தொன்மையின் தொடரில்… 2

முதல்நாள் இரவில் ஹவேரி என்னும் ஊரில் தங்கினோம். நல்ல விடுதி, நான் முந்தையநாளில் சரியாகத் தூங்கவுமில்லை. ஆனாலும் சரியானத் தூக்கமில்லை. சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. தூக்கமும் அரைநினைவோட்டமுமாக இரவு சென்றது. பயணங்களில் முதல்நாளில் இப்படி ஆகிவிடுகிறது. பகலில் பார்த்த காட்சிகள் சித்தம்நிறைந்து ததும்புகின்றன. அத்துடன் இப்போதெல்லாம் நான் மதியம் தாண்டி டீ அல்லது காப்பி குடித்தாலே துயில் சிதைகிறது. அணுகும் முதுமையின் அடையாளங்களிலொன்று.

காலையில் ஹவேரி மாவட்டத்திலுள்ள ரானேபென்னூர் என்னுமிடத்தில் சௌடையதன்பூர் (chaudayyadanapur) என்னும் ஊரில் இருந்த முக்தேஸ்வரா ஆலயத்தைப் பார்க்கச் சென்றோம். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த இந்த மிக அழகிய ஆலயத்தை இந்தியாவிலேயே அழகிய சில ஆலயங்களிலொன்று என்று சொல்லிவிடலாம். கல்யாணி சாளுக்கிய (கீழைச்சாளுக்கியக்) சிற்பக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம் பொயு 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

சாளுக்கிய, ஹொய்ச்சாளக் கட்டிடக்கலையின் பொது அம்சமென்பது மையமாக அமைந்த சபா மண்டபத்தைச் சுற்றி வெவ்வேறு கருவறைகள் அமைந்திருப்பது. பெரும்பாலும் நேர் எதிரில் சூரியனின் சன்னிதி இருக்கும். ஆகவே இது பெரும்பாலும் மூன்று தனி ஆலயங்களை மடித்துச் செய்யப்பட்டதுபோன்ற அமைப்பு கொண்டது. கருவறைக்குமேல் சிறிய, அழகான விமானம் அமைந்திருக்கும்.

இவ்வகை ஆலயங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் சிறிய ஆலயம்போலத் தெரியும். அருகே சென்றால் மடிப்பு மடிப்பாக விரிந்துகொண்டே செல்லும். இந்த அமைப்புக்கு ஜக்கனாச்சாரி பாணி என்று பெயர். கர்நாடகத்தின் புகழ்பெற்ற சிற்பியான ஜக்கனாச்சாரியின் பெயர் பல கோயில் கல்வெட்டுக்களில் உள்ளது. அவர் ஒரு சிற்பமரபின் தலைமையில் இருந்த கலைஞர்.

ஹொய்ச்சாள, சாளுக்கிய ஆலயங்களில் தனியாக அறிவிப்புப் பலகைகளாகக் கல்வெட்டுகள் இருப்பது வழக்கம் – தமிழ்நாடுபோல அடித்தளவளைவில் கல்வெட்டுகள் செறிந்திருப்பது அரிது. இந்த ஆலயம் சாளுக்கியர்களின் சிற்றரசர்களான குட்டல அரசகுடியினரால் கட்டப்பட்டு தொடர்ச்சியாக பேணப்பட்டிருக்கிறது.

முக்தேஸ்வர் ஆலயம் சிவனுக்கானது. முக்த என்றால் விடுபட்ட. சுயம்புலிங்கம் இது. (இயற்கையான கற்பாறையாக இருந்துள்ளது)  இங்கே முக்திஸ்யர் என்னும் லகுலீஸ பாசுபத சைவத் துறவி தங்கியிருந்து சிவப்பணி ஆற்றியதாகக் கல்வெட்டுகள் சொல்கின்றன. வீரசைவ மரபினரான சிவதேவருக்கு இந்த ஆலயமும் ஊரும் கொடையாக அளிக்கப்பட்டதாகவும் தொன்மம் உள்ளது.

கல்யாணி சாளுக்கிய ஆலயங்களின் தனிச்சிறப்பான நுணுக்கமான சிற்பங்கள் செறிந்த அடித்தளம். வெளிப்பக்கமாக இதழ்மடிந்த மலர் போல் அமைந்த சுற்றுவட்டம். சிறிய அழகிய விமானங்கள். பயணிகள் என எங்களைத் தவிர எவருமில்லை. இப்போதெல்லாம் ஓர் ஆலயம் அதே பாணியிலான பிற ஆலயங்களின் தொடராக அமைந்துவிடுகிறது. அருகர்களின் பாதை பயணத்தின்போது மைசூர் முதல் ஹலஸி வரை பார்த்துச்சென்ற ஆலயங்களில் தொடங்கி எத்தனை ஆலயங்கள். ஒரு மகத்தான நூலின் ஒரு பக்கம்போல ஓர் ஆலயம்.

அன்றே இன்னொரு ஆலயம், நிலகுண்டா பிமேஸ்வரா கோயில். இதுவும் கல்யாணி சாளுக்கியர் காலகட்டத்தில் பொயு 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுதான். கருங்கல்லில் சாத்தியமில்லாத நுணுக்கமானச் செதுக்குகள் இந்தவகையான மென்மையான கரியமாக்கல்லில் உள்ளன. மின்னும் தூண்கள். குளிர்ந்த திண்ணைகள். சக்தி கிருஷ்ணன் ஒரு திண்ணையில் மல்லாந்து படுத்துவிட்டார். அத்தகைய ஆலயங்களிலெல்லாம் சிறிதுநேரம் அமர்ந்து பேசுவது எங்கள் வழக்கம். அங்கும் கொஞ்சம் உரையாடினோம்.

அன்றே மூன்றாவது ஆலயம். ஹிரேஹடஹள்ளி என்னுமிடத்திலுள்ள கல்லேஸ்வரா கோயில். இதுவும் கீழைச்சாளுக்கிய கட்டிடக்கலைதான். மேலும் நூறாண்டுகளுக்கு முன்பு பொயு 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலம் சென்ற வழியில் உதிர்ந்து கிடக்கும் ஒரு பெரிய ஆபரணம் என்னும் சொல்லாட்சி மனதில் எழுந்தது. காலம் கல்லைத்தான் பொருட்படுத்துகிறது. காலத்தை சற்றேனும் தாங்கிக்கொள்ள கல்லால் மட்டுமே இயல்கிறது.

இந்தக் கோயில்களைப் பார்க்கையில் மீண்டும் மீண்டும் எழும் வியப்பு ஒன்று உண்டு, இந்தியாவின் கலைச்செல்வங்களைப் பார்த்து முடிக்க மானுடரால் இயலுமா? ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டே இருந்தால்கூட, இந்தியாவின் கலைவெற்றிகளை மட்டும் பார்த்துமுடிக்க நூறாண்டு போதுமா? அறியப்படாத சிற்றூர்களிலெல்லாம் ஆலயங்கள் உள்ளன. மிகச்சிலவே வழிபாட்டில் உள்ளன. பல ஆலயங்கள் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. ஆனால் மானுடர் கைவிட்டாலும் கலையோ தெய்வாம்சமோ ஒன்று கைவிடவில்லை அவற்றிலுள்ளது மகத்தான ஒன்றின் இருப்பு.

ஆந்திரம், கர்நாடகம் என ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பேரரசுகளும் அவற்றுக்கே உரிய கலைமரபுகளும் உள்ளன. அவை ஒன்றிலிருந்து ஒன்று உருவானவை, நுணுக்கமாக அறியுந்தோறும்தான் உண்மையில் வேறுபாடு தெரியவரும். உதாரணமாக, தூண்களில் வட்டுகளும் வளையங்களும் கூடவே நுணுக்கமான செதுக்குகளுடன் குடம்போன்ற அமைப்புகளும் வந்துவிட்டால் அது ஹொய்ச்சாளக் கலை. காலத்தில் சற்றே பிற்பட்டது.

ஆலயங்களை விழிகளால் பார்த்துக்கொண்டு உள்ளத்தை முழுக்க ரத்துசெய்துவிட்டு நடப்பது என் வழக்கம். மிகவும் அறிவார்ந்து யோசிப்பதில்லை, ஆராய்ச்சி செய்வதுமில்லை. என்னுள் என்ன எஞ்சுகிறதென்று பார்ப்போம் என்று எண்ணிக்கொள்வேன். என் எழுத்தில் எப்போதேனும் அவை வரும்போது அவை உருமாறியிருக்கும் விந்தை எப்போதுமே திகைப்பூட்டுவது.

மதிய உணவை ஒரு வழியோரக்கடையில் உண்டோம். ஒரு சந்தை வழியாகச் சென்றோம். அங்கே பலவகையான தெருக்கடைகள். பெட்டிக்கடைகளிலேயே சாராயமும் பெட்ரோலும் விற்கப்பட்டன. துணிப்பந்தலிடப்பட்ட சூதாட்ட நிலையங்கள். கிருஷ்ணன் சென்று ஆர்வமாக பார்த்துவிட்டு ”அதிகபட்சம் பத்துரூபாய் வைச்சு ஆடுறாங்க சார்” என்றார். உணவகங்களில் சாப்பாட்டின் விலையும் குறைவாகவே இருந்தது.

கோயில்விழாக்களில் ஊர்ப்பிரமுகர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்து ஃபோட்டோஷாப்பில் ஒரே வரிசையாக இணைத்து வினைல் போஸ்டர்கள் வைக்கும் பண்பாடு நம்மைப்போலவே அங்கும் வேரூன்றியிருந்தது. விதவிதமான கன்னட முகங்கள். மீசைகள், தொந்திகள், நாலேக்கர் நிலம் வைத்திருப்பவனை போஸ்டரிலேயே அடையாளம் காணமுடிந்தது.

மதியம் முழுக்க காரிலேயே சென்றுகொண்டிருந்தோம். அறுவடைக்குப் பிந்தைய வயல்கள். நீர் இருக்குமிடங்களில் சிறுதானியங்கள் விதைக்கப்பட்டிருந்தன. நிதானமான எருமைகள் கிடக்கும் வீடுகள். உற்சாகமான குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால் ஒன்று தோன்றியது, இந்தியாவில் இருப்பதுபோல அழகற்ற கிராமங்களை நான் எங்குமே கண்டதில்லை என. ஆப்ரிக்காவில்கூட. அழகுணர்வு என்பதே எங்குமில்லை.

இந்தியாவின் அழகிய கிராமங்கள் வடகிழக்கே பழங்குடிகள் வாழும் ஊர்கள், இமாச்சலப்பிரதேசத்திலும் பழங்குடிகளுக்குரிய ஊர்கள் மட்டுமே. வேளாண்மைசெய்யும் சிற்றூர்களிலெல்லாம் எங்கும் குப்பைகள். வேளாண்பொருள்களும் பயிர்களின் எச்சங்களுமெல்லாம் குவிந்து அவற்றின் நடுவே வாழ்வதனால் குப்பை என்னும் கருத்துருவமே அவர்களில் உருவாகவில்லை. இன்றைய நவீன வாழ்க்கை பிளாஸ்டிக், காகிதம், மட்காத துணி என அவர்கள்மேல் மேலும் குப்பைகளை சரிக்கிறது.

இந்தியாவில் சிற்றூர்களில் எங்குமே குப்பைகளை அள்ளுவதற்கான எந்த அமைப்பும் இல்லை. பல குப்பைகள் பற்பல ஆண்டுகளாக சேர்ந்தவை. நீர்நிலைகள் முழுக்க குப்பைகள். வீடுகள், தெருக்கள் எங்கும் குப்பை. குப்பைக்குவியல் நடுவே வாழ்ந்து அழகுணர்வை இழந்துவிட்ட மக்கள் இல்லங்களையும் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள். துருப்பிடித்த பொருட்கள், பழுதடைந்த கருவிகள் சூழ்ந்திருக்கின்றன. வீடுகள் பூசப்படாதவை, வண்ணமற்றவை, சொறிசொறியாக கல்லும் சேறும் படிந்தவை.

அது வறுமையால் அல்ல. அந்தக் கிராமங்களில் அப்படி கடும் வறுமை இல்லை என்பதைப் பார்த்தாலே தெரியும். உண்மையில் கடும் வறுமை இருக்குமிடங்கள் வடகிழக்கின் பழங்குடி ஊர்களே. அங்கே இல்லங்கள் சுத்தமாக மட்டுமல்ல அழகாகவும் இருக்கும். மிகச்சிறிய வீடுகள்கூட பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணம்பூசப்பட்டு கலையழகுடனிருக்கும். ஒவ்வொருநாளும் வீட்டை அலங்கரிப்பது அவர்களின் வழக்கம்.

அதனால்தானோ என்னவோ வடகிழக்கில் இருந்து வருபவர்களையே இந்திய உயர்தர விடுதிகளில் பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களிடம் தூய்மைப்பழக்கமும் அழகுணர்வும் உண்டு என்பார்கள். இந்தக் குப்பைக்குவியலில் இருந்து வரும் ஓர் இளைஞனால் ஓர் அறையை எப்படி அலங்கரிக்கமுடியும்? எப்படி சுவையாகச் சமைக்கமுடியும்?

கர்நாடகமும் ஆந்திரமும் பகிர்ந்துகொள்ளும் வடக்கு தக்காணப்பீடபூமி இது. ஒரு வகையான பாலைநிலம் என்றும் சொல்லலாம். மலைகள் அள்ளிக்குவிக்கப்பட்ட பெரும் கற்பாறைகளால் ஆனவை. சில மலைகள் மாபெரும் ஜல்லிக்குவியல்போலவே இருந்தன. சில நாட்களுக்கு முன் உடைந்து சரிந்தவை என தோன்றின. ஆனால் தொல்பழங்கால உறைபனி யுகத்தில் குளிரில் நொறுங்கியவை அவை. நெடுக்காக வெட்டப்பட்டது போன்ற பாறைகளின் நடுவே கனிகளுக்கு உள்ளே இருப்பதுபோல வெண்சுண்ணப் பாறைகள். என்றோ இங்கெல்லாம் பெரிய சிமிண்ட் தொழிற்சாலைகள் வரவிருக்கின்றன.

குமாத்தி என்னும் ஊரில் இருக்கும் மானுடஉருவ நெடுங்கல்லைப் பார்க்கச் சென்றோம். (Anthropomorphic Menhirs.) உலகப்புகழ்பெற்ற ஈஸ்டர் தீவின் மானுடநெடுங்கற்களை சிலர் நினைவுகூரக்கூடும். மனித உருவங்கள் போல அமைக்கப்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள் அவை. நெடுங்கற்கள் நாட்டப்பட்ட அதே முறைப்படி அமைந்தவை. ஆனால் அவை நெடுங்கற்களா அல்லது வழிபடப்பட்ட சிலைகளா என்று தெரியாது. நெடுங்கற்கள் தெய்வமாக வழிபடப்பட்டனவா என்றும் தெரியாது.

இக்கற்களுக்கு இருபதாயிரமாண்டுகளுக்குமேல் தொன்மை இருக்கலாம். இத்தகைய கற்கள் இந்தியாவில் வேறெங்குமில்லை என்பது பொதுவான கூற்று. ஏராளமான கற்கள் இருந்துள்ளன. ஆனால் இந்நிலம் அரசுநிலமல்ல, நீண்டகாலமாகவே தனியார் நிலம். டிராக்டர் வைத்து ஓட்டியதில் பல கற்கள் உடைந்து விழுந்துவிட்டன. எஞ்சியிருப்பவை இரண்டே. நாங்கள் செல்லும்போது கூட பருத்தி நடப்பட்டிருந்தது. டிராக்டர் ஓடிய வரிவரியான நிலத்தின்மேல் திகைத்துக் கைவிரித்தவைபோல் அந்தக் கற்கள் நின்றிருந்தன.

ஏறத்தாழ பத்தடி உயரம் கொண்டவை. அதேயளவுக்கு மண்ணுக்கு அடியிலும் புதையுண்டிருக்கின்றன. உலோகம் இல்லாத காலத்தில் இவற்றை உருவாக்குவதென்பது மிகப்பெரிய கற்பனையும் உழைப்பும் தேவையாகும் பெருஞ்செயல். நவீனகாலகட்டத்தில் ஒரு கோயில் கட்டுவதற்கு இணையானது.

இந்தக் கற்கள் நாட்டப்பட்ட காலகட்டத்தில் மனிதர்கள் ஆடைகளை அணிந்திருந்தார்களா? இலைதழைகளாலான ஆடை அணிந்திருக்கலாம். கேரளத்தின் பழங்குடிகள் இதைப்போன்ற ஆடைகளை மதச்சடங்குகளின்போது அணிகிறார்கள். இவை உண்மையில் என்ன? மூதாதையரா? மறைந்த அரசர்களா? பூசாரிகளா? அல்லது தெய்வங்களா? அன்று அந்த மனிதன் உணர்ந்து இக்கல்லில் அவன் நிகழ்த்திய அந்த தெய்வம் இன்றும் நம்மிடம் உருமாறி உள்ளதா?

அந்தச் கற்சிலைகளைப் பார்த்துக்கொண்டு அந்தி மறைவின் செம்மையில் நின்றிருந்தோம். ஒருவகையான அச்சமும் வெறுமையும் உருவாயின. சென்றுவிடவேண்டும் என்னும் உணர்வு. கிளம்பி காரிலேறும்போது தோன்றியது, காலம் விட்டுச்சென்ற ஓர் அடையாளம்தானே அது. நகை அல்ல, ஆனால் கையில் வைத்திருந்த தொன்மையான ஓரு களிப்பாவை. அன்று காலம் குழந்தையாக இருந்தது

(மேலும்)

முந்தைய கட்டுரைஅ.பு.திருமாலனார்
அடுத்த கட்டுரைTowards His Dreams