ஜெமோ சார்,
உங்கள் கன்னியாகுமரி நாவலை சமீபமாக படித்தேன். உங்களின் ஒரு காணொலியில் நீங்கள் அந்த நாவலை பற்றி சொல்லியிருப்பிர்கள், “சிறு வயதில் ஒரு வாத்தியார் உங்களை அடித்தால் அதை ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பீர்களா அதே போல் தான் பாலியல் வன்முறை சார்ந்த பிரச்சனையும்” என்று…
நீங்கள் சொன்னது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் அது பெண்கள் விஷயத்தில் மட்டுமே… நிறைய ஆண்கள் பாலியல் வன்முறை சார்ந்த பாலியல் சீண்டல் சார்ந்த சிறு வயதில் அவர்களுக்கு ஏற்ப்பட்டதை சமூகத்தில் பொதுவெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். நிறைய ஆண்கள் வீட்டில் மனைவிகளிடமோ இல்லை அவர்கள் பெற்றோர்களிடமோ தனிமையில் தான் சொல்கிறார்கள். பெண்களுக்கு என்றால் இந்த சமூகம் நன்றாக கேட்க்கிறது. இதற்கு காரணம் ஆண்களின் ஆண் என்ற கர்வம் தானே தவிர வேறொன்றும் இல்ல.
இப்பொழுது கூட பாருங்கள் நானும்தான் இயக்கத்தில் #Mentoo என்று கேவலமாக சமூகவலைதளங்களில் Hashtag செய்கிறார்கள். ஏன் Metoo என்று அவர்களையும் சேர்த்து கொள்ளலாமே என்ற பக்குவம் நிறைய ஆண்களுக்கு வரவில்லை. அந்த நாவலில் வரும் நாயகன் என்னை நானே அப்படிதான் பார்க்கிறேன். நான் எனக்கு சிறு வயதில் (12 வயது இருக்கும்) நடந்ததை எண்ணி என் அம்மாவை கடுமையாக திட்டினேன். ஆனால் இந்த நாவலை படித்ததற்க்கு அப்புறம் என்னை சிறு வயதில் பாழாக்கியவனையும் பார்த்து அவனிடம் நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்று என் மனதில் சொல்கிறேன். 24 வருடத்திற்க்கு முன்னால் நடந்த அந்த கெட்ட நியாபகம் என் நினைவுக்கு வருவது இப்போதெல்லாம் குறைந்தவிட்டது.
இப்படிக்கு,
இராம்சி
அன்புள்ள இராம்சி
பாலியல் சார்ந்த எந்த ஒரு விஷயத்தையும், விழைவோ உறவோ பிரிவோ மீறலோ எதுவானாலும், மிகையாக்கிக் கொள்வது அசட்டுத்தனம். அருவருப்போ குற்றவுணர்ச்சியோ வஞ்சமோ துக்கமோ எதுவானாலும் வாழ்க்கையை வீணடிப்பதுதான். மானுடர் இங்கே வந்திருப்பது இவற்றில் உழல்வதற்காக அல்ல. இவை வாழ்க்கையின் சிறு கூறுகள். உண்பது, மலம்கழிப்பதுபோல உடல்சார்ந்தவை. மானுடர் அறிவால், ஆன்மாவால் இங்கு திகழவே உடல்கொண்டிருக்கிறார்கள். அறிவால் ஆன்மாவால் அவர்கள் செல்லும் பயணம் மட்டுமே வாழ்க்கை என்பது. எஞ்சியதெல்லாம் வீண் கற்பனைகள். இச்சமூகம் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கியிருக்கும் நம்பிக்கைகள், கொள்கைகள்,. தடைகள் ஆகியவற்றை கடந்தே மானுட அகம் தன்னை நிகழ்த்திக்கொள்ளமுடியும். உதறி, முற்றிலும் மறந்து முன்செல்க, சென்றடைவதற்கு மகத்தானவை காத்திருக்கின்றன. அவற்றை இழந்தால்தான் மெய்யான இழப்பு.
ஜெ