நகுலனும் சில்லறைப்பூசல்களும்

நகுலனைப்பற்றிய என் குறிப்புக்கு வந்த சில எதிர்வினைகள் குழுமத்தில் உள்ளன. அவை நான் நகுலனை அவரது ஆளுமைக்குறைபாடுகள் அல்லது நோயின் அடிப்படையில் மதிப்பிடுவதாகச் சொல்கின்றன. அவற்றுக்கு நான் அளித்த விளக்கம்.

ஒரு கட்டுரையை அல்லது குறிப்பை வாசித்ததுமே ஒரு வகைப் பதற்றத்துக்கு உள்ளாகி அதைப்பற்றிப் பேச ஆரம்பிப்பதன் சிக்கல்கள் என்றுதான் இந்த விவாதத்தைப் பார்க்கிறேன். என் கருத்துக்கள் மிக மிகத் தெளிவாகவே அக்குறிப்பில் உள்ளன. இங்கே பேசுபவர்களுக்குப் பெரும்பாலும் நகுலன் எழுத்துக்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆகவே நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை நகுலன் எழுத்துக்களை வைத்துப் புரிந்துகொள்ள முடியாமல் என் வரிகளைக் கொண்டு அவர்களுக்கு தோன்றிய பொருளை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள்.

1. நகுலனை ஓர் இலக்கிய முன்னோடி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏனென்றால் இலக்கிய எழுத்தின் மிக முக்கியமான வகைமாதிரியான தானியங்கிஎழுத்தை அவர்தான் தமிழுக்கு அளித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் அவர் மட்டுமே சாதித்திருக்கிறார் என்றும் நினைக்கிறேன்.

2. இலக்கிய எழுத்தில் அந்த வகைமாதிரியின் முக்கியத்துவத்தை இக்கட்டுரையில் மிக முக்கியமாக முன்னிறுத்துகிறேன். நகுலன் அதை மிகக்குறைவாகவே சாதித்திருக்கிறார் என்றே சொல்கிறேன். அந்த வகை எழுத்தானது ஒரு இலக்கிய மரபில் எவ்வகையிலும் தவிர்க்கமுடியாத ஒன்று என்றுதான் அக்குறிப்பிலேயே எழுதியிருக்கிறேன். இச்சிறு குறிப்பிலேயே அதன் அழகியல் என்ன,அதை எப்படி ரசிப்பது என்றும் விளக்கியிருக்கிறேன். அந்த எழுத்தில் அர்த்தங்களை, தொடர்ச்சியை எதிர்பார்க்கலாகாது என்றும் அதில் வெளிப்படும் தன்னிச்சையான தெறிப்புகளினாலேயே அது இலக்கியத்தன்மை கொள்கிறது என்றும் கூறியிருக்கிறேன். அதன் தகுதியே அதன் வடிவமின்மையும் நேரடித்தன்மையும்தான்

அது முக்கியமான ஒரு வழிகாட்டல். உண்மையில் நகுலனை விதந்தோதிப்பேசுபவர்கள் பெரும்பாலானவர்கள் அவரது அவ்வகை பிற எழுத்தைப்போல தொடர்ச்சியை கற்பிதம் செய்து ,அர்த்த உருவாக்கம் செய்து வாசித்து அதன் மூலம் அவ்வகை எழுத்து அளிக்கும் அனுபவங்களை இழந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் நகுலனைப் பிழையாக வாசித்துப் பிழையாகப் புளகாங்கிதம் கொள்வதையே சுட்டிக்காட்டுகிறேன். அது நகுலனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு.

3.நகுலன் வகை எழுத்து என்பது ஒருபோதும் இலக்கிய மையஓட்டமாக அமைய முடியாது. அது இலக்கியமல்ல, இலக்கியம் மீதான இலக்கியம். மெட்டா லிட்டரேச்சர் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். இலக்கியம் வாழ்க்கையில் இருந்து உருவான செறிவான நிகர்வாழ்க்கை. நகுலனின் எழுத்து என்பது இலக்கியம் மீதான எதிர்வினை.  இந்த வேறுபாடு முக்கியமானது.  நகுலன் ஒருபோதும் மையஓட்ட இலக்கியவாதிகளுக்கு மாற்றானவரோ நிகரானவரோ அல்ல.நகுலனை அசோகமித்திரனுடனோ கு.அழகிரிசாமியுடனோ கி.ராஜநாராயணனுடனோ ஒப்பிடக்கூடாது.

எளிமையான ஒரு கி.ராஜநாராயணன் கதையைப் புரிந்துகொண்டு ஒரு விமர்சனக்கருத்தைச் சொல்லமுடியாதவர்கள் தங்களுக்குப் புரியாமலிருக்கிறார் என்பதற்காகவே நகுலனை தூக்கிப்பிடிப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். நகுலனை நகுலனுக்குரிய இடத்தில் நிறுத்துவதே அவருக்குச் செய்யும் நியாயம்.

4. ஆனால் தமிழில் சிலரால் நகுலனின் இடம் பூதாகாரப்படுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், நகுலனின் ஆளுமை மீதான பிம்பம் மட்டும்தான். 1980களின் இறுதிக்குமுன், அதாவது நகுலன் அல்ஷைமரால் பாதிக்கப்படுவதற்கு முன், நகுலனுக்கு இந்த பிம்பம் கிடையாது. இன்றுள்ள எந்த மிகையான இலக்கிய முக்கியத்துவமும் அவருக்கு அப்போது அளிக்கப்பட்டதில்லை. மிகச்சில எழுத்தாளர்களால் வாசிக்கப்பட்ட ஒருவராக மட்டுமே அவர் இருந்தார். நகுலனைப்பற்றிய பிம்பத்தை அவரைப்போல எழுத முயன்ற சிலர் உருவாக்கியதை நான் கண்கூடாகக் கண்டேன். குறிப்பாக விக்ரமாதித்யன் , கோணங்கி போன்றவர்களின் குறிப்புகள், காஞ்சனை சீனிவாசனின் புகைப்படங்கள். இவர்கள் எவருமே அவரது எழுத்தைப்பற்றி எழுதவில்லை, அவரது குடி, தனிமை, தன்னிலையழிந்த பேச்சு ஆகியவற்றையே விதந்து எழுதினார்கள். அவ்வகை எழுத்தே இன்றும் வருகிறது. இன்றுகூட நகுலனின் ஆக்கங்கள் பற்றி ஒரு பொருட்படுத்தும்படியான கட்டுரை இவர்களால் எழுதப்பட்டதில்லை. தங்கள் சொந்த எழுத்தை நிலைநாட்டுவதற்காக நகுலனை மிகைப்படுத்தினார்கள். அதற்கு நகுலனின் ஆளுமையின் பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டார்கள்

ஆக, இன்று நகுலனைப்பற்றிப் பேசப்படுவதெல்லாமே அவரது பிம்பம் பற்றித்தானே ஒழிய எழுத்துக்கள் பற்றி அல்ல. சொல்லப்போனால் நான் மட்டுமே அவரது எழுத்துக்களை முழுக்க வாசித்து அதைப்பற்றி எழுதியவன், அவரை நன்கறிந்தவனும்கூட. ஆகவே நகுலனின் ஆளுமை என்ன,அந்த பிம்பத்தின் உண்மையான மதிப்பு என்ன என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு படைப்பாளியின் நோயை மிகையாக்கி மாயமாகச் சித்தரித்துக்கொள்வதும் அதைப்பற்றிப் பன்னிப்பன்னிப் புனைவுகள் உருவாக்குவதும் மனிதாபிமானம் என்றும் அந்த நோயை அப்படி சித்தரிக்காதீர்கள், அவரது எழுத்துக்களைப் பாருங்கள் என்று சொல்வது மனிதாபிமானமின்மை என்றும் சொல்வது தமிழுக்கே உரிய அசட்டுத்தனம்

5. ஆனால் எழுத்துக்களை மட்டுமே பார், எழுத்தாளனைப் பார்க்காதே என நகுலனைப்பற்றி சொல்பவர்கள் எவருமே அவரை வாசித்தவர்கள் அல்ல. நகுலன் பெரும்பாலும் தன்னைப்பற்றி மட்டுமே எழுதியவர். தன் வாசிப்பு தன் இலக்கிய நண்பர்கள் இலக்கியப்பூசல்கள் இவற்றையே அவர் அதிகமும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய அவரைப்பற்றிப் பேசாமல் அவரது இலக்கியத்தை விவாதிக்கவே முடியாது.

ஓர் எழுத்தாளன் தன்னை வாசகன் முன் வைக்கிறான். அதிலும் நகுலன் அதை ஒரு இலக்கிய முறையாகவே செய்தவர். அவரது எல்லா மனநிலைகளுமே ஆராயத்தக்கவையே. அதுதான் நாம் அவருக்கு செய்யும் மதிப்பு. ‘அய்யோபாவம் பெரியவர்’ என்று எழுத்தாளனைக் கேவலப்படுத்தாதீர்கள்.எழுத்தாளனைப் பரிதாபத்துக்குரியவனாகப் பார்ப்பதைப்போல அசிங்கமான வாசகநிலை ஒன்றில்லை.

6. மனநோயாளியின் எழுத்து என நகுலனின் எழுத்தை நான் சொல்வதாக எடுத்துக்கொள்ளப்படுவதை வாசிக்கையில் ஒருகணம் பெரும் சலிப்புதான் ஏற்படுகிறது. ஒரு இலக்கியவிமர்சனச்சூழலுக்காக நாம் எத்தனைகாலம்தான் இன்னும் காத்திருப்பது?  நகுலனின் எழுத்துமுறையைப்பற்றி சொல்லும்போது அதன் பாணி என்பது ’மனவசியமேஜையில் பேசப்படுவதுபோல, மனநோயாளியின் உளறல்போல’ என்று சொல்கிறேன். இந்த எழுத்துக்கான இலக்கிய வரையறையே அதுதான் என்பதை இன்னும் எத்தனைமுறை விளக்குவது? மனம் கட்டின்றி வெளிப்படும் விதமே இந்த எழுத்து. சிறிதளவு பிரக்ஞை இருந்தாலே அது செயற்கையாக ஆகிவிடும்.

உண்மையில் இவ்வகை எழுத்தை எழுதுபவர்கள் இதற்கான சட்டகமாக மனநோயாளியின் பேச்சாகவோ மனவசியப்பேச்சாகவோ அந்த மொழிப்பகுதியை அமைப்பது வழக்கம். நகுலன் அவரது ‘நினைவுப்பாதை’ நாவலிலேயே கட்டற்ற மொழிப்பாய்ச்சலாக வரும் பக்கங்களை மனநோயாளியின் குறிப்புகள் என்ற வடிவில்தான் எழுதியிருக்கிறார் என்பதையாவது இதைப்பற்றிப் பேசுபவர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்

7. அசோகமித்திரன் அல்லது ப.சிங்காரம் எழுதிய எழுத்துக்கள் எல்லாமே இவ்வகைப்பட்டவை என நான் சொல்வதாக எடுத்துக்கொள்வதைப்பார்த்தும் மனச்சோர்வடைந்தேன். எவருமே நான் சுட்டும் இலக்கிய ஆக்கங்களை வாசித்து அவற்றின் அடிப்படையில் பேசுவதில்லை. இலக்கிய விமர்சனம் என்பது ஏற்கனவே இலக்கியநூல்களை வாசிப்பவர்களுக்கானது. அசோகமித்திரன் நூலகத்தில், காந்தி போன்ற பல கதைகளில் தானியங்கி எழுத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.  நான் சொன்னதுமே ப.சிங்காரத்தின் புயலிலே ஒருதோணியில் குடிபோதையில் ரிக்‌ஷாவில்செல்லும் பாண்டியன்மனம் கொள்ளும் பாய்ச்சலை நினைவுகூரும் வாசகர்களுக்காகவே நான் இலக்கிய விமர்சனம் எழுதுகிறேன்

8. நகுலன் முன்வைத்த பிளவாளுமை எழுத்து [ உடனே நகுலனை பிளந்தவர் என்று வசைபாடுகிறார் என ஆரம்பிப்பவர்கள் பிளவாளுமை எழுத்துபற்றி என்ன என்று கலைக்களஞ்சியத்தில் தேடிவிட்டு பேசலாம்] பற்றியும் அதனுடன் ஒப்பிடத்தக்க மு.தளையசிங்கத்தின் பிளவாளுமை எழுத்து பற்றியும் ஏற்கனவே நிறையவே பேசியிருக்கிறேன். அவை எழுத்தின் முக்கியமான சாத்தியங்களைத் தொட்டவை. ஆனால் மிகமிகக் குறைவாகவே அதில் சாதித்தவை என்பதே என் எண்ணம்.

9.நகுலனை மிஸ்டிக் என்றெல்லாம் ஒன்றும் புரியாமல் பேசிக்கொண்டிருப்பது போல அவரைச் சிறுமைப்படுத்தும் செயல் வேறு இல்லை.  அவரது எழுத்தின் சிறந்த பகுதிகள் மொழி மூலம் பிளவுபட்ட மனத்தின் கட்டற்ற பாய்ச்சலை அள்ளுவதற்கான முயற்சிகள். அதன் வலியும் ஏமாற்றமும் வெளிப்படுபவை. அவை முக்கியமானவை.

ஆனால் அவரது எழுத்தில் இன்று கிடைப்பவற்றில் பெரும்பாலான பக்கங்கள் மிகவும் தட்டையான ஒற்றைப்படையான எழுத்துக்கள்.  சிறுகதைகள் எல்லாமே முதிர்ச்சியற்ற இளம்பருவ முயற்சிகளைப்போன்றவை. வெறும் சாதியநோக்கு வெளிப்படும் படைப்புகளும் உண்டு. உலகமெங்கும் தானியங்கி எழுத்தை நிகழ்த்தும் கலைஞர்களின் சிக்கலும் அதுதான். எழுத்து அவர்களை மீறி நிகழாவிட்டால் அது வெறும் குப்பையாகவே இருக்கும். நகுலன் அவரது ஆரம்பகாலத்தில் சில வருடங்கள் மட்டும் இருந்த படைப்பூக்க நிலையில் எப்போதுமே இருந்ததில்லை. நோய்க்கு ஆளான பின் எதையும் எழுதியதில்லை.

10 .ஒரு கலைஞனின் சிறந்த பகுதியை, அதன் தனிச்சிறப்பைப் புரிந்துகொள்பவனே அந்தக்கலைஞனுக்கு நியாயம்செய்தவனாகிறான்.

ஜெ

நகுலன் இலக்கியவாதியா?

முந்தைய கட்டுரைகூடங்குளம்
அடுத்த கட்டுரைஆலீஸ், ஆர்.கெ.நாராயணன் கடிதம்