சென்ற சில ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கட்டண உரைகளை நடத்தி வருகிறேன் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பார்கள். கோவை, பெங்களூர் நகர்களில் இரண்டு கட்டண உரைகள் நிகழ்ந்துள்ளன. திருநெல்வேலி, நாமக்கல், சென்னை, திருப்பூர் ஆகிய ஊர்களில் ஒரு கட்டண உரைவீதம் நிகழ்ந்துள்ளன. அடுத்த கட்டண உரை சேலத்தில் நிகழவுள்ளது. இது இவ்வரிசையில் ஒன்பதாவது உரை.
தலைப்பு: ‘உரு அரு உருவரு’.
சென்ற சில ஆண்டுகளாகவே தொன்மையான் உள்ளங்களில் ஆழ்ந்த பிரபஞ்சவெளிப்பாடு எப்படி தோன்றி உருக்கொள்கிறது என்று தேடி இந்தியப்பெருநிலத்திலும் என் அகத்திலும் அலைந்துகொண்டிருக்கிறேன். இப்போதுதான் ஒரு பயணத்தில் இருந்து மீண்டு வந்தேன். அந்த உள்ளுணர்வுகளைத் தொகுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
இடம் : ஹோட்டல் சென்னீஸ் கேட்வே, சாரதா காலேஜ் ரோடு, சேலம்
பொழுது : மாலை 4.30
நாள் : 2 பிப்ரவரி 2025 (ஞாயிறு)
கட்டணம் : ரூ 450
ஒருங்கிணைப்பாளர்கள்: கோபிநாத் 9842713165
இந்த கட்டண உரையுடன் சேலம் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் அமைப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
கட்டண உரைக்கு முன்பதிவு செய்ய
Name of the Account Holder : Krithiga rajeswari G
Account Number : 611901548347
Bank & Branch : ICICI Bank, Salem Branch
IFSC : ICIC0006119
They can make payment via UPI too. They can pay to the Mobile number :8870529474 (Only for Payment) Please contact Mr.Gopinath 9842713165 for details)
Here is the QR code :
முன்பதிவுசெய்பவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண்ணுடன் முன்பணம் கட்டியதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் அங்கே அளிக்கவேண்டும். பணம்கட்டியவர்களே முன்பதிவுசெய்தவர்களாகக் கொள்ளப்படுவார்கள்
முன்பதிவு படிவம்
ஒருங்கிணைப்பாளர்கள்: கோபிநாத் 9842713165
நான் பேருரைகளை ஆற்றத்தொடங்கியது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒருங்கிணைத்த நிகழ்வுகளின் வழியாக. சங்கர, வியாசர் ஆகியோர் பற்றிய உரைகளை ஆற்றியபின் கீதை, குறள் பற்றி நான்குநாள் தொடர்ச்சொற்பொழிவுகளை ஆற்றினேன்.
அவற்றில் கீதை உரை ‘கீதையை அறிதல்‘ என்னும் தலைப்பில் அண்மையில் நூலாக வெளிவந்துள்ளது. ஓர் உரை ஒரு நூலாக வெளியிடுமளவுக்கு செறிவுள்ளதாக இருக்குமா என்னும் ஐயம் இருந்தமையால் அதை நான் வெளியிடவில்லை. ஆனால் சக்தி பிரகாஷ் என்னும் நண்பர் அதை தட்டச்சு செய்து அனுப்பினார். அதை நான் வாசித்துப்பார்த்தபோது அதில் செறிவுடன் இயல்பான ஓர் ஓட்டமும் இருப்பதைக் கண்டேன். அந்த ஒழுக்கு என்பது கண்முன் ஒரு நல்ல அரங்கு இருந்தமையால் உருவானது.
என் முன் ஓர் அரங்கு இருக்கையில் என்னால் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் சிந்திக்கமுடிவதை கண்டடைந்த பின்னரே இக்கட்டண உரைகளை ஒருங்கமைத்தோம். ஆனால் நல்ல அரங்கு வேண்டும். அரங்கு கவனமில்லாமல் இருந்தால், வந்தமர்ந்தும் எழுந்துசென்றும் இருந்தால் , என் சிந்தனை தடைபடுகிறது. ஆகவேதான் கட்டண உரை என ஏற்பாடு செய்தோம். ஓர் உரையை கேட்க கட்டணம் கட்டி வருபவர்களே அதற்கான தீவிரமும் அக்கறையும் கொண்டவர்கள்.
இந்த உரையை எப்படியும் கேட்கவோ, வாசிக்கவோ செய்யலாம். ஆனால் அந்த அரங்கில் இருப்பவர்கள் ஒரு சிந்தனை நிகழ்வதைக் காண்கிறார்கள். அவர்களும் அதில் பங்குகொள்கிறார்கள். அவர்களின் சிந்தனையும் அங்கே நிகழ்கிறது. அந்த அரங்கில் மட்டுமே அவ்வனுபவம் நிகழும். ஆகவேதான் இதுவரை நிகழ்ந்த உரைகளுக்கெல்லாம் ஏராளமானவர்கள் திரண்டு வந்துள்ளனர். ஓர் உரையை கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். அங்கே நிகழ்வது அவர்களின் சிந்தனையும்கூட.
இது தயாரிக்கப்பட்ட உரை அல்ல. கேட்டிருப்பவர்களின் ரசனைக்கும் புரிதலுக்கும் ஏற்ப அமையும் உரையும் அல்ல. நான் என்ன பேசுவேன் என எனக்கே இப்போது தெரியாது. என்னிடமிருப்பவை சில வினாக்களும் அவ்வினாக்களை நான் கட்டமைத்துக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பும்தான். தானாகவே அந்த உரை அங்கே அந்த அரங்கினர் நடுவே நிகழவேண்டும். சிறப்பாகவே நிகழும் என எதிர்பார்ப்பதையன்றி எதையும் நான் செய்யமுடியாது.
இந்த உரைகளிலெல்லாம் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி உள்ளது. பண்பாடும் மதமும் சந்திக்கும் புள்ளியைத்தான் தொட்டு ஆராய்கிறேன். அதிலிருந்து அடிப்படையான மானுடக்கேள்விகளை நோக்கிச் செல்கிறேன். ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்.