ஜனவரி 11 ஆம் தேதி ஆந்திரமாநிலத்தின் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம். ராயதுர்க்கம் என்னுமிடத்தில் இரவு தங்கினோம். காலையில் எழுந்து மீண்டும் கர்நாடகத்திற்குள் நுழைந்து பிரம்மகிரி அசோகர் கல்வெட்டைப் பார்ப்பதற்காகச் சென்றோம்.
இந்தியாவெங்கும் கிடைத்துள்ள அசோகரின் கல்வெட்டுகள் இந்தியாவின் பண்பாட்டுக்கும் தேசியக்கட்டுமானத்திற்கும் மிகமிக முக்கியமானவை. இந்தியாவின் பெரும்பாலான நிலம் ஒரே ஆட்சிப்பரப்பாகவும், ஒரே பண்பாட்டுப்பரப்பாகவும் இருந்தது என்பதற்கான திட்டவட்டமான முதல் தொல்லியல் சான்றுகள் அவையே.
அசோகரின் கல்வெட்டுகள் பாறைகளிலும் கற்தூண்களிலுமாக ஆப்கானிஸ்தான் முதல் வங்கம் வரை, பீகார் முதல் ஆந்திரம் வரை இந்தியாவெங்கும் கிடைக்கின்றன. (காஞ்சியில் ஒன்று இருந்ததாக ஓர் ஊகம் உண்டு) இந்தியா என்னும் பெருநிலம் ஒரே ஆட்சிப்பரப்பென இரண்டாயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது தமிழகத்தில் சங்ககாலம் தொடங்கும்போதே, இருந்திருக்கிறதென்பது அக்கல்வெட்டுகளால் நிறுவப்படுகிறது.
அத்துடன் அப்போதே அந்தப்பேரரசு வன்முறையாலன்றி, மாபெரும் ஆட்சிக்கூட்டமைப்பாலும் அக்கூட்டமைப்பை கட்டமைத்த பௌத்த அறநெறியாலும் உருவாக்கப்பட்டு நீடித்தது என்பதும் வியப்பூட்டுவது. அக்காலகட்டத்தில் உலகில் எங்கும் அப்படி ஓர் அரசு இருந்ததில்லை, இயலும் நிலையும் காணக்கிடைக்கவில்லை. அசோகரின் ஆட்சிக்காலமே இந்தியப்பண்பாடு ஆழமும் விரிவும் கொண்டு உலகமெங்கும் விரியவும் காரணமாகியது.
அத்துடன் அக்கல்வெட்டுகள் வெவ்வேறு வகைகளில் இந்தியாவின் தொல்வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வழிகளை திறக்கின்றன. இவற்றில் அக்கால வாழ்க்கைமுறை, அக்கால வணிகம், வரிவிதிப்பு, அரசாங்கம் மக்களின் நல்வாழ்க்கைக்கும் அறநெறிக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் தன்மை என ஏராளமான செய்திகள் உள்ளன. உதாரணமாக, அசோகர் விலங்குகளுக்கான மருத்துவமனைகளை உருவாக்கினார் என்பது உலக அளவிலேயே முக்கியமான ஒரு செய்தி.
அசோகரின் கல்வெட்டுகள் கண்டடையப்பட்டதற்கும், வாசிக்கப்பட்டதற்கும் இந்தியா கடன்பட்டுள்ள ஆய்வாளர் பலருண்டு. முதன்மையாக இக்கல்வெட்டுகளில் உள்ள பியதஸ்ஸி (பிரியதர்சி), தேவனாம்பியா (தேவனாம்பிரிய) ஆகிய சொற்கள் அசோகரைக் குறிப்பவை என்று 1915ல் கண்டடைந்த பிரிட்டிஷ் ஆய்வாளரான சி.பீடன் (C.Beadon), இக்கல்வெட்டுகள் எழுதப்பட்டிருக்கும் பிராமி லிபியை அடையாளம் கண்ட கிறிஸ்டியன் லாசன் (Christian Lassen) அந்த லிபியை வாசிக்கும்படி வகுத்த ஜேம்ஸ் பிரின்ஸெப் (James Prinsep) இந்தியாவெங்கும் இக்கல்வெட்டுகளை தேடிக்கண்டடைந்த சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இவற்றை பாதுகாக்க முயற்சி எடுத்துக்கொண்ட (Sir Alexander Cunningham) மற்றும் மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) ஆகியோர்.
நான் அசோகர் கல்வெட்டுகளை சாஞ்சி, சாரநாத், அலஹாபாத், கிர்நார், தௌலி ஆகிய இடங்களில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வரலாற்றைத் தொட்டறியும் மெய்ப்பை அடைந்துமிருக்கிறேன். பிரம்மகிரிக்கு காலையில் ஒரு வெறும் காபியை மட்டும் குடித்துவிட்டுச் சென்று சேர்ந்தோம். அங்கே எவருமில்லை. சாலையோரமாகவே அந்த கல்வெட்டு இருக்கும் பாறை இருந்தது. பள்ளி செல்லும் சிறுவர்களிடம் விசாரித்தோம். அங்கே காவலரின் எண் எழுதப்பட்டிருந்தது. தொலைபேசியில் அழைத்தபோது அவரே வந்து திறந்து உள்ளே கொண்டுசென்றார்.
அந்தக் கல்வெட்டு அமைந்த இயற்கையான பாறையை சுற்றிலும் ஒரு கல்மண்டபம் எழுப்பப்பட்டிருந்தது. மழையோ வெள்ளமோ கல்வெட்டை பாதிக்காதபடி அமைக்கப்பட்ட அக்கல்மண்டபத்தை 1943ல் மார்ட்டிமர் வீலர் அமைத்தார். 1891 இந்த கல்வெட்டை ஆய்வாளர் பெஞ்சமின் ரைஸ் (Benjamin L.Rice) கண்டடைந்தார். பிரம்மகிரி தொல்கற்காலம் முதலே தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்த மலையாக இருந்துள்ளது. இங்கே பல காலகட்டங்களைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக இங்கே ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 1956ல் சேஷாத்ரியும் 1965ல் அமலாந்த கோஷும் இப்பகுதியில் அகழ்வாய்வு செய்தனர்.
மண்டபத்தினுள் சென்று கல்வெட்டை பார்த்தோம். அதன் விளிம்புகளில் தொற்றி நின்றபடி அந்த எழுத்துகளை வெவ்வேறு கோணத்தில் பார்த்தோம். அவை தேவனுக்குப்பிரியமானவன் தன் குடிகளுக்குச் சொன்ன அறவுரைகள். அதுவே ஒரு விந்தை, அன்று அரசன் என்றாலே ஆணை என்றே இருந்திருக்கும். ஒரு கையில் கொலைவாள் இன்றி அரசன் அறத்தை நிலைநிறுத்தமுடியாது என்று நம்பப்பட்ட காலம் அது. அந்த அறவுரைகளில் அன்பும் கருணையும் மட்டுமே இருந்தன. அவை தந்தையென்று நின்று அரசன் உரைத்த சொற்கள்.
பிராமி லிபி கற்பதற்கு மிக எளிது. அ.கா.பெருமாள் இரண்டு மணிநேரத்தில் அதைக் கற்பிக்கிறார். எளிய கோடுகளாலானது. ஆனால் மிகச்சிறிய வேறுபாடே ஓர் எழுத்துக்கும் இன்னொரு எழுத்துக்குமிடையே உள்ளதென்பதனால் இஷ்டப்படி வாசிக்கவும், திரிபுப்பொருள் கொள்ளவும் வாய்ப்பு மிகுதி. இந்தியாவில் எங்கும் பிராமி லிபிதான் புழக்கத்தில் இருந்தது. தொல்தமிழ், பாலி, பிராகிருதம், சம்ஸ்கிருதம் உட்பட எல்லா மொழிகளும் அதில் எழுதப்பட்டன. பிராமி லிபி தமிழில் எழுதப்பட்டால் அதை இங்கே சிலர் தமிழி என்று சொல்கின்றனர்.
காலையுணவை அசோகதரிசனத்திற்கு பின்னர் முடித்தோம். தக்காணத்தின் மலைகள் வழியாக காரில் பயணம் செய்து விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக இருந்த ஹம்பியை கடந்துசென்றோம். விஜயநகரம் ஹரிஹரர் புக்கர் என்னும் அரசர்களால் அமைக்கப்பட்டது. அவர்கள் அதற்கு முன்பு ஆனைக்குந்தி மலைப்பகுதியை ஆட்சிசெய்த யாதவ அரசகுடியைச் சேர்ந்தவர்கள். டெல்லி சுல்தான்களால் ஆனைக்குந்தி அழிக்கப்பட்டது. அவர்கள் இளமையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டனர். பின்னர் மதம் மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதிக்கே ஆட்சியாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சிருங்கேரியின் மடாதிபதி வித்யாரண்யரின் வழிகாட்டலால் மீண்டும் இந்துக்களாக ஆகி விஜயநகரை உருவாக்கினர் என்பது வரலாறும் தொன்மமும் கலந்து பேசப்படுகிறது.
ஆனைக்குந்தி ஒரு சுற்றுலாத்தலம். அங்கே சென்றபின்னர்தான் நாங்கள் காணவந்த ஆனைக்குந்தி குகையோவியங்கள் அங்கில்லை என உணர்ந்தோம். வெவ்வேறு உணவகங்கள், சிறிய பரிசு விற்பனையகங்களைக் கடந்து ஊரைத்தாண்டி நாங்கள் செல்லவேண்டிய இடத்தைக் கண்டடைந்தோம். முன்பை விட இப்போதெல்லாம் இந்தவகையான இடங்களைப் பற்றிக் கேட்டால் எவராவது விவரிக்கிறார்கள். இந்த இடம் கொப்பல் மாவட்டத்தில் ஆனேக்குந்தி வட்டத்தில் சிக்கராம்பூர் என்னுமிடத்தில் உள்ளன.
வயலோரமாக வண்டியை நிறுத்தி வரப்பு வழியாக நடந்து சென்றோம். அங்கே ஒரு ரயில்பாலத்தின் அடியில் மெத்தை தலையணையுடன் படுத்திருந்தவர்தான் ஆனைக்குந்தி குகை ஓவியங்களின் காவலர். அது பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் இருந்தது. அவரே வந்து அழைத்துச் சென்றார். அவர் வரவில்லை என்றால் அங்கே சென்று அவற்றைப் பார்த்திருக்க முடியாது. மலைப்பாறைகள் வழியாகத் தொற்றி மேலேறிச் செல்லவேண்டியிருந்தது.
ஆனைக்குந்தி குகை ஓவியங்கள் குகை புதுக்கற்காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. கற்காலக் குகை ஓவியங்களில் காணப்படும் சிறிய செந்நிற ஓவியங்களில் மான்கள் பெரும்பாலும் இருந்தன. பெரிய கொம்புகள் கொண்ட எருதுகள் இருந்தன. கரடி, நாய் என அடையாளம் காணத்தக்க விலங்குகள் இருந்தன.
இவை புதுக்கற்காலகட்டத்தையவை என ஏன் ஊகிக்கப்படுகின்றது என்றால் இவற்றில் வெவ்வேறு ஓவியங்களில் விலங்குகள்மேல் மனிதர்கள் ஏறி போரிடுவது, அல்லது பயணம் செய்வது போன்ற காட்சிகள் உள்ளன என்பதனால்தான். மனிதர்கள் விலங்குகளைப் பழக்க ஆரம்பித்த பின்னர் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அல்லது இவை தொடர்ச்சியாக வரையப்பட்டுக்கொண்டே இருந்து புதுக்கற்காலம் வரை வந்தடைந்துள்ளன.
இங்குள்ள முதன்மையான விஷயம், சரிவான இயற்கைக்குகையிலுள்ள சிறிய ஓவியங்கள்தான். (சரியான பொருளில் இவை குகைகள் அல்ல, பாறைமடிப்புகளே. கற்கால மக்கள் பாறைகள் கூரையாக அமைந்த இத்தகைய இடங்களையே தங்குமிடங்களாகத் தெரிவுசெய்தனர். குகைகளுக்குள் செல்லவில்லை) அவற்றில் கணம் என்று சொல்லத்தக்க கைகோத்துக் கொண்ட மக்கள், வட்டம் என்று அடையாளம் காணத்தக்க ஓர் அமைப்பு ஆகியவை உள்ளன. அவை அங்கே நிகழ்ந்த சடங்குகளைக் குறிக்கலாம். அல்லது கல்வட்டங்களைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.
மிகமுக்கியமான ஒன்று இந்த பாறையில் அடிப்பக்கம் வரையப்பட்டுள்ள பெரிய பாம்பு வடிவம். படமெடுத்த ராஜநாகம். ஆனால் எந்த உண்மையான பாம்பை விட மிகப் பெரியது இது. அதாவது ஒரு கற்பனைப் பாம்பு. அதுவும் அடியில் மல்லாந்து படுத்து வானைப் பார்க்கையில் தெரிவதுபோல வரையப்பட்டுள்ளது. வானியல்குறியீடாகக்கூட இருக்கலாம். பிற்காலத்தில் இந்தியாவெங்கும் ஆலயங்களில் (உதாரணமாக திருச்செங்கோடு மலை) செதுக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நாகங்களின் தொல்வடிவம்.
குளிர்ந்த பாறையின் அடியில் சற்றுநேரம் அமர்ந்தோம். பின்னர் களைப்பில் படுத்துக்கொண்டோம். கும்பலாக அங்கே படுத்துக்கிடக்கையில் குகைமூதாதையரின் குலநீட்சி என உணரமுடிந்தது. தொலைவில் வெயில் கண்கூசும்படி பொழிந்துகொண்டிருந்தது. தக்காணத்தின் குளிர் காற்றில் அப்போதுமிருந்தது. மெல்லிய இனிமை நிறைந்த அந்தப்பொழுது பயணங்களில் வாய்க்கும் அரிய கொடை.
இந்தியாவெங்கும் நான் தொல்லியல்தடங்களைத் தேடிச்சென்றுகொண்டே இருக்கிறேன். ஆய்வாளனாக அல்ல, ஆய்வு என் கற்பனையையும் உள்ளுணர்வையும் தர்க்கத்தால் தடிமனாக்கிவிடக்கூடும் என அஞ்சுகிறேன். என் கனவுகளையும் மெய்யறிதலையும் தொன்மையுடன் தொடர்புபடுத்திக்கொள்ளவே நான் பயணம் செய்கிறேன். விந்தையான, திகைப்பூட்டும் இடங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். கோலாப்பூர் – ரத்னகிரி இடைநிலத்தில் பார்த்த மாபெரும் குடைவோவியங்கள் அவ்வகையில் முக்கியமானவை.
ஆனால் இம்முறை ஹெரெபெனெகல் (Hirebenakal) என்னும் இடத்தில் பார்த்த தொல்பழங்கால கல் அறைகளின் பெருந்தொகை போல் பிறிதொன்றில்லை. அத்தனை பெரியது, அளவிலும் எண்ணிக்கையிலும். பாறைப் பாளங்களால் செய்யப்பட்ட கற்காலக் கல்அறைகள் ஒரு சிறு ஊர் அளவுக்கு ஒரு மலைப்பகுதியை முழுமையாகவே நிறைத்திருந்தன. கட்டிடங்கள் இரு பக்கமும் நிரைவகுத்த பெரிய தெருக்கள் போலவே தோன்றின அவை. ஐம்பது ஏக்கர் அளவுக்கு நெருக்கமாக இந்தக் கல்அறைகள் உள்ளன.
தொல்கற்கால ஈமச்சின்னங்கள் பொதுவாக மூன்றுவகை. நெடுங்கற்கள் (menhir) கல்அறைகள் (dolmens/cists) கல்வட்டங்கள் (stone rounds) இவை உலகமெங்கும் உள்ளன. அனைத்துக்குமே ஒரே வடிவம்தான். மானுடம் ஒரே பண்பாட்டுடன் இருந்த தொல்பழங்காலகட்டத்தைச் சேர்ந்தவை இவை. அல்லது நாமறியாத ஏதோ தொல்குடிகளால் உருவாக்கப்பட்டவை. குடைக்கல் அல்லது தொப்பிக்கல் என்பவை கல்அறைகளின் இன்னொரு வடிவம்தான்.
கல்அறைகள் பொதுவாக மூதன்னையருக்குரியவை என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஏனென்றால் அவற்றுக்குள் ஏராளமான எலும்புகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் எலும்புகளே மிகுதி. பொதுவாக பிற இடங்களில் அடக்கம் செய்யப்பட்ட உடல்களில் இருந்து எலும்புகளை இவற்றுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்திலும் கோத்தகிரி, கொல்லிமலை என பல ஊர்களில் கல்அறைகள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே சிறியவை. நாங்கள் மைசூர் அருகே பார்த்த கல்அறைகளே ஒப்புநோக்க பெரியவை. அவை இடையளவு உயரமானவை. இவை ஒரு சாதாரண வீடு அளவுக்கே பெரியவை. பல கல்அறைகள் பத்தடி உயரம் கொண்டவை. அவற்றுக்குள் நான் கைகளை மேலே தூக்கி நிற்கமுடிந்தது.
கல்அறைகள் எல்லாப்பக்கமும் மூடப்பட்டவையாகவே இருக்கும். அதுதான் அவை வாழ்விடங்கள் அல்ல என்பதற்கான சான்று. சில கல்அறைகளில் புதிய எலும்புகளை உள்ளே வைப்பதற்கான துளைகள் இருக்கும். இங்கே பெரும்பாலான கல்அறைகள் முற்றிலும் கற்பாளங்களால் மூடப்பட்டவை. அவை உடைந்த வெளி வழியாகவே உள்ளே சென்று பார்த்தேன்.
இவற்றின் காலகட்டம் சில ஆய்வாளர்களால் பொமு 200 முதல் 800 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் முற்றிலும் பிழையான காலக்கணிப்பு அது. இக்காலக்கணிப்பு செய்யப்பட்ட காலகட்டத்தில் தொல்பழங்காலச் சின்னங்களைப் பற்றிய புரிதல் பொதுவாக இல்லை. இவற்றை சாதாரணமான வரலாற்றாசிரியர்கள் புரிந்துகொள்ளவோ, காலக்கணிப்பு செய்யவோ முடியாது. அவர்கள் எதையும் தாங்களறிந்த வரலாற்றுக்காலகட்டத்திற்கே கொண்டுவந்து மதிப்பிடுவார்கள்.
தொடக்ககால பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இவற்றை இந்தியாவின் பழைய கட்டுமானங்கள் என்றே எண்ணி காலக்கணிப்பு செய்துள்ளனர். இதே போல இடைக்கல், தொப்பிக்கல் போன்ற பல தொல்கற்காலச் சின்னங்களை மிக அண்மைக்காலத்தையவை என சில வரலாற்றாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அவற்றையே தொல்லியல் இணையதளங்களிலும் காணமுடிகிறது.
முழுமையான அசட்டுத்தனம் என்றே அக்கணிப்புகளைச் சொல்லமுடியும். ஏனென்றால் இவற்றை காலக்கணிப்பு செய்ய மானுடவியல் தரவுகள் அன்றி வேறு தொல்லியல் ஆய்வுமுறைமைகள் ஏதும் இல்லை. ஆனால் இந்த தொல்சின்னங்கள் பற்றி நாமறிந்த மொழிப்பதிவுகளோ பண்பாட்டுப்பதிவுகளோ ஏதுமில்லை. மகாபாரதம் போன்ற புராணங்களில் ஒரு குறிப்பும் இல்லை. நம் நாட்டார் பண்பாட்டில் மட்டுமல்ல நம் பழங்குடிகளிடையே கூட இவற்றைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அப்படியிருக்க எப்படி பேரரசுகள் உருவாகி, செவ்வியல் கலைகளும் இலக்கியமும் உருவானபின் தோன்றியவை இவை என மதிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த தொல்லியல் சின்னங்கள் குறித்த புரிதலையே இல்லாமலாக்குபவை இந்த அசட்டுத்தனமான காலக்கணிப்புகள். இந்திய மக்கள் அண்மைக்காலம் வரை கற்கால வாழ்வை வாழ்ந்தனர் என்னும் புரிதலுக்குக் கொண்டுசெல்பவை. அந்த எண்ணமே பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் பலரிடம் இருந்தது என்பதே உண்மை
மானுடவியல் அறிஞர்களே இந்த சின்னங்களை புரிந்து காலக்கணிப்பு செய்யமுடியும். ஆனால் இந்தியத் தொல்லியல்துறை வரலாற்றாய்வாளர்களின் கையில் உள்ளது. அவர்களே இவற்றை ஆராய்ந்து காலக்கணிப்பு செய்கின்றனர். அவர்களுக்கு மானுடவியலில் ஆரம்பக்கல்வி கூட இல்லை என்பதை பேரறிஞர் சிலருடன் உரையாடியபோது கண்டிருக்கிறேன். ஓர் அறிஞர் மற்றதுறைகளில் அறியாமையுடன் இருப்பதும், அறிவுத்துறைகள் அரசுத்துறைகளாக ஆகி ஒன்றுடன் ஒன்று இசைவு கொள்ளாமலிருப்பதும் இந்தியாவில் மிக இயல்பான ஒன்று.
இவை புதுக்கற்காலம் முதல் பெருங்கற்காலம் வழியாக இரும்புக்காலம் அதாவது வரலாற்றுக்காலம் தொடங்குவது வரை வளர்ந்து வந்த தொல்பழங்குடிகளின் இடுகாட்டு கட்டுமானங்கள். அதாவது இவை பெரும்பாலும் ஐந்தாயிரமாண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டிருக்கப்பட வேண்டும். இருபதாயிரமாண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருக்கவேண்டும். இந்த இடத்திலேயே இது பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்றும் ஆனால் பொயு 200 ஐச் சேர்ந்தது என்றும் எழுதியிருக்கிறார்கள்.
இங்குள்ள கற்பலகைகளைப் பார்க்கும் எவருக்கும் இவற்றின் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என எளிதில் சொல்லிவிடமுடியும். இந்த பாறைப்பகுதியில் இயல்பாகக் கிடைக்கும் பாறையே பாளங்களாக உடைந்து வருவது. அதை அப்படியே பெயர்த்து தூக்கி வைத்து இக்கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த கட்டுமானத்திலும் சிறிய அளவில்கூட உலோகச் செதுக்குவேலைகள் இல்லை.
ஹிரேபெனெக்கல் கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி என்னும் ஊர் அருகே உள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ இரண்டாயிரம் பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ளன என்கிறார்கள். அவற்றில் இதுவே மிகப்பெரிய வளாகம். இன்று இது யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட மானுடத் தொல்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஆசியாட்டிக் சொசைட்டியில் 1835லேயே இந்த இடம் பற்றி பிலிப் டைலர் (Philip Meadows Taylor) என்னும் ஆய்வாளர் எழுதியிருக்கிறார். மார்ட்டிமர் வீலர் இப்பகுதியில் அகழ்வாய்வுகளைச் செய்திருக்கிறார். அடிகா சுந்தராவின் ஆய்வுகள் 1975 வாக்கில் நிகழ்ந்தன. இப்பகுதியில் இரண்டு மலைகளிலாக எழுநூறுக்கும் மேற்பட்ட கல்அறைகள் இருக்கின்றன. இவை எப்படிப் பார்த்தாலும் பத்தாயிரமாண்டுகள் புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.
இந்தப் பகுதி இன்னும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. எவர் வேண்டுமென்றாலும் வந்து இந்த கல்அறைகளை அழிக்கலாம் என்னும் நிலைதான் உள்ளது. மாடுமேய்ப்பவர்களாலும் புதையல் தேடுபவர்களாலும் பாதிக்குமேல் கல்அறைகள் சரிக்கப்பட்டுவிட்டன என்று சொல்லப்படுகிறது.
இந்த கல்அறைகள் நடுவே சென்றுகொண்டிருக்கையில் ஒரு வகையான ஆழ்ந்த மௌனம் உருவாகிறது. மானுடர் வாழ்ந்த இடம் அல்ல இது, மறைந்தவர்களுக்கான இடம். வாழ்ந்தவர்களின் இடங்கள் இன்று இப்பகுதியெங்கும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே தொல்கற்கால, புதுக்கற்கால கற்சின்னங்களும் பெருங்கற்கால பானையோடுகளும், ஏராளமான எலும்புகளும் கிடைத்துள்ளன. அம்மக்கள் இயற்கைக் குகைகளில் வாழ்ந்திருக்கலாம். பின்னர் குடில்கள் கூட கட்டிக்கொண்டிருக்கலாம், ஆனால் மூதாதையருக்கு அழியாத வாழ்விடங்கள் வேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். இந்த இறந்தவர்களின் நகரை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள ஆய்வாளர்களால் இயலாது. அதை கலை மிக எளிதில் புரிந்துகொள்ளும். கலைக்கு வாழ்வென்பது அன்றாடம் அல்ல. புறவயமானதும் அல்ல. அது காலத்தைக் கடந்து சென்றுகொண்டே இருக்கும் அகநிகழ்வுதான். அது என்னையும் இங்கு வாழ்ந்து மறைந்த அந்த முன்னோடிகளையும் ஒரே திரளென, ஒரே உளமென தொடுக்கிறது.
அந்தி சரிந்துகொண்டிருந்தது. அந்த மலைப்பகுதி துங்கபத்ராவுக்கு அருகே அமைந்தது. ஆகவே மக்கள் அங்கே நீடித்து வாழ்ந்திருக்கிறார்கள். மலைமேலேயே தொன்மையான ஒரு குளம் உள்ளது. அங்கேதான் இக்கற்களெல்லாம் பெயர்த்தெடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். இங்கே, இறந்தவர்களுடன் இணைந்து மக்கள் வாழ்ந்திருக்கக் கூடும். சாவும் வாழ்வும். ஆனால் சாவை அமுதமென்று, அழிவின்மை என்று ஆக்கிக்கொண்டால் வாழ்வு அதன் நீட்சியாகி விடுகிறது. இந்தக் கல்அறைகளினூடாக அவர்கள் முயன்றது அதற்குத்தான்.
(மேலும்)