ரோலப்பாடு அல்லது ராலேபாடு (Rollapadu) கான்புகலிடம் ஆந்திராவில் நந்தியால் மாவட்டத்திலுள்ளது. இப்பகுதியின் நில அமைப்பு இதை இந்தியாவிலேயே விந்தையான ஒரு பகுதியாக ஆக்குகிறது. வனப்புகலிடம் என்னும்போது அடர்வனத்தை கற்பனைசெய்துகொள்ள வேண்டியதில்லை. இது ஒரு மாபெரும் புல்வெளி. புல்வெளி என்னும்போது பச்சைப்பசேல் என கற்பனை செய்யவேண்டியதில்லை. இது ஆண்டில் எட்டு மாதங்கள் காய்ந்து பொன்னிறமாகவே காணப்படும்.
ஆப்ரிக்காவில் இத்தகைய புல்வெளிகளும், அங்கே வனவிலங்குகளும் உண்டு. இந்த நிலத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து இது ஆப்ரிக்கா என்றால் நம்பாமலிருக்க முடியாது. தக்காணப் பீடபூமியின் உயரமான இடம் இது. ஆகவே இந்நிலமே மொட்டைப்பாறைமேல் படிந்த இரண்டு மூன்றடி கனமுள்ள மண்பரப்புதான். ஆங்காங்கே பாறைவெடிப்புகளில் வேரூன்றி வளர்ந்த சிறிய மரங்கள் தவிர காடு என ஏதுமில்லை.
இந்தியாவில் காடு என எஞ்சியிருப்பவை மலைகளின்மேலே மட்டும்தான். அணுகமுடியாமை, வேளாண்மைக்கு உதவாத சரிவுநிலமாக இருப்பது இரண்டால்தான் அவை காடாக விட்டுவைக்கப்பட்டன. தமிழகத்தில் சமநிலக் காடு அனேகமாக இல்லை. இருக்கிறது, அது தேரிக்காடு. திருச்செந்தூர் அருகே. அதுவும் இதைப்போல அரைப்பாலை நிலம்தான். இந்நிலம் இதுவரை இப்படி காடாகவிடப்பட்டிருப்பது நீரில்லாமையால்தான். ஆனால் சொட்டுநீர்ப்பாசனம் வந்த பின் இந்நிலமும் வேளாண்மைக்குள் வந்துவிட்டது.
ராலேப்பாடு புல்வெளி வேலியிடப்பட்ட நிலம். இதைச்சூழ்ந்து விளைநிலங்கள்தான். இந்நிலத்திற்குள்தான் வெளிமான் கூட்டங்கள் வாழ்கின்றன. உண்மையில் ஒரு பெரிய திறந்தவெளி விலங்குக் காட்சியகம்தான் இது. மான்கள் வேலியைக் கடந்து செல்லமுடியாது. ஆகவே உறுதியாக மான்கூட்டங்களைப் பார்க்கலாம். அவற்றை வேட்டையாடும் நரிகளும் குறைவு. சிறுத்தை இல்லை. ஆகவே அவை பெருகியிருக்கின்றன
தொடர்ச்சியாக பணம் செலவிடப்பட்டு இந்நிலம் பேணப்பட்டு வருகிறது. பயணிகள் பொதுவாகக் குறைவு. ஏனென்றால் இங்கே இந்த நிலம், மான்கள் தவிர கொண்டாட ஏதுமில்லை. அக்கும்பல் வராலமிருப்பதும் நல்லது. ஏனென்றால் மிக எளிதில் ஒரு தீவிபத்து நடக்கச் சாத்தியமானது இந்நிலம்.
காலையில் வனத்துறையின் வண்டியில் அந்நிலத்தில் சுற்றிவந்தோம். கொம்புகூர்ந்து நிற்க, செவிமுன்மடிய, எங்களை நோக்கி நின்றன ஆண்மான்கள். அவர்களை நம்பி பெண்மான்கள் மேய்ந்தன. சட்டென்று அவை துள்ளி எழுந்து காற்றில் வளைந்து நிலம் தொட்டன. துள்ளித் துள்ளிப் பாய்ந்தன. அவற்றை பார்த்தபடி பொன் பொன் என சித்தம் மலைத்த அந்த வெளியில் சுற்றிவருவது ஒரு பெரும் மோனநிலை.
ஒருவேளை என் உள்ளத்திலுள்ள அந்த அழியாத விவசாயியின் உவகையாக இருக்கலாம். தளிர்த்த பசுமை அளவுக்கே, அல்லது அதைவிட ஒரு படி மேலாக அழகிய காட்சி விளைந்த பொன்வயல். எங்களூரில் “பொன்னு எப்டி கெடக்கு?” என்றுதான் விளைந்த வயலை சொல்வார்கள். உடலெங்கும் பொன்னணிந்த மணப்பெண்ணை “வெளகதிருல்லா” என வியப்பார்கள். மானுடனின் எத்தனை ஆயிரமாண்டுக்கால பரவசம் அது!
கதிர் ஒளிபெறுந்தோறும் பொன்னிறம் மாறிக்கொண்டே இருந்தது. உண்மையில் செம்பொன் என்பது மாற்றுகுறைவானது. ஆடகம் என்பது நல்ல பசும்பொன். அது வெண்மைகொண்டது. பொன்னின் மாற்று கூடிக்கொண்டே இருந்தது. பொன் என இங்கு வந்திருப்பது இப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் கனிவு. கனிகளில் மலர்களில் மணிக்கதிர்களில் தன்னை நிகழ்த்திக்கொள்வது.
காலை உணவுக்கு முன் சுற்றிவந்துவிட்டோம். அதன்பின்னரே குளியல். நல்ல உணவு. இளங்குளிர் அப்போதுமிருந்தது. அன்று பகல் முழுக்க பயணம்தான் என்று முன்னரே கிருஷ்ணன் சொல்லியிருந்தார். ஆனால் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றமையால் நேரம் தெரியவில்லை. பிரிவதற்கு முன்பு பார்க்கவேண்டிய ஓர் இடம்தான் திம்மம்ம மரிமண்ணு என்னுமிடத்தில் இருக்கும் ஆலமரம்.
இந்தியாவிலேயே பெரிய ஆலமரம் இதுதான் என்பது ஆந்திர அரசின் கூற்று. அனந்தபூர் மாவட்டத்தில் கத்ரியில் இருந்து இருபத்தைந்து கிமீ தொலைவிலுள்ளது. ’பெரிய ஆலமரத்தின் ஏராளமான கிளைகள்’ என்பது அந்த ஊரின் பெயர். அந்த ஆலமரத்தால்தான் அந்த ஊரே அறியப்படுகிறது.
கணக்குகளின்படி 4.721 ஏக்கர் பரப்பளவில் இந்த ஒற்றை ஆலமரத்தின் விழுதுகள் பரவி மரங்களாகியுள்ளன. கிளைகள் பரவி ஒரே காடாக மாறியிருக்கின்றன. இன்றும் இது ஒன்றாக இணைந்த ஒற்றை மரமாகவே உள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விழுதுமரங்கள். 550 அண்டுகள் வயதான மரம் இது எனப்படுகிறது. 1989ல் கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்களால் வழிபடப்படுவது இந்த மரம். சிவராத்திரியன்று பல்லாயிரம் பேர் வந்து இந்த மரத்தை வழிபடுகிறார்கள். இந்த ஆலமரத்தின் அடியில் திம்மம்மா என்னும் அம்மனின் சிறிய ஆலயம் உள்ளது. இந்த அம்மன் இங்கே உண்மையில் வாழ்ந்த ஓர் அம்மையார் என்றும் கணவர் பாலவீரையாவுடன் உடன்கட்டை ஏறியதனால் தெய்வமானார் என்றும் தொன்மம் உள்ளது. குழந்தைப்பேறுக்காக இந்த அம்மன் வழிபடப்படுகிறார். ஆலமரத்தைச் சுற்றி அணுகமுடியாதபடி பெரிய வேலி போடப்பட்டுள்ளது. அம்மன் கோயிலுக்குச் செல்வதற்கு மட்டுமே வேலியிடப்பட்ட வழி உள்ளது.
இதேபோன்ற ஓர் ஆலமரத்தை ஓசூர் அருகே முன்பு பார்த்தோம். பெரும்பாலும் இந்த அளவுக்கு இருக்கலாம். ஆனால் அதன் மையமரத்தை உள்ளூர் பக்தர்கள் வெட்டி அழித்து அங்கே தகரடப்பாவால் ஒரு கோயில் கட்டிக்கொண்டிருந்தனர். அந்த ஆலமரம் திறந்து கிடந்தது. வழிபட வரும் கும்பல் ஆலமரத்தின் அடியில் சமையல் செய்து குப்பைகளை குவித்திருந்தது. ஆலமரத்தை வெட்டிக்கொண்டு செல்பவர்களும் பலர் என்றனர். அந்த ஆலமரம் இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடலாம்.
இந்தியாவின் தொன்மங்களில் ஆலமரத்திற்கு மிகப்பெரிய இடமுண்டு. முன்பெல்லாம் எல்லா ஊரிலும் ஊர்மையத்தில் ஓர் அரசமரமும், நீர்நிலையருகே ஆலமரமும் இருந்தாகவேண்டும் என்பது கட்டாயம். குமரிமாவட்டத்தில் திருமணத்திற்குப்பின் இணையர் சேர்ந்து ஆலமரம் நடவேண்டும். வீரநாராயணமங்கலத்தில் நாஞ்சில்நாடன் நட்ட ஆலமரம் பெரிதாக விழுதுவிட்டிருக்கிறது.
ஆலமரம் நட்டேயாகவேண்டும் என்பதற்கான காரணமாகச் சொல்லப்படுவது அது பறவைகளின் பெருநகர் என்பதே. அப்பறவைகள் ஊரில் பெருகப்பெருக பூச்சிகள் கட்டுப்பாட்டுக்கு வந்து வேளாண்மை பெருகும். ஆகவே பெரும்பாலும் நஞ்சைநில விவசாயிகள் ஆலமரம் நடப்பட்டாகவேண்டும் என்பதில் இப்போதும் கண்டிப்பாக உள்ளனர்.
திம்மம்ம மரிமண்ணு ஆலமரம் ரெக்ரெட் ஐயர் (Regret Iyer) என்னும் எழுத்தாளரால் கின்னஸ் நூலில் ஆவணப்படுத்தப்பட்டது. இந்த ரெக்ரெட் ஐயர் ஒரு சுவாரசியமான மனிதர். சத்யநாராயண ஐயர் என்ற பெயருள்ள இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். இவருடைய சேகரிப்பு மிக அசாதாரணமானது. எழுத்தாளர்களுக்கு இதழ்கள் அளிக்கும் ‘பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம் அறிவிப்பு’ (regret slip)களை 1964 முதல் சேகரிக்க ஆரம்பித்து பல்லாயிரம் அறிவிப்புகளை சேகரித்துள்ளார்.
திம்மம்ம மரிமண்ணு பற்றி தெலுங்கு நாவலாசிரியர் எஸ்.எஸ்.கிரிதரப்பிரசாத் என்பவர் திம்மம்ம மரிமண்ணு கதா என்ற பேரில் 1989ல் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். தமிழில் லோகமாதேவி இந்த ஆலமரம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (திம்மம்மா ஆலமரம் லோகமாதேவி)
உயிரின் பேராற்றல் என்று இந்த ஆலமரத்தைச் சொல்லலாம். இமையமலை அடிவாரங்களில் மாபெரும் தேவதாரு மரங்கள் அந்த ஆழ்ந்த பக்தியுணர்ச்சியை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவிலுள்ள யெல்லோ ஸ்டோன் தேசியப்பூங்காவிலும் யோசிமிட்டி தேசியப்பூங்காவிலும் பார்த்த ரெட் வுட் வகை மரங்களின் விஸ்வரூபமும் அந்த உணர்வையே எழுப்பியது. எங்கும் பிரம்மம் உள்ளது, எல்லாம் பிரம்மமே, ஆனால் சில இடங்களும் உயிர்களும் கூடுதல் பிரம்மம்.
இந்தப்பயணத்தில் முதல்நாளே கர்நாடக மாநிலத்தில் சாவனூர் அருகே தொட்ட ஹுன்ஸி மரா என்னும் ஊரிலுள்ள மாபெரும் பாவோபாப் (Baobab ) மரங்களைப் பார்த்தோம்.முப்பது மீட்டர் உயரம் வரை உயரமாக வளரும் இந்த மரம் மிகத்தடிமனான அடிச்சுற்று கொண்டது. பார்வைக்கு நம் நீர்மருது போல தோற்றமளிக்கும். அல்லது கான்கிரீட் தூண் போல. கிளைகளும் தடிமனானவை. ஆனால் அத்தனை செறிவான இலைத்தழைப்பு இல்லை.
இது ஆப்ரிக்க மரம். கென்யா, உகாண்டா நிலப்பரப்புகளில் காணப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன.நமீபியாவிலுள்ள இந்த வகை மரம் ஒன்று 1275 ஆண்டு தொன்மையானது என கார்பன் காலக்கணிப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுவே தொன்மையானது எனப்படுகிறது.
பொதுவாக இந்த மரம் ‘வாழ்க்கைமரம்’ (Tree of Life) என அழைக்கப்படுகிறது. இரண்டு காரணங்கள். இதன் அழிவின்மை, நீண்ட ஆயுள். இதை ஓர் மூதன்னையாக பல குடிகள் நம்புகின்றன. அத்துடன் இதன் கிளைகளும் அடிமரமும் ஒரு சிறு சமூகத்திற்கே பலநாட்கள் தேவையான நீரைச் சேமித்து வைக்கக்கூடியவை. ஒரு பாலைவன நீர்க்குடம் இது. (அவதார் படத்தில் வாழ்வின் மரம் என காட்டப்படுவது இந்த மரம்தான்)
சாவன்னூரிலுள்ள தொட்ட ஹுன்ஸி மராவிலுள்ள பாவோபாம் மரங்களில் ஒன்று 18 மீட்டர் அடிச்சுற்று கொண்டது. இன்னொன்று 16 மீட்டர். மூன்றாவது 14 மீட்டர். இந்த மூன்று மரங்களின் வயது சில நூறாண்டுகள் இருக்கலாம். அவற்றைப் பற்றிய தெளிவான ஆய்வோ பதிவோ இல்லை. உள்ளூர் வாசிகள் கிருஷ்ணபகவான் ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவந்த மரம் என இதை நம்புகிறார்கள்.
எங்கள் அணி தொட்டஹுன்ஸி மாராவிலிருந்து வந்து ஒரு டீக்கடையில் ‘டீயைப்போட்டு’விட்டு பிரிந்தது. நான் ராஜேஷின் காரில் பெங்களூர் திரும்பினேன். என்னுடன் சுந்தர பாண்டியன், ஸ்ரீதரன் ஆகியோர் வந்தார்கள். 13 இரவு பெங்களூர் வந்து அங்கே ஓரு விடுதியில் தங்கினேன். மறுநாள் மேஜர் கோகுல் இல்லம் சென்று பொங்கல் விருந்து. அங்கிருந்து நாகர்கோயில். டிசம்பர் 30 மாலை கிளம்பிய பயணம் முடிவடைகிறது.
ஆப்ரிக்க அன்னைமரத்தில் தொடங்கிய பயணம் இந்திய பேரன்னைமரத்தில் நிறைவு கொண்டது. நடுவே கோயில்கள், புல்வெளிகள், குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள். அனைத்தும் கலந்து ஒற்றை உணர்வென்றாயின. எண்ண எண்ண அவை பிரிந்து ஒன்றுடனொன்று தொடர்பிலாது விரிந்தன. எண்ணமற்ற ஒரு நிலையில் அவை ஒரே காலமற்ற கனவென்றாயின.
(நிறைவு)