முனை அமைப்பின் சார்பில் நாங்கள் நடத்திய நேர்வழி விழாவில் கலந்து கொண்டமைக்கு நன்றி. விழாவில் அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக நேற்றே முனை அமைப்பினர் அம்மாபாளையம் ஊரில் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்கள் அளித்து உள்ளனர். நாங்கள் குறிப்பிட்ட நான்கு அம்சங்களை அவர்கள் பின்பற்றினார்களா இல்லையா என்று அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, பின்பற்றவில்லை என்றால் அதற்கான காரணத்தையும் அதில் குறிப்பிட்டு நாங்கள் வைக்கும் பெட்டியில் மடித்து போட்டுவிட வேண்டும். இன்று அவ்வாறு ஐந்து கோவில்களில் பெட்டிகள் வைத்துள்ளோம். நாளை மாலைக்குள் அவர்கள் அதில் போட வேண்டும், ஒவ்வொரு வாரமும் ஞாயிறு ஒரு கூட்டம் கூட்டி அதை எடுத்து படிப்போம். நாங்களும் இதை பின்பற்றி அதில் எழுதி போடப் போகிறோம்.
அடுத்த திட்டமாக நாங்கள் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் என்று மொத்தமாக ஐந்து பேர் கோவையில் இருந்து வேதாரண்யம் வரை காந்திய விழுமியம் ஒன்றை முன்வைத்து பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளோம். காந்தி கிராமம் உட்பட காந்தி சென்ற இடங்கள் சிலவற்றின் வழியாக செல்ல உள்ளோம். வருகிற ஜனவரி 11 காலை 6 மணிக்கு இந்த நடைபயணத்தை கோவையில் தொடங்க உள்ளோம். செல்லும் வழியில் உள்ள ஊர்களில் யார் என்றே தெரியாதவர்களின் வீட்டில் தங்கி அவர்களிடம் இருந்தே உணவு பெற்று செல்ல உள்ளோம். இன்னும் இருபது நாட்களே இந்த பயணத்திற்கு உள்ளது. இப்போதே எனக்கு பயணம் தொடங்கிவிட்ட உணர்வு. சென்ற வாரத்தின் இரவுகள் எனக்கு துயர் மிகுந்ததாக இருந்தது. இன்றைய இரவு மிக மகிழ்ச்சிகரமானது. ஒரு பெரும் செயலை, எங்கள் தலைக்கு மீறிய ஒன்றை செய்யப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. உங்கள் ஆசியுடன் இந்த பயணத்தை தொடங்க நினைக்கிறோம்.
காந்திய நடைபயணம்:
https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post_20.html
சிபி,
முனை இளைஞர் இயக்கம், ஈரோடு.