வயதாகாத நூல்- அ.முத்துலிங்கம்

Buy Hardcopy

Buy Ebook

ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண நூல்கள் படிப்பதில்லை. ’இங்கே போனோம், இவரிடம் சாப்பிட்டோம். இன்று இதைப் பார்த்தோம். இன்னது சாப்பிட்டோம்’ என்று போய்க்கொண்டே இருக்கும். வாசிக்கத் தொடங்கும்போதே அலுப்பைக் கொடுக்கும். ஏ.கே செட்டியாரின் பயண நூல்கள் அத்தனையும் படித்திருக்கிறேன். அவை ஆயிரம் பக்கங்களுக்கு மேலே வரும் சுவையான எழுத்து; சுவாரஸ்யமான தகவல்கள். அப்படி ஒருவரும் இப்போவெல்லாம் எழுதுவதில்லை.

புத்தகத்தை அசட்டையாகப் புரட்டிப் பார்த்தேன். அமர்ந்த இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரே அமர்வில் படித்து முடித்த புத்தகம். என்ன எழுத்து, என்ன நடை, என்ன வாக்கிய அமைப்பு, எத்தனை விதவிதமான சம்பவங்கள். புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

அமெரிக்காவின் கிழக்கு கிரையிலிருந்து மேற்கு கடற்கரை வரைக்கும் பயணம். அதாவது அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமுத்திரம் வரை. மே மாதம் 2022ல் தொடங்கி 15 நாட்கள் பயணம், 13 மாகாணங்கள், 4000 க்கும் அதிகமான மைல்கள். அட்டகாசமான இந்தப் பயணத்தை ஆறு பேர் ஒரு காரில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

முதன் முதலில் கிழக்கில் இருந்து நிலப்பாதை வழியாக மேற்கு எல்லைக்கு பயணம் செய்தது 1804ல். அதற்கு Lewis and Clark பயணம் என்று பேர். 45 பேர் 12 குதிரைகளுடன் புறப்பட்டார்கள். பாதை இல்லை ஆகையால் பாதைகளை உண்டாக்கித்தான் பயணம் செய்ய வேண்டும். 18 மாதங்களில் அந்தப்  பயணம் வெற்றிகரமான முடிவுக்கு வந்தது.

200 வருடங்கள் கழித்து இப்போது எத்தனை முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் 4000 மைல்கள் பயணம் இலகுவானது இல்லை. தினம் ஏதாவது எதிர்பாராதது நடக்கும். முன்னர் போயிருக்காத பாதை, பார்த்திராத மனிதர்கள், புதுவிதமான உணவுகள், கால நிலை மாற்றம், நேர வித்தியாசம் என பலவிதமான இடைஞ்சல்கள். எத்தனை நேர்த்தியாக திட்டமிட்டாலும் அடுத்து என்ன நடக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்படியான பயணங்களைச் சுவையாக்குவது திட்டத்தில் இல்லாத ஏதோ ஒன்று நடந்து அதைக் குழப்புவது; பயணத்தை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான்.

ஒரு கட்டத்தில் பயணக் குழுவின் ஜி.பி.எஸ் வேலை செய்யவில்லை. இவர்கள் கார் பிழையான திசையில் ஓடியது. பின்னர் அதைக் கண்டு பிடித்து சரிசெய்தார்கள். நான் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. இரண்டு நண்பர்கள் அமெரிக்காவில் ஒரு மாகாணத்திலிருந்து மற்ற மாகாணத்துக்கு தெற்குப் பக்கமாகப் பயணம் செய்தார்கள். ஒருவர் ஓட்ட, நண்பர் பக்கத்தில் அமர்ந்து வரைபடத்தைப் பார்த்து வழி சொல்லிக்கொண்டே வந்தார். ஓர் இடம் வந்ததும் ‘ஐயோ, இது என்ன? கனடா வந்துவிட்டது’ என்று அலறினார். காரை ஓட்டியவர் நண்பர் பக்கம் பார்த்துவிட்டு ’இடியட், நீ வரைபடத்தை தலைகீழாக அல்லவோ பிடித்திருக்கிறாய்’ என்றார். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது.

கார் விபத்திலே போலீசிடம் மாட்டினாலோ, லைசென்ஸ் காலாவதியாகி பிடிபட்டாலோ அவமானம். ஆனால் வேக வரம்பை தாண்டி ஓட்டி போலீசிடம் பிடிபட்டால் அது பெருமையானது. பிற நண்பர்களிடம் சொல்லலாம். அது உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பிரகடனப்படுத்தும். இரண்டு தரம் வேகத்தடையை மீறி ஓட்டி போலீசிடம் பிடிபட்டு தண்டக் கட்டணமும் கட்டவேண்டி வந்தது. இந்தப் பயணத்தில் நேர்ந்த ஒரே வீர சாகச நிகழ்ச்சி இதுதான்.

புத்தகத்தில் நான் விரும்பும் தகவல்கள் இருந்தன. வாய்விட்டுச் சிரிக்கும் இடங்களுக்கு குறைவில்லை. பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் அங்கங்கே காணப்பட்டன. ஆங்கில எழுத்தாளர்கள் பற்றியும், அவர்கள் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. அமெரிக்காவின் மாறுபட்ட நில அமைப்புகள், நேர வித்தியாசங்கள், கால நிலை மாற்றம் ஆகியவை அரிய தகவல்களாக கிடைத்தன, புத்தகத்தில் அடிக்கோடிட்டு, அடிக்கோடிட்டு புத்தகமே கிழிந்துவிட்டது.

காரில் பயணம் செய்தவர்கள் ஜெமோ, அருண்மொழி நங்கை, ஸ்ரீராம், ராஜன், ஆசிரியர் விஸ்வநாதன், அவர் மனைவி பிரமோதினி. பயணம் முழுக்க மனைவி குறிப்பெடுக்க அதை புத்தகமாக எழுதியவர் விஸ்வநாதன். இந்த நூலை அவர் எழுதிவிட்டு மனைவியிடம் காட்டியிருக்கிறார். இது என்ன ’வள வள’ என்று ஓர் அன்பான வார்த்தையை சொல்லிவிட்டு முழு நூலையும் அழித்து மறுபடி எழுத வைத்தார். ஒரு முறை அல்ல இரண்டு தரம். அதுதான் பிரமோதினி.

இந்த நூலுக்கு அருண்மொழி நங்கை முன்னுரை எழுதியிருக்கிறார். ஒரு முன்னுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக அது இருக்கிறது. ’பயணத்தில் புற உலகம் விரிகிறது என்பது நம் அக உலகம் விரிகிறது என்பதுதான்’ என்கிறார். ஆசிரியருக்கு பிரத்தியேகமான எழுத்து வடிவமும் மொழிநடையும் வாய்த்திருக்கிறது என்று கூறுகிறார். மிகச் சரியான கணிப்பு.

பயணக் குழுவில் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இருந்தது பெரும் அதிர்ஷ்டம். பயணம் முழுக்க அவ்வப்போது இசை நுட்பங்கள் பற்றி அவர் பேசினார். மொழி தொடமுடியாத இடங்களை இசை தொடும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. கருப்பர்களின் ரொக் அண்ட் ரோல் இசையை பிரபலமடைய வைக்க எல்விஸ் பிரஸ்லி போன்ற ஒரு வெள்ளைக்கார முகம் தேவைப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஜெமோ மொழியில் சொல்லியே ஆகவேண்டும். ஒரு விடுதியின் வெளியே ஜெமோ சந்தோஷ் சிவனுடன் நின்றிருந்தார். ’சிவன் கிழிந்த பேண்ட் அணிந்திருந்தார். ஒரு இளம் தம்பதி வந்து சிவனிடம் மொபைலைத் தந்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அவர்களுக்கு சிவன் ஒரு புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் என்பது தெரியாது. சிவன் அந்த மொபைலை வாங்கிப் பார்த்தார். தன் மணிக்கட்டைத் திருப்பி தோலில் எவ்வளவு சூரிய ஒளி விழுகிறது என்று பார்த்தார். போஸ் தரவேண்டாம் சும்மா பேசுங்கள் என்று சொல்லி புகைப்படங்கள் எடுத்து தந்தார். வாங்கி சென்றுவிட்டார்கள். சிறிது நேரம் கழித்து என்னிடம் வந்து ‘சார் யார்?’ என்று பரவசத்துடன் கேட்டார்கள். அந்தப் பெண் இதுவரை யாரும் இவ்வளவு அழகாக தன்னை புகைப்படம் எடுத்ததில்லை என்றாள். அந்தப் படம் பின்பு குங்குமத்தில் அட்டைப் படமாக வந்தது. இன்னொரு புகைப்படக் கலைஞர் அழைத்து இது சந்தோஷ் சிவன் எடுத்த படமா என்று விசாரித்திருக்கிறார்.’ கலைஞர்களின் கையொப்பம் அவர்கள் கைவைக்கும் எல்லாவற்றிலும் எப்படியோ தெரிந்துவிடும்.

ஆசிரியர்  விவரித்த இன்னொரு சம்பவத்தை நான் ஒரு முறையல்ல, பல முறை படித்தேன். மணமுடித்து அமெரிக்கா வந்த புதிதில் இவருடைய மனைவி ஒரு கேள்வி கேட்டார். ‘டெயிலர் ஸ்விஃப்ட் யார்ன்னு தெரியாதா? அமெரிக்கால தான் ஆறு வருஷம் இருந்த?’ இவருக்கு அவமானமாகப் போய்விட்டது. டெயிலர் ஸ்விஃப்ட் உலகின் நம்பர் ஒன் பாடகி. இவர் அமெரிக்காவுக்கு படிக்க வந்த காலத்தில் அமெரிக்கா பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்தது. சாப்பாட்டில் பறந்துவிழும் கரப்பான் பூச்சிகளைத் தள்ளிவைத்து சாப்பிட வேண்டும். வெளியே பெய்த பனி உருகி ஊறி தரையில் உள்ள படுக்கை விரிப்பை  நனைத்துவிடும். சப்பாத்து பிய்ந்து நடக்கும்போது டக் டக் என்று வினோதமான ஒலி எழுப்பும். இப்படியான அவல வாழ்க்கையில் டெயிலர் ஸ்விஃப்டாவது, மயிலர் ஸ்விஃப்டாவது என்று அவருடைய மனம் அங்கலாய்த்தது. இந்த இடத்தை நூலில் படித்தபோது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

ஆசிரியருடைய எழுத்தில் அருமையான உவமைகள் அடிக்கடி வந்து விழும்.. ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஜெ உடனடியாக சூழலைக் கவனிக்கக் கூடியவர். தீவிரமான உரையாடல்கள் சபையிலே சென்று சேராது என்று தெரிந்தால் உடனே தீவிரத்தை குறைத்துக் கொள்வார். சச்சின் டெண்டுல்கரை சிறப்பு விருந்தினராக அழைத்து ஒரு தெரு முனையில் கிரிக்கெட்  ஆடுவதுபோல இருக்கும்.

வேறு ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘பள்ளியில் ஷூவைக் கழட்டிவிட்டு செல்லும் இன்னொரு இடம் கணினிக்கூடம்.. இருபது கணினிகள் இருக்கும். அப்போது (1995) விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்கூட 20 கணினிகள் இருந்திருக்குமா தெரியாது. கோயில் யானையிடம் ஒரு ரூபா தந்து ஆசி வாங்குவதுபோல அந்த கணினிகளில் LT40, RT90  என தட்டுவோம்.

இவருடை எழுத்து நடை என்னைக் கவர்ந்தது என்று சொல்லவே தேவையில்லை. நியூ மெக்சிகோ மணல் குன்றுகளை வரை மருள் நெடுமணல் என்று வர்ணிக்கிறார். அமெரிக்காவில் அவர் வாழ்ந்த ஆரம்பகாலத்தை விருந்துண்ணும் பெருஞ்செம்மல் வாழ்க்கையை கனவு காணும் இரந்துண்ணும் இள மாணாக்கன் வாழ்க்கை என்று சொல்கிறார். நண்பனின் குறட்டையை ‘நள்ளென யாமம் முழுதும் ஒலித்தது’ என்கிறார். இன்னோர் இடத்தில் ‘கடைசித் துளி ஒளியையும் இருள் விழுங்கியபோது பேஜ் நகருக்குள் நுழைந்து விட்டோம்’ என்று எழுதுகிறார்.

இவருடைய எழுத்தில் நகைச்சுவை வந்தபடியே இருக்கும். பயணத்தின்போது கண்ணால் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அதை அவருடைய வார்த்தைகளில் சொன்னால்தான் சுவை முழுமையாக வெளிப்படும். ‘அருகில் ஒரு ஆசிய ஜோடி இருந்தார்கள். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அந்தப் பெண் கையடக்க சிறிய கண்ணாடியில் பார்த்து, காற்றில் கலைந்த மேக்கப்பை சரிசெய்துகொண்டாள். நாங்கள் அங்கு அரை மணிநேரம் இருந்திருப்போம். அவர்கள் நகரவே இல்லை. ஷூட்டிங் தொடர்ந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் பெரிய கேமராவெல்லாம் இல்லை. எல்லாமே வெறும் மொபைலில்தான். சமூக வலைத்தள லைக்குகளை அள்ளப்போகும் ஒரு இன்ஸ்டா போட்டோ வரும்வரை அவள் ஓயப் போவதில்லை. அதல பாதாள விளிம்பில் அவள் அமர்ந்திருந்தாள். ‘வாழ்வின் விளிம்பிற்கே சென்றாலும் மேக்கப் போடுவதை விடமாட்டாள்’ என்றார் ஜெ.’

புத்தகத்திலே ஒரு சுவாரஸ்யமான புதிர் வருகிறது. ‘புதிதாக ஒரு பழம் அறிமுகமாகிறது. அந்தப் பழத்தை சாப்பிட்டால் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆயிரம் வருடங்கள் கழித்து பழத்தை சாப்பிட்ட அனைவரின் சந்ததிகளையும் அந்தப் பழம் அழித்துவிடும் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தப் பழத்தை இப்போது சாப்பிடலாமா வேண்டாமா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?’ இதுதான் புதிர். இதற்கு விடை தெரிய வேண்டுமானால் நீங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்.

இந்த நீண்ட பயணத்தில் ஜெமோவின் தினசரி பணிகளில் ஒரு குறையும் ஏற்படவில்லை. கடிதங்களுக்கு பதில் எழுதினார். கட்டுரைகள் வரைந்தார். காத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு திரைக்கதை முன்வரைவுகள் எழுதி அனுப்பினார். எப்படியோ அந்த இடத்து கடவுச்சொல்லை பெற்று ஒரு நாள்கூட தவறாமல் தமிழ் விக்கி பதிவுகளை எழுதி அனுப்பிவிடுவார்.

அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை நல்ல தேநீர் தயாரிப்பது. ஜெமோ தேநீர் தயாரிப்பதற்கு அவராகவே கண்டுபிடித்த ஒரு செய்முறையை வைத்திருந்தார். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளரின் ரகஸ்யக் கண்டுபிடிப்பு. பாதி பால், பாதி தண்ணீர். இதில் மூன்று தேநீர் பைகளைப் போட்டு இரண்டு நிமிடம் மைக்ரோவேவில் கொதிக்க விடவேண்டும். அவ்வளவுதான், தேநீர் தயார். நானும் மனைவியும் இந்த முறையில் வீட்டில் தேநீர் தயாரித்து அருந்தினோம். மனைவி இரண்டு நாட்களாக என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இந்த நூலில் பல இடங்களில் ஆசிரியரின் வாழ்க்கையின் சில கூறுகளையும் படிக்க முடிகிறது. கல்வியின் மேன்மை பற்றிக் கூறும் உருக்கமான பகுதியும் உண்டு. அமெரிக்காவில் அவர் அனுபவித்த கஷ்டமான வாழ்க்கை பற்றி பதிவு செய்கிறார். பளபளப்பான முகங்கள் கொண்ட அமெரிக்க மாணவர்களுடன் இவர் படிக்கிறார். அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை. திடீரென்று வங்கி திவால் ஆனால் என்ன செய்வது என்ற கவலை  மட்டும் கிடையாது. ஏனென்றால் இவர்தான் வங்கிக்கு 20 டொலர் கடனை திருப்பித் தரவேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து தங்கப் புதையல் எடுக்கும் கனவு இவருக்கு அடிக்கடி வருகிறது. ஒருநாள் வேலை கிடைக்கிறது. முகத்தில் பளபளப்பு ஏறுகிறது. மூன்று மாதத்தில் வீட்டுக்கு பத்தாயிரம் டொலர் அனுப்பி கல்விக் கடனை முற்றிலுமாக அழிக்கிறார். கல்வியின் அவசியத்தை, மேன்மையை இதனிலும் சிறப்பாக எப்படி சொல்லமுடியும்?

ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட பயண நூல்கள் எழுதிய ஏ.கே செட்டியார் ’பயண நூல்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம், அவை காலாவதியாகிவிடும்’ என்று சொல்வார்.  அது முற்றிலும் தவறு. வயது கூடக்கூட சுவை அதிகரிக்கும் வைன்போல பயண நூல்களின் சுவாரஸ்யம் காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும். அவருடைய நூலிலேயே சான்று உள்ளது. ஏ.கே செட்டியார் கனடாவில் பயணம் செய்த  சமயம் ஒரு சம்பவம் நடந்தது. அவர் விக்டோரியா ஸ்டேசனுக்கு  ரயில் டிக்கட் வாங்கினார். பயணச் சீட்டையும் மீதிப் பணத்தையும் கொடுத்த டிக்கட் கிளார்க் எழுந்து நின்று ‘உங்களுக்கு மிக்க வந்தனம்’ என்றார். ரயில் டிக்கட் வாங்கியதற்கு தனக்கு வந்தனம் இதுவரை யாரும் செலுத்தியதில்லை என்று செட்டியார் வியப்புடன் எழுதுகிறார்.. கனடாவில் வசிக்கும் எனக்கு இந்தச் சம்பவம் இன்றும் அளவில்லாத ஆச்சரியத்தை தந்தது.

 

அ.முத்துலிங்கம்

 

விசு என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாதன் எழுதிய ‘இரு கடல், ஒரு நிலம்’ பயண நூலை ஐம்பது வருடத்திற்கு பின்னர்  படிக்கும் ஒருவருடைய உணர்வு நிலை எப்படி இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். படிப்பவருக்கு அது எத்தனை ஆச்சரியத்தையும், சுவாரஸ்யத்தையும், தகவலையும் கடத்தும்.

ஆசிரியருடைய முதல் புத்தகம் இது. சிலர் ஏணிப்படிகளில் முதல் படி, இரண்டாம் படி என்று ஏறுவதில்லை. ஆரம்பத்திலேயே எட்டி நாலாம் படியில் கால் வைத்து விடுவார்கள். விஸ்வநாதன் அப்படித்தான் செய்திருக்கிறார். ஜெயமோகனின் ’புறப்பாடு’ நாவலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது விரைவில் வெளிவர இருக்கிறது. இப்பொழுது இவருடைய பயண நூலும் வெளிவந்துவிட்டது. இன்னும் பல நூல்களை ஆசிரியரிடம் எதிர்பார்க்கலாம். அவருக்கு என் வாழ்த்துகள்.

அ.முத்துலிங்கம்

இரு கடல், ஒரு நிலம் – அருண்மொழி நங்கை
ஒளிச்சிற்பங்கள்
அமெரிக்காவில்
முந்தைய கட்டுரைசூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்
அடுத்த கட்டுரைடி.ஆர். சுப்பிரமணியன்