ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் கதை வல்லினம்
அஜிதனுக்கு,
வணக்கம்.
மிக நெகிழ்வான கதை.
வாழ்த்துக்கள்.
படிக்கும்போது, கதை சொல்லியின் கிராம வாழ்வுக்குள் இருக்கும் இறுக்கமும், தனிமையும் அவன் மெட்ராஸ் செல்லும் வரை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
மந்தையில் ஏற்படும் குழப்பத்தின் போது சில ஆடுகள் மந்தையை விட்டு தொலைந்து போய் சில நாட்கள் கழித்து கலக்கத்துடன் திரும்பி வந்து, இறந்து விடுவதைக் குறிப்பிடும் கதை சொல்லிகுள், ஏன் அந்த ஆடுகள் திரும்பி வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
குடும்பம் மற்றும் சமூக மந்தையிலும் சேர்க்கப் படாத கதை சொல்லி, தொலைந்து போன ஆடு போலவே கரிசலில், காடுகளில் அலைகிறான். அவனது கூட்டாளி போல நகருக்குள் வந்து தற்கொலை செய்து கொள்ளக் கூட விரும்பவில்லை. மாறாக மந்தையாகிய சமூகத்தை விடுத்து காடுகளின் ஆழத்தில் தொலைந்து மட்கிப் போகும் விழைவில் போய்க் கொண்டிருக்கிறான்.
அவனுள்ளிருக்கும் எதோ ஒன்று அவனை அதட்டி எழுப்பி அவனது சூட்சம மேய்ப்பனாகிய ஞானய்யாவிடம் தள்ளிச் செல்கிறது.
போவதற்கு முன், தனது மேய்ப்பனாக இருந்திருக்க வேண்டிய தன் தந்தையிடம், முக்கியமான கேள்வியுடன் போகிறான்.
தொலைந்து போன ஆடுகள் ஏன் மந்தைக்கு திரும்பி வந்தன என்ற கேள்விக்குப் பதில்?
“அந்த மகத்தான கனவில் ஒரு சிறு எறும்பாகவாவது இருந்துவிட வேண்டும் என்பதுதான் அந்த உணர்வு. உண்மையில் மனிதனின் எல்லா உந்துதலும் அதுவே, அவனது மேன்மையும் கீழ்மையும், எல்லாம் ஏதோவொன்றில் சிறு பகுதியாவதற்கே“
மனிதனின் ஆழத்தில் இருக்கும் பயமோ அல்லது நம்பிக்கையோ அல்லது இரண்டுமோ மனிதனைச் சமுகம் என்னும் மந்தைக்குள் இழுத்துச் செல்கிறதல்லவா.
இறுதியில், ஞானய்யா தனக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு பொருளின் மேலுள்ள பற்றை விடுத்து, அதன் மூலம் தனது குருவுக்கு இன்னும் அருகில் செல்கிறேன் என்று உணர்வதும் உன்னதம்.
மேலும், இளையராஜாவின் இசை, கதை சொல்லியைப் போல, 70களில் வறுமையில், வெறுமையில் தவித்தவர்களுக்கு வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தது என்பது, நான் நினைத்துப் பார்க்காத ஒரு கோணம். உண்மைதான் என நினைக்கும் போது, இளையராஜா என்ற ஆளுமையின் மீது இருக்கும் மதிப்பு பன்மடங்கு உயர்கிறது.
உங்களைப் போன்ற ஒரு இலக்கியவாதி இளையராஜாவின் சுயசரிதை திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதினால் அது அவருக்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு, மரியாதை மற்றும் வரலாற்றில் அவரது வாழ்வு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது என்னுடைய பேராசை!
அன்புடன்,
சகுந்தலா
அன்புள்ள ஜெ
அஜிதனின் ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் கதை வாசித்தேன். கதையின் உத்தி அபாரமாக இருந்தது. மிகமிகக்கீழே இருந்து தொடங்குகிறது கதை. அன்றைக்கு ரேடியோ காலகட்டம். ஒரு கிராமத்திலேயே ஒருசில ரேடியோக்கள்தான் இருக்கும். அங்கேயே ஒரு பாட்டு போய்ச்சேர்வது கடினம். அந்தக் கிராமத்தின் குரலும் கூட கேட்காத இன்னும் தூரத்தில் வாழ்பவர்களிடமிருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் அடித்தளத்துக்கும் அடியில். நீங்கள் சொல்வதுபோல ஏழாம் உலகமான பாதாளத்தில். அங்கிருந்து தொடங்கும் கதை மேலே மேலெ சென்றுகொண்டே இருக்கிறது. அந்த கதாபாத்திரம் விடுதலை அடைந்து மேலே சென்றுகொண்டே இருக்கிறான். அவருடைய இசையே அவனுடைய விடுதலையாக உள்ளது. ஆனால் அவர் அதைவிடப்பெரிய இன்னொரு விடுதலையை நோக்கிச் செல்கிறார். அற்புதமான கதை.
செல்வ. அரங்கராசன்