகத் திசைதிருப்பல்களை கொண்டுவந்து சேர்க்கும். ஆனால் இதை எந்த அமைப்பாளர்களும் தடுக்கமுடியாது.  இத்தகைய ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க மட்டுமே முடியும். அதுவே வளர்ந்து முடிவை நோக்கிச் செல்லும். மக்கள்சக்தி என்பது புதுவெள்ளம் போல. எல்லாவற்றையும் அடித்துக்கொண்டுவந்து சேர்க்கும்.

சூழியல் அமைப்புகளைச் சேர்ந்த பலர் புள்ளிவிவரங்களுடன் அழகாகப் பேசினார்கள். பொதுவாகக் கேரளத்தில் இருந்து வந்திருந்த சூழியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நன்றாகத் தகவல்களுடன் பேசினார்கள். ஏற்கனவே அவர்களுக்கு இந்த வகையான போராட்டங்களில் அனுபவம் இருந்தது. ஒரு மலையாளப்பேச்சை வேதசகாயகுமார் மொழியாக்கம் செய்தார்.

என்னை மேடைக்குப் பேச அழைத்தார்கள். நான் வாழ்நாளில் இதைப்போன்ற ஒரு பெருங்கூட்டத்தில் பேசியதில்லை. கண்முன் முகங்களின் கடல். கண்களைப்பாராமல் பேசி எனக்கு பழக்கம் இல்லை. மூச்சுத்திணறி ஐந்து நிமிடம் பேசினேன். ‘சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு கப்பல் வந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் இருந்தது முழுக்க சிகாகோ நகரின் குப்பை. கக்கூஸ் குப்பை. ஆஸ்பத்திரிக் கழிவு. நோய்பரப்பும் பொருட்கள். அவற்றை நமக்கு அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாம் அவர்களின் குப்பைக்கூடையாக ஆகிவிட்டிருக்கிறோம்’ என்றேன்

‘அதேபோன்ற ஒரு பெரிய குப்பைதான் இந்த அணுமின்நிலையம். இது நமக்குப் பரிசாக அளிக்கப்பட்டது என்றும் நாம் விலைகொடுத்து வாங்கியது என்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்குப் பயன்படாத குப்பை. அவர்களுக்கு ஆபத்தான குப்பை. நாம் இதை விலைகொடுத்து வாங்கிக் கொண்டுவந்து வைத்திருக்கிறோம்’ என்றேன்

வேதசகாயகுமார் நன்றாகவே பேசினார். ‘இந்தத் திட்டம் முதலில் கேரளத்திற்குத்தான் கொண்டுவரப்பட்டது. வருமுன் காக்கும் எண்ணத்துடன் அவர்கள் எதிர்த்து இதைத் துரத்தினார்கள். ஆனால் இந்த அணு உலையின் முக்கியமான நோக்கம் திருவனந்தபுரம் டைடல் பார்க்குக்கு மின்சாரம் வழங்குவது. ஆகவே கேரளத்தை விட்டு அதிக தொலைவில் இல்லாத நம் மண்ணில் இதை நிறுவினார்கள்’ என்றார்.

மாலதிமைத்ரி உணர்ச்சிகரமாகவும் நன்றாகவும் பேசினார். ‘நம்முடைய பிரச்சினையே அறிவுஜீவிகளை எப்படி சமாளிப்பது என்பதுதான். சாதாரண கிராமத்துப்பெண்களுக்கு புரியக்கூடியது அவர்களுக்குப் புரியவில்லை. இத்தனை செலவிட்டபின் இதை நிறுத்தமுடியுமா என்று இன்று இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இங்கே ஒரு பாட்டியிடம் அதைப்பற்றி கேட்டேன். ’பத்துலட்சம் செலவு செய்து பந்தல் போட்டுவிட்டு பையனுக்கு எய்ட்ஸ் சீக்கு என்று தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்தமாட்டோமா? இல்லை பந்தலுக்காகத் திருமணத்தை நடத்துவோமா?’ என்று கேட்டார்’ என்றார்.

மூன்றுமணிக்குத் திருமாவளவன் வந்தார். அரங்கின் முன்னால் அமர்ந்துகொண்டார். சென்னையில் தூதுக்குழு முதல்வரிடம் பேசிவிட்டதாகவும் முதல்வர் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் அணு உலை வேலைகள் நிறுத்தப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்படும் என சொன்னதை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் முறையான அறிவிப்புக்குப் பின்னரே போராட்டம் விலக்கப்படும் என்றார்கள். அனேகமாக நாளை [22-09-2011அன்று ] போராட்டம் முடிவுக்கு வரலாம்.

ஜெயலலிதா ஆரம்பம் முதலே போராட்டத்துக்கு ஆதரவான மனநிலை கொண்டிருந்தார் என்றார்கள். அவருக்கான நிர்ப்பந்தங்களைத் தாண்டி வந்து இந்த விஷயத்தை புரிந்துகொள்ள முயன்றார் என்றார்கள். அமைச்சரவை தீர்மானம் என்பது பெரிய விஷயம். அணு ஆற்றல் விஷயத்தில் தமிழக வரலாற்றில் அது ஒரு முற்றிலும் புதிய திருப்பம். அரசு இனிமேல் தமிழகத்தில் அணு ஆற்றல் சார்ந்த எந்த திட்டத்தையும் அனுமதிக்காதென்றும் கூடங்குளம் விரிவாக்கத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்தால் அதை இந்தபோராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம். இன்றுவரை சூழியல்போர் எதிலும் தமிழக அரசு இத்தனை சாதகமான முடிவை எடுத்ததில்லை.

கூடங்குளம் விஷயத்தில் தமிழக அரசின் நிலை மத்திய அரசுக்கு சங்கடங்களை உருவாக்கும் என்று தோன்றுகிறது. இன்று சோவியத் ருஷ்ய அணுஆற்றல் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் அவர்களின் அச்சம் தெரிகிறது. அணுஉலையை நிறுத்திக்கொள்ள அரசு முடிவெடுத்தால் அது துரதிருஷ்டவசமானது என்றும் மற்ற வளர்ச்சித்திட்டங்களைத் தாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார்கள். இதையும் போராட்டத்தின் வெற்றி என்றே கொள்ளவேண்டும்.

இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மேலும் பலபடிகளாக நடந்து அதன் இறுதி வெற்றியை நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. எந்த ஒரு மக்கள் போராட்டமும் அப்படி பல படிகளாகவே வளர்ச்சி அடைய முடியும். அந்த வளர்ச்சி என்பது மக்களின் பிரக்ஞையில் ஏற்படும் மாற்றமே. தமிழக மக்களில் பாதிப்பேருக்குமேல் அணு உலை தேவையில்லை என நினைத்தால் பின் எவர் இங்கே அதை நிறுவ முடியும்?

வேதசகாயகுமார் நீரிழிவுநோயாளி. பசி தாங்காமல் மயக்கம் வருகிறது என்றார். எனக்கும் பசிதான். பசி தாங்க முடியாதது எனக்கு என்னைப்பற்றிப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மேடையில் பத்துநாட்களாக உண்ணாவிரதம் இருப்பவர்களைப்பார்த்தேன். பலர் அரைமயக்கத்தில் இருந்தார்கள். சிலர் அமர்ந்து கூட்டத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

கிளம்பலாம் என முடிவெடுத்தேன். திருமாவளவனைப் பார்த்து மீண்டும் அறிமுகம் செய்துகொண்டு விடைபெற்றேன். எப்போதுமே அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு கலைஞனின் மகிழ்ச்சி அது. அவர்தான் தமிழக அரசியல் தலைவர்களிலேயே பார்வைக்கு அழகானவர். அந்த சிரிப்பும் கம்பீரமும் அணுக்கத்தில் இன்னமும் மனம் கவரக்கூடியது.

நாலரை மணிக்குக் கிளம்பினோம். கூட்டத்தில் இருந்து அலையலையாக மக்கள் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்கள். அதைவிட அதிகமாக வந்துகொண்டே இருந்தார்கள்.

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்
அடுத்த கட்டுரைகூடங்குளம்-கடிதம்