வணக்கம்
நீங்கள் நலமா? என் பெயர் தேஜஸ். போன வருடம் குரு நித்யா காவ்ய முகாமில் சந்தித்தோம். முந்தாநாள் உங்களுடைய மைத்ரி நாவலை படித்து முடித்தேன்.
மலைகள் போல் என் மனதை கவர்வது வேறு இல்லை. தரை எனும் அன்றாடம் வானம் எனும் கனவை எட்ட முயல்வதின் வெளிப்பாடே மலை என எனக்கு தோன்றும், அவ்வகையில் இலக்கியம் என்பதே ஒருவித மலை தான். மலைகளுக்கு முதல்வன் என நம் மரபில் சொல்லப்பட்ட இமய மலையை கருவாக கொண்டு எழுதிய இந்த நாவல் இலக்கியமலைதொடர்களில் ஒரு உச்சம்.
நாவலில் மொழி மிக அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு சொல்லும் காதில் மென்மையாக பேசும் காதல்மொழி போல புத்தகத்திலிருந்து விலகாத வண்ணம் அமர செய்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்பது அந்த மார்ச்சு வயலில் அவர்கள் செய்யும் பயணம். அந்த சிவப்பு வயல் என் மனக்கண்ணுக்குள் அப்படியே நிற்கிறது. ராகம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்று ஒரு பொருள். அதுவே உணர்வுகள், அழகு போன்ற பொருள்களும் உடையது. அந்த சொல் இசையில் ஒரு சுர அமைப்பை சுட்டுகிறது. அந்த மார்ச்சு வெளி எனக்கு ஒரு ராக கடலாக தென் படுகிறது. அந்த அழகிய உணர்வுகளின் செங்கடல் வழியாக இரு காதலர்கள் பயணம் செய்யும் போது காற்றில் லேசாக பஹாடி போன்ற ராகம் கேட்கிறது என் கற்பனையில். மௌன வடிவான தேவதாரு வனம் அதற்கு அடுத்தே வருவது மிக அழகு. அதுவும் அந்த மோன வனத்தில் இசையின் உச்சமான அடி நாதம் முழங்கும் தேவதாருவை கண்டதும் ஒரு சிலிர்ப்பு.
பொதுவாக இந்த நூலை வாசிக்க வாசிக்க சில இடங்களில் அது கதை வாசிப்பது போல் அல்லாமல் இசை கேட்பது போல வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தோன்றியது. மந்தாகினி போல இசை தொடர்ந்து இந்த நூலில் வந்து கொண்டே இருக்கிறாள் என்று தோன்றியது.
இதை படிப்பதற்கு முன்பு காதல் மீது சற்று கசப்பு கொண்டிருந்தேன். ஆனால் இதை படித்ததும் அது முற்றிலும் நீங்கியது. காதல் என்பது இன்னொருவர் பற்றியது அல்ல ஆனால் நமக்குள் எழும் ஒரு உச்சம் என்பது மைத்ரி எனக்கு சொல்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இமய மலை பயணம் செய்தேன். கதையில் வரும் ஹரன் போல தனியனாக எந்த ஒரு திட்டமில்லாமல் செய்த பயணம். அப்போது சாரி என்ற கிராமத்தில் ஒரு நாள் மாலை வீட்டு மாடியில் அமர்ந்து முழு நிலவு உதிப்பதை பார்க்க உட்கார்ந்திருந்தேன் . சுற்றியும் மலைகள், கீழே கிராம மக்கள் மெதுவாக வீட்டுக்குள் புகுந்து கொண்டிருந்தாரகள். அப்போது அந்த அழகில் எழுதிய ஒரு கவிதை
Waiting for the moon
As people trudge around with their daily rituals
The mountain looks on in dynamic stillness
The sun walks the spatial lane
Leaving colours in his wake with utter disdain
Among this flurry of the living and the dead
I sit on the roof with an upraised head
Viewing the horizon I eagerly wait
For her to come with her measured gait
I know she will not come too soon
But there is joy and beauty in waiting for the moon
இந்த நாவல் என்னை மீண்டும் அந்த தேவ பூமிக்கு இட்டு சென்றது. அதற்கு மிகுந்த நன்றி
தேஜஸ்
மைத்ரி – அ.முத்துலிங்கம்
- மைத்ரி
- மைத்ரி, மருபூமி – கடிதங்கள்
- மைத்ரி மறுபதிப்பு
- மைத்ரி – வாசு முருகவேல்
- தளர்ந்தார் தாவளம் – மைத்ரி நாவலை முன்வைத்து- செளந்தர் G
- அஜிதன், மைத்ரி- கடிதம்
- மைத்ரி, அஜிதன் உரை – கடிதங்கள்
- மைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்
- மைத்ரிபாவம் – பி.ராமன்
- மைத்ரியின் மலைப்பயணம்
- மைத்ரி- விவேக்
- மைத்ரியுடன் இரண்டு நாட்கள்
- மைத்ரி- கமலதேவி
- மைத்ரி- கடிதங்கள்
- மைத்ரியும் மோட்டார்சைக்கிளும்- கடிதம்
- மைத்ரி – லோகமாதேவி
- மைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்
- மைத்ரி – இயற்கையின் தெய்வீகம்- சுசித்ரா
- பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்
- காதலும் இலக்கியமும்