சென்னை புத்தகவிழா, விஷ்ணுபுரம் நூல்களின் விற்பனை

சென்னை புத்தகவிழா முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் ஜனவரி 6,7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அதில் கலந்துகொண்டேன். இந்த ஆண்டு இதுவரை விஷ்ணுபுரம் பதிப்பகம் இடம்பெற்ற புத்தக விழாக்களிலேயே அதிகமான விற்பனை நிகழ்ந்துள்ளது என்று அதன் பொறுப்பாளர்கள் சொன்னார்கள்.

என்னிடம் எந்த நூல் அதிகம் விற்றது என ஓர் இணைய இதழிலிருந்து கேட்டனர். பொதுவாக இந்த ‘பெஸ்ட் செல்லர்’ பட்டியல்கள் பொய்யானவை. ஏனென்றால் அவை பதிப்பாளர் சொல்வதை நம்பி போடப்படும் பட்டியல்கள். பதிப்பாளர்கள் விற்கும் நூல்களை முன்வைப்பதில்லை – அவைதான் விற்கின்றனவே. எவை விற்கவேண்டும் என விரும்புகிறார்களோ அவற்றைச் சொல்வார்கள். அவை அதனால் கொஞ்சம் விற்றால் நல்லது தானே என்பது அவர்களின் எண்ணம். ஆகவே பெரும்பாலும் அப்பட்டியலில் இருப்பவை படிக்கமுடியாத, வாசகர்களால் ஏற்கப்படாத நூல்களே.

இதழ்கள் அளிக்கும் ‘கவனம்பெற்ற நூல்கள்’ போன்ற பட்டியல்களும் பொய்யே. ஏனென்றால் நானறிந்து பரவலான வாசிப்புப் பழக்கம் கொண்ட உதவியாசிரியர்கள் எவரும் இல்லை. அப்பட்டியலைப் போடுமளவுக்கு எவருக்கும் இலக்கியத்தில் அறிதல் இருப்பதில்லை. ஓரளவு இலக்கிய அறிமுகம் கொண்ட சிலர் உண்டு, அவர்களும் கதை கவிதை எழுதும் குட்டி எழுத்தாளர்கள். தங்கள் சிறுவட்டத்திற்குள் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் என்றே அப்பட்டியல் போடப்படுகின்றன. நான் எவ்வகையிலும் அப்பட்டியல்களை பொருட்படுத்துவதில்லை. சொல்லப்போனால் அப்பட்டியலில் இருந்தாலே அந்நூல் சரியானதல்ல என்று நினைப்பேன்.

அண்மையில் தமிழ் ஹிந்து நாளிதழில் இவ்வாண்டு பேசப்பட்ட நூல்களின் பட்டியல் வெளியாகியது. நான் இலக்கியத்திலேயே இருக்கிறேன். நானறியாத ஓர் இளம் எழுத்தாளர்கூட இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்பட்டியலில் பெரும்பாலும் அனைவருமே எனக்கு தெரியாதவர்கள். எங்குதான் அவர்கள் பேசப்பட்டார்கள் என்பது மாபெரும் புதிர்தான்.

இதை வாசகர்களும் உணர்ந்திருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த ‘பெஸ்ட் செல்லர்’ ‘பேசப்பட்ட நூல்கள்’ பட்டியலில் வரும் நூல்கள் ஏன் அப்படி தாங்கமுடியாதவையாக இருக்கின்றன? அந்நூல்களைப் பற்றி அதற்குப் பின் ஏன் பேச்சே இருப்பதில்லை? சில சமயங்களில் எழுவாய்ப்பயனிலை கூட சரியில்லாமல் செய்யப்படும் சில மொழியாக்க நூல்கள் எப்படி அப்பட்டியலில் இடம்பெறுகின்றன?

விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் எது அதிகம் விற்கும் நூல் என்பதை என்னிடமோ அல்லது செந்தில்குமாரிடமோ கேட்கவேண்டியதே இல்லை. இலக்கியவாசகர் அனைவருமே அறிந்த பட்டியலாகவே அது இருக்கும். ஊடகங்களில் சாமானியமாக புழங்கும் எவருக்கும் தெரிந்ததுதான் அது. அந்நூல்கள் ஏற்கனவே பேசப்பட்டபடியே இருக்கும். அவற்றை வாசித்தவர்கள் பலவாறாக எழுதியிருப்பார்கள்.

என் நூல்களில் எப்போதுமே அறம் முதலிடம். அது எங்கள் பதிப்பகத்தை இழுத்துச்செல்லும் ஆற்றல் மிக்க இயந்திரம். பல்லாயிரக்கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் விற்றுக்கொண்டே இருக்கும் நூல். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மறு அச்சு போட்டுக்கொண்டே இருக்கிறோம் — ஆயிரங்களில்.

ஒவ்வொரு ஆண்டும் அவ்வாண்டுக்குரிய ஒரு சிறப்பு முதலிடம் ஒரு நூலுக்கு உண்டு. இவ்வாண்டு அது கீதையை அறிதல். நான் கீதை பற்றி ஆற்றிய 4 நாள் தொடர்பேருரையின் எழுத்துவடிவம். உரை என்பதனால் சீரான ஓட்டம் உடைய நூல். மிக விரைவாக ஒரு மணிநேரத்தில் படித்து முடிக்கமுடியும். ஆனால் கீதை குறித்த எந்த உரைநூலுக்கும் முன்னுரையாகவும், அறிமுகமாகவும் அமையும் நூல். பரிசுநூலாக பலர் வாங்கிச் சென்றார்கள்.

இவ்வாண்டு வெளிவந்த புதிய நூல்களில் 3 பயணநூல்களும் விரும்பி வாங்கப்பட்டன. பயணநூல்கள் விற்குமா என்னும் ஐயத்தால் நான் நீண்டநாளாக நான் அவற்றை வெளியிட தயக்கம் காட்டினேன். ஆனால் அவற்றுக்கான வாசகர்கள் இருக்கிறார்கள். அவற்றிலுள்ள அரசியல் – சமூகவியல் சித்திரங்களுடன் ஓர் தனிப்பட்ட உரையாடல்தன்மையும் வாசகர்களுக்குப் பிடித்துள்ளது. என் பயணத்தோழர்களையே வாசகர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

வழக்கம்போல குமரித்துறைவி, சங்கசித்திரங்கள், மலர்த்துளி போன்றவை விரும்பி வாங்கப்பட்டன. முந்தைய ஆண்டுகளைவிடவும் புனைவுக்களியாட்டு சிறுகதைத் தொகுதிகள் வாசகர்களால் வாங்கப்பட்டன. விரைவுவாசிப்புக்குரிய நூல்களான ஆலம், படுகளம் இரண்டும் தொடக்கவாசகர்களால் வாங்கப்பட்டன. எனக்கு மிக உவப்பான நூல் கதாநாயகி – ஆனால் அது அவ்வளவாக வாங்கப்படவில்லை.

என் பெருநாவல்கள் சீரான எண்ணிக்கையில், அவற்றுக்குரிய வாசகர்களால் தொடர்ச்சியாக வாங்கப்படுவதே வழக்கம். எப்போதும் அவற்றுக்கு பரபரப்பான விற்பனை இருப்பதில்லை- ஆனால் எப்போதுமே விற்றுக்கொண்டும் இருக்கும். அவற்றில் பின் தொடரும் நிழலின் குரல் அதற்கான தனி வாசகர்களை மட்டுமே கொண்டது. இவ்வாண்டு கொற்றவை என்ன காரணத்தாலோ சரசரவென விற்றுத்தீர்ந்து பிரதிகள் இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது.

என் ஆங்கில நூல்கள் இம்முறை பதிப்பகத்தில் தொடர்ச்சியாக விற்றுக்கொண்டிருந்தன.  ஆங்கிலம் வழியாக வாசிக்கும் பிள்ளைகள் கொண்ட குடும்பங்களுக்கான நூலாக  Stories of the True நூலும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கான நூலாக  THE ABYSS நாவலும் ஆகியிருப்பதைக் காணமுடிந்தது. குழந்தைகளுக்கான நூல்களாக இப்போது மூன்று நாவல்கள் கிடைக்கின்றன. பனிமனிதன், வெள்ளிநிலம், உடையாள். மூன்றுக்குமே இளம்வாசகர்கள் இருந்தனர்.

அஜிதனின் நூல்களில் எப்போதுமே வாசகர்களின் தேர்வு மைத்ரிதான். மருபூமிதான் அவனுடைய ஆகச்சிறந்த படைப்பு (இது வரை) என்பது என் எண்ணம். ஆனால் அது வாசகர்களிடையே சென்று சேர கொஞ்சம் பிந்தலாம்.

தொடர்ச்சியாக வாசகர்கள் நூல்களை வாங்கிச்செல்வதைக் காண்பது ஓர் நிறைவூட்டும் அனுபவம். ஒவ்வொருமுறை புத்தகக் கண்காட்சி முடிகையிலும் ஒரு நிறைவு உருவாகும். இம்முறை கூடுதலாகவே.

இந்த ஆண்டு பல ஆண்டுகளாகக் கிடைக்காமலிருந்த என்னுடைய பல நூல்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. புதிய நூல்கள் சிலவும் வெளிவந்துள்ளன.

வாசகர்களை வரவேற்கிறோம்.

புதிய நூல்கள்

இந்துஞானம் – அடிப்படைக்கேள்விகள் வாங்க

இந்துஞானம் அடிப்படைக்கேள்விகள் என்னும் நூல் பரவலாக இந்துமெய்யியல் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கான சுருக்கமான பதில்களின் தொகுப்பு.

கீதையை அறிதல் வாங்க

கீதையை அறிதல். கீதை பற்றி நான் ஆற்றிய பேருரையின் எழுத்துவடிவம். உரை ஆதலால் வேகமான ஓட்டம் கொண்டதாக உள்ளது. ஆனால் செறிவானதாகவும் உள்ளது. கீதையை ஒரு நவீன வாசகன் அறிமுகம் செய்துகொள்வதற்கு உகந்த நூல்

இரு கடல் ஒரு நிலம் வாங்க

நான் என் நண்பர்களுடன் அமெரிக்காவில் கிழக்குக் கடற்கரையில் இருந்து (நியூயார்க்) மேற்குக்கடற்கரை வரை (கலிஃபோர்னியா) செய்த நீண்ட கார்ப்பயணத்தின் அனுபவக்குறிப்பு. உடன் வந்த நண்பரான விஸ்வநாதன் எழுதியது.

வடகிழக்கு மாநிலங்களில் நான் என் நண்பர்களுடன் மேற்கொண்ட பயணங்களின் நேர்ப்பதிவு. வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய நம் புரிதல் உள்நோக்கம் கொண்ட இதழாளர்களல், அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இவை கண்கூடான காட்சிகளின் வழியாக உருவாகும் சித்திரங்கள்

சூரியதிசைப்பயணம் வாங்க

இமையமலை அடிவாரத்து மாநிலங்கள் வழியாகச் சென்ற பயணங்களின் பதிவுகள். பனியும் அமைதியும் உறைந்துகிடக்கும் ஆளற்ற நிலம் வழியாகச்செல்லும் போது கண்கள் மட்டுமே செயல்படுகின்றன. உள்ளமும் கண்களாகின்றது.

எழுகதிர் நிலம் வாங்க

மறுபதிப்புகள் 

ஊமைச்செந்நாய் வாங்க

இந்தியப்பயணம் வாங்க

பிரதமன் வாங்க

ஆழ்நதியைத்தேடி வாங்க

உள்ளுணர்வின் தடத்தில் வாங்க

வேங்கைச்சவாரி வாங்க

இந்திய ஞானம் வாங்க

வெள்ளிநிலம் வாங்க

முந்தைய கட்டுரைஇனிமேல் வாசிக்கமுடியுமா?
அடுத்த கட்டுரைWhy not books?