தொன்மையின் தொடரில்- 4

காலையில் எழும்போது இப்பயணங்களில் நம் உள்ளம் எப்படி அமைந்திருக்கிறது என்பது எப்போதுமே பெரிய விந்தை. முந்தையநாள் இரவில் எனக்கு நல்ல தூக்கம். ஆனால் விடியற்காலையில் விழித்துக் கொண்டேன். உடன் தூங்கிய கிருஷ்ணனும் ஹைதராபாத் கார்த்திக்கும் எழுந்து லொட்டு லொட்டு என ஏதோ செய்ய அந்த ஓசை எனக்கு கனவுகளாகியது.

கனவில் குகை ஓவியங்களில் அசோகச்சக்கரம் தென்பட்டது. கல்அறைகளாலான பெரிய பாறைப்பகுதியில் அனைத்துமே நான் திரும்பிப்பார்க்கையில் கல்யாணிசாளுக்கிய ஆலயங்களாகவும் இருந்தன. நானே குழம்பி கிருஷ்ணனிடம் நாம் ஆலயங்களைப் பார்க்கிறோமா அல்லது கல்அறைகளையா என்று கேட்கிறேன். கிருஷ்ணன் இதெல்லாமே ராஜராஜசோழன் கட்டியவை என்று சொல்லி ஒரு பெரிய பேரேடு போன்ற நூலை காட்டுகிறார்.

ராமதாஸ்

காலையிலேயே சங்கனக்கல்லு எனப்படும் தொல்கற்காலச் சின்னங்கள் அடங்கிய மலைக்குச் சென்றுவிட்டோம். அங்கே அருகிலேயே வெவ்வேறு கட்டுமானங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். எவரிடம் என்ன கேட்பதென்று தெரியவில்லை. அங்கே கற்கால நினைவுச்சின்னங்கள் என்னென்ன உள்ளன என்று விசாரித்தபோது பெரும்பாலும் எவருக்கும் ஏதும் தெரியவில்லை.

ஒருவர் பிரமிட் வடிவில் ஒரு வீடு கட்டி குடியிருந்தார். முகப்பில் ஒரு அம்மன் கான்கிரீட்டில் கொடூரமாக இருந்தது. அது ஒரு கோயில், குடியிருந்தவர் வாட்ச்மேன். கிருஷ்ணனும் பிறரும் சென்று விசாரித்துவிட்டு அவர் சொன்ன ஆலோசனைப்படி வழிகாட்டியை கண்டுபிடிக்க சென்றனர்.

அப்பகுதியில் ஹம்பிக்கு செல்லும் பழைய விஜயநகரத்தின் வணிகப்பாதையை மீட்டெடுத்தல் என்னும் நோக்கில் கல்மண்டபங்களை கட்டி வைத்திருந்தனர். ஒன்றில் ஏறிப்பார்த்தோம். வடமாநிலத்தொழிலாளர்களின் திறந்தவெளி கழிப்பிடம், கூடவே மது அருந்தும் உல்லாசக்கூடம். இரட்டை பயன்பாட்டில் இருந்தது அந்த மண்டபம். அதற்குள் கிருஷ்ணனும் கூட்டமும் வழிகாட்டியுடன் திரும்பி வந்தனர்.

வழிகாட்டியின் பெயர் ராமதாஸ். இதுவரை அவருக்கிணையான வழிகாட்டிகளை மிகக்குறைவாகவே கண்டிருக்கிறோம். சட்டென்று நினைவுக்கு வருபவர் இருவர், ஹாத்திகும்பா கல்வெட்டை காட்டித்தந்த ஒரிஸாவின் வழிகாட்டி. சித்ரதுர்க்கா கோட்டையை விளக்கிய ஒருவர். ராமதாஸ் வெறுங்காலுடன் வந்தார். அப்பகுதி முழுக்க முட்கள், உடைந்த குப்பிச்சில்லுகள். ஆனால் வெறுங்கால் ஏன் என அதன்பின் தெரிந்தது.

கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குப்கலில் உள்ளது சங்கனக்கல்லு மலைப்பகுதி. இது இரண்டு மலைகள் அடங்கியது. ஒன்று காளைமலை, இன்னொன்று மயில்மலை. மலையுச்சிகளின் அமைப்பில் ஒன்று மயில், இன்னொன்று காளைச் சாயல்கொண்டிருப்பதனால் அப்பெயர். இரண்டு மலைகளுமே மாபெரும் பாறைக்குவியல்கள். அதிலும் மயில்மலை கிட்டத்தட்ட ஒரே அளவிலான பாறைகளின் குவியல். நாம் அறிந்த ஜல்லிக் குவியலில் ஒவ்வொரு ஜல்லிக்கல்லும் ஒரு எருமையளவு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி

அதில் தொற்றி மேலேறினோம். செருப்பில்லாததனால் ராமதாஸ் இயல்பாக மேலே செல்ல மற்றவர்கள் மூச்சிரைத்தும் ஆங்காங்கே இளைப்பாறியும் சென்றோம். இந்த இரண்டு மலைகளிலாக ஏறத்தாழ மூவாயிரம் பாறையோவியங்களைக் கண்டடைந்துள்ளனர். எல்லாமே ஐம்பதாயிரம் முதல் இருபதாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. முதற்கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரை நீள்வது அவற்றின் வரலாறு.

சூரியக் காலண்டர்

பல பதிவுகளில் இவை தொல்கற்காலத்தைச் சேர்ந்தவை என்றும் மூவாயிரமாண்டு தொன்மையானவை என்றும் மடத்தனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொல்கற்காலமே மூவாயிரம் ஆண்டுத்தொன்மை கொண்டது தான் என சில அப்பாவிகள் நம்ப வாய்ப்புள்ளது. ஆனால் தொடக்ககால வெள்ளை ஆய்வாளர்கள் அவ்வாறு எண்ணினர்.

இந்தியத் தொல்லியல்துறை என்பது அரசுத்துறைகளுக்கே உரிய அறியாமையும் அக்கறையின்மையும் கொண்டது என்பதற்குச் சான்று இன்றும் எந்த தகவல்களும் இற்றைப்படுத்தப்படாமலிருப்பது. இந்த இடம் 1892ல் பிரெட் பாஸெட் (Fred Fawcett) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆசிய தொல்லியல் ஏட்டில் வெளியிடப்பட்டது. கூடவே ராபர்ட் செவெல் (Robert Sewell) வரைந்த ஓவியமாதிரிகளும் இருந்தன.

பாஸெட் இடக்கல் குகைகளைக் கண்டடைந்தவர் என்பதும், செவெல் ஹம்பி, தஞ்சை பெரியகோயில் உட்பட பலவற்றை ஆராய்ந்தவர் என்பதும் தெரிந்திருக்கலாம். தமிழ்நாட்டில் செங்கப்பட்டு மாவட்டத்தில் கொத்தாளத்து ஆற்றின் கரையில் முதலில் கற்காலக் கருவிகளைக் கண்டடைந்தவரான ராபர்ட் புரூஸ் ஃபூட்  (Robert Bruce Foote) இப்பகுதியை அதன்பின் 1916 ல் ஆராய்ந்து ஆவணப்படுத்தினார்.

இந்த வெள்ளையர்களே இவை மூவாயிரமாண்டுகள் தொன்மையானவையாக இருக்கலாமென ஊகித்தவர்கள். அன்று கற்காலம் பற்றிய கருத்தே உருவாகி வந்திருக்கவில்லை. சொல்லப்போனால் இந்தியாவின் கற்காலவரலாறு பற்றிய தொடக்கமே பூட் கற்கருவிகளைக் கண்டடைந்து அவை கற்காலக்கருவிகள் என நிறுவிய பின்னர்தான் தொடங்குகிறது. ஆனால் அவர்கள் முன்வைத்த காலம்தான் இன்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

மூன்றுகொம்பு காளை

இத்தனைக்கும் சுப்பாராவ்  சுப்பாராவ் (1947), கார்டன் (1951) மற்றும் படய்யா (1973) ஆகியோர் இப்பகுதியை ஆய்வுசெய்து புகைப்படப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்தப் பதிவுகள் அருங்காட்சியகங்களில் இருந்து தொலைந்து போயினர், எஞ்சியவை அழிந்துவிட்டன. ராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியின் ஆவணக்காப்பகத்தில் மட்டுமே அக்கால படங்கள் எஞ்சியுள்ளன. அவற்றிலுள்ள பல ஓவியங்கள் இடைப்பட்ட காலகட்டத்தில் இப்பாறைகளில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன.

பொதுவாக ஐம்பதுகளுக்குப் பின் தொல்சின்னங்களை தேடுவதும் கண்டடைவதும் அறவே நின்றுவிட்டது. ஏற்கனவே கண்டடைப்பட்ட தொல்சின்னங்கள் கைவிடப்பட்டன, மறக்கப்பட்டன. காரணங்கள் இரண்டு. ஒன்று நம் தொல்லியல்துறை ஓர் அரசுத்துறையாக மாறி முற்றிலும் செயலற்றதாக ஆகியது. இரண்டு, நேரடியாக இனமொழிமத அரசியலுக்குப் பயன்படும் தொல்லியல் மேல் மட்டுமே மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆர்வம் இருக்கிறது

மயில்

தமிழகத்திலும் கீழ்வாலை, கருக்கியூர் ஓவியங்கள் முன்பு கண்டையப்பட்டன, பின்னர் மறக்கப்பட்டன. இன்று காந்திராஜன் போன்ற தனியார் ஆர்வலர்களே இவற்றை கண்டடையவும் பதிவுசெய்யவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களே தேன்வரந்தை போன்ற பாறை ஓவியப்புதையல்களைக் கண்டடைகிறார்கள். அரசோ மக்களோ ஆர்வம் காட்டுவதில்லை.

மக்கள் ஆர்வம் காட்டாமலிருப்பதே நல்லது. பாமரர் இந்த இடங்களுக்கு வர ஆரம்பித்தால் ஓவியங்கள் அழியும். தேன்வரந்தை குகை ஓவியங்களின்கீழே பொறியியல் கல்லூரி மாணவர்கள் தீமூட்டி கருகச்செய்துவிட்டனர். நாங்கள் சென்றபோதே சங்கனக்கல்லில் ஒரு சிறு மாணவர்குழு வந்திருந்தது. ஒரு சிறுமி கல்லை எடுத்து தொல் ஓவியங்கள்மேல் அடித்து வரைய ஆரம்பித்தாள். ராமதாஸ் அவளைக் கண்டித்து நிறுத்தினார். அவர் இல்லையேல் ஓர் ஓவியம் அழிக்கப்பட்டிருக்கும்.

இப்பகுதியில் இருந்த தொன்மையான பாறையோவியங்கள் கொண்ட இன்னொரு மலை முழுமையாகவே கல்குவாரிகளுக்காக உடைத்து அழிக்கப்பட்டுவிட்டது. (இப்பகுதி முழுக்க ரெட்டி பிரதர்ஸ் எனப்படும் கிரானைட் மாஃபியாவின் கையில் இருப்பதும், அவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் புரவலர்கள் என்பதும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம்) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர் நிக்கோல் போவின் இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை விரைவில் அழியக்கூடும் என யுனெஸ்கோவுக்கே எழுதியிருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. இன்றுள்ள மைய அரசு ஒருவகையில் குஜராத்தி சிறுவணிகர்களுடைய மனநிலைகொண்டது. சுந்தர ராமசாமி மொழியில் சொல்வதென்றால் மகாபலிபுரம் யானைச்சிற்பத்தைப் பார்த்தால் எத்தனை அம்மி தேறும் என கணக்கிடக்கூடியது.

ராமதாஸ் மிக நுணுக்கமாக அங்கே உள்ள மண்ணின் அமைப்பை விளக்கியபடி தொடங்கினார். மண்ணில் மேலே மழையில் அடித்துவரப்பட்ட உருளைக்கற்களும் செம்மண்ணும்கொண்டது அண்மைக்காலப் படிவம். அதற்கு அடியிலுள்ள வெள்ளைமண் கற்காலத்தையது. எங்காவது மண் இடிந்து விழுந்து நிலம் வெட்டுபட்டதாகத் தெரிந்தால் அந்த அடுக்கை கண்ணால் பார்க்கமுடியும். அப்படி ஓர் அடுக்கில் வெள்ளை மண்படிவில் இருந்து கற்கால கல்அம்பு ஒன்றை அவரே தோண்டியெடுத்து அளித்தார்.

காளைமலை உச்சி

அவற்றை செய்வதெப்படி என்பதை நான் தொல்லியல் காணொளிகளில் கண்டிருக்கிறேன். கடினமான கல்லை விளிம்பி அடித்து சில்லாக உடைத்து அதன் ஓரங்களை மேலிருந்து இன்னொரு பெரிய கல்லால் அடித்துச் செதுக்கி கூரான அம்புமுனை போல் ஆக்குவார்கள் எங்களுக்குக் கிடைத்த கல்லில் அது மானுடக்கையால் செய்யப்பட்டது என தெளிவாகவே தெரிந்தது. விளிம்பி கையோட்டிப்பார்த்தேன். அப்போதும் அதைக்கொண்டு மாமிசத்தை வெட்டமுடியும். அத்தகைய கற்கருவிகள் அங்கே பல்லாயிரக்கணக்கில் கிடைத்துள்ளனவாம்.

அங்கு குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக மானுடர் வாழ்ந்திருக்கின்றனர். முதன்மையான காரணம் அந்த கல்லம்புகளைச் செய்வதற்கு உதவும் கடினமான, படிகத்தன்மை கொண்ட, கல் அந்த மலைமேல் கிடைத்தது. மேலே கற்கருவிகளைச் செய்த ஓர் ஆலைபோன்ற இடம் இருந்தது. இரண்டு, அப்பகுதிஎங்கும் சிறிய விலங்குகளை எளிதில் பிடிக்கமுடியும். மூன்று அங்குள்ள பல கல்லிடுக்குகள் மழையில் ஒதுங்கிடமாக ஆகும் தன்மைகொண்டவை.

கற்கால குகையோவியங்களும் பாறையோவியங்களும் இந்தியாவெங்கும் கிடைத்துள்ளன. ஆனால் சங்கனக்கல்லு போல இப்படி ஆயிரக்கணக்கில், மொத்த மலையிலும் ஓவியங்கள் கிடைத்ததே இல்லை. இத்தனை எண்ணிக்கையில் இவை கிடைத்திருப்பது ஒரு வகையில் ஓவியமொழி ஒன்றே கிடைத்ததுபோல. வெவ்வேறு வகைகளில் ஒப்பிட்டும், சூழலுடன் பொருத்தியும் யோசித்தும் கற்பனைசெய்தும் அந்த ஓவியங்களைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். அவை பரவலாக ஏற்கப்பட்டுள்ளன என்பதுடன், அவை பிற கற்கால ஓவியங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

இந்த ஓவியங்களில் தொன்மையானவை மிகச்சிறியவை. கற்பாறைமேல் கல்லால் அறைந்து அறைந்து வெண்ணிற, செந்நிற ஓவியங்களாகத் தீட்டப்பட்டவை. கரியநிற ஓவியங்களும் சில உள்ளன, அரிதாகவே அவை காணக்கிடைக்கின்றன. கரிய நிற ஓவியங்கள் சாவை, சாவுக்கான காரணங்களைக் குறிப்பவை என்று ராமதாஸ் சொன்னார்.

சங்கனக்கல்லு பகுதியின் அடித்தள மக்களிடையே இந்த மலை இன்னும் ஓர் வழிபாட்டிடமாக உள்ளது.அவர்கள் அங்கு செய்யும் வழிபாடுகளில் இந்தப் பாறை ஓவியங்களைப் புரிந்துகொள்ளும் பல நுணுக்கமான தரவுகள் உள்ளன என்று ராமதாஸ் சொன்னார். நீத்தார் வழிபாடு, வளச்சடங்குகள் ஆகியவற்றை அம்மக்கள் செய்கிறார்கள். அதற்கான தெய்வங்களும் உள்ளன. அச்சடங்குகளில் சிலவற்றை ஆண்டில் இரண்டு முறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொன்றுக்கு மாறும் சங்கிராந்திகளில் இந்த பூசைகளைச் செய்கிறார்கள்.

ஆகவே தொல்கற்காலத்தில் இருந்தே சூரியனுடன் இணைந்துதான் இந்த இடத்தின் வழிபாட்டுச்சடங்குகள் நடைபெற்றிருக்கவேண்டும் என ராமதாஸ் சொன்னார். அதற்குரிய சான்றுகளை அங்கிருந்த ஓவியங்களில் இருந்து தொடர்ச்சியாகக் காட்டினார். ஒரு குறிப்பிட்ட ஓவியம் தொன்மையான காலண்டர் என விளக்கினார். சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொன்றுக்குச் செல்லும் காலமாற்றம் நிழலை வைத்து அளவிடப்பட்டிருக்கிறது. அதற்கான கல் மேலே இருக்கிறது. அந்த கல்லை ஒரு வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.

இது வியப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் இன்று மிக வியப்புடன் உலகமெங்கும் கண்டடையப்படுவது இது. கற்கால மானுடர் தீயை அறிவதற்கு முன், உலோகங்களை அறிவதற்கு முன், வானை அறிய ஆரம்பித்திருக்கின்றனர். பொழுது, பருவம் இரண்டைப்பற்றிய நுணுக்கமான அவதானிப்புகள் அவர்களிடமிருந்தன. விண்மீன்களை அவதானித்து பதிவுசெய்திருக்கின்றனர். சூரியன், சந்திரன், விண்மீன் இல்லாத பாறையோவியங்கள் குறைவு. பல பாறையோவியங்களிலுள்ள புள்ளிகள் நுணுக்கமாக விண்மீன்நிலைகளைப் பதிவுசெய்தவை.

இவை அவர்களின் வேட்டை உட்பட வாழ்க்கைக்கு மிக அவசியமாக இருந்துள்ளன. குறிப்பாக மழையைக் கணிப்பது அவர்களால் தவிர்க்கவே முடியாத தேவை. இக்கணக்குகளை அறிந்தவர்கள் முக்கியமானவர்களாக கருதப்பட்டிருந்தனர். அவர்கள் பூசாரிகளாகவோ மாந்திரீகர்களாகவோ குடித்தலைவர்களாகவோ இருக்கலாம். பாறை ஓவியங்களில் அடிக்கடிக் கானப்படும் உருவம் நடன்மிடும் பூசாரி.

இந்த பாறை ஓவியங்களை முழுமையாக அல்லது நிறைவூட்டும்படிப் பார்க்கவேண்டும் என்றால் குறைந்தது ஒருமாத காலம் தொடர்ச்சியாக இங்கே வந்துகொண்டிருக்கவேண்டும். இவற்றின் புதிர்கள் அவிழ இன்னும் நூறாண்டுகூட ஆகலாம். விரிவான, ஒருங்கிணைந்த ஆய்வு தேவைப்படும். அத்தகைய ஆய்வுகளேதும் நிகழ்வதாகத் தெரியவில்லை. இவை விரிவாகவும் முறையாகவும் எண்களிட்டு அடையாளப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்படக்கூட இல்லை.

பொதுவாகச் சில ஆர்வமூட்டும் செய்திகளைச் சொல்வதென்றால் முதன்மையானது இங்கேதான் விலங்குகள் தொன்மம் ஆக மாற்றப்படுதலுக்கான முதல்கட்ட அடையாளங்கள் தென்படுகின்றன. மூன்று கொம்புகள் கொண்ட காளை (அல்லது  இங்கே நிறைந்திருக்கும் புரிகொம்பு கொண்ட வெளிமான்) பல ஓவியங்களிலுள்ளது. அது யதார்த்தம் அல்ல, அப்படி எந்த எலும்பும் கிடைக்கவில்லை. விலங்குகளை குறியீடுகளாக, தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளும் அகப்பரிணாமத்தின் சித்திரச்சான்றுகள் இவை. அக்காலத்திலேயே இந்த காளைகள் வழிபடப்பட்டிருக்கலாம் என்று ராமதாஸ் சொன்னார். ஓவியங்களிலுள்ள மூன்றாம் கொம்பு காளைக்கு உண்மையில் செய்து பொருத்தப்பட்டிருக்கலாம். காளையின் திமில்கள் இன்று செய்யப்படுவதுபோல மிகப்பெரிதாக இருந்தன, அவை இன்றுபோல கமுகுப்பாளை அல்லது இலையால் செய்யப்பட்டவையாக இருக்கலாம்.

இங்கே உள்ள இன்னொரு ஆர்வமூட்டும் அம்சம், இவை ஆண்மை என்னும் கருத்துருவை உருவாக்கிக் கொண்டிருப்பது. வேட்டையாடும் ஆண்களின் ஆண்குறி மிகப்பெரிதாக எழுந்து நிற்கிறது. இது ஆண்மைகொண்டவனே வேட்டையாட முடியும் என்னும் கருத்தாக இருக்கலாம். அல்லது இது அவர்களின் அரசனோ தெய்வமோ ஆகக்கூட இருக்கலாம். இந்திரன் அல்லது நினுர்த்தா ஏன் அத்தனை வீரியமிக்க ஆணாக உருவகிக்கப்பட்டான் என்பதற்கான சான்று இது. கிருஷ்ணனுக்கு ஏன் பதினாறாயிரத்தெட்டு மனைவிகள் என்பதற்கான விளக்கம். ஐரோப்பாவில் அரசர்கள் விரைத்த ஆண்குறியுடன் வயலில் இறங்கி வளச்சடங்குகளைச் செய்யும் வழக்கம் இருந்தது. இன்றும் வளமும் காமவீரியமும் ஒன்றே என்று மதம் எண்ணுகிறது.

இங்குள்ள மலை காளை, மற்றும் மயில் என பழங்காலத்திலேயே அடையாளம் காணப்பட்டிருந்தது என்று ராமதாஸ் சொன்னார். வெவ்வேறு பாறை அடையாளங்களை அதற்குச் சுட்டிக்காட்டினார். மயில், காளை ஆகியவற்றின் வடிவம் கொண்ட உச்சிகளை நோக்கிச் செல்வதற்கான வழிகாட்டிகளாக மயிலும் காளையும் பாறைகளில் வரையப்பட்டிருந்தன. பல பாறை ஓவியங்கள் அக்கால அறிவிப்புகள், அதாவது அவை எழுத்துக்கள் உருவாவதற்கு முன்பு இருந்த சித்திரமொழி ஒன்றின் எழுத்துக்கள்.

காளைமலையில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டிருந்தது, அதன் கற்கள் இன்றுமுள்ளன. மலையிலிருந்து வரும் நீர் அங்கே சேர்க்கப்பட்டிருந்தது. அந்த அணைக்கு காவலாக இருவர் எந்நேரமும் அமர்ந்திருக்கும் ஒரு சிறு பாறைக்குகை இருந்தது. அது காவலிடம் என்பதைச் சுட்டும் பாறை ஓவியம் அங்கே இருந்ததை ராமதாஸ் சுட்டிக்காட்டினார். தடுப்பணையால் மலைக்குள் செலுத்தப்படும் நீர் கோடையில் கீழே ஊற்றாக வரும். அதுதான் கோடையில் குடிநீர். அதுவும் பாதுகாக்கப்பட்டு, சீராக வினியோகம் செய்யப்பட்டிருந்தது. நீர் இருக்குமிடம் அளவு ஆகியவற்றைக் குறிக்கும் படங்கள் இருந்தன.

மலையுச்சி வரை செல்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. குவிக்கப்பட்ட சீனி மேல் எறும்பு ஊர்ந்து செல்வதுபோல, எறும்பின் எடையின்மைதான் சீனி சரிந்து மூடாமல் தடுக்கிறது. பாறைகள் தோராயமாக ஓர் ஆள் உயரமானவை. அவை நாங்கள் ஏறியபோது ஆங்காங்கே கடகடவென ஆடினாலும் சரியவில்லை. மலையுச்சி மேல் நின்று சுற்றிலுமுள்ள பசிய நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இங்கே வாழ்ந்த மக்கள் கீழே சென்று வேட்டையாடிவிட்டு வந்திருக்கிறார்கள். எப்போதோ கீழிறங்கிச்சென்று விவசாயம் செய்து, வீடுகட்டி, வேறொரு பண்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்போதும் அடிக்கடி மேலே வருகிறார்கள். இங்கே மலைமேல் புதுமணத்தம்பதிகள் வந்து சில ஓவியங்களுக்குப் பூசை செய்தால் நல்ல குழந்தைகள் நிறையவே பிறக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இது காளை (நந்தி) ஆதலால் வீரசைவர்களுக்கும் இந்த மலை புனிதமானது. நந்தியும் வீரியத்தின் தெய்வம். நாம் இன்று வாழும் காலம் இந்த தொன்மையான மலையின் வீரியத்திலிருந்து உருவானது. இது பிரஜாபதிகளின் மலை.

மலையிறங்கி வந்து மதிய உணவு. வெயிலில் பசியில் உணவு நன்றாகவே இருந்தது. மாலையில் ஆந்திரமாநிலத்தில் கேதாவரம் என்னும் மலையடிவாரத்தை அடைந்தோம். அங்கே தொன்மையான குகை ஓவியங்கள் இருப்பதாக அறிந்திருந்தோம். ஆனால் அது ஊருக்கு அருகே உள்ள இடம். குகைக்குள் மதுப்புட்டிகள், அடுப்புகள், மேலே முழுமையாகவே சமையற்கரி. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பை. அரசு அந்த இடத்தை ஒரு பூங்காவாக ஆக்க சில முயற்சிகளைச் செய்திருக்கிறது. ஆனால் பின்னர் அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டிருக்கிறது

இந்த மலை சுண்ணப்பாறையாலானது. சிவப்புநிறக் கல்லால் வரையப்பட்ட (இரும்பு ஆக்ஸைட் ஆகவே செந்நிறம்) ஓவியங்கள் மங்கலாக இருந்தன. இங்குள்ள சுவாரசியம் என்பது வழக்கத்துக்கு மாறாக இங்கே முயல்களின் படங்கள் உண்டு என்பதுதான். எங்கும் முள். தனிமை. அந்தி இருட்டிக்கொண்டு வந்தது. மெழுகு உருகியதுபோல அல்லது மாமிசம் போல தோன்றிய மலைப்பாறைகள். நிலவு தோன்றிவிட்டிருந்தது. அங்கே சிம்மாசனம் போலிருந்த ஒரு பாறையின்மேல் அமர்ந்துகொண்டேன். என் மூதாதையரின் மண்ணில் நான் ஒரு சிறிய அரசன்!

கேதவரம் அருகே ஜெகன்னாதகட்டு (Jagannathagattu) என்னும் தொன்மையான கோயில் இருக்கிறது. இதன் கருவறை தொல்கற்கால குகையை கோயிலாக ஆக்கிக்கொண்டது என்று செய்தி சொல்கிறது. நாங்கள் அங்கே செல்வதற்குள் இருட்டிவிட்டது. ஆகவே அதைப் பார்க்கவில்லை.

பகல் முழுக்க வெயிலில் பாறைகளில் தொற்றி ஏறிய களைப்பு. நாங்கள் மாலை கர்நூல் மாவட்டத்திலுள்ள ராலேப்பாடு பறவை சரணாலயத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தோம். தேடி அலைந்து ஏழுமணிக்கு அந்த இடத்தை கண்டடைந்தோம். வனத்துறையின் தங்குமிடம். நீண்ட கூடத்தில் எட்டுபேரும் படுத்துக்கொண்டோம். மாலை உணவு மிகச்சிறப்பாக இருந்தது என்றனர். பொதுவாக வனத்துறையில் உணவு சிறப்பாக இருக்கும். நான் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன்.

கனவுகள் மீண்டும் கலந்து கலந்து ஒழுகிக்கொண்டிருந்தன. திமில்புடைத்த காளைகள். சிந்துவெளி ஓவியங்கள். அசோகரின் கல்வெட்டு. நடனமிடும் பூசாரி. குறியெழுந்த வேடன். அது வேடனல்ல, எழுந்த குறியுடன் இரவலனாக வரும் பிட்சாடனர் சிலை. தொன்மையான வேடன். அழிவற்ற வேடன்.

(மேலும்)

 

 

 

முந்தைய கட்டுரைஅமிர்தா ராஜகோபால்
அடுத்த கட்டுரைகோழிக்கோடு கே.லிட் ஃபெஸ்ட்டில்…