ஆழ்நதியைத் தேடி மின்னூல் வாங்க
ஆழ்நதியைத்தேடி வாங்க
விஷால்ராஜா ‘மலர்கள் நினைவூட்டுவது‘ என்றொரு கட்டுரை எழுதி இருந்தார். அக்கட்டுரை வழியாகவே ஜெயமோகன் இப்படியொரு நூல் எழுதி இருக்கிறார் என்றே எனக்குத் தெரிந்தது. இத்தனைக்கும் ஜெயமோகனின் ஒரு நூல் விடாமல் எல்லாவற்றையும் நான் விஷாலின் கட்டுரை வாசித்தபோதே வாசித்திருந்தேன்! இதுமட்டும் எப்படியோ விட்டுப் போயிருக்கிறது.
2004ல் வெளியான இந்நூலினை இருபது வருடங்கள் கழித்து வாசிக்கிறேன். ஜெயமோகனின் புனைவுகளைத் தாண்டி இலக்கியம் குறித்த அவருடைய பார்வையை விளங்கிக் கொள்ள இந்நூல் அவசியமான ஒன்று. இலக்கிய முன்னோடிகள் போன்ற இலக்கிய விமர்சன நூல்களை மட்டுமல்லாது அவருடைய கொற்றவை, வெண்முரசு போன்ற நாவல்களை விளங்கிக் கொள்ளவும் இந்நூலினை வாசிப்பது அவசியம் என நினைக்கிறேன்.
இச்சிறு நூலில் உள்ள கட்டுரைகள் 2003ல் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது. இதே சமயத்தில்தான் ஜெயமோகனின் கொற்றவை நாவலும் வெளிவந்தது. என் வாசிப்பில் அவருடைய மிகச்சிறந்த நாவல் கொற்றவைதான். தனிப்பட்ட முறையில் ஒரு நவீனத் தமிழ் நாவலை ‘தமிழன்’ ஆக நின்று வாசித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள முடியும் என்று சொல்ல முடியும். இங்கு தமிழன் என்பது பிறப்படையாளம் என்பதைவிட தமிழைக் கற்றும் கேட்டும் வளர்ந்த தமிழ் மொழியின் நுண்ணிய உணர்வுத்தளங்களை புரிந்து கொள்ள முடிந்த ஒருவன் என்பதே சரியாக இருக்கும்.
ஜெயமோகன் ஒரு கட்டுரையில் தனித்தமிழ்வாதிகளுடன் நிகழ்த்திய நீண்ட உரையாடலின் வெளிப்பாடு கொற்றவையில் உள்ளதாகச் சொல்லி இருப்பார். அதோடு கொற்றவை சமஸ்கிருத சொற்களே இல்லாது எழுதப்பட்ட ஆக்கம். ஆழ் நதியைத் தேடி நூலினை ஒருவகையில் கொற்றவையின் மூலப்பிரதி என்று சொல்லலாம். அல்லது இந்நூலில் அவர் எழுப்பிக் கொண்ட கேள்விகளுக்கு கொற்றவையில் பதில்களைக் கண்டடைகிறார் என்றும் சொல்லலாம்.
‘தமிழ் இலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன?’ என்ற வினாவுடன் இந்நூல் தொடங்குகிறது. நாவல் கோட்பாடு, இலக்கிய முன்னோடிகள் போல இந்நூல் கறாராக மதிப்பிட முனையவில்லை. மாறாக சங்க காலம் தொடங்கி சமகாலம்வரை தமிழ் இலக்கியத்தின் உச்ச தருணங்களை கோர்த்துப் பார்க்க முயல்கிறது. தமிழில் ஒருசில படைப்பாளிகளுக்கு மட்டுமே இப்படி இணைத்து யோசிப்பது சாத்தியம். செய்யுள் வடிவில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் ‘பழைய இலக்கியம்’ என ஓரங்கட்டிவிட்டு நவீன இலக்கியத்துக்கு மட்டுமே அதீத முக்கியத்துவம் கொடுப்பதே இன்றுவரை – நான் உட்பட – பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகளின் இயல்பாக இருக்கிறது.
அப்படியல்லாமல் இந்நூல் ‘தமிழ் பண்பாடு’ என்ற ஒன்றை உருவகிக்கிறது. பண்பாட்டினை நிலத்துடன் பிணைக்காமல் இலக்கியத்துடன் பிணைக்கிறது. தமிழின் தொடக்ககால பிரதிகளே – சங்க இலக்கியம்- செவ்வியல் தன்மை கொண்டவையாக உள்ளன. அப்படியெனில் இந்த செவ்வியல் காலத்திற்கு முந்தைய தமிழ் பண்பாட்டின்’பழங்குடி’ தன்மை என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்நூல் தமிழின் தத்துவ நோக்கு, பெண்களின் இடம் எவ்வாறு தமிழ் இலக்கியத்தில் பின் செல்கிறது, தமிழின் மைய மரபை பெண் படைப்பாளிகளும் மரபு விமர்சன மனநிலை கொண்டவர்களும் எவ்வாறு எதிர்கொண்டனர் என்று விரிகிறது. இறுதியில் ஜெயமோகன் பஷீர் மற்றும் சிவராம காரந்த்தை சந்திப்பதைச் சொல்லி தமிழ் இலக்கியம் என்ற எல்லையைக் கடந்து இலக்கியத்தின் சாரம் என்ன என்ற கேள்விக்கு நகர்ந்து விடுகிறது. ஆனால் அடிப்படையில் இந்நூல் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாடு பற்றியதே.
நாம் இலக்கியத்திற்குள் மேலும் மேலும் உட்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் ஜெயமோகன் தமிழில் எழுதப்பட்ட எல்லா இலக்கியங்களையும் ஒட்டுமொத்தமாகக் காண்கிறார். ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஆங்கிலத்திற்கென ஒரு செவ்வியல் மரபு இல்லாததால் கிரேக்கப் பண்பாட்டினை சுவீகரித்துக் கொண்டதைச் சொல்கிறார். ஆனால் தமிழுக்கு அந்தச் சிக்கல் இல்லை. நமக்கு வளமான செவ்வியல் மரபொன்று உள்ளது. மரபிலக்கியத்தை நவீன இலக்கியம் எதிர்கொள்ளும்போது இன்னும் ஆழமான படைப்புகள் தமிழில் உருவாகும் என்பதும் அது ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதும் ஜெயமோகன் இந்நூலில் முன்வைக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரே கொற்றவை, வெண்முரசு வழியாக அந்த திசையில் நேரடியாக பயணப்பட்டிருக்கிறார். ஆனால் ஜெயமோகனின் மற்ற ஆக்கங்களிலும் அவர் மரபை எதிர்கொண்டதன் தடயங்கள் வெளிப்படுவதைக் காண முடியும்.
இந்நூல் இரண்டு வகையில் முக்கியமானது. ஒன்று தமிழ் எழுத்தாளர் தன் செல்திசையை தீர்மானித்துக் கொள்வதில் ஒரு தெளிவை அல்லது ஒரு சவாலை முன்வைக்கிறது. இரண்டாவதாக ஜெயமோகனின் இலக்கிய விமர்சனங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள அவசியமானது.
ஆழ்நதியைத் தேடி
விஷ்ணுபுரம் பதிப்பகம்