என்னை ஆட்கொண்டவள்.

அன்புள்ள ஜெ,

உங்கள் பெருநாவல்கள் பெரிய அளவில் விற்பதில்லை என்பதைப்போல ஒரு குறிப்பில் எழுதியிருந்தீர்கள். நான் ஒரு இலக்கிய வாசகனாக உங்களுடைய எல்லா நாவல்களையும் வாங்கியிருக்கிறேன். வெண்முரசு அனைத்துத் தொகுதிகளையும் வாங்கியிருக்கிறேன். நான் சந்தித்த உங்கள் தீவிர வாசகர்கள் அனைவருமே அந்நூல்களை வாங்கியிருக்கிறார்கள். பல முக்கியமான நூலகங்களில் அந்நூல்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆகவே உங்கள் குறிப்பு ஆச்சரியம் அளித்தது.

சிவராமகிருஷ்ணன்

அன்புள்ள சிவராமகிருஷ்ணன்,

என்னுடைய வாசகர்கள் தங்கள் வாசிப்பின் முதிர்வுநிலையில்தான் விஷ்ணுபுரம், கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்களை நோக்கி வருகிறார்கள். அதுவே இயல்பானது. அவை வாசகனை இழுத்துக்கொண்டுசெல்லும் படைப்புகள் அல்ல. வாசகன் அவற்றை உணர தன் தரப்பிலிருந்தும் முயலவேண்டியிருக்கிறது.

அம்மூன்று நாவல்களுக்கும் அவற்றுக்கே உரிய வடிவம் உள்ளது . எந்த புதிய இலக்கிய ஆக்கமும் தனக்கான தனிவடிவை கொண்டிருக்கும். தமிழில் அதற்கு முன்பு அவை கொண்டுள்ள வடிவங்கள் இல்லை. ஆகவே வழக்கமான வாசகர்கள் வழக்கமான சீரான கதையை அல்லது நேர்த்தியான கட்டமைப்பை எதிர்பார்த்து அவற்றை வாசிக்க முடியாது. முதலில் அவை ஒரு திகைப்பை அளிக்கும். அவை எப்படி முன்செல்கின்றன என்று உணரமுடியாத தவிப்பு உருவாகும்.  விஷ்ணுபுரம் வெளிவந்தபோது பலர் அதன் காலம் நேர்கோடாக இல்லை என்பதை புரிந்துகொள்ளவில்லை.  

இந்நாவல்களை வாசிக்க முதலில் அவற்றின் வடிவத்தின் தனித்தன்மை என்ன என்று உணரவேண்டியுள்ளது. விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டுமேமெடாபிக்‌ஷன்வகையான நாவல்கள். நாவல் நாவலுக்குள்ளேயே தன்னை எழுதியும் கலைத்தும் செல்கிறது. உதாரணமாக,  விஷ்ணுபுரம் என்பது மகாபத்மபுராணம் என்னும் காவியத்தின் உருவாக்கம்பற்றிய நாவல். விஷ்ணுபுரம் நாவல் அப்புராணமேதான். அதன் வெவ்வேறு காலகட்டங்கள் முன்னுக்குப்பின்னாக அடுக்கப்பட்டுள்ளன. அதாவது முதல் பகுதியில் மெய்யான கதாபாத்திரங்களாக வருபவர்கள் மூன்றாம் பகுதியில் தொன்மங்களாகியிருப்பார்கள். முதல்பகுதியின் தொன்மக்கதாபாத்திரங்கள் இரண்டாம் பகுதியில் மெய்யான கதாபாத்திரங்களாக வரும்.

ஆனால் இந்நாவல்கள் வெறும் வடிவச்சோதனைகளும் அல்ல. இவை மானுட வாழ்க்கையின் அடிப்படைகளை உசாவுபவை. விஷ்ணுபுரம் இந்த மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் மெய்ஞானத்துக்கான தேடலின் கதை. தலைமுறைகள் தோறும் ஞானம் தேடி இல்லம் விட்டுச் செல்பவர்களின் உணர்வுகளையும் அலைக்கழிதல்களையும் கண்டடைதல்களையும் சொல்வது. நம் அனைவர் குடும்பத்திலும் அப்படி எவரேனும் இருப்பார்கள். நம்முள்ளும் அந்த தேடல் சற்றேனும் இருக்கும். அந்த ஆதியுணர்வை விவரிக்கும் படைப்பு அது

பின் தொடரும் நிழலின் குரல் நம் சிந்தனைகளை சிறையிடும் கருத்தியலின் ஆதிக்கத்தைப் பற்றியது. நமக்கு பலசமயம் சிந்தனை அறிமுகமாவதே கருத்தியல் வழியாகவே. நாம் சிந்தனை என நினைப்பதும் பெரும்பாலும் அதைத்தான். எல்லா அரசியல்தரப்பும் கருத்தியல் சார்ந்ததே. மதத்தின் ஒரு பகுதி ஆன்மிகமும் கலையும் என்றால் மறுபகுதி கருத்தியல்.எல்லா கருத்தியலும் அதிகாரத்தையே இலக்காக்குகிறது. எங்கோ எவரோ உலகியல் அதிகாரங்களை அடைய நம்மை ஊர்தியாக்கும் நோக்கமே கருத்தியலின் உண்மையான நோக்கம். கருத்தியல் நம் சுயசிந்தனையை தடுக்கிறது. நமக்கான அகத்தேடல்களை அழிக்கிறது. நம்மை சிந்தனையடிமைகளாக ஆக்குகிறது. அந்த ஆதிக்கத்தை, அதிலிருந்து விடுபடுதலைப் பற்றியது பின் தொடரும் நிழலின் குரல். 

விஷ்ணுபுரத்தின் வடிவம் இந்தியக் காவிய இயலை ஒட்டியது. பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் வடிவம் இங்கே எப்படி நமக்கு அரசியல் கருத்துக்கள் அறிமுகமாகின்றனவோ அதே வடிவில் அமைந்தது.அதாவது உண்மையான தொழிற்சங்கக் களம், அரசியல் விவாதங்கள், துண்டுப்பிரசுரங்கள், மொழியாக்க இலக்கியங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக அது உள்ளது.

கொற்றவை ஒரு நவீனக் காப்பியம் ,கூடவே நவீன நாவல். காப்பியங்களுக்குரிய செறிவான கவிமொழி அதற்கு உள்ளது. ஆனால் அது உரைநடையில் உள்ளது. உரைநடையிலமைந்த நாவல்களுக்குரிய கதையோட்டம் அதில் இல்லை. தொடக்கப்பகுதியில் நேரடியாக உருவகங்களும் கவித்துவமும் மட்டுமே உள்ளது. கொற்றவை தமிழுக்கான ஒரு புதிய தொன்மவுலகை உருவாக்கி அளிக்கிறது. தமிழ் தோன்றும் காலம் முதல் சமகாலம் வரை வரும் பெரும் கதைவெளியை அது உருவாக்குகிறது. அதில் அது எல்லா தமிழ்த்தொன்மங்களையும் மறுஆக்கம் செய்து அளிக்கிறது.

இந்நாவல்களை வாசிப்பதற்கான பயிற்சி என்பது என் பிற நாவல்களை வாசிப்பதே. ஆகவே வாசகர்கள் படிப்படியாகவே அவற்றை நோக்கி வருகிறார்கள். ஆனால் அந்நாவல்கள் மீதான வாசிப்பனுபவம் என்பது வாழ்க்கை முழுக்க நீடிப்பது. அவை வெறும் இலக்கிய நூல்கள் அல்ல. மெய்யியல்நூல்களும்கூட. வாசிப்பவனின் வாழ்க்கைநோக்கையே மாற்றியமைப்பவை. ஆகவே அவை மெல்ல மெல்ல உள்வாங்கத்தக்கவை. வாழ்க்கை முழுக்க பலமுறை வாசிக்கத்தக்கவை. அதை அந்நூல்களின் வாசகர்கள் அறிவார்கள். ஆகவேதான் அதை வாசிப்பவர்கள் பெரும்பாலும் அவற்றை வாங்கி வாசிக்கிறார்கள். தங்களுக்கென ஒரு பிரதி வைத்திருக்கிறார்கள். அது பழையதாக ஆனால் மீண்டும் வாங்குகிறார்கள்.

ஆனால் அவர்கள் சிறுபான்மையினரே. அவர்களின் எண்ணிக்கை பெருக முடியாது. குறையவும் குறையாது. பொதுவாக என் நூல்களை அரசு நூலகங்களுக்கு வாங்குவதில்லை. கல்லூரி நூலகங்களிலும் அரிதாகவே வாங்குகிறார்கள். இங்குள்ள அரசியல்தான் காரணம். அரிதாகச் சில நூலகங்களில் என் நூல்களைக் கண்டிருக்கிறேன். நான் குறிப்பிட்டது அதையே.

என்னிடம் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் கேட்டார். இந்த மூன்று நாவல்கள் வழியாகவும் ஓடும் பொதுச்சரடு ஏதாவது உண்டா என? நான் சொன்னேன். விஷ்ணுபுரத்தின் நீலிதான் கொற்றவையின் கண்ணகி. அவளே பின்தொடரும் நிழலின்குரலின் நாயகி. அவளே காடு நாவலிலும் வருகிறாள். நீலமென்றானவள். வனநீலி. என் முதிரா இளமையில் வந்து என்னை ஆட்கொண்ட என் குடித்தெய்வம்

ஜெ

முந்தைய கட்டுரைஇசபெல்லா கால்டுவெல்
அடுத்த கட்டுரைசைவ தத்துவத்தின் அவசியம் என்ன?