பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

அன்புள்ள ஜெ,

மூன்று வருடங்கள் முன்பு இப்படி பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றி இதே தளத்தில் வந்த ஒரு கடிதம் வந்தது. அது எனக்கு அரிய தருணமாக அமையப்போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. பொதுவாக தளத்தில் கடிதம் அனுப்புபவர்களை தொடர்புகொள்ள எனக்கு சற்று கூச்சம் உண்டு. ஆனால் அக்கடிதம் அனுப்பிய வெங்கடேஸ்வரனை தொடர்புகொள்ள மின்னஞ்சல் அனுப்பிய தருணத்தை இன்று மகிழ்ச்சியுடன் மீட்டெடுக்கிறேன்.

அத்தொடர்பு பறவைகளை அணுகி அறிய ஆரம்பமாக இருந்தது. நிறைய நண்பர்களை பெற்றுத் தந்தது. பொதுமக்கள் அறிவியலுக்கு எப்படி பங்களிக்க முடியுமென காட்டியது. அதனூடே மிக குறுகிய காலத்தில் பறவையியலில் அறிஞர்களுடனான அறிமுகம் கிடைத்தது. தனிவாழ்வில் எனது குழந்தைகளையும் இயற்கையுடன் நெருங்கி இருக்க வழிசெய்தது. அதன் உச்சமாக கிட்டத்தட்ட 40 குடும்பங்களுக்கு வெள்ளிமலையில் பறவைகள் பார்த்தல் பற்றி வகுப்பு எடுத்தது கொடுத்த நிறைவு அபாரமானது. கடிதம் அனுப்பிய வெங்கட் இன்று எனக்கு நெருக்கமான இளையோன். உங்களுக்கும் வெங்கட்டுக்கும் நன்றி.

இந்த கடிதமும் யாருக்கேனும் அப்படி ஒரு வாசலை திறந்து வைக்கட்டும்.அதே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு மீண்டும் ஆரம்பிக்கிறது. இவ்வருடம் புதிதாக ஏதேனும் தொடங்க எண்ணுபவர்கள் பொங்கலன்று பறவைகள் பார்த்து தரவுகளை சமர்ப்பிக்கும் முன்னெடுப்பை ஆரம்பிக்கலாம்அதைப்பற்றிய விவரங்களை கீழே இணைத்துள்ளேன்

இக்கடிதத்தை வாசித்து பறவைகள் பார்க்க ஆரம்பிக்கும் எவரும் தனியர் அல்ல. உங்கள் வாசகர்களில் பறவைகள் பற்றிய ஆர்வம் கொண்ட பெரிய நட்பு வட்டம் உண்டு. பறவைகள் பார்த்தல் ஆரம்பித்த பிறகு அதற்கென வீட்டருகில், வெளி இடங்களுக்கு என நிறைய பயணங்கள் செய்துள்ளோம். ஓவியர் ஜெயராமின் உதவியுடன் நவம்பரில் ஒவ்வொரு நாளும் அவர் வரைந்த படங்களை அடையாளும் காணும் போட்டியை முன்னெடுத்தோம். சென்ற வருடம் அவர் வரைந்த படம் ஒன்று இங்கே இணைத்துள்ளேன்.

இதில் வென்றவர்களுக்கு பரிசுகளும் உண்டு. இந்த ஜனவரியில் பெரம்பலூரில் தமிழ் பறவைகள் ஆர்வலர் கூட்டமைப்பின் சந்திப்பில் கலந்துகொண்டோம். ஈஸ்வர், அன்பரசி இருவரும் வந்திருந்தனர். நமது வகுப்புகளுக்கு வந்திருந்த பிரியா, சரண்யா, ரேணுகா, நாராயணன் ஆகியோர் குழந்தைகளுடன் இந்த சந்திப்புக்கு வந்திருந்தனர். மதன் தனுஷ்கோடியும் நானும் குடும்பத்துடன் கலந்துகொண்டோம். போட்டியில் வென்ற அன்பரசிக்கும் அதிதிக்கும் சரண்யாவுக்கும் கானுயிர் ஆராய்ச்சியாளர் ஜெகந்நாதன் கையால் பரிசுகள் வழங்கினோம். அதிதியும் சரண்யாவும் பறவைகள் பார்த்தல் வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள்.

ஒரு பெரிய நட்பு வட்டமாக விஷ்ணுபுரம் பறவை ஆர்வலர் வட்டம் விரிந்துகொண்டே இருக்கிறது. குழுமமாக இதுவரை தமிழ்நாடு முழுவதுமுள்ள பல மாவட்டங்களிலிருந்து நம் நண்பர்கள் 347 பட்டியல்கள் பதிவேற்றியிருக்கின்றனர். இது அறிவியலுக்கு, பறவைகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு, அவற்றின் பாதுகாப்புக்கு நாம் செய்யும் மிக ஆரோக்கியமான நேர்மறையான பங்களிப்பு.

இந்த வருடம் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்கு இந்த நட்பு வட்டமும் உறுதுணையாக இருக்கும். புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு உதவ தயாராக நிறைய நண்பர்கள் உள்ளனர்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஏன், எப்படி செய்வது பற்றிய அறிமுகம் இந்த தளத்தில் உள்ளது:  https://tamilbirds.wordpress.com/pbc-2025-tamil/ மேலும் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தைப் பார்க்கலாம்https://support.ebird.org/en/support/solutions/articles/48001158707-get-started-with-ebird

தமிழ்நாட்டில் உள்ள பொதுவான பறவைகளின் பட்டியல் ராமநாதபுர மாவட்டத்து பறவைகள் கையேட்டின் மின்வடிவத்தில் பொதுவாக கிடைத்துவிடும்https://birdsoframanathapuram.wordpress.com/

நாம் பார்க்கும் பறவை எது என அடையாளம் காண , மெர்லின் செயலியை பயன்படுத்தலாம். பார்த்த பறவைகளின் எண்ணிக்கையை பதிவேற்றி Ebird செயலியை பயன்படுத்தலாம். Ebird, Merlin இரண்டும் பயன்படுத்த இலகுவான ஆனால் மிக உயர்தர செயலிகள்.

இவற்றை பயன்படுத்திப் பார்த்து , மேலும் உதவி தேவைப்படுவோர் தொடர்புகொள்ளலாம், விவரங்கள் கீழே உள்ளன.  

2025 ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை, நமது வீட்டுக்கு அருகில் உள்ள இடங்களிலேயே பறவைகளை பார்த்து பதிவேற்றலாம். இந்த நான்கு நாட்களில் ஏதேனும் ஒரு நாள் அரைமணி நேரம் இதை சரியாக செய்தாலே போதும். பறவைகள் பற்றிய ஆர்வம் தொற்றிக்கொள்வது உறுதி


ஆசிரியருக்கு நன்றியுடன்,

பா.விஜயபாரதி

சென்னை

தொடர்புக்கு whatsapp: 9840934413 / [email protected]

பறவைகள் பார்த்தல் பற்றிய முந்தைய கடிதங்கள்

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2022

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2023

2023 பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்கு பின் என்னுடைய கடிதம்

பறவைகள் பார்த்தல் ஒரு தியானம்  – வகுப்பு பற்றிய கடிதம் 

வனத்தில் ஒரு தவம் – வகுப்பு பற்றிய கடிதம் 

பறவைகள் பார்த்தல் வகுப்புகடிதம்

பறவைகள் பார்த்தல் நூறாவது நாள்

முந்தைய கட்டுரைஒப்பநோக்குதல்
அடுத்த கட்டுரைநா கொட்டி ரசித்தல்